
BHOJPURI CINEMA
தூக்கம் வராத இன்ஸோம்னியா நாள்களில் போஜ்புரி சினிமாக்கள் என் கண்ணில் பட்டன. அதுவரை பாட்னா என்றால் அஞ்சாப்பு பாடப்புத்தகத்துல பீகாரின் தலைநகரம்னு படிச்சிருக்கேன். சமீபத்தில் போஜ்புரி சினிமாக்கள் பார்த்ததும் வேறொரு இமேஜ் வந்துவிட்டது. வாங்க அதைப் பத்திச் சொல்றேன். அதுக்கு முன்னாடி... பேல்பூரி, பானிபூரி கேள்விப்பட்டிருப்பீங்க... அதென்ன போஜ்புரி?
இந்தியாவின் பூர்வாஞ்சல் எனப்படும் மேற்கு பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெற்கு நேபாளமான தராய் பகுதிகளில் பேசப்படும் இந்தியைப்போலவே இருக்கிற ஆனால், இந்தி அல்லாத ஒரு இந்திய மொழி. போஜ்புரி சினிமாவை `போஜிவுட்', `பிர்ஹாவுட்' என அன்போடு பீகாரிகள் அழைக்கிறார்கள். மார்க்கெட் இழந்த நம்ம ஊர் நடிகைகள் ரம்பா, நக்மா, நீத்து சந்த்ரா என நிறைய பேர் அங்கு கடைசியாய் நடித்தார்கள்.


முன்னொரு காலத்தில் இந்திப்படங்கள் பீகாரில் கோலோச்சியபோது, `நமக்கே நமக்கான சினிமாக்கள் வர வேண்டும்’ என பலர் ஆசைப்பட்டார்கள். ஆசை யார் வேணும்னாலும் படலாம். ஆனால், ஆசையை நிறைவேற்ற ஒரு தலைவராலதான முடியும்?
அந்தத் தலைவர் வேற யாருமில்லைங்க...
1960-ல் இந்தியாவின் ஜனாதிபதியா இருந்த ராஜேந்திர பிரசாத். கித்னா படா போஸ்ட்ல இருந்தாலும் அவருக்குப் புடிச்சது தம்மாத்தூண்டு பாட்னா. போஜ்புரி மீது பெருங்காதல் கொண்டவர். சினிமாமீது காதல் கொண்ட அவருக்குப் பாட்னா வரும் போதெல்லாம், தியேட்டர்களில் இந்திப்படங்கள் ஓடுறதைப் பார்த்து ‘போஜ்புரி சினிமா இங்கு இல்லையே’ என ஏங்கியிருக்கிறார். அவரின் நண்பர் பிஸ்வநாத் பிரதாப் என்ற தயாரிப்பாளரை வரவழைத்து, ‘இந்தியாவின் முதல் போஜ்புரி சினிமாவை எடுங்கள்’ என அன்புக் கட்டளை இட்டிருக்கிறார். குந்தன் குமார் என்ற இயக்குநர், `கங்கா மையா தோஹோ பியாரி சதாய்போ' என்ற படத்தை எடுத்து பாட்னாவில் அதே ஜனாதிபதி கைகளால் ஒரு தியேட்டரில் 1963-ல் ரிலீஸ் செய்தார். படம் ஹிட்.
அதன்பிறகு இந்தி சினிமாக்களைப் பார்த்து அதே ஸ்டைலில் போஜ்புரிப் படங்களை எடுத்துக் குவிக்க ஆரம்பித்தனர். பத்து லட்சம் இருந்தா போதும், ஒரு போஜ்புரி படத்தை எடுத்துடலாம். வியாபாரமும் குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு ஆகிவிடும் என்பதால் `சின்னக் கல்லு பெத்த லாபம்' போல் ருசி கண்டனர் பீகார் கலைப் பூனைகள்.



1980-ல் `மாய்', `ஹமர் பாஜி' போன்ற படங்களை எடுத்து, புதிய அலை போஜ்புரி சினிமாவை ஆரம்பித்தார் இயக்குநர் ராஜ்குமார் சர்மா. 2001-ல் போஜ்புரி சூப்பர் ஸ்டார் ரவி கிஷனின் என்ட்ரி. `சய்யான் ஹமர்', `பண்டித்ஜி பதாய் நா பியா கப் ஹே', `சாசுரா படா பைசா வாலா' என வாயில் நுழையாத டைட்டில்களில் பல சில்வர் ஜூப்ளி போஜ்புரி சினிமாக்கள் வர ஆரம்பித்தன. ஒரு புறம் ரவி கிஷன் மறுபுறம் மனோஜ் திவாரி இணைந்த கைகளாய், சரிந்திருந்த போஜ்புரி சினிமாவை நட்டக்குத்தலாகத் தூக்கி நிறுத்தினர். இவர்களின் சினிமாக்களில் அமிதாப் பச்சனும் மிதுன் சக்கரபர்த்தியும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு ஒரு மார்க்கெட்டை அங்கு உருவாக்கி வைத்தனர்.
50 வருட போஜ்புரி சினிமாவில் இப்போதுதான் ஆக்ஷன் மெகா ஸ்டார்கள் உருவாகிக் கலக்குகிறார்கள். அதில் முக்கியமான ஸ்டார்களைப் பற்றிச் சொல்றேன்...
ஏற்கெனவே சொன்ன மாஸ் மகாராஜா மனோஜ் திவாரி... போஜ்புரி சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி. பீகாரில் பிறந்தவர். 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் பத்துக் கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த `சாசுரா படா பைசாவாலா' படத்தில் நடித்தவர். ஆல்டைம் பிளாக்பஸ்டர். சினிமா தந்த வெளிச்சம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து இப்போது லோக் சபா எம்.பி வரை ஆக்கிவிட்டிருக்கிறது.


இவருக்கு அடுத்த ஆள் ரவி கிஷன். போஜ்புரி சினிமாவின் சூப்பர் ஸ்டார். தற்போது உ.பி கோரக்பூரின் எம்.பி. சினிமாவில் கிடைத்த ஹிட்டுகளாலேயே காங்கிரஸில் சேர்ந்தவர், பிறகு பா.ஜ.க-வுக்குத் தாவிவிட்டவர். தமிழிலும்கூட, `பூஜாவுக்கு பூந்தி கொடுத்தேன்...சாந்திக்கு சாக்லேட் கொடுத்தேன்...பாமாவுக்குப் பால்கோவா கொடுத்தேன்!'னு `மோனிஷா என் மோனாலிசா' படத்தில் மொக்கைக் காமெடி பண்ணி நடித்தார். விஜய் சேதுபதியோடு `சங்கத்தமிழன்' படத்தில்கூட சின்னதாய் தலைகாட்டியிருந்தார். இந்த இரண்டு பேரும் கிட்டத்தட்ட வி.ஆர்.எஸ் வாங்கியதால் இன்றைய தேதியில் போஜ்புரியின் யூத் ஸ்டார் என்றால் `நிரகுவா' என்றழைக்கப்படும் தினேஷ் லால் யாதவ்தான். `நிரகுவா ரிக்ஷாவாலா', `நிரகுவா இந்துஸ்தானி' என இவர் நடித்த படங்களின் டைட்டிலில் எல்லாமே நிரகுவா என்று அவசியம் இருக்கும். நம்ம ஊர் சீயான் போல அங்கு நிரகுவா வார்த்தை ரொம்பவே பாப்புலர். பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பூண்டோடும் இஞ்சி கசகசாவோடும் அழிக்கும் வேலையைப் படங்களில் தவறாமல் செய்பவர்.
அடுத்த ஆள் டெரர் பவர் ஸ்டார் பவன் சிங்... ஆக்ஷன், ரொமான்ஸ் எனக் கலந்துகட்டி நடிப்பவர். பாடகராகவும் கலக்குபவர் என்பதால் பா.ஜ.க இவரைக் கட்சிக்குள் வளைத்துப் போட்டது. `மா துஜே சலாம்’, `ராஜா', `ஜெய் ஹித்', `ஷேர் சிங்' என ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஸ்டாராக இருக்கிறார். சிக்ஸ் சிங்கிள் பேக்கிலேயே சிக்ஸ்பேக் தோரணை காட்டிச் சிதறவிடுவதும், ஹீரோயின்களோடு ஓவர் ரொமான்ஸ் செய்வதும் இவர் சிறப்பு.


பவனுக்கு அடுத்து யூத்துகளின் சாய்ஸ் கேசரி லால் யாதவ்! ஆக்ஷன் என்ற பெயரில் கொலையாய்க் கொல்லுகிறார். கேசரி கலரில் வரும் ரத்தச்சாயத்தோடு ஃபைட்டுகளை யூடியூபில் பார்த்தால், சிரிப்பு கியாரண்டி. சண்டைக்காட்சிகளில் இவர் ஃபாலோ செய்வது நம்ம ஊர் எம்.ஜி.ஆர் ஸ்டைலை. முதல் இரண்டு அடியை வாங்கிவிட்டு வாயை ரத்தக்களறியாக்கிய பிறகுதான் திருப்பிக் கொடுப்பது இவர் ஸ்டைல்.
இவர்களைத்தவிர `சிண்ட்டு', `கல்லு', `ரித்தேஷ் பாண்டே', `ராகேஷ் மிஸ்ரா', `பர்வேஷ் லால் யாதவ்' என நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள். மனோதிடம் இருப்பவர்கள் இவர்களின் படங்களைப் பார்க்கலாம்.
போஜ்புரி ஹீரோயின்கள் எல்லோரும் கிளாமரில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்துப் பத்தடி பாய்கிறார்கள். சொல்லி வைத்தாற்போல் ஒரு படத்தில் ஒரு பெட்ரூம் காட்சியிலாவது நடித்துவிடுகிறார்கள். பாடல் காட்சிகளில் அநியாயத்துக்கு அன்னியோன்யம் காட்டுகிறார்கள். பார்ப்பதற்குக் கொழுக்மொழுக்கென பப்ளியாய் இருக்கும் ஹீரோயின்களே இங்கு ஜொலிஜொலிக்கிறார்கள். ஒண்ணு டிரவுசரில் வருகிறார்கள். இல்லையென்றால் இடுப்பு தெரியும் சேலைகளில் வந்து, கிளாமர் காட்டுகிறார்கள்.
மோனாலிசா, ராணி சாட்டர்ஜி, அக்ஷரா சிங், ஆம்ராபாலி துபே, காஜல் ரக்வானி, அஞ்சனா சிங், நிதி ஜா, மது சர்மா, பூனம் துபே, சுபி சர்மா என ஹீரோயின்கள் எல்லோரும் கிளாமரில் தெறிக்கவிடுகிறார்கள். ஹீரோயின்கள் பாடல் காட்சிகளில் மட்டும் தான் அப்பிடி இப்படி இருப்பார்களே தவிர சென்டிமென்ட் காட்சிகளில் பீம்சிங் படத்து ஹீரோயின்களுடன் போட்டி போடுகிறார்கள். ஹீரோவைக் காப்பாற்றக் குறுக்கே பாய்ந்து நெஞ்சில் குண்டடி பட்டுச் சாவது, தவழ்ந்து போய் கோயிலில் நேர்த்திக்கடன் செய்வது, கிட்னியை தானமாகக் கொடுத்து இன்னொரு கிட்னியை இழந்து சாவது என சென்டிமென்ட்டில் பிழிந்தெடுக்கிறார்கள்.
போஜ்புரியின் மாஸ் ஹிட் படங்கள் அனைத்தும் யூடியூபில் இருக்கின்றன. குடும்பங்கள் கொண்டாடும் `வலிமை’ படம், கிட்னாப்பர்ஸ் திண்டாடும் `பீஸ்ட்’ படங்களெல்லாம் தெய்வ லெவல் படங்கள்னு சொல்றதுக்காகவே மொத்த போஜ்புரியன்ஸும் மேக்கிங்கில் பெயிலானாலும், பீகாரிகள் குத்த வெச்சு இந்தப் படங்களைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால், குடும்பத்தோட பார்க்கக்கூடாத பாடல் காட்சிகள் நிறைந்த அந்தப் படங்களைப் பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க். போஜ்புரி இந்திய சினிமாவின் அடையாளங்களுள் ஒன்றாக இல்லாமல் போகலாம். ஆனால், ஒரு பின்தங்கிய மாநிலத்தின் இளசுகளுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பெரிய பொழுதுபோக்காகத் தன்னளவில் தனித்து ஜிகினாவோடு ஜொலிக்கிறது!