
கடந்த காலத் தவற்றுக்கெல்லாம் படைப்பாளியாய் மன்னிப்பு கேட்பது ஆதியிடம் நிகழ்ந்திருக்கும் வரவேற்கத்தகுந்த மாற்றம்.
தாத்தா தன் மகனுக்காக ஒரு சபதம் போட, பேரன் தன் தாத்தாவுக்காக ஒரு சபதம் போட, எதிரணி இவர்களை வீழ்த்த ஒரு சபதம் போட, அவற்றின் மொத்தத் தொகுப்பே இந்த ‘சிவகுமாரின் சபதம்.’
காஞ்சிபுரத்தில் ராஜ பட்டு என்கிற விலையுயர்ந்த பட்டு நெசவு செய்யும் குடும்பம் இளங்கோ குமணனுடையது. உடனிருந்தவர்கள் துரோகம் இழைக்க, பதிலுக்கு ‘இனி ஒருநாளும் பட்டு நெய்வதில்லை’ என சபதம் செய்கிறார். இருபது ஆண்டுகளுக்குப் பின் பேரன் ஹிப்ஹாப் ஆதிக்குக் காதலில் ஒரு சிக்கல். தன்னை நிரூபிக்க ஆதிக்குத் தேவையாய் இருக்கிறது ஒரு அடையாளம். தலைமுறை தலைமுறையாய் தன் குடும்பம் பெருமையாய்ப் போற்றிப் பாதுகாக்கும் நெசவுத் தொழிலைக் கையிலெடுத்து வென்று காட்டுவதாய் சபதம் போடுகிறார். அதில் வென்றால் காதல், குடும்பம் என அனைத்தும் கைகூடும். அப்புறமென்ன? வழக்கமான மசாலாதான்.
ஹிப்ஹாப் ஆதி கலகலப்பான காட்சிகளிலெல்லாம் ஓரளவுக்குத் தேறிவிடுகிறார். ஆனால் சென்டிமென்ட் காட்சிகளில் அவர் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உணர்ச்சிபூர்வமான கதைகளில் நடிக்க முடிவெடுத்திருக்கும் அவர் அவற்றை வெளிப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தினால் நன்று. ஹீரோயின் மாதுரிக்கு பல்லாண்டுக்காலத் தமிழ்சினிமாவின் இலக்கணம் இன்ச்கூட மாறாத அதே ஹீரோயின் வேடம். செவ்வனே வந்து போகிறார்.

சிவகுமாரின் தாத்தாவாக வரும் இளங்கோ குமணன் தமிழ்சினிமாவிற்கு நல்வரவு. மற்ற அனைவரும் தத்தளிக்கும் வேளையில் இவர் ஒருவரால் மட்டுமே எடுபடுகின்றன எமோஷன்கள். ஹிப்ஹாப் ஆதியின் சித்தப்பாவாக வரும் ராகுலின் மேனரிசம் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும் அதன்பின் ஓவர் டோஸாகிவிடுகிறது. செய்ததையே அவர் திரும்பத் திரும்பச் செய்ய, காட்சியமைப்புகளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி இருக்க, அதன் காரணமாகவே படம் நீளமாய்த் தோன்றுகிறது. கதிரின் நகைச்சுவை ஒருசில இடங்களில் சிரிப்பு, மற்ற இடங்களில் சலிப்பு.
பின்னணி இசை, பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே கேட்டுப் பழகியவை. ‘நேசமே’ மட்டுமே விதிவிலக்கு. அர்ஜுன்ராஜாவின் ஒளிப்பதிவு கமர்ஷியல் படங்களுக்கே உரிய பளிச்!

முதல் இருபது நிமிடங்களிலேயே கதை இப்படித்தான் இருக்கப்போகிறது என வெகு சுலபமாக யூகிக்க முடிவது மைனஸ். அதேசமயம், கடந்த காலத் தவற்றுக்கெல்லாம் படைப்பாளியாய் மன்னிப்பு கேட்பது ஆதியிடம் நிகழ்ந்திருக்கும் வரவேற்கத்தகுந்த மாற்றம். எங்கெங்கோ சுற்றி இரண்டாம் பாதியில் தொய்வடைந்து மீண்டும் கடைசி இருபது நிமிடங்கள் இழுத்துப் பிடித்துக் கரை சேர்கிறார் இயக்குநர் ஆதி.
பல தசாப்தங்களாக கோலிவுட்டில் பார்த்து வருவதுதான் என்பதால் மற்றுமொரு சபதமாகக் கடந்துபோகிறது இந்த ‘சிவகுமாரின் சபதம்.’