
எனக்கு 60 வயசாகுது. வயசு வெறும் நம்பர்னுதான் நினைப்பேன். வயசானாலும் மனதளவுல குழந்தைபோல உற்சாகமா இருந்தாலே, எந்தக் கவலைகளும் நம்மைப் பெரிசா பாதிக்காது.
இனிமையான குரலுக்கு மட்டுமல்ல... என்றென்றும் இளமைக்கும் சொந்தக்காரர் பின்னணிப் பாடகி சுஜாதா மோகன். குரல்வளத்தைவிடவும் இடைவிடாத சிரிப்பு சுஜாதாவுக்கான முதல் அடையாளம். ``அதுவே என் மகிழ்ச்சிக்கும் இளமைக்கும் முக்கிய காரணம்’’ என்கிறார். வளர்ந்து வரும் முன்னணிப் பாடகியான தன் மகள் ஸ்வேதா மோகனுக்கு டஃப் கொடுக்கும் இவரின் ஃபேஷன் ஆர்வம் மற்றும் பியூட்டி சீக்ரெட்ஸ் குறித்துக் கேட்கையில், மலர்ந்து சிரிப்பவரின் உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.
``சுருள் முடியுடன் உயரம் குறைவா இருந்தா இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்னு எங்க ஊர்ல பலரும் சொல்வாங்க. அது உண்மையான்னு தெரியலை. ஆனா, சின்ன வயசுலேருந்து எல்லா விஷயத்தையுமே `டேக் இட் ஈஸி’யா எடுத்துக்கப் பழகினேன். அது என் வாழ்க்கைக்கும் மியூசிக் கரியருக்கும் பெரிய ப்ளஸ்ஸா அமைஞ்சது.
கவலைக்கு இடம் கொடுக்காம இருந்தாலே நம் முகம் பொலிவா தெரியும். அதுக்கு, வாய்விட்டுச் சிரிக்கும் இயல்பான குணம் எனக்கு சப்போர்ட் பண்ணுது. குரல்வளத்துக்கு இணையா சருமத்துக்கும் அதிக அக்கறை கொடுப்பேன். மாதம்தோறும் ஒருமுறை ஃபேஷியல் பண்ணுவேன். சருமம் நல்லா இருந்தால் தான் மேக்கப் போடும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கும். எனவே, வெளியில போயிட்டு வந்ததுமே குளிர்ந்த நீர்ல முகம் கழுவிடுவேன். முகப்பொலிவுக்காக வைட்டமின் சீரம் பயன்படுத்துவேன்.

ரெகுலரா யோகா செய்வேன். அவ்வப்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்துப்பேன். இதனால, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கும். முகத்துக்கு மட்டும் சில க்ரீம்கள் பயன்படுத்துவேன். கலர்ஃபுல்லா டிரஸ் பண்ணிக்குவேன். பல மணி நேரம் நீடிக்கிற மாதிரி சரியான முறையில மேக்கப் பண்ணிப்பேன். பெரும்பாலும் செல்ஃப் மேக்கப்தான். டி.வி மற்றும் மேடை நிகழ்ச்சின்னா மட்டும்தான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் காஸ்டியூம் டிசைனரின் உதவியை நாடுவேன்” என்று புன்னகையுடன் சொல்பவருக்கு, எப்படிப்பட்ட கவலையையும் ஷாப்பிங் மறக்கச் செய்துவிடுமாம்.
``ரொம்ப டென்ஷனாவோ டிப்ரஷனாவோ இருந்தா உடனே ஷாப்பிங் போயிடுவேன். சில மணி நேரத்துல ஸ்ட்ரெஸ் காணாமப் போயிடும். மலிவான விலையில் கிடைக்கற நல்ல பொருள்களை சீக்கிரமே ஷாப்பிங் பண்ணிடுவேன். சோஷியல் மீடியால ரசிகர்கள் நம்மை உன்னிப்பா கவனிக்கிறாங்க. ஒருமுறை பயன்படுத்திய ஆடையைத் திரும்பவும் பயன்படுத்தினா, பலரும் அதை நோட்டீஸ் பண்ணி கமென்ட் பண்ணுறாங்க. அதனால, நானும் என் பொண்ணும் வார்ட்ரோப் ஷேர் பண்ணி, ஆடைகளை மாத்தி மாத்தி உடுத்திக்குவோம்’’ என்றவர் உணவுப் பழக்கம் குறித்தும் சொன்னார்.
``எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சார், `ஐஸ்க்ரீம் உள்ளிட்ட குளிர்ச்சியான மற்றும் காரமான உணவுகள் எதுவுமே என் குரல்வளத்தை பாதிக்கிறதில்லை’ன்னு சந்தோஷத்துடன் அடிக்கடி என்கிட்ட சொல்லுவார். நான் அப்படியே நேரெதிர். புளிப்பான, காரமான, குளிர்ச்சியான உணவுகள் என் குரல்வளத்தை பாதிக்கிறதால, அவற்றைப் பெரும்பாலும் தவிர்த்துடுவேன். தொண்டை வறண்டு போகாம பார்த்துப்பேன். தினமும் மூணு லிட்டர் தண்ணீர் குடிச்சுடுவேன்.

அது என்னவோ தெரியலை... மணிரத்னம் சார் படத்துக்குப் பாடப் போறதுக்கு முந்தின நாள் இரவுல எனக்கு வாய்ஸ் சரியில்லாமப் போயிடும். ஆனாலும், ரெக்கார்டிங்ல ரொம்ப சிரமப்பட்டாவது பாடிட்டு வந்திடுவேன். அந்தப் பாட்டும் ஹிட் ஆகிடும். இதேபோல வாய்ஸ் ரொம்பவே சரியில்லாம, `உன் பேர் சொல்ல ஆசைதான் (மின்சார கண்ணா)’ பாடலைப் பாடியதை என்னால மறக்கவே முடியாது. இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்க, ரெக்கார்டிங் நேரத்துல உணவு விஷயத்துல ரொம்பவே எச்சரிக்கையுடன் இருப்பேன்” என்பவர், இறுதியாகச் சொன்ன மெசேஜ் எல்லோருக்கும் பயன்தரக் கூடியது.
``எனக்கு 60 வயசாகுது. வயசு வெறும் நம்பர்னுதான் நினைப்பேன். வயசானாலும் மனதளவுல குழந்தைபோல உற்சாகமா இருந்தாலே, எந்தக் கவலைகளும் நம்மைப் பெரிசா பாதிக்காது. ஸ்வேதாவோட பொண்ணு ஸ்ரிஷ்டாவைவிட, எங்க வீட்டுல என் சேட்டைகள்தான் அதிகமா இருக்கும். யார் என்ன நினைச்சாலும் நமக்கான சந்தோஷத்தை நாமதான் உறுதிசெய்யணும். அதுதான் என் எனர்ஜிக்கு பிரதான காரணம்” - டிரேட் மார்க் சிரிப்புடன் கூறுகிறார் சுஜாதா.