Published:Updated:

சிறுவன் சாமுவேல் விமர்சனம்: நாஞ்சில் நாட்டு வாழ்வியல் பேசும் சிறார் சினிமா; ஆனால் பாடம் யாருக்கு?

சிறுவன் சாமுவேல்

கிராமங்களில் நகரமயமாக்கலின் ஆரம்ப காலகட்டம் குழந்தைகளின் உளவியலை எவ்வாறு பாதித்தது என்பதை யதார்த்தமாகப் பதிவு செய்து இருக்கிறான் 'சிறுவன் சாமுவேல்'.

Published:Updated:

சிறுவன் சாமுவேல் விமர்சனம்: நாஞ்சில் நாட்டு வாழ்வியல் பேசும் சிறார் சினிமா; ஆனால் பாடம் யாருக்கு?

கிராமங்களில் நகரமயமாக்கலின் ஆரம்ப காலகட்டம் குழந்தைகளின் உளவியலை எவ்வாறு பாதித்தது என்பதை யதார்த்தமாகப் பதிவு செய்து இருக்கிறான் 'சிறுவன் சாமுவேல்'.

சிறுவன் சாமுவேல்

கேரள - தமிழக எல்லையில் உள்ள குமரி மாவட்ட கிராமத்தில் சாமுவேல் என்கிற சிறுவன் கிரிக்கெட் விளையாட்டினால் ஈர்க்கப்படுகிறான். அவன் தனது தந்தையிடம் பேட் வாங்கித் தரச்சொல்லிக் கேட்க, குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டித் தண்டனை கொடுத்துவிடுகிறார். இதற்குப் பின் 90களின் பிற்பகுதியில் பிரபலமாக இருந்த வியாபார விளம்பரம் ஒன்றைப் பற்றி அறிகிறான் சாமுவேல். அதன்படி, கிரிக்கெட் துருப்புச் சீட்டுகளைச் சேகரித்து கிரிக்கெட் மட்டையைப் பெறலாம் என்பதைத் தெரிந்து மகிழ்ச்சி அடைகிறான்.

அதைச் சேகரிக்கும் போது அவனுக்கும் அவனைச் சுற்றியுள்ளவர்களுக்கும் என்னென்ன நடக்கிறது என்பதே `சிறுவன் சாமுவேல்' திரைப்படத்தின் கதைக்களம். இதனை அறிமுக இயக்குநர் சாது பெர்லிங்டன் இயக்கியுள்ளார்.
அஜித்தன் தவசிமுத்து
அஜித்தன் தவசிமுத்து

சாமுவேலாக சிறுவன் அஜித்தன் தவசிமுத்து. அப்பாவியான முகத் தோற்றம், 'பேட்’டிற்காக ஏங்குவது, கார்டுகளைச் சேகரித்து ஒளித்து வைக்கும் போது யாராவது பார்த்து விடுவார்களா எனப் பயப்படுவது போன்ற இடங்களில் ஈர்க்கிறார். அவரது நண்பராக வரும் கே.ஜி.விஷ்ணு நமது பால்ய காலத்து நண்பரை நினைவூட்டுகிறார்.

நிச்சயமாக எல்லோரும் இப்படி ஒரு நண்பரை நம் வாழ்வில் கடந்து வந்திருப்போம். விளையாட்டில் குறும்புத்தனம், நண்பனுக்காக உதவும் பாசம், எதிரி அணியிடம் வெளிப்படும் கோபம், திருட்டு பட்டம் சுமத்தப்பட்ட போது அப்பாவியான முகமெனத் தேர்ந்த நடிகர் போலவே நடித்துள்ளார் கே.ஜி.விஷ்ணு. ஒரு சில ப்ரேம்களில் தனது பார்வையினாலேயே சிரிப்பை வர வைத்துவிடுகிறார். அதே சமயம், இவர்கள் இருவரும் சோகத்தை வெளிப்படுத்தி அழும் காட்சிகளில் இயக்குநர் இன்னும் சிறந்த நடிப்பை வாங்க முயற்சி செய்திருக்கலாம்.

கே.ஜி.விஷ்ணு
கே.ஜி.விஷ்ணு
சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்

கதாபாத்திரங்கள் அனைவரும் நாஞ்சில் மண்ணின் மலையாளமும் தமிழும் கலந்த மொழியினைப் பேசி இருக்கிறார்கள். யதார்த்தத்தைக் காட்டுவதற்காக இயக்குநர் அதே ஊரில் இருக்கும் மக்களைத் தேர்வு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

தனது கிரிக்கெட் கார்டினை சாமுவேலிடம் பறிகொடுக்கும் வாலிபன், டியூசன் டீச்சராக வரும் ஜெபா, பள்ளி வேன் டிரைவர், திருட்டு பட்டம் சுமத்தும் பெண்ணாக வருபவர், வீடியோ கேம் சிறுவர்கள், கே.ஜி.விஷ்ணுவின் தாயாராக நடித்தவர் எனப் பலர் பிரமாதமாக நடித்திருந்தாலும் ஒரு சிலர் கேமராவைப் பார்த்துப் பேசுவது போன்ற செயற்கையான உணர்வே மேலிடுகிறது.

சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்
ஈரானிய உலக சிறுவர் சினிமாவின் வடிவத்தைப் போன்றே திரைக்கதை யதார்த்தமாக நகர்கிறது. ஆனாலும் தமிழும் மலையாளமும் கலந்த மொழியினைத் தொடர்வது சற்றே கடினமாகவே உள்ளது. இருப்பினும் காட்சி வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வசனங்கள் குறைத்தே வைக்கப்பட்டுள்ளதால் என்ன நடக்கிறது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.

நிலம், மொழி, நாஞ்சில் வாழ்வியல் எனப் புது அனுபவமாக இருக்கும் முதல் பாதிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியிருக்கிறது இரண்டாம் பாதி. கதையின் மையத்திலிருந்து விலகி எங்கெங்கோ செல்வது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் நாட்டின் பச்சை பசேலென கண்ணுக்குக் குளிர்ச்சியான நிலத்தினை அருமையாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவானந் காந்தி. குறிப்பாக ஓடும் சேஸிங் காட்சியில் அருவியில் விழுந்து எழும் காட்சிப் பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெறும் கண்ணுக்கு மட்டுமான நிறைய டைட் கிளோஸ்அப்கள், பாடல் காட்சிகளில் தென்படும் மான்டேஜ் வறட்சி எனச் சில சொதப்பல்களும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.
சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்

90களின் பிற்பகுதியைக் காட்டும் விதமாக அன்றைய விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியதில் கலை இயக்கத்திலும் மென்கெட்டுள்ளனர். குறிப்பாக 'ஆசை' விளம்பரத்தை ஒரு காட்சியில் உருவகமாகப் பயன்படுத்திய விதம் அட்டகாசம். எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே.ஸ்டாண்ட்லி ஜான் இருவரின் பின்னணி இசை சிறப்பான ஓர் அனுபவத்தைத் தந்தாலும், பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. எடிட்டிங் பல இடங்களில் கோர்வையாக இல்லாத உணர்வினையே தந்தது. திருமண நிகழ்வில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஒரே ப்ரேம்கள் பொறுமையைச் சற்றே சோதிக்கின்றன.

மொத்தத்தில் கிராமங்களில் நகரமயமாக்கலின் ஆரம்ப காலகட்டம் குழந்தைகளின் உளவியலை எவ்வாறு பாதித்தது என்பதை யதார்த்தமாகப் பதிவு செய்து இருக்கிறான் 'சிறுவன் சாமுவேல்'.

சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்

குழந்தை தொழிலாளர் முறை, சிறார்களின் அக மற்றும் புற உணர்வுகளைக் கையாண்ட விதத்தில் இது சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு எடுக்கப்பட்ட சினிமா என்றே சொல்லலாம். மேக்கிங்கிலும், இரண்டாம் பாதியின் திரைக்கதையிலும் சற்று சிரத்தைக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பான திரைப்படமாக வந்திருக்கும்.

`சிறுவன் சாமுவேல்' டக் அவுட் ஆகவில்லை, சிக்ஸரும் அடிக்கவில்லை.