சினிமா
Published:Updated:

“மனுஷன் செத்தா மண்ணு, மனசு மட்டும்தான் பொன்னு!”

கானா முத்து
பிரீமியம் ஸ்டோரி
News
கானா முத்து

சினிமாவில் சந்தோஷ் நாராயணன் அண்ணா தான் நம்மை அடையாளம் கண்டுபிடிச்சாரு. அப்புறம் ரஞ்சித் அண்ணாத்தே.

“அந்தா, அதான் கானா முத்தண்ணா வூடு. இன்னாமா பாடுது... இன்னா கொரலு... ‘புளி மாங்கா புளிப்' இப்ப கேட்டாலும் மெர்சலாகிடும் மன்ஸு. டெய்லி ஸ்கூலுக்குப் போகாம மட்டம் போட்டா அண்ணே கால் மாட்ல குந்தினு கானா பாட கேட்னு இருப்பேன். ஒண்ண எட்துட்றேன் கேளு. தலிவரு உள்ள டான்ஸைப் போட்னு வெள்ள வருவாரு. முத்தண்ணோவ்... யாரோ விகடனாம்ல உன்னைத் தேடிக்கினு வந்திருக்காருப்பா!” - பாடியே கானா முத்துவை அழைக்கிறான் சின்னப்பையன். வியாசர்பாடியின் உதயசூர்யன் நகரில் பிரபலமாக இருக்கிறார் முத்து. சார்பட்டா பரம்பரையில் ‘வம்பில தும்பில' பாட்டு ஆல் டைம் ஹிட். ‘புளி மாங்கா புளிப்’ அனைத்து ரசனையும் தாண்டிப் பிய்த்து உதறுகிறது. இன்றைக்கு கானா முத்து, சினிமாவில் தனிக் குரல்.

“அண்ணாத்தே, இதுதான் நமக்கு ஏரியா. அப்பாருகூட கானா பாடகர்தான். அத்தை குரலும் இங்கே பேமஸு. அப்பன் ‘ஏண்டா படிச்சு வாடா’ன்னு ஸ்கூலுக்கு அனுப்ப, நமக்கு படிப்பு அவ்வளவா ஏறலை. கானாவோட லவ்ஸ் ஆகிப்போச்சு. விடிகாலைல கறி நாஸ்டா துன்ட்டு வூட்டவுட்டு எறங்கிட்டா பாட்டுதான். காதலைச் சொல்லி, கஷ்டத்தைச் சொல்லி, துன்பத்தைச் சொல்லி ஒரே ஆட்டம் பாட்டம் தான். இங்கே ரொம்ப உண்மையை மறைச்சுட்டாங்க அண்ணாத்தே. நாங்கதான் பூர்வகுடி.”

“மனுஷன் செத்தா மண்ணு, மனசு மட்டும்தான் பொன்னு!”

பரபரப்பைக் கிளப்பிய ‘வம்பில தும்பில' பாட்டை ஆகாயம் பார்த்து அடிவயிறு அதிர எழும்புகிறது முத்துவின் குரல். அய்யா வெளியே வந்தால் சின்னஞ்சிறுசுகளிலிருந்து வயதான பெரிய மனுஷிகள் வரை பாட்டுக் கேட்கக் கூடுகிறார்கள்.

“என்னை வளர்த்ததெல்லாம் வியாசர்பாடிதான். துன்றது, தூங்குறது எல்லாமே இந்த இடத்தில்தான். லாவண்யா பூவிழியைக் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த பிறகுதான் வீட்டுக்குப் போறதே நடக்குது. அந்தப் புள்ளையும் எவ்வளவு நாள்தான் அஸ்பண்டுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்க முடியும். சிட்டுசிட்டா மூணு புள்ளைங்க. அதுகளுக்கும் லேசா கானா வாசனை வருது.

“மனுஷன் செத்தா மண்ணு, மனசு மட்டும்தான் பொன்னு!”

சிவனோ எவனோ நமக்கு எழுதிப் போட்ட சீட்டு அப்பிடி. இந்த கானாவை வச்சுக்கோடான்னு பாட்டைக் குடுத்திட்டான். நிறைய கச்சேரி பாடுறேன். இங்கிலீஷ் பத்திரிகையில் உன் மொகம் வருதுன்னு சொல்றாங்க. நமக்குப் படிக்கவா தெரியும். பார்க்க மட்டும்தான் முடியுது. இந்தப் பாட்டுகளைப் பாடித்தான் என் பாதி வாழ்க்கை கழிஞ்சது. முன்னாடியெல்லாம் கானாப் பாட்டுன்னா தீண்டாமையா இருந்துச்சு. இப்ப ஆல் சென்டர்லேயும் அள்ளி எடுக்குது. ஏ.ஸி கார்ல போறவங்க, உள்ளங்கைக்குத் தெரியாம துன்னுட்டு எந்திரிக்கிறவங்களுக்கு எம்பாட்டு புரியாதுன்னு சொல்லுவாங்க. இப்ப அப்படியில்லை. எல்லோருக்கும் புரியுது. புடிக்குது. ‘வந்து உட்காரு முத்து... நாலு பாட்டைத் தட்டிவிடு’ன்னு சொல்றாங்க. ‘மனசு கனத்து இருந்தது கலகலன்னு ஆகிடுச்சு’ன்னு சொல்றாங்க. லோல் படுற வாழ்க்கையில இந்தப் பாட்டு ஒண்ணுதான் காப்பாத்துது. மனுஷன் செத்தா மண்ணு, மனசு மட்டும்தான் பொன்னுன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்தது இந்த ஏரியாதான். ரோட்டோரம் பொஞ்சாதியோட சந்தோஷமாக் கீறவங்க, அடுத்த வேளைக்குச் சோறு கிடைக்காமல் பேப்பர் பொறுக்குகிற பசங்க, கை ரிச்சா ஓட்டுறவங்கன்னு இருக்கிறவங்கதான் என் பாட்டோட ஜனங்க.

குடும்பத்துடன் கானா முத்து
குடும்பத்துடன் கானா முத்து

சினிமாவில் சந்தோஷ் நாராயணன் அண்ணா தான் நம்மை அடையாளம் கண்டுபிடிச்சாரு. அப்புறம் ரஞ்சித் அண்ணாத்தே. Casteless collective-ல பாட ஆரம்பச்சதும் இன்னும் கொஞ்சம் பேமஸ் ஆனேன். ‘நீ நீயாகவே இருடா முத்து’ன்னு தைரியம் கொடுத்தது அண்ணாத்தே. ஒருநாள் ‘டேய் முத்து, உனக்கு ரஞ்சித் பாட்டு குடுப்பார் போலே இருக்குடா’ன்னு சந்தோஷ் அண்ணன் சொன்னார். சந்தோசம் தாங்க முடியல. ‘வம்பில தும்பில’ பாட்டு எகிறி ஹிட் ஆகிப்போச்சு.

புள்ளிங்க பொறந்திடுச்சு. பூவிழி சொல்லித்தான் இப்ப கொஞ்சம் கரீட்டாக்றேன். ‘இன்னமா பாட்றே. ஒன் கொரலுக்கும் தெறமைக்கும் ஏதாவது பெருசா பண்ணு மாமு’ன்னு தூண்டிவுட்டா. அடிக்கடி சினிமா வாய்ப்புகள் வருது. இன்னும் நல்லா பாடணும். அதுக்கு கொரலைத் தரமா வச்சுக்கப் பாடுபடுறேன். இந்த மக்களையும் கவனிக்கணும். குடும்பத்தையும் நிலைநிறுத்தணும். சினிமா வாய்ப்பு வரும்போலேயிருக்கு. அப்படியே வண்டி ஓடுது சார். கையில காசில்ல, வாயில கானா இருக்கு. லைப்ல வேற என்ன சார் வேணும்” என்பவர்

‘கன்னிப் பெண்ணைக் காதலிச்சு
காலமெல்லாம் கவலைப்பட்டு
வாழ்க்கை வீணானதே
நண்பா வாழ்க்கை வீணானதே’


என அடுத்த கானாவைக் காரசாரமாகப் பாடுகிறார். அதிகாரபூர்வ மூன்று விசிலுகளுக்குப் பிறகு அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கிறது!