
- மதுரை ஆர்.கணேசன்
தமிழகத்தின் கலைநகரம் என்பார்கள் மதுரையை. தமிழ்த்திரையுலகில் கோலோச்சும் பலர் மதுரையிலிருந்து வந்தவர்கள்தான். சிறந்த கலைஞர்கள் மட்டுமல்ல... ஆகச்சிறந்த ரசிகர்களும்கூட மதுரையில் இருக்கிறார்கள். வாழ்க்கை தரும் எல்லா கஷ்டங்களையும் கடந்து தங்களுக்குப் பிடித்த நடிகர்களையும் சினிமாக்களையும் கொண்டாடும் மனிதர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
மதுரை மேல ஆவணி மூலவீதியும் வடக்கு ஆவணி மூலவீதியும் சந்திக்குமிடத்தில் இருக்கிறது ஸ்ரீனிவாச பிரபுவின் வீடு. உள்ளே நுழைந்தால், வீடு முற்றிலும் இருட்டில் ஆழ்ந்திருக்கிறது. நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று ஓர் இருக்கையில் அமரவைக்கிறார் ஸ்ரீனிவாசன். திடீரென பிலிம் சுற்றும் சத்தம் கேட்கிறது. எதிரில் திரை உயிர்பெற்று ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் ஓடுகிறது. ஒரு டூரிங் டாக்கீஸில் அமர்ந்திருக்கும் உணர்வு ஏற்படுகிறது.
ஸ்ரீனிவாச பிரபு தீவிரமான சினிமா ரசிகர். தன் வீடு முழுவதும் சினிமா புரொஜெக்டர்கள், பழைய கறுப்பு வெள்ளை, கலர் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் பிலிம்களை சேகரித்து வைத்து கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.
“சின்ன வயசுல ஆரம்பிச்ச ஆர்வம் சார் இது. சவுண்ட் சந்தானம் பிள்ளைன்னு ஒருத்தர்... சினிமா தியேட்டர்கள்ல அவருக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். அவர்கூட சினிமா பார்க்கப் போவேன். புரொஜெக்டர் ரிப்பேராயிட்டா பிரிஞ்சு மேய்ஞ்சு சரி பண்ணிக் கொடுத்திருவார். அவர்மூலமாத்தான் சினிமா மேல ஆர்வம் வந்துச்சு. சில படங்களை ரொம்பப் பிடிச்சுப்போகும். பார்ப்பேன். ஆனா தியேட்டர்ல கொஞ்சநாள்ல வேறொரு படம் மாத்திடுவாங்க. ஏமாற்றமாயிடும். அதுக்காவே ஒரு புரொஜெக்டரையும் படங்களோட பிலிம் ரோல்களையும் வாங்கிச் சேமிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல நிறைய சேர்ந்திருச்சு. என்கிட்ட பிலிம் ரோல் இருக்கிறதைக் கேள்விப்பட்டு பெரிய பெரிய ஆளுங்கல்லாம் தேடி வர ஆரம்பிச்ச பிறகுதான் நாம பெரிய வேலை செஞ்சிருக்கோம்ன்னு புரிஞ்சுச்சு...” என்கிறார் ஸ்ரீனிவாச பிரபு.
சிவாஜி நடித்த என்மகன், ராஜா, அவன்தான் மனிதன், திரிசூலம், தீர்ப்பு, பட்டிக்காடா பட்டணமா, பேசும் தெய்வம், ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, எங்க மாமா, சுமதி என் சுந்தரி, தியாகம், தங்கப்பதக்கம், எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை, குலேபகாவலி, பறக்கும் பாவை, குமரிக்கோட்டம், புதுமைப்பித்தன், ராமன் தேடிய சீதை, கண்ணன் என் காதலன், நீயா என 300 நெகட்டிவ், பாசிட்டிவ் பிலிம் பிரின்ட்கள் ஸ்ரீனிவாசனின் சேமிப்பில் இருக்கின்றன. 35 MM ப்ளாட் லென்ஸ், ஸ்கோப் லென்ஸ்கள்கூட வைத்திருக்கிறார்.

“சினிமாவுல இருக்கிற நிறைய பேர் பிலிம் ரோலை வாங்கிட்டுப் போய் டிஜிட்டலாக்கி பிரின்ட் போட்டுக்கிட்டுத் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பாங்க. என் மூலமா பல பழைய திரைப்படங்கள் ஓ.டி.டிக்கு வந்திருக்கு. புனே பிலிம் இன்ஸ்டிடியூட்ல இருந்து ஸ்டுடண்ட்களுக்குப் போட்டுக் காட்டுறதுக்காகவும் வாங்கிட்டுப் போயிட்டு திருப்பி அனுப்புவாங்க. தமிழ் மட்டுமல்லாம தெலுங்கு, கன்னடப் படங்களோட பிரின்டும் வச்சிருக்கேன். எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி படங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இதோ இந்த புரொஜெக்டர் பேரு விக்டோரியா 4B. இத்தாலியில தயாரானது. 20 வருஷத்துக்கு முன்னாடி சென்னையில ஒரு கம்பெனியில வாங்கி எனக்கேத்த மாதிரி அசெம்பிள் பண்ணியிருக்கேன். இப்போ அதுதான் பயன்பாட்டுல இருக்கு. லாக்டௌன் நேரத்துல குடும்பத்தோட உக்கார்ந்து படங்கள் போட்டுப் பார்த்துதான் பொழுது போக்கினோம். இதையெல்லாம் பராமரிக்கிறது ரொம்பவே சிரமம். விடுமுறை நாள்கள்லகூட வெளியில போகாம உக்காந்து ஒவ்வொரு ரீலா எடுத்து சுத்தம் செய்வேன். நண்பர்களும் படம் பார்க்க வருவாங்க. ஞாயிற்றுக்கிழமைகள்ல நண்பர்களுக்காக படம் போடுவேன். என்னதான் கியூப்ல டிஜிட்டலா படம் பார்த்தாலும் பிலிம் ரோல்ல புரொஜெக்டர் போட்டு படம் பார்க்கிறது தனி சுகம்சார்...” என்கிற ஸ்ரீனிவாசன் தனியார் பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றுகிறார். நண்பர்கள் மத்தியில் இவரது பெயர், ‘செல்லுலாய்டு ஸ்ரீனிவாசன்!’
ஸ்ரீனிவாசனைப் போலவே தமிழ்நேசனும் சினிமாக் காதலர்தான். குறிப்பாக எம்ஜிஆரின் தீவிர ரசிகர். வீட்டின் எந்தத் திசையில் பார்த்தாலும் சிறிதும் பெரிதுமாக எம்ஜிஆர் இருக்கிறார். எம்ஜிஆர் பற்றி வெளிவந்துள்ள புத்தகங்கள், எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் சிடி, ஆடியோ கேசட்கள், பத்திரிகையில் எம்ஜிஆர் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் தமிழ்நேசனிடம் இருக்கின்றன. அதுமட்டுமல்ல... எம்ஜிஆர் படம் பார்த்த டிக்கெட்களையும்கூட அப்படியே சேகரித்து வைத்திருக்கிறார்.
“டி.கல்லுப்பட்டிதான் என்னோட பூர்விகம். பதிமூணு வயசுல தலைவர்மேல வந்த ஆர்வம்... இன்னைக்கு வரைக்கும் விட்டுப்போகாம தொடருது. முதன்முதலா எங்க ஊரு லட்சுமி தியேட்டர்ல ‘முகராசி’ படம் பார்த்தேன். அதைப் பார்த்துதான் எம்ஜிஆர் ரசிகர் ஆனேன். அவர் நடிச்ச 138 படங்கள்ல 4 படங்கள் தவிர மற்ற எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஒரு ரசிகனா இருந்த நான் ஒரு கட்டத்துல பக்தனா மாறிட்டேன். வீட்டுல என் பார்வை படுற எல்லா இடத்திலயும் அவர்தான் இருக்கணும்னு நினைச்சேன். சுவர்கள், நான் பயன்படுத்துற பொருள்கள் எல்லாத்திலயும் ஏதோ ஒரு வடிவத்துல எம்ஜிஆர் இருப்பார். நீதான்யா உண்மையான எம்ஜிஆர் ரசிகன்னு எல்லோரும் சொல்வாங்க. இப்பவும் எம்ஜிஆர் படம் தியேட்டர்களுக்கு வந்தா முதல் ஆளா போயிருவேன். நான் வருவேன்னு பலபேர் காத்திருப்பாங்க. எல்லாருக்கும் டிக்கெட் வாங்கித்தந்து கூட்டிக்கிட்டுப் போவேன். ‘இறைவன் எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழு’ன்னு ஒரு அமைப்பு ஆரம்பிச்சு நடத்துறேன். தலைவரோட பிறந்தநாள், நினைவு நாள்களுக்கு பெரிசா விழா நடத்தி அன்னதானமெல்லாம் வழங்குவோம்...” என்கிறார் தமிழ்நேசன்.
மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்திருந்தபோது எம்ஜிஆரை நேரில் சந்தித்து, தொட்டு வணங்கி ஆசி பெற்று தன் சேகரிப்பு பற்றிச் சொல்லியிருக்கிறார் தமிழ்நேசன். தோளில் தட்டிப் பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
தமிழ்நேசனுக்கு அது வாழ்நாள் பெருமிதமாக இருக்கிறது!