Published:Updated:

சிந்து பைரவி: வெகுஜன படத்தில் கர்னாடக சங்கீதம்; சிவகுமார், சுஹாசினி நடித்த பாலசந்தரின் மாஸ்டர்பீஸ்!

சிந்து பைரவி

கர்னாடக சங்கீதத்திற்கும் திரையிசைப் பாடல்களுக்குமான இடைவெளி அதிகமாகிப் போனது. இந்தக் காலகட்டத்தில்தான் ‘சிந்து பைரவி’யின் பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறுகின்றன.

Published:Updated:

சிந்து பைரவி: வெகுஜன படத்தில் கர்னாடக சங்கீதம்; சிவகுமார், சுஹாசினி நடித்த பாலசந்தரின் மாஸ்டர்பீஸ்!

கர்னாடக சங்கீதத்திற்கும் திரையிசைப் பாடல்களுக்குமான இடைவெளி அதிகமாகிப் போனது. இந்தக் காலகட்டத்தில்தான் ‘சிந்து பைரவி’யின் பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறுகின்றன.

சிந்து பைரவி
தமிழில் எத்தனையோ திரைப்படங்கள் இதுவரை வெளியாகியிருந்தாலும், ஒரு சில படங்களைத்தான் சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் மூலம் சட்டென்று நினைவுகூர்கிறோம். உதாரணத்திற்கு ‘வேலு நாயக்கர்’ என்றவுடன் மணிரத்னத்தின் ‘நாயகன் கமல்’ கண் முன்னால் உடனே வந்து விடுகிறார். அது போலச் சட்டென்று நினைவைத் தூண்டி விடும் ஒரு பாத்திரம்தான் ‘ஜே.கே.பி’. ஆம், ‘ஜே.கே.பாலகணபதி’ என்கிற ‘சிந்து பைரவி’ திரைப்படத்தின் பாத்திரம்தான் அது.

ஜே.கே.பி மட்டுமல்ல, சிந்தாமணி என்கிற சிந்து, பைரவி, மிருதங்கம் குருமூர்த்தி, தம்புரா கஜபதி என்று இந்தப் படத்தின் பல பாத்திரங்கள் கூடவே நினைவிற்கு வரும். கார் டிரைவராக மிகச்சிறிய வேடத்தில் நடித்த ஒப்பனையாளர் சுந்தரமூர்த்தி உட்பட. இதுதான் பாலசந்தரின் ஸ்டைல். மிகச்சிறிய பாத்திரமாக இருந்தாலும் கூட அதற்கொரு துல்லியமான ‘கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை’ தந்து விடுவார். இதில் வரும் ஜட்ஜ் பாரதிகண்ணன் மற்றும் அவரது டிரைவர் ‘திருவையாறு’ அதிவீரபாண்டியனை மறக்க முடியுமா? நீதிபதியின் ஆலாபனை, ‘ஆரபி’யா... தேவகாந்தாரியா’ என்று இருவருக்கும் நடக்கும் பந்தயத்தில் நீதிபதி தோற்று டிரைவரை அமர வைத்து வாகனம் ஓட்ட நேரும் காட்சிதான் எத்தனை சுவாரஸ்யமானது?!

சிவகுமார்
சிவகுமார்

ஜே.கே.பி – சிவகுமாரின் லைஃப்டைம் கேரக்ட்டர்

தமிழில் பாலசந்தர் ஒரு முக்கியமான இயக்குநர் என்பதும், சிறந்த திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும். அந்த வரிசையில் ‘சிந்து பைரவி’ ஓர் உன்னதமான திரைப்படம். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

1965-ல் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் அறிமுகமான நடிகர் சிவகுமார், இருநூறு படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். சிறந்த நடிகர், தனது பாத்திரத்திற்கு மிகுந்த அர்ப்பணிப்பைத் தருபவர். சினிமாக்காரர்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் பொதுவெளியில் விதம் விதமான கற்பனைக் கதைகள் உலவும் சூழலில் ‘ஒரு சினிமாக்காரனாலும் மிகச் சிறந்த ஒழுக்கத்தைப் பின்பற்ற முடியும்’ என்கிற தனிநபர் முன்னுதாரணமாக இருந்தவர்.

இத்தனை சிறப்பான அம்சங்கள் இருந்தாலும் சிவகுமார் நடித்ததில் மிகச்சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனங்களில் தங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே மாதிரி வெளிப்படுகிற அவரின் நடிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். அவரது சில பிரத்யேக முகபாவங்களும், இழுவையான உச்சரிப்பும் ரசிகர்களால் கிண்டலடிக்கப்படுகின்றன. ஆனால் இது அவரின் பிழையல்ல. சரியான இயக்குநர்களின் கைகளில் கிடைத்தால் இம்மாதிரியான நடிகர்கள் அதிகமாகப் பிரகாசிப்பார்கள். அப்படியாக, சிவகுமாரின் நடிப்பு அட்டகாசமாகப் பிரகாசித்த படம் ‘சிந்து பைரவி’. அவரின் நடிப்பு பயணத்தின் மைல் கல் என்று கூட சொல்லலாம். நடிகர்களிடமிருந்து மிகத்திறமையாக வேலை வாங்கக்கூடிய இயக்குநர்களுள் முக்கியமானவரான பாலசந்தர், இந்தப் படத்தை ஒரு தங்க நகை போல உருவாக்கியிருக்கிறார்.

ஜே.கே.பி – சிந்து – பைரவி – உறவுச்சிக்கலின் மோதல்கள்

கர்னாடக இசையுலகில் பிரபலமான பாடகராக இருக்கிறார் ஜே.கே.பி. அவரது கச்சேரி என்றால் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு உத்தரவாதம். மனைவி பைரவி. ஒரு சராசரியான பெண்ணின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்டவர். லதா மங்கேஷ்கரின் ‘மீரா பஜனை’யை கணவர் கண்மூடி ஆத்மார்த்தமாக ரசித்துக் கொண்டிருப்பது தெரியாமல் மிக்ஸியில் பருப்புப் பொடி அரைப்பவர். மிக்ஸியின் சத்தத்தைக் கணவர் கோபமாக ஆட்சேபிக்கும் போது “லதா மங்கேஷ்கரா வந்து உங்களுக்கு பருப்புப்பொடி அரைச்சுத் தருவா?" என்று கன்னத்தில் நீர்வழிய கேட்கும் அப்பாவி. குழந்தைப் பாக்கியம் இல்லாததுதான் இவர்களின் வாழ்வில் ஒரே குறை. மற்றபடி ஆதர்சமான தம்பதிகளாக வாழ்கிறார்கள்.

சிந்து பைரவி
சிந்து பைரவி
குடிப்பழக்கம் உள்ள, அவ்வப்போது திருந்திவிடுவதாகச் சத்தியம் செய்யும் மிருதங்கம் குருமூர்த்தி. பொய் சொல்லாவிட்டால் தலைவெடித்து விடும் பழக்கமுள்ள தம்புரா கஜபதி. விஸ்வாசமான கார் டிரைவர், என்று பாடகரின் சுற்றங்களோடு வாழ்க்கை இயல்பாக நகர்கிறது.

புகழின் உச்சத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பாடகரின் வாழ்க்கையில் ஓர் இளம்பெண் குறுக்கிடுகிறாள். சிந்து. “நீங்கள் பாடும் தெலுங்குக் கீர்த்தனைகள் அருமை. ஆனால் அது மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்க வேண்டாமா? வெகுசனத்திற்கும் உங்களின் கலை சென்று சேர்வதுதானே தர்மம்?” என்று ஒரு கச்சேரியின் நடுவில் கேட்கிறாள். முதலில் ஆத்திரப்பட்டாலும் அதிலுள்ள நியாயம் ஜே.கே.பி-க்கு பிறகு புரிகிறது. தமிழிசையில் பாடல்கள் பாடத் தொடங்குகிறார். இசை குறித்து யாரிடமாவது பேச முடியாதா என்று தவித்துக் கொண்டிருக்கும் பாடகருக்கு, சிந்துவின் நட்பு பாலைவனச்சோலையாக அமைகிறது. இருவருக்குள்ளும் ஏற்படும் நட்பு, காதலாக மாறுகிறது. திருமணம் தாண்டிய உறவாக மலர்கிறது.

இவர்களின் நெருக்கமான பழக்கம் பற்றி அறிய நேரும் பைரவி, கடுமையாக ஆட்சேபித்து தற்கொலைக்கு முயல்கிறாள். ‘இனி சிந்துவைச் சந்திக்க மாட்டேன்’ என்று பாடகர் வாக்கு தருகிறார். ஆனால் இசையில் மனம் ஒன்ற முடியவில்லை. ஒரு வரி கூட அவரால் பாட முடியவில்லை. சிந்துவின் நினைவுகளே திரும்பத் திரும்ப அலைக்கழிக்கின்றன. பிரிவுத் துயரத்தில் உலர்கிறார். ஒரு மகத்தான கலைஞனின் வீழ்ச்சி வெற்றிகரமாகத் தொடங்குகிறது. மாலை, மரியாதையுடன் சபாவில் பாடிக் கொண்டிருந்த ஜே.கே.பி குடியில் சறுக்கி வீழ்கிறார். சாலையோரத்தில் விழுகிறார். போதைக்காகக் கண்டவரிடம் யாசகம் கேட்கிறார். ‘மகராசன் பிச்சை கேட்டு இங்கு பாடுறேன்’ என்று டப்பாங்குத்து பாடலுக்கு ஆடுகிறார். ஒரு கிளாஸ் விஸ்கிக்காக வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சாலையில் புரள்கிறார், தி கிரேட் ஜே.கே.பி.

தன் கணவரின் வீழ்ச்சியால் துயரமடையும் பைரவி, சிந்துவிடம் மடிப்பிச்சை கேட்கிறார். தன் கணவருக்கு இரண்டாவது மனைவியாக சிந்துவை ஏற்கும் அளவுக்கு மனம் மாறுகிறார். கணவர் பழையபடி திரும்பினால் போதும் என்கிற நிலைமை. இந்தச் சூழலில் சிந்து என்ன செய்வார்? இரண்டாம் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாரா? ஜே.கே.பி பழைய படி சங்கீத சக்ரவர்த்தியாக பாடத் தொடங்குகிறாரா? இவற்றிற்கு எல்லாம் விடையாக, ஒரு நெகிழ்ச்சியான திருப்பத்துடன் படம் நிறைகிறது.

சிந்து பைரவி
சிந்து பைரவி

ஜே.கே.பி-யாகவே வாழ்ந்த சிவகுமார்

ஜே.கே.பி-யாக சிவகுமார். ஏற்கெனவே சொன்னபடி அவருக்கு இதுவொரு லைஃப் டைம் கேரக்ட்டர். ரசிகர்கள் என்ற போர்வையில் பணக்கார குடிகாரர்கள் இவரைப் பயன்படுத்த நினைக்கும் போது ‘வணங்காமுடிடா இந்த ஜே.கே.பி...' என்று சீற்றத்துடன் கிளம்புவதாகட்டும், "என்னோட மிருதங்க வித்வான், மேடை சுத்தமில்லாம வந்திருக்காரு. குடிச்சிட்டு வந்திருக்காரு. அதனால இன்னிக்கு கச்சேரில மிருதங்கம் இருக்காது” என்று இசையைத் தெய்வமாக வழிபடுவதாகட்டும், ‘ஜடம்... ஜடம்... ஞானசூன்யம்’ என்று இசைரசனை இல்லாத மனைவியைக் கோபித்துக் கொள்வதாகட்டும், தனது அறையை இசையால் நிரப்பி வைத்திருக்கும் சிந்துவைக் கண்டு பிரமிப்பதாகட்டும், கடற்கரையில் தான் பாடிய தமிழ்ப்பாட்டைக் கேட்டு மீனவர் தரும் சங்கு மாலையைக் கண்ணீர் வழியப் பெறுவதாகட்டும், அநாமதேய தொலைபேசி அழைப்பில் சிந்துவிற்கு முத்தம் கொடுத்து விட்டு பிறகு ‘அந்தப் பொறுக்கி ராஸ்கல் நான்தான்’ என்று ஒப்புக் கொள்ளும் குறும்பாகட்டும், சிந்துவின் பிரிவை ஏற்றுக் கொள்ள இயலாமல் தலை கலைந்து மனம் குமைந்து மதுவில் சரண் அடைவதாகட்டும், மீண்டும் சிந்துவைக் கண்டவுடன் உற்சாகத்தில் பாடுவதாகட்டும்... ஜேகேபி பாத்திரத்தில் இன்னொருவரைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

படிய வாரிய தலை, நெற்றியில் பளிச்சென்று விபூதி, குங்குமம், புலிநக செயின், சரிகை அங்கவஸ்திரம், ஜிப்பா என்று ஒரு கண்ணியமான இசைப்பாடகரைத் தோற்றத்திலும் உடல்மொழியிலும் கச்சிதமாகப் பிரதிபலித்திருந்தார் சிவகுமார். உச்சரிப்பதற்குச் சிரமமான ஸ்வரங்களை நெட்டுரு செய்து மிகுந்த அர்ப்பணிப்புடன் இவர் பாடியதற்கு ‘குளோசப்’ காட்சிகளே சாட்சியம்.
சிந்து பைரவி
சிந்து பைரவி

‘சங்கீதம் உனக்குச் சாப்பாடு மாதிரியா? இல்ல... சுவாசம் மாதிரி’

சிந்துவாக சுஹாசினி. இயக்குநர் மகேந்திரன் கண்டெடுத்த ரத்தினம். அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவரை நடிக்க அழைத்துக் கொண்டு வந்தவர் மகேந்திரன்தான். ஹாசன் குடும்பத்திலிருந்து கிளம்பியவர், அத்தனை எளிதில் சோடை போவாரா என்ன? இந்தத் திரைப்படத்தில் சிந்துவின் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். “எந்தவொரு கலையும் மக்கள் கிட்ட போய்ச் சேரணும் இல்லையா ஜே.கே.பி சார்..?” என்று ஆரம்பிக்கிற உரசல், ‘ஒரு நிமிடம் பேசலாமா?’ என்று பலகையில் இறைஞ்சுதலாகத் தொடர்ந்து “இசையைப் பற்றி இத்தனை பேசறியே... சங்கீதம்தான் உனக்குச் சாப்பாடு போல” என்று ஜே.கே.பி சொன்னவுடன் “இல்ல சுவாசம் மாதிரி” என்று பிரமிக்க வைத்து, தன்னிடம் நேசத்தை வெளிப்படுத்தும் பாடகரிடம் முதலில் கோபித்துக் கொண்டு, பிறகு தன்னிடமே அந்தக் காதல் இருப்பதை வாக்குமூலமாகத் தந்து "இனிமே உன்னைச் சந்திக்க மாட்டேன்னு பைரவி கிட்ட சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன்" என்று பாடகர் சொன்னதும், முகம் செத்துச் சட்டென்று சுதாரித்துக் கொண்டு விடைபெறுவது என்று பல காட்சிகளில் சுஹாசினியின் ராஜ்ஜியம்தான். இவருக்கு உள்ள பிளாஷ்பேக் கதை மிகச் சோகமானது.

‘லதா மங்கேஷ்கரா பருப்புப்பொடி அரைச்சுத் தருவா?’

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் சுலக்ஷணா. தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ‘பைரவி’ கேரக்ட்டர் அவருடைய நடிப்புத் திறமையைச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தது எனலாம். ஒரு சராசரியான குடும்பத்தலைவியை, அதன் வெள்ளந்தித்தனத்தை மிக அற்புதமாக தன் பாத்திரத்தில் பிரதிபலித்திருந்தார். “சங்கீதம்னா உனக்கு என்னன்னு தெரியுமா?” என்று கணவர் வெடிக்கும் போது காட்சி துண்டிக்கப்பட்டு அடுத்த காட்சியில் "கிலோ என்ன விலைப்பா?” என்று காய்கறிகாரரிடம் சுலக்ஷணா பேரம் பேசும் காட்சியை இணைத்தது பாலசந்தரின் குறும்புகளில் ஒன்று. முதற்பார்வையிலேயே சிந்துவைப் பைரவிக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. “உங்களை அக்கான்னு கூப்பிடட்டுமா?” என்று சிந்து உரிமையுடன் விசாரிக்க, மனச்சித்திரத்தில் அவளை ‘பளார்... பளார்...’ என்று அறைந்து விட்டு பிறகு இயல்பான பொஷிஷனில் வந்து நிற்பதும் பாலசந்தரின் ‘டச்’தான்.

சிந்து பைரவி
சிந்து பைரவி

பைரவி பாத்திரத்தின் தன்மையை ‘பளிச்’சென்று விளக்கும் ஒரு காட்சி உண்டு. ‘தனக்குச் சங்கீத ரசனை இல்லாத காரணத்தினால்தானே சிந்துவின் பக்கம் கணவர் செல்கிறார்’ என்று வருத்தப்படும் பைரவி, தானும் சங்கீதம் கற்க முடிவு செய்கிறார். மிருதங்கம் குருமூர்த்தியின் உதவியுடன் இதைச் செயல்படுத்தவும் முனைகிறார். ஆனால்... ‘ச... ரி... க...‘ வைத் தாண்டுவதற்குள் “கேஸ் ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டனான்னு தெரியல. மழை பெய்யறாப்ல இருக்கு. மாடில துணிகளை எடுத்து வெச்சுட்டு வந்திடவா?” என்று அவர் அடிக்கடி கேட்கும் காட்சிகள், சாதிக்க நினைக்கும் ஒரு குடும்பத்தலைவி சந்திக்கும் இயல்பான சிக்கல்களை வெளிப்படுத்துபவை. எங்குச் சென்றாலும் குடும்பத்தைத் தலையில் சுமந்து செல்பவர்கள் அவர்கள். தற்கொலை முயற்சிக்குப் பின், “நமக்கு நடுவுல யாரும் குறுக்க வரக்கூடாது” என்று சொல்லும் பைரவிதான், பிறகு கணவரின் வீழ்ச்சியைத் தாங்க முடியாமல், தன் வாழ்க்கையை சிந்துவுடன் பங்கு போடும் அளவிற்கு ஒரு முடிவை எடுக்கிறாள்.

டெல்லி கணேஷ் – ஜனகராஜ் – டி.எஸ்.ராகவேந்திரா

ஜே.கே.பி, சிந்து, பைரவி என்று மூன்று பாத்திரங்களுக்கும் சமமான இடத்தைத் திரையில் தந்திருக்கிறார் பாலசந்தர். ஒவ்வொரு பக்கத்தின் நியாயமும் பலவீனமும் அந்தந்த கோணங்களில் சிறப்பாகப் பதிவாகியிருக்கிறது. ஜே.கே.பி-இற்கு தேவை ஒரு 'Intellectual Companion'. மனைவிக்குச் சங்கீத ரசனை இல்லை. பக்க வாத்தியக்காரர்களும் சீட்டுக்கட்டு, குடிப்பழக்கம் என்று வேறு விவகாரங்களில் மூழ்கியவர்களாக இருக்கிறார்கள். இசையைப் பற்றி யாரிடமாவது பேச முடியாதா என்கிற தவிப்புடன் இருக்கும் ஜே.கே.பி, சிந்துவைப் பார்த்ததும் பற்றிக் கொள்கிறார். ஆனால் சிந்துவின் ஆதரவு பைரவிக்குத்தான். "அவங்களுக்கு இசை பற்றித் தெரியாததுல என்ன குத்தம்? எனக்குச் சமைக்கவே தெரியாது. சிலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு" என்று சப்போர்ட் செய்வாள்.

சிந்து பைரவி
சிந்து பைரவி

இந்த மூன்று பிரதான பாத்திரங்களைத் தவிர, துணைப் பாத்திரங்களும் கூட சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, ‘மிருதங்கம்’ குருமூர்த்தியாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ். குடித்து விட்டு கச்சேரிக்கு வந்த காரணத்தினால் துரத்தியடிக்கப்படும் குருமூர்த்தி, ஜே.கே.பியின் வீட்டு வாசலில் அமர்ந்து "நீங்க என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்ற வரை வாசிப்பேன்” என்று ஆவேசமாகச் சொல்லுமிடம் அமர்க்களம். ‘அசந்தர்ப்பமான நேரத்தில் வந்து இப்படி அழிச்சாட்டியம் பண்ணுகிறானே’ என்று ஜே.கே.பி-க்குக் கோபம் வந்தாலும், குருமூர்த்தி வாசிக்கும் தாளத்தின் கச்சிதமான சுருதியை, தன்னிச்சையாகத் தலையாட்டி ரசிக்கும் இடம் சிறப்பானது. ஒரு நல்ல கலைஞன் திறமையை எங்கிருந்தாலும் கண்டு கொள்வான் என்பதற்கான உதாரணம் அது. குடித்தது போல் நடித்து ஜே.கே.பி-யைக் கண்டிக்கும் காட்சியும் இன்னொரு அற்புதம்.

‘தம்புரா’ கஜபதியாக ரகளை செய்திருக்கிறார் ஜனகராஜ். ஒவ்வொருவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றுவதும், பிறகு ஜே.கே.பி-யிடம் ‘இனி பொய் சொல்ல மாட்டேன்’ என்று சத்தியம் செய்த காரணத்தினால், உண்மையை வெளியே சொல்ல முடியாமல் தலை வீங்கி அவஸ்தைப் படுவதெல்லாம் ரசிக்கத்தகுந்த காட்சிகள். ஒரு ‘சிறந்த கோள்மூட்டி’யாக நடித்திருக்கிறார் ஜனகராஜ். குடி மற்றும் பொய்க்காக தன் பக்க வாத்தியக்காரர்களைக் கண்டிக்கும் ஜே.கே.பி, பிறகு தானே அந்தப் பள்ளத்தில் வீழ்வதுதான் பரிதாபமான முரண். நீதிபதி பாரதி கண்ணனாக ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் டி.எஸ்.ராகவேந்திரா. இவர் சிறந்த பாடகரும் கூட. இவரது மனைவியாக மணிமாலா.

பாலகுமாரனின் சினிமாப் பிரவேசம் நிகழ்ந்த படம்

சிந்து பைரவி
சிந்து பைரவி

ஜே.கே.பி தன்னிடம் காதலைச் சொல்வதால், “ஒரு இசை ரசிகையை நீங்க பயன்படுத்திக்கப் பார்க்கறீங்க” என்று கோபித்துக் கொள்ளும் சிந்து, ஒரு வார இடைவெளிக்குப் பின், தனக்குள்ளும் அந்தக் காதல் இருப்பதை உணர்ந்து வாக்குமூலமாகச் சொல்லும் காட்சி சிறப்பானது. இந்த இடைவெளியை, வார இதழ்களின் மூலமாகச் சொல்லியிருப்பதில் பாலசந்தரின் முத்திரையை உணர முடிகிறது. ஜே.கே.பி-யின் மீது தற்காலிக கோபத்திலிருந்தாலும், அவரது போஸ்டரின் மீது ஒருவர்க் கால் வைத்து நிற்பதைப் பார்த்து மனம் தாளாமல் அதை வாங்கி எடுத்து மடித்து வைக்கிறாள் சிந்து. அவளது அகத்தினுள் ஜே.கே.பி இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் நுட்பமான காட்சி இது. சிந்துவை ஒருதலையாகக் காதலிக்கும் அப்பாவியான பாத்திரத்தில் பிரதாப் போத்தனின் நடிப்பும் சிறப்பு.

இந்தப் படத்தின் இணை இயக்குநர் ‘சுரேஷ் கிருஷ்ணா’. வஸந்த் உதவி இயக்குநர். இந்தப் படத்தின் மூலம்தான் ஒரு முக்கியமான எழுத்தாளரின் சினிமாப் பிரவேசம் நிகழ்ந்தது. அது பாலகுமாரன். ஒரு டிராக்டர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பிரபலமான எழுத்தாளராக மாறிய பாலகுமாரன், சினிமாவில் நுழைவதா, வேண்டாமா என்கிற மனத்தத்தளிப்பில் இருந்து விலகி, ஒரு சரியான முடிவை எடுத்து பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இணைந்து பணியாற்றத் தொடங்கிய முதல் திரைப்படம் ‘சிந்து பைரவி’. இது சார்ந்த அனுபவங்களை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று ஒரு தொடராகவே அவர் எழுதினார். சினிமாவில் நுழைய ஆசைப்படும் இளைஞர்களுக்கு, அந்தக் கட்டுரைத் தொடர் ஒரு பாடம் எனலாம். இன்னொரு வகையில் ‘சிந்து பைரவி’யை பாலகுமாரனின் சொந்த வாழ்க்கையோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒருவகையில் அவரும் ஒரு ‘ஜே.கே.பி’தான். தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாகவே பதிவு செய்து வைத்திருக்கிறார் பாலகுமாரன்.

சிந்து பைரவி
சிந்து பைரவி

இப்போது ஒரு முக்கியமான விஷயத்திற்குள் நுழைவோம். இந்தப் படத்திற்காக, கர்னாடக சங்கீத வாசனை கமகமக்கும் இசையைத் தந்த இளையராஜாதான் ‘சிந்து பைரவியின்’ கூடுதல் சிறப்பிற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பாலசந்தர், இந்தப் படத்தின் மூலம்தான் முதன் முதலாக இளையராஜாவுடன் இணைந்தார். தனது படங்களின் பாடல்கள் வித்தியாசமாக அமைவதில் பாலசந்தர் நிறைய சிரத்தை எடுத்துக் கொள்வார். “பாலு... உன்னோட படத்துக்கு பாடல் எழுதும் போதுதான் எனக்குச் சவாலான சூழல் அமையுது” என்று கண்ணதாசனே இயக்குநரைப் பாராட்டியிருக்கிறார்.

பாமரனையும் கர்னாடக சங்கீதத்தை ரசிக்க வைத்த இளையராஜா

இளையராஜாவும் தனது பாடல்களில் பரிசோதனைகளைச் செய்து பார்ப்பதில் ஆர்வமுள்ளவர். எனவே பாலசந்தரின் கூட்டணியில் இது கூடுதல் சுவாரஸ்யமாக மாறியது. ‘அவரோகணம்’ இல்லாத ‘கலைவாணியே', மிருதங்க வாத்தியம் இல்லாத, முத்துசாமி தீக்ஷிதரின் ‘மகா கணபதிம்', கர்னாடக இசையும் நாட்டுப்புற மணமும் கச்சிதமாக இணைந்து ஒலிக்கும் ‘பாடறியேன்... படிப்பறியேன்’ என்று ஒரு மகத்தான இசை விருந்தைத் தந்தார் இளையராஜா.

பாபநாசம் சிவனின் காலத்திலிருந்து தூய கர்னாடக சங்கீதம்தான் திரையிசையில் ஒலித்தது. பிறகு மெல்ல அதில் மெல்லிசை கலக்க ஆரம்பித்தது. கே.வி.மகாதேவன் காலத்தில் கூட பல அற்புதமான ராகங்களில் பாடல்கள் உருவாகின. தனது காலகட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஜனரஞ்சகமான முறையில் மெல்லிசையை அதிகப்படுத்தினாலும் செமி கிளாசிக்கல் பாணியில் நிறைய அருமையான பாடல்களையும் அவர் உருவாக்கினார். இளையராஜா வந்த பிறகு நாட்டுப்புற இசையின் பாணி அதிகமாக உள்ளே வந்தது. இதனால் கர்னாடக சங்கீதத்திற்கும் திரையிசைப் பாடல்களுக்குமான இடைவெளி அதிகமாகிப் போனது. இந்தக் காலகட்டத்தில்தான் ‘சிந்து பைரவி’யின் பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறுகின்றன.

சிந்து பைரவி
சிந்து பைரவி

ஏறத்தாழ ஒரு கர்னாடக சங்கீதக் கச்சேரியின் சபாவில் அமர்ந்திருக்கும் உன்னதமான அனுபவத்தை இதன் பாடல்கள் தந்தன. ஒரு சராசரி ரசிகனும் இதை ஆத்மார்த்தமாக ரசிக்க முடிந்தது. ‘மரி... மரி... நின்னே’ என்னும் தியாகராஜ கீர்த்தனை, ‘மனதில் உறுதி வேண்டும்’ என்கிற பாரதியின் பாடல், ‘தண்ணித் தொட்டி தேடி வந்த’ என்கிற குத்துப் பாடல் என்று இந்தப் படத்தின் ஆல்பம் அற்புதமான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. ஜே.கே.பி-யின் குரலாக மாறி ஜேசுதாஸ் பாடிய அத்தனை பாடல்களும் தேன் போன்ற இனிமையைக் கொண்டிருந்தன. வைரமுத்துவின் வரிகள் கவித்துவம் வாய்ந்தவையாக இருந்தன. சிறந்த இசை இயக்குநராக இளையராஜாவிற்கும், சிறந்த பின்னணிப் பாடகியாக சித்ராவிற்கும் சிறந்த நடிகையாக சுஹாசினிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.

பைரவி ஜே.கே.பி-யாக மாறியிருந்தால்?!

ஒருவகையில் ‘சிந்து பைரவி’யை ஆண் மையத் திரைப்படம் எனலாம். ஜேகேபியின் ரசனைத் தேடல்தான் சிந்துவிடம் கொண்டு சேர்த்து பிறகு காதலாகி, திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறுகிறது. சூழலும் சந்தர்ப்பமும்தான் இதற்குக் காரணம் என்றாலும் இதே போன்ற உறவுச் சிக்கலில் ஒருவேளை ‘பைரவி’ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்? துணிச்சலான கருப்பொருள்களை இயக்கியிருக்கும் பாலசந்தர் இந்தக் கோணத்தில் கூட இன்னொரு படம் எடுத்திருக்கலாம். தனக்கே ஒரு வலிமிகுந்த பிளாஷ்பேக் இருக்கும் போது அதே போன்றதொரு உறவில் எப்படி சுஹாசினி விழுவார் என்கிற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், சிந்து புத்திசாலி அல்லவா? ஆனால் வாழ்க்கை என்பதே அந்தந்த நேரத்து நியாயங்கள்தானே?! அந்தந்த கணத்தின் சறுக்கல்கள்தானே?!

சிந்து பைரவி
சிந்து பைரவி
ஒரு மகத்தான கலைஞனின் வீழ்ச்சியையும் அதற்கான காரணங்களையும் உறவுச் சிக்கல்களையும் சமநிலையான தராசில் வைத்து நம் முன் தருகிறது இந்தத் திரைப்படம். அந்த அனுபவத்தைப் பெறுவதற்காக ‘சிந்து பைரவி’யை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.