பனியில்லாத மார்கழியா என்பதைப் போல், சென்னை சபாக்களில் கச்சேரிகள் இல்லாத மார்கழியா என்று கேட்கலாம். மார்கழி என்றாலே சென்னை நகரம் சங்கீத வெள்ளத்தில் நனைகிறது. பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மார்கழி சபாக்களை கச்சேரிகளால் அலங்கரிக்கின்றனர். கலைஞர்களின் இசையைப் போலவே அவர்களின் உடை அலங்காரங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. அவ்வகையில், சங்கீதத்தில் தனது சிறுவயது அனுபவங்களையும், கச்சேரிகளுக்காக எடுத்த புடவை கலெக்ஷன்களின் ஆர்வத்தையும் பகிர்கிறார் பிரபல இசைக்கலைஞர் மஹதி.
``பொதுவாக அனைத்து மாதங்களிலுமே கச்சேரிகள் நடக்கும். ஆனால் அவை பெரும்பாலும் வெளிநாடுகளில் நடப்பதால் அதிகம் தெரிவதில்லை. மார்கழி மாதத்தில் மட்டும்தான் தொடர்ந்து 30 நாள்களும் கச்சேரிகள் நடக்கின்றன. அதனால்தான் மார்கழி மாதம் சென்னையில் ஒரு விழா போல் இருக்கு. அப்பா, அம்மா இருவரும் அதிகளவில் சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டதால், எனக்கும் சிறுவயதில் இருந்தே சங்கீதத்தோடு ஒரு பிணைப்பு இருந்தது. இதுவரையிலும் கச்சேரிக்காக பெற்றோர் மற்றும் கணவரிடமிருந்து எனக்கு எந்த எதிர்ப்பும் வந்ததில்லை. பெற்றோரின் முழு ஆதரவுடன் முறையாக சங்கீதம் கற்று சிறுவயதில் இருந்து கச்சேரிகளில் பங்கு பெற்றேன். சிறுவயதில் இருந்து இன்றுவரை நான் கச்சேரிகளில் பாடும் ஒவ்வொரு பாடலையும் ரசித்துப் பாடுவேன்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அது மற்ற எல்லாருக்கும் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு அது வாழ்க்கையில் சிறுதுளியும் பிறழாமல் யூஸ் ஆகிறது. நான் ரொம்ப ஜாலியான நபர். அதனால்தானா என்று தெரியவில்லை பெரும்பாலும் புடவைகளை பிரைட் கலர்ஸிலேயே தேர்ந்தெடுப்பேன். அதிகம் பயன்படுத்துவது ரெட், பிங்க், பிளாக் புடவைகள் தான். சொல்லப்போனால் இந்த மூன்று நிறங்களும் எனக்கு மிகவும் பிடித்த நிறங்கள் "என்கிறார் மஹதி.
``கச்சேரிகள் அனைவருக்கும் தெரியும். பெண் இசைக்கலைஞர்களின் கச்சேரி என்றால் அவர்களின் புடவைகள் மற்றும் ஆபரணங்கள் அதிகளவில் பேசப்படும். அதற்காக நான் ரொம்ப ஜொலிஜொலிக்கும் புடவைகளைப் பயன்படுத்த மாட்டேன். பட்டுப் புடவைகளில் சின்ன பார்டர் வைத்த பிளெயின் புடவைகளை மட்டுமே அதிகம் பயன்படுத்துவேன். யாருக்குத்தான் தன்னை அழகுபடுத்திக் கொள்ளப் பிடிக்காது. அந்த வகையில் கச்சேரிகளின் போது பாடல்களில் மட்டுமன்றி என்னையும் அழகாகக் காட்டிக் கொள்வதில் கவனமாக இருப்பேன்.

என்னிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி என்றால், `உங்களுடைய கலெக்ஷன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு, எங்கு புடவைகள் வாங்குறீங்க?’ என்பதுதான். எனக்கு பாடுவதைத் தவிர்த்து ஷாப்பிங் போவது மிகவும் பிடிக்கும். என் கணவர், ஆரம்பத்தில ஷாப்பிங் போக வேண்டும் என சொன்னாலே ஷாக் ஆவார். ஆனால் போகப்போக அவருக்குப் பழகிவிட்டது. இப்போது ஆன்லைன் ஷாப்பிங் வந்தபின் அவற்றிலேயே அதிகம் வாங்குகிறேன். பெரும்பாலும் புடவை வாங்கும்போது அதற்கு ஏற்ற கம்மல் மற்றும் அக்ஸஸரீஸ் வாங்கி விடுவேன். எனக்கு கம்மல் மீது அலாதி பிரியம். 15 வருடங்களுக்கு முன்பு வாங்கின கம்மல்களை கூட நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
கச்சேரி என்று வரும்போது நான் மிகவும் கவனமாக இருப்பேன். கச்சேரிகளுக்கு லக்கி சாரி என்று எடுத்து வைப்பேன். புதிதாக ஒரு புடவை உடுத்தி, கச்சேரியில் என் மனதிற்கு பிடித்தளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணவில்லை என்று நினைத்தால், அந்தப் புடவையை அடுத்து எந்தக் கச்சேரிக்கும் பயன்படுத்த மாட்டேன். இது எனக்கு சிறுவயதிலிருந்தே இருக்கக்கூடிய ஒரு பழக்கம். நான் சில நெசவு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம், இன்ஸ்டாகிராம் மூலமாக அவர்களுடைய புடவைகளை வாங்குவேன். அந்தப் புடவைகளை வாங்க, என் ரசிகர்களுக்கும் பரிந்துரைப்பேன். அதில் வரும் பணத்தைக் கொண்டு அவர்கள் ராமநாதபுரம்,மதுரை போன்ற ஊர்களில் படிப்பிற்கு கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவகின்றனர்.அந்தக் குழந்தைகள், `உங்களால எனக்கு புக்,நோட்டு கிடைச்சுச்சு...நான் படிக்கிறேன்' என்று கடிதம் மூலம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்போது ஒரு சந்தோஷம் வருகிறது" எனக் கூறும் மஹதியின் உதவும் குணம் நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
``எல்லா பெண்களுக்கும் மேக்கப்புடன் இணைபிரியா கனெக்ஷன் இருக்கும். அதே போல் தான் எனக்கும். மேடையில் நான் பளிச்சென்று இருந்தால்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பார்கள். எண்ணெய் வழிந்த முகத்துடன் இருந்தால் வெறுத்து விடுவார்கள். மேலும் அது நமக்கு நம்பிக்கையைக் கொடுக்காது. பெரும்பாலும் கச்சேரிகளுக்கு மட்டுமே நான் மேக்கப் பயன்படுத்துவேன். எனக்கு கண்மை என்றால் அலாதி பிரியம். வீட்டில் கண்மை இட்டுக்கொண்டு கண்ணாடி முன் என் கண்களை நானே ரசித்துக் கொண்டே இருப்பேன். கச்சேரிகளுக்காக ஃபவுண்டேஷன், கன்சீலர், லிப் பாம் மட்டுமே பயன்படுத்துவேன். மேக்அப் விஷயத்தில் நான் ஒரு மினிமலிஸ்டிக் பர்சன்..." என்று தனது உடை, அலங்கார ஆர்வங்களைப் பகிர்ந்தார் மஹதி.