கட்டுரைகள்
Published:Updated:

“திப்புவுக்கு கிஃப்ட் பண்ணின அந்த பெல்ட்..!” - பாடகி ஹரிணி ஷேரிங்ஸ்

ஹரிணி திப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஹரிணி திப்பு

அடுத்து நான் பேசப்போற டாப்பிக்கால என் மானமே போகப்போகுது” என்று வெட்கச் சிரிப்புடன், ஃபேஷன் ஆர்வம் குறித்துச் சொன்னார்.

குயில்போன்று குரல்வளம் கொண்ட பல பாடகர்களில், சிலரின் பேச்சும் குயிலை நினைவூட்டும்... ஹரிணி போல. தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘நிலா காய்கிறது’ பாடலில் ஆரம்பித்த ஹரிணியின் கரியர், இப்போது ‘பொன்னியின் செல்வன்’ வரை பிரகாசத்துடன் இருக்கிறது. ‘‘உங்கள் பாடல்கள் நிறைய கேட்குறோம். லைஃப்ஸ்டைல் பற்றி கொஞ்சம் பேசலாமா..?’’ என்றதும், ‘‘என் இமேஜ் டேமேஜ் ஆகணும்னு இருந்தா யார் என்ன பண்ண முடியும்...” என்று சிரித்தபடியே பேச்சை ஆரம்பித்தார்.

‘‘சின்ன வயசுலேருந்தே மேக்கப் விஷயத்துக்கு நான் பெருசா மெனக்கெட்டதில்லை; உணவு விஷயத்துலயும் அவ்வளவா நாட்டம் காட்டினதில்லை. எந்த விஷயத்துக்கும் நான் அடம்பிடிச்சதில்லை. அந்த அளவுக்கு பெற்றோர் கட்டுப்பாடோட வளர்த்திருக்காங்கன்னு நினைச்சுடாதீங்க. குழந்தைப் பருவத்திலேருந்தே என் விருப்பம் எல்லாம் இசையில மட்டும்தான்.

“திப்புவுக்கு கிஃப்ட் பண்ணின அந்த பெல்ட்..!” - பாடகி ஹரிணி ஷேரிங்ஸ்

அளவாதான் சாப்பிடுவேன். எவ்வளவு பசின்னாலும், வயிற்றை ஓரளவுக்குக் காலியா விட்டுடுவேன். இந்த உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. ஆனா, போகப்போக பழகிடுச்சு. கொஞ்சமா சாதம், நிறைய காய்கறிகள், அப்புறம் பழங்கள். தினமும் மூன்று லிட்டருக்கு மேல தண்ணீர் குடிச்சுடுவேன்.

குரல்வளம் பாதிக்கிறதைத் தவிர்க்க, காரமான, புளிப்பான, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்திடுவேன். தயிர்கூட அதிகம் சேர்த்துக்க மாட்டேன். எப்பயாச்சும்தான் வெளி உணவுகளைச் சாப்பிடுவேன். வீட்டு உணவுதான் எப்பவுமே என் சாய்ஸ்” என்றவர், ‘‘அடுத்து நான் பேசப்போற டாப்பிக்கால என் மானமே போகப்போகுது” என்று வெட்கச் சிரிப்புடன், ஃபேஷன் ஆர்வம் குறித்துச் சொன்னார்.

‘‘ஃபேஷன் விஷயத்துல நான் கண்டிப்பா ஃபெயில்தான். ஆனா, இடத்துக்கு ஏத்த மாதிரி நாகரிகமா டிரஸ் பண்ணிப்பேன். வெளியிடங்களுக்குப் போறதுன்னா செல்ஃப் மேக்கப், அதுவும் நேச்சுரல் மேக்கப்தான் விரும்புவேன். என் வீக்னஸ்ல முக்கியமானது ஷாப்பிங். கல்யாணத்துக்கு முன்பு அம்மாகூட ஷாப்பிங் போவேன். கல்யாணத்துக்குப் பிறகு, என் கணவர் திப்புகூட போறேன். அவர்தான் எனக்கு டிரஸ், காஸ்ட்யூம் எல்லாம் சூப்பரா செலக்ட் பண்ணிக் கொடுப்பார்.

கல்யாணமான புதுசுல ரொம்ப ஆசையா திப்புவுக்கு டி-ஷர்ட் ஒண்ணு வாங்கிக் கொடுத்தேன். அவரைவிடப் பல மடங்கு பெரிய சைஸா இருந்த அதைப் பார்த்துட்டு அவர் காட்டின ரியாக்‌ஷன்ல எனக்குக் கூச்சமாப்போச்சு. இன்னொரு முறை, 5,000 ரூபாய்க்கு அவருக்கு ஒரு பெல்ட் வாங்கி கிஃப்ட் பண்ணினேன். ஆனா அது அவ்ளோ வொர்த் இல்லையாம், கடைக்காரர் என்னை ஏமாத்தியிருக்கார். மொத்தக் குடும்பமும் என்னைக் கலாய்ச்சுத் தள்ளி, மறுபடியும் ஷேமா ஆகிடுச்சு. எந்தப் பொருளை, எப்படிப் பார்த்து வாங்கணும்னு எனக்குத் தெரியாது. என்னோட இந்த வீக்னஸை என் பிள்ளைங்க ரெண்டு பேரும்கூட கலாய்ப்பாங்க. திப்புவும் பிள்ளைங்களும் ஷாப்பிங் போகும்போது நான் கூடப் போகமாட்டேன். அந்த அளவுக்கு அந்த ஏரியாவில் நான் வீக்’’ என்றவர், தான் கடைப்பிடிக்கும் ஆரோக்கியப் பழக்கவழக்கங்களைச் சொன்னார்.

“திப்புவுக்கு கிஃப்ட் பண்ணின அந்த பெல்ட்..!” - பாடகி ஹரிணி ஷேரிங்ஸ்

‘‘ரெகுலரா யோகா பண்ணுவேன். இசைப் பயிற்சி செய்வேன். வீட்டு வேலைகளையும், குடும்பத்தினருக்கான தேவைகளை நிறைவேத்துறதிலும்தான் ஆர்வம் காட்டுவேன். எட்டு மணி நேரத் தூக்கத்தை மிஸ் பண்ணவே மாட்டேன். கச்சேரி, ரெக்கார்டிங் முடிஞ்சதும் வாய்ஸுக்கு ரெஸ்ட் கொடுப்பேன். அதிக நேரம் பேசினால் என் குரல்வளம் பாதிக்கும். அதனால, அரை மணி நேரத்துக்கு மேல தொடர்ச்சியா யார்கிட்டேயும் பேச மாட்டேன். சத்தம் போட்டுப் பேச மாட்டேன். மோசமான வார்த்தைகளையும், பிறரைக் காயப்படுத்துற வார்த்தைகளையும் பயன்படுத்தவே மாட்டேன். மனசையும் குரலையும் கூலா வெச்சுப்பேன்...’’ க்யூட் சிரிப்புடன் கூறுகிறார் ஹரிணி.