சினிமா
Published:Updated:

ரஜினி... கமல்... விஜய்... அஜித்... அடுத்த அப்டேட்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

அடுத்தடுத்து அறிவிப்புகளும் அப்டேட்டுகளும் சினிமா ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

எப்போதும் இல்லாத அதிசயமாக சென்னையில் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என தமிழின் டாப் ஹீரோக்களின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்றன. ‘இந்தியன் 2', ‘ஜெயிலர்', ‘வாரிசு', அஜித்தின் 61வது படம், சூர்யா- சிவா கூட்டணியில் உருவாகும் படம் என நீள்கிறது படப்பிடிப்புகள். இதில் ‘இந்தியன் 2', ‘ஜெயிலர்' அடுத்த ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்தும், விஜய், அஜித்தின் படங்கள் பொங்கல் வெளியீட்டை நோக்கியும் தயாராகிவருகின்றன. அந்தப் படங்களின் ஷூட்டிங் நிலவரங்கள் குறித்த அப்டேட் இதோ:

ஜெயிலர்

‘பேட்ட', ‘தர்பார்', ‘அண்ணாத்த' என ரஜினியின் லேட்டஸ்ட் படங்களின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் தொடங்கி, அங்கேயே முழுவதும் எடுக்கப்பட்டவை. இவை மூன்றுமே எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காததால் ஹைதராபாத் சென்டிமென்டை உடைத்தார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரெடியாகிவரும் ‘ஜெயிலர்' படத்தின் ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்கள் சென்னையில் பரபரக்கின்றன. ‘பீஸ்ட்' படத்தில் விஜய்யின் தோற்றத்தையும் படத்தைப் பற்றிய தகவல்களையும் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வந்த தயாரிப்பு நிறுவனமும், இயக்குநரும் அதில் கிடைத்த அனுபவத்தினால் ‘ஓவர் ஹைப் வெற்றிக்கு உதவாது' என முடிவுக்கு வந்துவிட்டனர். ‘ஜெயிலர்' அறிவித்த வேகத்திலேயே ரஜினியின் லுக் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்களையும் அறிவித்தது படக்குழு.

ரஜினி... கமல்... விஜய்... அஜித்... அடுத்த அப்டேட்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ‘தரமணி' வசந்த் ரவி, மலையாள நடிகர் வினாயகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தவிர, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் என நெல்சன் டீமில் இருக்கும் இருக்கும் பலரும் நடித்துவருகிறார்கள். ‘டாக்டர்' படத்திற்குப் பிறகு, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனுடன் பணியாற்றுகிறார், நெல்சன். ஏற்கெனவே இந்தப் படத்திற்காக தீம் மியூசிக் ஒன்றைக் கொடுத்திருந்தார், அனிருத். இப்போது இரண்டு பாடல்களையும் கொடுத்துவிட்டாராம். ராயப்பேட்டை உட்லண்ட் தியேட்டர் அருகேதான் ‘ஜெயிலர்' படப்பிடிப்பு ஆரம்பமானது. தொடர்ந்து எண்ணூர் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. பனையூரில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றிலும், பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டூடியோ ஒன்றிலும் செட் அமைத்துவருகின்றனர். விரைவில் அங்கே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதில்தான் சிவராஜ்குமார், தமன்னா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டன் சிவா வடிவமைக்கிறார். சமீபமாக, பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா' படத்தில் இவரது ஸ்டன்ட்ஸ் பயங்கரமாக பேசப்பட்டது.

ரஜினி... கமல்... விஜய்... அஜித்... அடுத்த அப்டேட்!

இந்தியன் 2

ஒரே நேரத்தில் இரட்டைக்குதிரைச் சவாரி செய்துவருகிறார் இயக்குநர் ஷங்கர். தெலுங்கில் ராம்சரணோடு ஒரு படம், கமலோடு ‘இந்தியன் 2' என இரண்டு பெரிய படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார். 2020-ல் படப்பிடிப்பில் நடந்த விபத்திற்குப் பிறகு, மீண்டும் ‘இந்தியன் 2' நடக்குமா என்ற கேள்வி இருந்தது. கமலின் ‘விக்ரம்' படத்திற்குக் கிடைத்த அசுர வெற்றியே இதற்கான விடையாகவும் அமைந்தது. ‘விக்ரம்' படத்தை வெளியிட்ட உதயநிதியே லைகா நிறுவனத்திடம் பேசி இதற்கான முயற்சியை எடுத்தார். அதற்கேற்றாற் போல், தெலுங்கு சினிமாத்துறையில் வேலை நிறுத்தம் ஏற்பட, ராம் சரண் படத்தின் விசாகப்பட்டினம் ஷெட்யூல் பாதித்தது. இதனால் ஏற்பட்ட இடைவெளியில் ‘இந்தியன் 2' படப்பிடிப்பிற்குள் வந்தார் ஷங்கர்.

கமல் அமெரிக்காவில் இருந்ததால், அடுத்த ஷெட்யூலில் பங்கேற்பதாகச் சொல்லிவிட்டார். ஆக, இந்த ஷெட்யூலில் மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கை ஒட்டிய பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ‘இந்தியன் 2' அறிவிப்பு வெளியானபோது, ரவிவர்மன்தான் ஒளிப்பதிவாளர். பிறகு, ‘பொன்னியின் செல்வன்' படம் அமைந்ததால் அவருக்குப் பதில் ரத்னவேலு இணைந்தார். இப்போது ரத்னவேலுவிற்கு தெலுங்கில் சில ஆஃபர்கள் வந்ததால், மீண்டும் ரவிவர்மனே ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். முதன்முறையாக ஷங்கர் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ராம்சரண் படத்திற்குச் சென்றுவிட்டார் ஷங்கர்.

சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் ‘இந்தியன் 2'-டிற்கான அரங்கம் அமைக்கும் வேலைகள் படுவேகமாக நடந்துவருகிறது. இந்த இடத்தில்தான் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்', கங்கணாவின் ‘தலைவி' உட்பட பல படங்களின் செட்கள் அமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் வாரத்தில் மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. கமல், காஜல் அகர்வால் காம்பினேஷன் காட்சிகள் அப்போது படமாக்கப்பட உள்ளன.

ரஜினி... கமல்... விஜய்... அஜித்... அடுத்த அப்டேட்!

வாரிசு

கோடம்பாக்கத்தில் விஜய்யின் ‘வாரிசு' படத்தின் பிசினஸ் பற்றித்தான் பேச்சு. இந்தி டப்பிங் இல்லாமல், அப்படத்தின் சாட்டிலைட், ஓ.டி.டி மற்றும் ஆடியோ உரிமை 120 கோடிக்குப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். இதுதவிர ஓவர்சீஸ் உரிமை 32 கோடிக்கும், இந்தி உரிமை 32 கோடிக்கும் வியாபாரம் ஆகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

‘தோழா' இயக்குநர் வம்சி பைடிபல்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு' தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரெடியாகி வருகிறது. சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, குஷ்பு, ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, யோகிபாபு இவர்களுடன் தெலுங்கு குணச்சித்திர நடிகர்களும் நடித்துவருகிறார்கள். சென்னையில் தொடங்கிய ‘வாரிசு' படப்பிடிப்பு, அதன்பின் ஹைதராபாத்திலும் விசாகப்பட்டினத்திலும் நடைபெற்றது. இப்போது மீண்டும் சென்னையில் நடக்கவுள்ளது. கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்', பிரபாஸின் ‘ஆதிபுருஷ்' படங்களின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனிதான் இதற்கும் ஒளிப்பதிவாளர். தமன் இசையில் இதுவரை மூன்று பாடல்களைக் காட்சிப்படுத்தி விட்டனர். அதில் சித்ராம், ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள சிங்கிள் ஒன்றை தீபாவளி ட்ரீட்டாகக் கொண்டுவர ஏற்பாடு நடந்துவருகிறது.

இந்த நேரத்தில் விஜய் பற்றி முக்கியமான தகவல் ஒன்றையும் சொல்லியாக வேண்டும். படப்பிடிப்பில் விஜய்யின் எளிமை பற்றி டோலிவுட் தயாரிப்பாளர்கள் சிலாகிக்கிறார்கள். தெலுங்கு ஹீரோக்கள் தங்களுக்குத் தனி விமானம் கேட்கின்றனர். படத்தின் பட்ஜெட் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம். தமிழின் டாப் ஹீரோவான விஜய், சாதாரணப் பயணி போல் சென்னையிலிருந்து நம்மூருக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். அவரது எளிமையைத் தயாரிப்பாளரான தில் ராஜூ ஆச்சர்யம் பொங்கப் பேசியிருக்கிறார். ‘வாரிசு' பொங்கல் ரிலீஸ் என்றாலும், அக்டோபர் இரண்டாவது வாரத்தோடு விஜய் தன் போர்ஷன் முழுவதையும் முடித்துக் கொடுத்துவிடுவார் என்கிறார்கள். இந்த ஷெட்யூலைத் தொடர்ந்து, பாடல் காட்சிக்காக பல்கேரியா சென்று, அங்கே விஜய் - ராஷ்மிகாவின் டூயட் ஷூட் செய்யப்படுகிறது.

ரஜினி... கமல்... விஜய்... அஜித்... அடுத்த அப்டேட்!

அஜித் 61

‘வலிமை’க்குப் பிறகு அஜித் - ஹெச்.வினோத் காம்பினேஷனில் உருவாகிவரும் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. தீபாவளி ரிலீஸ் என டார்கெட் வைத்து, படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், இன்னமும் படப்பிடிப்பு பேலன்ஸ் இருப்பதால், படத்தை டிசம்பர் இறுதியிலோ அல்லது பொங்கல் வெளியீடாகவோ கொண்டு வருவதற்குத் திட்டமிட்டு வருகிறார்கள்.

‘அஜித் 61’ ஹெய்ஸ்ட் த்ரில்லர் ஜானர் படம். படத்தில் மஞ்சு வாரியர், ‘ராஜதந்திரம்’ வீரா, ஜான் கொக்கைன், பக்ஸ், ‘மகாநதி’ சங்கர், வினோத் சாகர் உட்பட பலர் நடித்துவருகிறார்கள். வழக்கம் போல, ஹைதராபாத்தில் இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், அஜித்தின் நெகட்டிவ் கதாபாத்திரத்தின் போர்ஷன்கள் ஷூட் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அங்கே உள்ள ஹைடெக் சிட்டி அருகே அமைந்துள்ள அலுமினியம் ஃபேக்டரி ஏரியாவில், சென்னை அண்ணா சாலையை பிரமாண்டமாக‌ செட் போட்டும் படமாக்கினார்கள்.

‘வலிமை’யில் திலீப் சுப்பராயனின் ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்கள் பெயரெடுத்தன. அதைவிட இரண்டு மடங்கு ஆக்‌ஷன் போர்ஷன்கள் இதில் இருப்பதால், ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரும் இதில் இணைந்தார். சென்னை ஷெட்யூலைத் தொடர்ந்து விசாகப்பட்டினம், அரக்குவேலி மற்றும் ஒடிசாவின் சில இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்துவந்தது. விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட சுரங்கம் ஒன்றை செட் அமைக்கும் வேலைகள் இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவேறியதும், மீண்டும் அங்கே அடுத்த ஷெட்யூல் தொடங்கும்.

இதற்கிடையே பாங்காக்கிற்கும் செல்லவிருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு லொகேஷன் பார்க்கச் சென்று வந்த ஹெச்.வினோத், இறுதியாக பாங்காக்கைத் தேர்வு செய்திருக்கிறார். அங்கே ‘வலிமை’யை மிஞ்சும் வகையில் பைக் சாசகக் காட்சிகள், சேஸிங்குகள் ஷூட் செய்யவிருக்கிறார்கள். அதில் மஞ்சு வாரியர் போர்ஷனும் இருக்கிறதாம். படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் காலம் இருப்பதால், டைட்டில் குறித்து அவசரம் காட்டாமல் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை முடித்ததும், அடுத்து விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார் வினோத்.

இது ஒருபக்கம் இருக்கட்டும். நம் ஹீரோக்கள் பலரிடம் நல்ல மாற்றங்கள் நிறைய வர ஆரம்பித்துவிட்டன. ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் பெரிய இடைவெளி விட்டு வந்தவர்கள், இப்போது வருடத்திற்கு ஒரு படமாவது கண்டிப்பாகக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் அடுத்தடுத்த படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார்கள். ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு, மலையாள இயக்குநரும் எடிட்டருமான மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் நடிக்கிறார் கமல். மகேஷ்தான் ‘விஸ்வரூபம்’ படத்தின் எடிட்டர். இதனை முடித்துவிட்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியும் ‘ஜெயிலர்’ படத்தையடுத்து ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கிறார். அதே போல ‘வாரிசு’ படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார் விஜய். அதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அடுத்து சூப்பர் குட்ஸ்ஸின் நூறாவது படத்திலும் விஜய்தான் நடிக்கவிருக்கிறாராம். ஹெச்.வினோத் படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திற்குச் செல்கிறார், அஜித். இப்படி அடுத்தடுத்து அறிவிப்புகளும் அப்டேட்டுகளும் சினிமா ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.