சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“அடுத்தும் இதே டீமோடு படம் பண்ணுவோம்னு ரஜினி சொன்னார்!”

சிவா & டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவா & டீம்

இந்த டீமில் எனக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு. அப்ப நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். அப்பா சூப்பர் சூப்பராயன்தான் ‘தமிழன்’ல ஸ்டண்ட்ஸ் அமைச்சிருக்காங்க.

‘முத்து’வுக்குப் பின் 26 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் முதன்முறையாகக் கைகோத்த மகிழ்ச்சியில் புன்னகைக்கிறார் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா. தன் பட டைட்டில்களில் தனது டெக்னீஷியன் டீமை ‘சிவா & டீம்’ என்று ஸ்பெஷலாகக் குறிப்பிடும் இயக்குநர் அவர். அப்படி ஒரு ஸ்பெஷலான சிவா & டீமை விகடனுக்காக சந்திக்க வைத்தேன்.

அடைமழை ஓய்ந்து, வெளிச்சம் எட்டிப் பார்க்க ஆரம்பித்த நண்பகல் பொழுது. நமது விகடன் ஜெமினி ஹவுஸ் வெளியே சொகுசுக் கார்கள் அணிவகுக்கின்றன. இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி, இசையமைப்பாளர் டி.இமான், ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், கலை இயக்குநர் மிலன், சவுண்ட் இன்ஜினீயர் உதயகுமார் என டெக்னீஷியன்களால் நிரம்பியது அறை!

‘‘ஒரு படத்தை உருவாக்குறதுங்கிறது கூட்டு முயற்சி. ஒரே எண்ணத்தோடு நண்பர்களா இணைஞ்சு அதைச் செய்யும்போது வேலையும் சுலபமாகும். அது நல்லாவும் வரும். எங்க டீம் அப்படித்தான் இயங்குது. இந்த டீம் மீட்டில் எடிட்டர் ரூபனும் இருந்திருக்கணும். வரமுடியாமப்போச்சு...’’ என சிவா ஃபீலிங்குடன் ஆரம்பித்தார். நல்ல நண்பர்கள் பேசத் தொடங்கினார்கள்.

“அடுத்தும் இதே டீமோடு படம் பண்ணுவோம்னு ரஜினி சொன்னார்!”

‘‘ஒரு வார்த்தைதான் எங்க மூணு பேரையும் இணைத்தது. அது சினிமா. நாங்க தனித்தனியா பேட்டிகள் கொடுத்திருக்கோம். டீமாக பேட்டி கொடுக்கறது இதான் முதல் முறை’’ என்ற ஒளிப்பதிவாளர் வெற்றி, தன் அருகே இருந்த சிவாவையும், உதயகுமாரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

‘‘நாங்க திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள். அந்த நட்பே இன்னிக்கு வரை இனிய பயணமாகப் போயிட்டிருக்கு. வெற்றியும் நானும் ஒளிப்பதிவாளர்களாகத்தான் கரியரை ஆரம்பிச்சோம். நான் இயக்குநர் ஆனதும் வெற்றி என் டீமுக்குள் வந்தார். உதயகுமார் சவுண்ட் இன்ஜினீரியங் முடிச்சிட்டு, அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார். என் படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு சவுண்ட் மிக்ஸிங்கிற்காக உதய்கிட்டதான் போகும். முழுப்படத்தையும் முதன்முதலில் ஒரு ரசிகரா உதய்தான் பார்க்கிறார். அதனால், அவரோட கமெண்ட்டை ரொம்ப முக்கியமா எடுத்துக்குவேன்...’’ என சிவா சிலாகித்துச் சொன்னார்.

“அடுத்தும் இதே டீமோடு படம் பண்ணுவோம்னு ரஜினி சொன்னார்!”

சிவாவுக்கு ஒரு சிரிப்பை பதிலாகக் கொடுத்துவிட்டு, மிலன் பக்கம் திரும்பிய வெற்றி, ‘‘மிலன் சாரை ‘தமிழன்’ பட டைமிலேயே தெரியும். அவர் அதுல ஆர்ட் டிப்பார்ட்மென்ட் அசிஸ்டென்ட். நானும் கேமரா அசிஸ்டென்டா இருந்த டைம். அப்பவே நாங்க நட்பாகிட்டோம். இசையமைப்பாளரா ‘தமிழன்’தான் இமானின் முதல் படம். இப்படி ஒரு கனெக்ட் இருக்கு’’ என்ற வெற்றி, இமான் பக்கம் திரும்பி, ‘‘சார்... நீங்க ஜீனியஸ் மட்டுமல்ல, சீனியரும்கூட’’ என்றார்.

பட்டெனப் பதறிவிட்டார் இமான். ‘‘வெற்றி சார், அப்ப நான் காலேஜ் முதலாமாண்டுதான் படிச்சிட்டு இருந்தேன். நானும் உங்க செட் தான்’’ என இமான் வெட்கச் சிரிப்பை உதிர்க்க, பிரகாசமானார் திலீப்.

‘‘இந்த டீமில் எனக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு. அப்ப நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். அப்பா சூப்பர் சூப்பராயன்தான் ‘தமிழன்’ல ஸ்டண்ட்ஸ் அமைச்சிருக்காங்க. அவரைப் பார்க்கறதுக்காக ஷூட்டிங் ஸ்பாட் போனேன். எனக்கு விவரம் தெரிஞ்சு நான் ஷூட்டிங் ஸ்பாட் போன முதல் படம் அதுதான். எனக்கு சினிமா ஆசை விதைச்சதும் அந்த ஷூட்டிங் தான்’’ என திலீப் சொன்னதைக் கேட்டு மொத்தப் பேரும் ஆச்சரியமானார்கள். அவர்களின் பேச்சு ‘அண்ணாத்த’வுக்குத் திரும்பியது.

‘‘ரஜினி சார் படம் கிடைக்க அஜித் சாரும் ஒரு காரணம். ஏன்னா, இந்த வாய்பை ‘விஸ்வாசம்’ தான் கொடுத்திருக்கு. அஜித் சார் என்கிட்ட எப்பவும், ‘சிவா, நீங்க ரஜினி சாரையும் டைரக்ட் பண்ணணும்’னு சொல்வார். ‘விஸ்வாசம்’ ரிலீஸானதும் ரஜினி சாருக்குப் படத்தைப் போட்டுக் காண்பிச்சோம். ரஜினி சார் ‘சூப்பர்’னு சொல்லிட்டு ‘நாம உடனே ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம்’னு சொல்லிட்டார். சின்ன வயசில ரஜினி சார் படங்களை முதல்நாள் முதல் ஷோ பார்க்க சைக்கிளை மிதிச்சு தியேட்டருக்குப் போயிருக்கேன். அப்படி ஒரு ரசிகன். ரஜினி சார் ‘படம் பண்ணலாம்’னு சொன்னது, மறக்க முடியாத தருணம். அஜித் சாருக்கு அடுத்து வெற்றி சார்கிட்ட சொன்னேன். எனக்கு எந்த ஐடியா தோணுனாலும் வெற்றிகிட்டதான் சொல்வேன்’’ என்ற சிவா, பேச்சைச் சற்று நிறுத்தி வெற்றியைப் பார்த்தார்.

“அடுத்தும் இதே டீமோடு படம் பண்ணுவோம்னு ரஜினி சொன்னார்!”

‘‘நண்பன் ரஜினி சார் படம் பண்ணப் போறார்னு சொன்னதும், பயங்கர சந்தோஷம். ‘வீரம்’ பண்ணும்போது ஏற்பட்ட சந்தோஷம் மாதிரி... சிவா என்கிட்ட நூத்துக்கணக்கான ஐடியாக்கள் சொல்லியிருப்பார். அதுல ஒரு டஜன் மட்டும்தான் படமாகியிருக்கு.’’ என்றார் வெற்றி. தொடர்ந்தார் சிவா.

‘‘படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ரஜினி சார், ‘சிவா, நாம எந்த மாதிரி படம் பண்ணப் போறோம்’னு கேட்டார். ‘சூப்பர் ஸ்டார் படம்’னு சொன்னேன். உடனே அவர் ‘சூப்பர் ஸ்டார் படம்னா’னு குழந்தையா சிரிச்சுக்கிட்டே கேட்டார். ‘சின்னக் குழந்தையிலிருந்து வயதான பெரியவங்க வரை அத்தனை பேரையும் ரசிக்க வைக்கற ஒரு படமா, எல்லா எமோஷன்களும் கலந்த ஒரு கலவையா இருக்கும் படம்’னு சொன்னேன். சார் ஹேப்பியானார். ஒரு மணி நேரம் கதை சொல்லியிருப்பேன். அடுத்த பகுதி சொல்றதுக்கு முன்னாடியே, ‘நல்லா இருக்கு’ன்னு நெகிழ்ந்து சொன்னார். உடனடியா ஷூட்டிங் கிளம்பினோம்.

ஷூட்டிங்ல ஒவ்வொரு நாளுமே எல்லாரோட ஒர்க்கையும் ரசிச்சு ரசிச்சுப் பாராட்டுவார். ஒரு பாடல் கேட்டால்கூட, ‘இமான் சார், ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க’ன்னு அவரையும் கூப்பிட்டுப் பேசுவார். அந்த எனர்ஜிதான் எங்களுக்கு டானிக். இது ரொம்ப சந்தோஷமான ஒரு டீமா இருக்கறதுக்கு இப்படி பாசிட்டிவ் எனர்ஜிகள்தான் காரணம்’’ என்றார் சிவா.

அடுத்து ஆச்சரியம் ஒன்றையும் பகிர்ந்தார். ‘‘சென்னை பிலிம் சிட்டியில் ஷூட் பண்ணின அன்னிக்கு ஒரே நாள்ல ரஜினி சார், நயன்தாரான்னு ரெண்டு பேர்கிட்டயும் பாராட்டு வாங்கினார் வெற்றி. அன்னிக்கு எடுத்த சீன்களை நயன்தாரா மானிட்டர்ல பார்த்துட்டு ‘என்னை அழகாக் காட்டியிருக்கீங்க. தேங்க்ஸ்’னு வெற்றிகிட்ட சொன்னாங்க. ‘என்னை அழகாக் காட்டியிருக்கீங்க’ன்னு ரஜினி சாரும் அன்னிக்குப் பாராட்டினார். இப்படி ஒரே நாள்ல ரெண்டு சூப்பர் ஸ்டாரும் அவரைப் பாராட்டினாங்க. ரசிகர்களும் இப்ப அதையே சொல்றாங்க’’ என சிவா சொன்னதைக் கேட்டு வெட்கப்பட்டார் வெற்றி.

“அடுத்தும் இதே டீமோடு படம் பண்ணுவோம்னு ரஜினி சொன்னார்!”

எல்லாரையும் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்த இமான், உதயகுமார் பக்கம் திரும்பினார்.

‘‘என்னதான் நாம ஸ்டூடியோவுக்குள் ஒர்க் பண்ணினாலும், அதை தியேட்டருக்கான வடிவத்துல கச்சிதமா மாத்துறது சவுண்ட் இன்ஜினீயர் கைவண்ணம்தான். அதுல உதயகுமார் சார் பின்னிப் பெடலெடுப்பார். பேசமாட்டார். ஆனா, அவர் அறைக்குள் சவுண்ட்ஸ் ஹைடெசிபல்ல அலறும். அதேபோல சிவா சார் படத்தோட கதையைச் சொல்லும் போது அவரேஅறியாமல் பின்னணி இசையையும் சேர்த்துப் போட்டுச் சொல்வார்’’ என்ற இமான் திலீப் பக்கம் திரும்பினார்.

‘‘ஃபைட் சீக்வென்ஸ் எடுக்கும்போது சிவா சார் எல்லா சாமிகளையும் கும்பிட்டுடுவார். நான் சிவா சார்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா ஒர்க் பண்ண விரும்புறேன். ஏன்னா, அவர்கிட்ட நிறைய கத்துக்க முடியும். சிவா சார் 15 வயசிலேயே எடிட்டிங் கத்துக்க வந்துட்டார். எடிட்டிங் கத்துக்கிட்டு, அதன்பின் கேமராமேன் ஆனவர். அவரோட மேக்கிங் தனி பாணியா இருக்கும். சிலர் ஷாட்ஸை கோவையாப் படமாக்குவாங்க. ஆனா, சிவா சார் அப்படியில்ல. ‘எங்கே கட் சொல்றார், எங்கே ஷாட் வைக்கறார்’ என்பது ஆச்சரியமூட்டும். கையில சின்ன பிட் பேப்பர் மாதிரிதான் வச்சிருப்பார். அன்னிக்கான ஒர்க் அத்தனையும் அதுல இருக்கும்’’ என திலீப் வியக்க, வெற்றியும் பேசுகிறார்.

‘‘அது உண்மை. அவர் எடிட்டரா இருந்ததால, சிவா ஷூட் பண்றது எதுவும் எடிட்ல போகாது. சில படங்கள்ல ஒர்க் பண்ணும்போது, ‘இது வரும், இது வராது’ன்னு தெரியும். ஆனா, சிவா மேக்கிங் அப்படியில்ல. இது நிச்சயமா வரும்னு தெரியறதால, ரொம்பவும் பொறுப்பா, அழகியலோடு ஷூட் பண்ணியே ஆகணும். எனக்கும் திருப்தி கொடுக்கற விஷயம்னால, நட்பைத் தாண்டியும் ஒரு சின்ஸியாரிட்டி தானா வந்திடுது’’ என வெற்றி சிலிர்க்கவும், இமானும் சிவாவைப் பற்றிச் சொல்ல ரெடியானார்.

‘‘சிவா எப்பவும் பந்தை நம்ம கையில கொடுத்துடுவார். அவர்கிட்ட ஒவ்வொரு சூழலுக்கும் மூணு மூணு பாடல்களை சாய்ஸா கொடுப்பேன். ஆனா, அவர் அந்த மூன்றையும் கேட்டுட்டு ‘எது பெஸ்ட்டோ அதை நீங்களே செலக்ட் பண்ணிடுங்க’ன்னு இன்னும் பொறுப்பை ஜாஸ்தி பண்ணிடுவார். இந்த அன்புப் பிணைப்பால்தான் எங்க கூட்டணி ஜெயிக்குது’’ என இமான் புகழ்வதைக் கேட்டு, கூச்சத்தில் நெகிழ்ந்த சிவா மனம் திறக்க ஆரம்பித்தார்.

‘‘பொதுவா இயக்குநரை ‘கேப்டன் ஆஃப் த ஷிப்’னு சொல்வாங்க. அது வார்த்தை அழகுக்காகச் சொல்றது. நான் அப்படி நினைக்கல. ஒரு விஷயத்தை நோக்கிப் பயணிக்கறேன். இவங்க அத்தனை பேரையுமே சக பயணிகளா பாக்குறேன். இங்கே வந்திருக்கறவங்க மட்டுமே என் டீம் இல்ல. என் அசிஸ்டென்ட்ஸ், அவங்க அசிஸ்டென்ட்ஸ்னு எல்லாரையும் சேர்த்தால் இந்த டீம் இன்னும் பெருசு. அவங்களோட பிரதிதான் நாங்கள். நான் மட்டும் ஜெயிக்கணும்னு நினைக்காம, நம்மகூட இருக்கவங்களும் வெற்றியடையணும்னு விரும்புறேன்...’’ என்ற சிவா, தொடர்கிறார்.

‘‘மிலன்னு பெயரை வெற்றி எங்கிட்ட சொல்லும்போது ‘பெயர் ஹைஃபையா இருக்கே... ஆளும் தஸ்புஸ்னு பேசுவாரோ. அவருக்கு விளக்கம் சொல்லியே நம்ம டைம் போயிடுமோ’ன்னு பயந்ததுண்டு. ஆனா, ‘வீரம்’லதான் அவரைச் சந்திச்சேன். நல்ல மனிதர். பட்ஜெட்டுக்குள்ள ஒர்க் பண்றார். ‘அண்ணாத்த’ க்ளைமாக்ஸ் போர்ஷன் எல்லாமே நகரும் செட்கள்தான். கிட்டத்தட்ட 12 செட்கள் நகரும். ரஜினி சாரே அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார்.

“அடுத்தும் இதே டீமோடு படம் பண்ணுவோம்னு ரஜினி சொன்னார்!”

நாங்க சின்ன வயசில இருந்து ரசிச்ச சூப்பர் ஸ்டாருடன் படம் பண்ணியிருக்கோம்னு இப்ப வரை பிரமிப்பு மாறாம இருக்கு. என்னோட ஒர்க்கிங் முறை ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. காலையில முதல் ஷாட் ஏழு மணிக்கு வச்சிடுவேன். முதல்நாள் ரஜினி சார் சரியா ஏழு மணிக்கு மேக்கப்போடு வந்தார். அந்த ஷாட்ல கிராமியக் கலைஞர்களின் காம்பினேஷன். அவங்களும் ரெடியா நிற்கவும், ரஜினி சார், ‘இவங்க எப்போ வந்தாங்க, எப்போ ரெடியானாங்க’ன்னு ஆச்சரியப்பட்டார். எனக்கு நல்லா சாப்பிடப் பிடிக்கும். கரெக்ட் டைமுக்கு சாப்பிடுவேன். என் டீமும் கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்னு பிரேக் விடுவேன். இதெல்லாம் ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. படம் முடிஞ்சதும் குடும்பத்தோட வந்து பார்த்து சந்தோஷப்பட்டார். எல்லோரையும் பாராட்டினார். ‘நாம அடுத்தும் இதே டீமோடு படம் பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார். எனக்கு இப்படி ஒரு டீம் அமைஞ்சது எல்லாம் கடவுளின் அருள்’’ எனப் பூரித்த சிவாவை அன்பாக வந்து மொத்த டீமுமே அரவணைக்க, ஆரம்பமானது ஆனந்த மழை!