சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - சினிமா விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - சினிமா விமர்சனம்

‘எந்திரன்' கதையையே கொஞ்சம் உல்டா ஆக்கி காமெடி ட்ரீட்மென்ட் கலந்து தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா.

செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட கேர்ள் பிரெண்ட், வில்லியாக மாறினால்..? அதுதான் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்.'

காதலி இல்லாமல் துன்பப்பட்டு, துயரப்பட்டு வாழும் சிங்கிள் இளைஞர்களுக்காகவே ‘சிம்ரன்' என்ற செயற்கை நுண்ணறிவு கேர்ள் பிரெண்டை உருவாக்குகிறார் விஞ்ஞானி ஷா ரா. அவர் உருவாக்கிய போன் திருடப்பட்டு, உணவு டெலிவரி செய்யும் சிவாவின் கையில் சிக்குகிறது. சிம்ரன் மூலம் சிவாவின் வாழ்க்கையில் எக்கச்சக்க மாற்றங்கள், சிவாவுக்கும் இன்ஸ்டா பிரபலம் அஞ்சு குரியனுக்கும் காதல் மலர்கிறது. `சிம்ரன்' மேகா ஆகாஷோ தன்னைத்தான் சிவா காதலிக்க வேண்டும் என்று வலியுறுத்த, சிவா மறுக்க, அதன்பின் வில்லங்கத்தை ஆரம்பிக்கும் சிம்ரனால் ஏற்படும் சிக்கல்களை சிவா சமாளித்தாரா இல்லையா என்பதே கதை.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - சினிமா விமர்சனம்
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - சினிமா விமர்சனம்

காதல், கலாய் என்று லைட்டான வேடம்தான் சிவாவுக்கு. அதனால் எளிதில் சமாளித்துவிடுகிறார். முதல் பாதியில் சிவா அடிக்கும் காமெடி ஒன்லைனர்கள் ஈர்க்கவே செய்கின்றன. புளூமேட் பின்னணியில் சில நாள்கள் கால்ஷீட்டில் ‘சிம்ரன்’ வேலையை முடித்துவிட்டார்கள் போல. அவர் நடத்தும் விளையாட்டுகளை முதல்பாதியில் மட்டும் ரசிக்க முடிகிறது. விஞ்ஞானி ஷா ரா கூச்சலையும் ஊளையிடுவதையும் குறைத்திருக்கலாம். சிவாவின் அப்பாவாக பாடகர் மனோ, நீண்ட வருடங்களுக்குப் பின் நடித்திருக்கிறார். தான் காதலிக்கும் பெண் கிறிஸ்தவர் என்பதால் மதம் மாறி பாதர் வேடமிட்டு அவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கவைக்கின்றன. மா.கா.பா ஆனந்த், பாலா, பக்ஸ் ஆகியோர் சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகிறார்கள்.

லியோன் ஜேம்ஸின் இசையில் பின்னணி இசையும் ‘சோறுதான் முக்கியம்', ‘ஸ்மார்ட்போன் செனோரிட்டா' பாடல்களும் ஓகே ரகம். ஆர்தர் வில்சன் கேமரா எந்த மேஜிக்கையும் நிகழ்த்தவில்லை. க்ளைமாக்ஸ் காட்சி கிராபிக்ஸ், ராமநாராயணன் காலத்தைச் சேர்ந்தவையாக இருப்பது துயரம்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - சினிமா விமர்சனம்
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - சினிமா விமர்சனம்

‘எந்திரன்' கதையையே கொஞ்சம் உல்டா ஆக்கி காமெடி ட்ரீட்மென்ட் கலந்து தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா. முதல்பாதியில் அது ஓரளவு ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கதை பழைய ட்ராக்கில் பயணித்துப் பொறுமையை சோதிக்கிறது. ‘படத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம்' என்று டைட்டிலிலேயே சொல்லியிருப்பதால், பார்க்க வேண்டாம்தான். ஆனால் மா.கா.பா ஆனந்த் மனைவியுடன் சிவாவுக்குக் காதல், இரண்டாம் பாதியில் அப்பா மனோவின் காதல் ஆகியவை காமெடியைவிட எரிச்சலையே அதிகம் ஏற்படுத்துகின்றன.

இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து ஸ்மார்ட்போனில் காமெடியை டாப்-அப் செய்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.