சினிமா
Published:Updated:

தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!

தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!

இந்தக் காமெடி, சென்டிமென்ட் டிராமா படத்தின் நினைவலைகளைப் பகிர்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

ட்விட்டர் டிரெண்டுகளில் தற்போதெல்லாம் அதிக இடங்களைப் பிடிப்பது படங்களின் ‘#YearsOf’ டேக்ஸ்தான். அந்தக் காலத்தில் வெளியாகி எவர்கிரீன் அந்தஸ்தைப் பெற்ற க்ளாசிக்குகள் தொடங்கி, இப்படியொரு படம் வந்ததா, எப்போது வந்தது என்பதே தெரியாமல் இருக்கும் படங்கள் வரை தேடி எடுத்து டிரெண்டாக்கி டைம்பாஸ் செய்கின்றனர். அப்படி சில க்ளாசிக் படங்களைக் குறித்து, அந்தப் படங்களில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி இயக்குநர், தயாரிப்பாளர் வரை பலரும் நமக்குத் தெரியாத சில சுவாரஸ்யங்களை விகடன் தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் சில பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் லிஸ்ட் இதோ...

பாட்ஷா

ரகுவரனை பாட்ஷாவுக்காக இயக்கிய அனுபவம் பற்றிப் பகிர்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!

`` `படத்துல ஒரு காட்சியில டான்களின் ஆதரவை இழப்பார் ரகுவரன். அப்போ உச்சக்கட்டக் கோபத்தை வெளிப்படுத்தணும். அதை அவருக்கு விளக்கிச் சொல்லிட்டேன். திடீர்னு அங்கே இருக்கிற கண்ணாடி டம்ளரைத் தன் கையாலே உடைச்சுக் கோபத்தை வெளிப்படுத்தி நடிச்சார் ரகுவரன். அவர் கை முழுக்க ரத்தக்கறை. அவர் இந்த அளவுக்கு மெனக்கெடுவார்னு யூனிட்ல இருந்த யாருமே எதிர்பார்க்கலை.”

தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!

முந்தானை முடிச்சு

இந்தக் காமெடி, சென்டிமென்ட் டிராமா படத்தின் நினைவலைகளைப் பகிர்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

“படத்துல நடிக்க ஆடிஷனுக்காக ஊர்வசியோட அக்கா கலாரஞ்சனி வந்திருந்தாங்க. அவங்ககூட துணைக்கு ஊர்வசி வந்து நின்னுட்டிருந்தாங்க. ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ஓரமா நின்னவங்களைப் பார்த்தேன். உடனே ஒரு நிமிஷம் இந்தப் பொண்ணு நம்ம பரிமளம் கேரக்டருக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு. உடனே, கலாரஞ்சனிகிட்ட ‘பாவாடை தாவணியில ஊர்வசியை அழைச்சிட்டு வர முடியுமா’ன்னு கேட்டேன். பாவாடை தாவணி போட்டு கூட்டிட்டு வந்தாங்க. கேரக்டர் லுக் சரியா இருந்தது. உடனே, படத்துல கமிட் பண்ணிட்டேன். இந்தப் படத்துல நடிச்சப்போ ஊர்வசிக்கு நடிக்குறதுல பெரிய ஆர்வமில்ல. அதனால, ஒவ்வொரு ஷாட்டும் ஏழு டேக் வரைக்கும் போகும். ஆனா, இந்தப் படத்துக்குப் பிறகு ஊர்வசி பெரிய நடிகையா வந்துட்டாங்க.”

தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!

காதல் கோட்டை

பார்க்காமலேயே காதல் என்கிற கான்செப்ட்டை தமிழ் சினிமாவுக்குத் தந்த படம்தான் காதல் கோட்டை. படத்தின் இயக்குநர் அகத்தியனின் கருத்து இது.

“கதை சொல்றேன்னு சொன்னதுக்குக்கூட, `அதெல்லாம் வேண்டாம் சார், செட்ல வந்து கேட்டுக்கிறேன்’னு அஜித் சொல்லிட்டார். செட்டுல ஒவ்வொரு காட்சியும் விளக்கும்போதும், காட்சியோட முந்தைய, பிந்தைய விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லுவேன். இப்படித்தான் இந்தக் கதையை அஜித் உள்வாங்கினார். படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியா முதல்ல, ரெண்டு பேரும் சேராத மாதிரி ஸ்க்ரிப்ட்ல எழுதியிருந்தேன். தயாரிப்பாளர் கேட்டதாலதான் அவங்க சேர்ந்தமாதிரி மாத்தினேன்.”

தசாவதாரம்

இந்தப் படத்தின் திரைக்கதை உருவான விதம் குறித்துப் பேசினார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

“கமல் சாரின் திரைக்கதையைப் படிச்சிட்டு எனக்குத் தோணுன விஷயங்களை ஒரு லெட்டரா எழுதிடுவோம்னு பத்துப் பக்கத்துக்கு அத்தனை சந்தேகங்களையும் தெளிவா கேட்டிருந்தேன். இந்த லெட்டர் எழுதினப்போ கிரேஸி மோகன், `இதைப் பார்த்துட்டு அவருக்குக் கோபம் வரப் போகுது’ன்னு சொல்லிட்டே இருந்தார். அதே மாதிரி கமல் சார்கிட்ட இருந்து பதில் லெட்டர் ரொம்பக் கோபமா வந்திருந்தது. உடனே அவரைப் பார்க்க நான் நேரா கிளம்பிப் போயிட்டேன். `சார் நான் க்ளாசிக் டைரக்டர் கிடையாது. பி அண்ட் சி ஆடியன்ஸுக்குப் படம் எடுக்குற டைரக்டர். என் அறிவுக்கு எட்டுன வரைக்கும் நான் கேட்டிருக்கேன். என்னை கன்வின்ஸ் பண்ணுங்க. இதுக்காக புராஜெக்ட் கெட்டுடக்கூடாது’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் என்னை கன்வின்ஸ் பண்ணுற மாதிரி திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தார் கமல் சார்.’’

தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!

ப்ரியமுடன்

விஜய் ஆன்டி ஹீரோவாக நடித்த ஒரே படம். இயக்குநர் வின்சென்ட் செல்வாவுக்கு இது அறிமுகப் படம். விஜய்யிடம் இந்தக் கதையைச் சொன்ன அனுபவத்தை விளக்குகிறார்.

“விஜய் சார்கிட்ட, ‘படத்தோட இன்டர்வல் பிளாக்கை முதல்ல சொல்றேன். உங்களுக்குப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு கதை சொல்றேன்’னு சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டு கேட்க ஆரம்பிச்சார். 10 நிமிஷத்துல அந்த போர்ஷனை மட்டும் சொல்லி முடிச்சேன். விஜய் சாருக்குப் பிடிச்சிருந்தது. `அப்பாகிட்ட கதையைச் சொல்லுங்க’ன்னு சொன்னார். விஜய்க்கு எதிரா இருந்த கேரக்டர்ல சூர்யாவை நடிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா, தயாரிப்புத் தரப்புல இருந்து கொஞ்சம் யோசிச்சதனால சூர்யா சார்கிட்ட இந்தக் கதையைச் சொல்லல. படத்தோட க்ளைமாக்ஸில் முதல்ல விஜய் சார் சாகுற மாதிரி சீன்ஸ் வைக்கல. ஆனா, விஜய்யோட அம்மா `அந்த கேரக்டர் சாகணும்’னு ஸ்ட்ராங்கா இருந்தாங்க. விஜய்யும்கூட, `உங்களுக்கு என்ன தோணுதோ பண்ணுங் கண்ணா’ன்னு சொல்லிட்டார். அதனால, க்ளைமாக்ஸ் காட்சியைத் திரும்பவும் ரீ ஷூட் பண்ணினோம்.”

அந்நியன்

படம் குறித்து இயக்குநர் ஷங்கர் பகிர்ந்தவை...

``விக்ரம் ஒவ்வொரு கேரக்டர் ஷூட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி வருவார். அந்த நாள் அம்பியா நடிக்கப்போறார்னா கொஞ்சம் தொய்வா இருக்கணும்னு வொர்க் அவுட் பண்ணாம வருவார். அந்நியனா நடிக்கும்போது ஃபுல்லா வொர்க் அவுட் பண்ணிட்டு ஃபிட்டா வருவார். அந்த விசாரணை சீன் எடுக்குறது பயங்கர சவாலா இருந்தது. ஸ்பாட்லயே ஜிம் கிட்டை எடுத்துட்டு வந்து வொர்க் அவுட் பண்ணி, உடம்பை ஏத்திக்கிட்டு அந்நியனா நடிப்பார். அம்பியா நடிக்கும்போது வயிறு தொப்பை தெரியணும்னு நிறைய தண்ணி குடிச்சுட்டு நடிப்பார். மறுபடியும் அந்நியன் போர்ஷனுக்கு ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்து பயங்கரமா வெயிட்ஸ் தூக்கி வொர்க் அவுட் பண்ணிட்டு திரும்பவும் நடிப்பார். இந்த சீன் மாதிரி அம்பி, ரெமோ, அந்நியன்னு மூணு கேரக்டரும் ஒரே ஷாட்ல மாறி மாறி வந்துட்டுப்போனா நல்லாருக்கும்னு நினைச்சு விக்ரம் சார்கிட்ட சொன்னேன். அவரும் ரொம்ப எக்ஸைட்டடா இருந்தார். ஆனா, அதை எங்கே வைக்கிறதுன்னு தெரியலை. திணிச்ச மாதிரியும் இருக்கக்கூடாது. அதனால அந்த சீனை வெக்கலை. இப்போகூட அந்த சீன் சரியா அமைஞ்சிருந்தா இன்னும் நல்லாருந்திருக்குமேன்னு தோணுறது உண்டு.”

பொல்லாதவன்

தனுஷ் எனும் நடிகன் மிளிரத் தொடங்கிய படம். வெற்றிமாறனின் திரைப்பயணத்தைத் தொடங்கிய படம். இந்தப் படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்...

“`ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அஞ்சாங்கிளாஸ் பாஸ் ஆனவுடன் வாட்சுக்கு ஆசைப்படுவான். எட்டாம் க்ளாஸ் படிக்கும்போது சைக்கிள் வாங்க ஆசைப்படுவான். வேலைக்குப்போகும்போது பைக் வாங்கணும்னு ஆசைப்படுவான். இப்படி ஒரு சராசரி இளைஞனின் ஆசையில் ஒரு கேங்ஸ்டர் குறுக்கிடுறான்’னு வெற்றிமாறன் சொன்ன கதை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. 2007-ம் வருஷம் தீபாவளிக்கு, `பொல்லாதவன்’ ரிலீஸ். அப்ப விஜய் நடிச்ச `அழகிய தமிழ்மகன்’, சூர்யா நடிச்ச `வேல்’, போதாததுக்கு ஷாருக்கான் நடிச்ச `ஓம் சாந்தி ஓம்’ படங்களெல்லாம் ரிலீஸானதால, பொல்லாதவனுக்கு தியேட்டர் கிடைக்கலை. இப்போது போல அப்போது மல்டிப்ளக்ஸ், மால் தியேட்டர்கள் இல்லை. நான் சோர்ந்து போகவும் இல்லை. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருச்சின்னு நாலு ஏரியாவில நானே சொந்தமா படத்தை ரிலீஸ் பண்ணினேன். படம் சூப்பர் ஹிட், வசூல் அபாரம். அப்போ `பொல்லாதவன்’ படத்தால் எனக்குக் கிடைச்ச லாபம் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய். இப்போ பத்துக்கோடிக்கு சமம்.”

தெரிந்த சினிமா... தெரியாத ரகசியம்!

24

தமிழ் சினிமாவில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் என்றுமே பரீட்சார்த்த முயற்சிதான். அப்படியொரு முயற்சியான சூர்யாவின் ‘24’ சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் என 2 தேசிய விருதுகள் பெற்று கவனம் ஈர்த்தது. படம் குறித்து இயக்குநர் விக்ரம் குமார்...

“சூர்யாகிட்ட `24’ கதையை நாலு மணி நேரம் சொன்னேன். அதுல ஆத்ரேயா கேரக்டர் பத்திச் சொல்லும்போது ரொம்பவே ஆர்வமாகிட்டார். இந்தக் கதையில நடிக்கலாம், தானே தயாரிக்கலாம்னு அவர் முடிவெடுக்க ஆத்ரேயா கேரக்டர் மிக முக்கிய காரணம். அந்த போர்ஷன்ல நடிக்கும்போது பயங்கர ஆர்வமா இருந்தார். இந்த கேரக்டருக்கான லுக் டெஸ்ட் பண்ணும்போது தாடி, முடின்னு சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் எல்லாம் சொல்லி அந்த லுக்ல அவ்ளோ டீடெய்லிங் பண்ணினார். மத்த கேரக்டர்களை விட ஆத்ரேயாதான் அவருடைய ஃபேவரைட்!”

ஆனந்தம்

இயக்குநர் லிங்குசாமியின் அறிமுகப் படம். தன் குடும்பத்தில் நடந்த சம்பவங்களை அப்படியே ஒரு படமாக மாற்றி நம்மை நெகிழச் செய்தார். அந்தப் படம் குறித்து அவரே சொல்கிறார்...

“நான் இந்தக் கதையை எந்தத் தயாரிப்பாளருக்குச் சொன்னாலும், `என்னங்க படத்துல எந்தப் பிரச்னையும் இல்ல. படம் முழுக்கவே பாசிட்டிவ்வான ஆட்களா இருங்காங்க’ன்னு சொல்லுவாங்க. பலர் அப்படிச் சொல்லியும் இந்தக் கதைக்குத் தேவையில்லாத விஷயங்கள் எதையும் நான் திரைக்கதைல சேர்க்கலை. ரொம்ப இயல்பா இருக்கணும்னு நினைச்சு நினைச்சுப் பண்ணினேன். குடும்பப் படங்கள்னா பக்கம் பக்கமா வசனம் இருக்கும்னு சொல்லுவாங்க; அதை இந்தப் படத்தில் தவிர்த்தேன். எமோஷனைத் திணிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். ஏன்னா, அந்த எமோஷனல் சம்பவங்கள் எல்லாமே எங்க வீட்ல நடந்திருந்ததனால, அதை அப்படியே எடுத்தாப்போதும்னு நினைச்சேன். அப்படி எடுத்ததால்தான் அந்தக் காட்சிகளில் உயிர் இருந்துச்சு.’’