சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் - சினிமா விமர்சனம்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
News
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சரஸ்வதியாக காளீஸ்வரி ஸ்ரீநிவாசன், தேவகியாக பார்வதி திருவோத்து, சிவரஞ்சனியாக லெட்சுமிபிரியா - மூவரும் தங்கள் பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக் கிறார்கள்

ஆணாதிக்கக் குடும்ப அமைப்பால் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகுபவர்களே ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.’

80கள், 90கள், 2000த்துக்குப் பிறகு என மூன்று காலகட்டங்களில் வாழும் மூன்று பெண்களின் வாழ்க்கையும் அதனூடாக அவர்கள் சந்திக்கும் ஆதிக்கமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆதவன், அசோகமித்திரன், ஜெயமோகன் என்ற மூன்று எழுத்தாளர்களின் கதைகளே படமாகியுள்ளன. தொடர்ச்சியாகக் கணவனிடமிருந்து வெறுப்பையும் அடி, உதையையும் எதிர்கொண்டு, ஒரு சின்ன எதிர்ப்பை முன்வைப்பதன் மூலம் வாழ்க்கையே மாறிப்போகும் சரஸ்வதி, ஒரு பெண் டைரி எழுதுவதையே தகாத செயலாக நினைக்கும் குடும்பத்தை எதிர்த்துத் தனியாக வாழ முயலும் தேவகி, திருமணமானபிறகு தன் ஆளுமையைத் தொலைத்து ஒரு சின்ன கணத்தில் அதை மீட்டெடுக்கும் விளையாட்டு வீராங்கனை சிவரஞ்சனி என மூன்று பெண்களும் நாம் அன்றாட வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பெண்கள்தாம். வெறுமனே அடக்குமுறையை மட்டும் முன்வைக்காமல் அதிலிருந்து அவர்கள் தன்னை மீட்டெடுத்துக்கொள்ளும் தருணங்களையும் காட்சிப்படுத்தி யிருப்பது சிறப்பு.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் - சினிமா விமர்சனம்

சரஸ்வதியாக காளீஸ்வரி ஸ்ரீநிவாசன், தேவகியாக பார்வதி திருவோத்து, சிவரஞ்சனியாக லெட்சுமிபிரியா - மூவரும் தங்கள் பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக் கிறார்கள். மூன்று தசாப்தங்களுக்கு முன் கணவன்முன் ஒடுங்கிப்போகும் பெண்ணாக சிறப்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார் காளீஸ்வரி. எதிர்ப்புக்குரலை முன்வைக்கும் விடுதலையுணர்வு கொண்ட தேவகியின் உணர்வுகளைப் பார்வதியும் தன்னிலை இழந்து குடும்ப அமைப்புக்குள் தன் சுயம் இழக்கும் சிவரஞ்சனியின் உணர்வுகளை லெட்சுமிப் பிரியாவும் சிறப்பாகப் பிரதிபலித்திருக்கிறார்கள். கருணாகரன், சுந்தர் ராமு, கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, செந்தி, ராஜ்மோகன் எனப் பலரும் குறைவான காட்சிகளில் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

தன் இசையின் பலம் ஓசை மட்டுமல்ல, மௌனத்தின் பொருத்தப்பாடும்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிறுவியிருக்கிறார் இளையராஜா. சிவரஞ்சனியின் உணர்வுகளை உயிரோட்டமாய் நமக்குக் கடத்துகிறது பின்னணி இசை. என் கே ஏகாம்பரம் மற்றும் ரவி ஷங்கரன் இருவரின் கேமராக்களும் மூன்று வீடுகளை வெவ்வேறு பரிமாணங்களில் படம் பிடித்திருக் கின்றன.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் - சினிமா விமர்சனம்

பெண்ணுணர்வு தொடர்பான மூன்று எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்ததற்கும் அதைக் கலைப்படைப்பாக மாற்றியதற்கும் இயக்குநர் வஸந்த் எஸ் சாய்க்கு வாழ்த்துகள். மெதுவாய் நகரும் கலைப்படம் என்பதிலிருந்து சினிமாக்கள் நகர்ந்து வெகுகாலமாகியும் இந்தத் திரைப்படங்களின் மெதுவேகம் ஒரு நெருடல். 80களில் நடக்கும் சரஸ்வதி கதையில் கலை இயக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நம்மில் பல பெண்களின் வாழ்க்கையையும் வலியையும் இந்தச் சில பெண்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.