கட்டுரைகள்
Published:Updated:

``பிள்ளைகளை நல்வழிப்படுத்த இதைச் செஞ்சாலே போதும்!’’

அனுராதா ஸ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுராதா ஸ்ரீராம்

அனுபவம் சொல்லும் பாடகர்கள் அனுராதா - ஸ்ரீராம் தம்பதி

‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு...’ - இந்தப் பாடலைக் கேட்பவர்கள், பின்னணிப் பாடகி அனுராதாவின் மாயக்குரலில் மயங்கிப்போவார்கள். கர்னாடக இசையிலும் புலமை பெற்ற அனுராதாவுக்கு, சினிமாப் பாடல்கள்தான் அதிக வரவேற்பைக் கொடுத்தன. அவருக்கு அப்படியே நேரெதிராக, கர்னாடக இசையில் பிரபலமானார், அவரின் கணவர் ஸ்ரீராம் பரசுராம். இசையில் மட்டுமல்ல, இல்லறத்திலும் பலருக்கும் முன்னுதாரணமான இவர்கள், தங்களின் பேரன்டிங் அனுபவங்களைப் பகிர்கின்றனர்.

‘‘குழந்தைங்க பிறந்ததும் அவங்களுக்குத்தான் முன்னுரிமைன்னு முடிவெடுத்தோம். அதுக்கேற்ப எங்களோட இசை வேலைகளைத் திட்டமிட்டோம். யேசுதாஸ் சார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சார் ஆகியோருடன் ஐரோப்பிய நாடுகள்ல நடந்த கச்சேரிகள்ல பாடப் போனேன். ஸ்டேஜ்ல தொடர்ச்சியா மூணு பாடல்கள் பாடுவேன். பிறகு, சின்ன பிரேக் எடுத்துட்டு, ஸ்டேஜ் பின்னாடி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துட்டு மறுபடியும் பாடப் போவேன்.

``பிள்ளைகளை நல்வழிப்படுத்த இதைச் செஞ்சாலே போதும்!’’

நான் என் பையனுக்குக் கொடுக்கிற கவனிப்பைத் தொடர்ந்து கவனிச்சுகிட்டே இருந்தார் எஸ்.பி.பி சார். ‘வெளியூர் கச்சேரிகளுக்குப் போறப்போ, உன்ன மாதிரி நானும் என் குழந்தைங்களைக் கூட்டிட்டுப் போயிருக்கணும். பசங்களை வளர்க்கக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கணும்னு நினைக்கிறேன்’னு ஒருமுறை அவர் வருத்தப்பட்டுச் சொன்னார். ஓர் உயிரை இந்த உலகத்துக்குக் கொண்டுவரணும்னு நாம முடிவு பண்ணிட்டோம்னா, அதுக்கு வேணுங்கிற எல்லா விஷயங்களையும் முறையா செய்யறதுதானே நியாயம்? அதைத்தான் நானும் என் கணவரும் செஞ்சோம்” என்று அனுராதா நிறுத்த, ஸ்ரீராம் பேச ஆரம்பித்தார்...

“பெற்றோர் இருவரின் பங்களிப்பும் சரிசமமா இருக்கிறதுதான் முறையான பேரன்டிங். கச்சேரி டூர் போறப்போல்லாம், பசங்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கையிலேயேதான் வெச்சுகிட்டு சுத்துவோம். குழந்தைங்களுக்கு அஞ்சு வயசாகிறவரை, நான் கச்சேரிகளை அதிகமா ஏத்துக்கலை. இசை வேலையா அனுராதா போகிற இடங்களுக்கெல்லாம் குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு நானும் கூடவே போவேன். என் மனைவி வேலையா இருக்கும்போது பசங்கள நான் பார்த்துப்பேன்.

நாங்க ஒண்ணா கச்சேரியில பாடுறப்போல்லாம், கச்சேரி முடிஞ்சு ஹோட்டலுக்கு வர நள்ளிரவு ஆகிடும். டயப்பர் மாத்திவிட்டு பசங்களைத் தூங்க வெச்சுட்டு நாங்க சாப்பிட அதிகாலை ரெண்டு மணியாகிடும். கச்சேரி, ரெக்கார்டிங்னு ஒருத்தருக்கு வேலை இருக்கும்போது, இன்னொருத்தர் வேலைகளை ஒதுக்கி வச்சிட்டு குழந்தைங்களைக் கவனிச்சிப்போம். எங்களுக்குள்ள சரியான அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததாலதான் பேரன்டிங் விஷயத்துலயும் சரியா செயல்பட முடிஞ்சது” என்பவரின் பேச்சில், பிள்ளைகள் நலனில் இருவருக்குமான அக்கறை வெளிப்படுகிறது.

``பிள்ளைகளை நல்வழிப்படுத்த இதைச் செஞ்சாலே போதும்!’’

“இந்தக் காலத்துல பசங்க திசைமாறிப் போக நிறைய இடையூறுகள் இருக்குது. அதனால குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் பிள்ளைகளைச் சரியா கவனிச்சு வளர்க்கணும். அவங்க நம்ம பேச்சைக் கேட்டாலும் இல்லைன்னாலும், அவங்களோட நடவடிக்கைகளைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிஞ்சு தோழமையோடு பழகினாலே அவங்க நம்ம பேச்சைக் கண்டிப்பா கேட்பாங்க. உளவியல் ஆலோசகர்களையும், மனநல மருத்துவர்களையும் தேடிப்போறவங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. அதுக்கு முக்கிய காரணமே, பிரச்னைகளை மனம்விட்டுப் பகிர்ந்துக்க சரியான நபர்கள் இல்லாமப் போறதுதான். அதனால, வெளிநாட்டுல காலேஜ் படிக்கிற எங்க பசங்க ரெண்டு பேரும் போன்ல பேசுறப்போல்லாம், கிச்சன் மற்றும் வீட்டு வேலைகளைச் செஞ்சுக்கிட்டே மணிக்கணக்கா அவங்களோடு பேசுவேன். பல விஷயங்களையும் ஃபிரெண்ட்லியா என்கிட்ட பகிர்ந்துப்பாங்க.

என்ன தப்பு செஞ்சாலும் பரவாயில்லை. ஆனா, அதை முதல்ல பெற்றோர்கிட்ட சொல்லி சரிப்படுத் தணும்ங்கிற எண்ணம் பசங்களுக்கு இருக்கணும். தப்பு பண்ணுறது சகஜம்தான். செஞ்சது தப்புன்னு உணர்ந்து, அதுக்கப்புறமா மறுபடியும் அந்தத் தவற்றைச் செய்யாம இருக்கிறதுதான் மனிதனுக்கான அழகு. அதை உணர்ந்து பசங்க செயல்பட்டாலே போதும். இந்த விதத்துல எங்க பசங்க எதுன்னாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லிடுவாங்க” என்று பொறுப்பாகச் சொல்லும் அனுராதாவுக்கு, பேரன்டிங் வாயிலாகவே பாடகிக்கான அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.

“நான் பரபரப்பா வேலை செஞ்சுக்கிட்டிருந்தப்போ எங்க பசங்க ரொம்ப சின்னவங்க... அப்போ முன்னணி இசையமைப் பாளர்களுக்கு நான் நிறைய ஹிட்ஸ் பாடினது அவங்களுக்குப் பெரிசா நினைவிருக்காது. சொந்த ஊர்லேருந்து இன்னோர் ஊருக்குப் போன பிறகுதான், பலருக்கும் பழைய அருமை பெருமைகள் புரியும்னு சொல்லுவாங்க. அதுபோல வெளிநாட்டுல தமிழ்ப் பேச்சை அதிகமா கேட்க முடியாத பசங்க, இப்போ அடிக்கடி தமிழ்ப் பாடல்கள் கேட்கிறாங்க.

போன்ல பேசுறப்போ, ‘அம்மா, நீ பாடின பழைய சாங்ஸ் கேட்டோம். நல்லாருக்கும்மா. அந்தக் கறுப்புதான் பாட்டை சூப்பரா பாடியிருக்கியேம்மா’ன்னு சிலாகிச்சுச் சொல்லுவாங்க. நம்ம உழைப்புக்கு யார் அங்கீகாரம் கொடுக்கிறாங்களோ, இல்லையோ... அதைச் சொல்லி நம்ம பசங்க பெருமைப்படுறதும் சந்தோஷப்படுறதும் பெத்தவங்களுக்குத்தனிப் பெருமைதான். அந்தப் பெருமிதம் இப்போ எனக்கு அடிக்கடி கிடைக்குது!” என்று அகமகிழ்ச்சியுடன் கூறுகிறார் அனுராதா.