
இங்கே எப்படி கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என மொழிவாரியாக சினிமா இன்டெஸ்ட்ரீஸ் இருக்கிறதோ அதேபோல அங்கே குட்டிகுட்டியாய் நிறைய சினிமா ஏரியாக்கள் இருக்கின்றன.
நல்லிவுட்... பேரைக் கேட்டாலே நல்லி எலும்பு பரோட்டா சால்னா கிடைக்கும் ஏதோ தீம் சாப்பாட்டுக்கடையின் பெயர் மாதிரி இருக்கா? அதான் இல்லை... நைஜீரியன் சினிமாவின் சுருக்கம்தான் நல்லிவுட்! ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சினிமா ரீதியாக நைஜீரியா பிரதிபலிப்பதால் இந்தக் காரணப்பெயரை அவர்களே சூட்டிக்கொண்டனர். அமெரிக்காவின் ஹாலிவுட்டுக்கும், இந்தியாவின் பாலிவுட்டுக்கும் நடுவே இருக்கிறது நல்லிவுட். ஆமாம். உலகிலேயே அதிக சினிமாக்கள் எடுக்கும் நாடுகளில் நைஜீரியாவுக்கு இரண்டாம் இடம்!
ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே அதிக ஆங்கிலம் பேசும் மக்கள் கொண்ட நாடு நைஜீரியாதான். மக்கள்தொகையில் உலகின் 7-ம் நாடு. 500 மொழிகள் பேசும் 250 பழங்குடியின வகையினர் சேர்ந்த ஒன்றியமே நைஜீரியா. தேசத்தை இணைக்கும் ஒரே பாலம் இந்த நல்லிவுட் சினிமா தான்.
ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நைஜீரியாவில் 21 கோடி மக்கள் வசிக்கிறார்கள். வருஷத்துக்கு 2,500 படங்கள் எடுத்துத் தள்ளுகிறார்கள். ஆனால், அந்த ஒட்டுமொத்த நாட்டிலும் இருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கையே வெறும் 220 தான். அப்புறம் எப்படி இத்தனை படங்களை எடுத்துக் குவிக்கின்றனர் என்றால், எல்லாம் கலைவெறி என்கிறார்கள் உலக சினிமா ஆர்வலர்கள். கலைவெறி மட்டுமல்ல... அது சிம்பிளான குடிசைத் தொழிலாகவும் ஆகிவிட்டது என்பதும்தான்.
இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் பாலிவுட்டை ஸ்பூப் செய்து படங்களாக எடுத்துக் குவித்த மகாராஷ்டிராவின் மாலேகான் சினிமாக்களைப் போல நைஜீரியாவில் படங்கள் எடுப்பது ஒரு குடிசைத் தொழில். சரி, நல்லிவுட் சினிமா எப்படித்தான் இருக்கும்? சில கிளாசிக் படங்களை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

அப்படியே நம் பாலிவுட் சினிமாவை ஜெராக்ஸ் செய்து படங்கள் எடுக்கிறார்கள். ஆப்ரோ அமெரிக்க நடிகர்கள் என்ற வேற்றுமை மட்டும்தான் இருக்கிறது. தயாரிப்புச் செலவிலும் படைப்பு நேர்த்தியிலும் நம்மைவிட பின் தங்கியிருந்தாலும் அவர்களது முயற்சி உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. எல்லாமே நம் ஊர் மதிப்பில் லட்சங்களில் எடுக்கப்படும் சினிமாக்கள்தான்.
முன்பெல்லாம் ஒரு ஹீரோ-ஹீரோயின், கண்டதும் காதல், ஏழை- பணக்கார ஏற்றத்தாழ்வு, ஹீரோயினை அடையத்துடிக்கும் வில்லன், உழைத்துப் பணக்காரனாகும் ஹீரோ, வில்லனைப் போட்டுத் தள்ளிவிட்டு ஹீரோயினைக் கரம்பிடிக்கும் ஹீரோ - இந்த டெம்ப்ளேட் மாவிலேயே வித்தியாச வித்தியாசமாய் தோசை சுட்டுத் தள்ளினார்கள். இப்போது பாலிவுட்டும் மாறிவிட்டதால், கொஞ்சம் மாற்று சினிமா எனும் மாற்றுப்பாதையில் போக ஆரம்பித்து விட்டார்கள். வித்யா பாலனின் ‘ஷேர்னி’ படத்தை எடுத்த அமித் வி மஸுர்கரின் முதல் படம் ‘நியூட்டன்’ அங்கே ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றது. வடக்கு நைஜீரியாவில் இருக்கும் உள்நாட்டுப் புரட்சிக் கும்பலால் தேர்தல் நடத்த அங்கு ஏற்படும் சிரமங்களைப் பார்த்துப் பழகியவர்கள் நைஜீரியர்கள். அவர்களுக்கு, நியூட்டன் படத்தில் காட்டப்பட்ட கிராமப்புற பூத் ஒன்றில் தேர்தல் நடத்த வந்த அதிகாரியின் அனுபவங்களைப் பார்த்ததே தங்கள் ஊரில் பார்த்ததைப்போல இருந்தது என்கிறார்கள். இப்போது பாலிவுட் சாயலில் நிறைய படங்களை நல்லிவுட்டில் பார்க்க முடிகிறது. ‘மில்க் மெய்ட்’, ‘திஸ் லேடி கால்டு லைப்’, ‘வாய்ஸ்லெஸ்’, ‘தி குஜுஸ்’, ‘இப்’, ‘லயன் ஹார்ட்’, ‘ரேட்டில் ஸ்நேக்’, ‘சிட்டேஷன்’ போன்ற படங்கள் சமீபத்திய ஹிட் படங்கள். பெரும்பாலும் ஆங்கில டைட்டில்களே வைக்கப்படுகின்றன. (நாமளும் பீஸ்ட் மோடுக்குப் போயிட்டோம்ல!)
இங்கே எப்படி கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என மொழிவாரியாக சினிமா இன்டெஸ்ட்ரீஸ் இருக்கிறதோ அதேபோல அங்கே குட்டிகுட்டியாய் நிறைய சினிமா ஏரியாக்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது கானோ நகரத்தில் எடுக்கப்படும் சினிமாக்கள். சுருக்கமாய் கன்னிவுட் என்கிறார்கள். எல்லாப் படங்களும் ஆங்கிலத்திலும் டப் செய்யப்படுவதால் உலகம் முழுவதும் இப்போது மெல்ல கன்னிவுட்டும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. யோரூபா என்ற மொழி பேசும் சினிமாக்கள்தான் முதன்முதலில் வடக்கு நைஜீரியாவில் எடுக்கப்பட்டன. அப்புறம் 90களில் கன்னிவுட் சினிமா பாப்புலரானது. ‘தர்மீன் தன்யா’ என்ற படம்தான் அந்தக் காலத்து அந்த ஊர் ‘16 வயதினிலே’ - முதல் அவுட்டோரில் எடுக்கப்பட்ட சினிமா! சேரனும் கமலும் இங்கு கொண்டுவர மெனக்கெட்ட டிடீஹெச் அங்கு எப்போதோ வந்து சக்சஸ் ஆகிவிட்டது.

நம்ம ஊர் எம்.ஜி.ஆர் போல அங்கே ஆர்.எம்.டி என்று ஒருவர் இருக்கிறார். பெயர் ரிச்சர்ட் மோவே டாமிஜோ! ‘வயசானாலும் ஆர்.எம்.டியின் ஸ்டைலும் கெத்தும் குறையல...’ என இப்போதும் சில்லறையைச் சிதறவிடுகிறார்கள் நைஜீரிய நீலாம்பரிகள்.
டெஸ்மெண்ட் இலியாட்... அந்த ஊர் டி.ராஜேந்தர் போல படத்தின் ஆல் டிப்பார்ட்மென்ட் ஏரியாவிலும் கில்லி. ஒரு படத்தில் ஹீரோயின் தோழியாகவும் கெட்டப் போட்டு கமல்ஹாசனுக்கே டப் கொடுத்திருக்கிறார். ஜிம் லைக் என்ற ஹீரோவை நைஜீரியாவின் பேட் பாய் என்றழைக்கிறார்கள். 100 படங்களில் நடித்த இவருக்கு நிறைய பெண் தோழிகள் உண்டு. அதான் பேட்பாய் இமேஜ்.
ராம்சே நோவா அந்த ஊர் விஜய் சேதுபதி. வெள்ளிக்கிழமை ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிடுவார். நிறைய அவார்டுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். ஆப்பிரிக்கக் கண்டம் முழுதும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
செகுன் அரிஞ்சே என்பவர் திரைக்கதையாசிரியர், ஹீரோ, இசையமைப்பாளர் என ஹிட்டடிக்கிறார். நடிகர் சங்கத் தலைவராகவும் சமீபத்தில் இருந்தார் என்பதால் இவர்மீது ஸ்பெஷல் மதிப்பு நைஜீரியர்களுக்கு உண்டு.
மைக் இஸுரோன்யே அந்த ஊர் சாக்லேட் பாய் மாதவன். அலைபாயுதே போல ‘புரோக்கன் மேரேஜ்’ என்ற படத்தில் நடித்து இளசுகளை வசீகரித்துவிட்டார். இப்போது அந்நாட்டின் செல்போன் கம்பெனி ஒன்றின் பிராண்ட் அம்பாஸிடராய் சுவர் விளம்பரங்களில் சிரிக்கிறார்.
இவர்களைத் தவிர இன்னொரு பிரபல நடிகரும் உண்டு. தமிழ்நாடு வரை அவர் பாப்புலர். ஆமாம். சோஷியல் மீடியாவில் அவரது ரியாக்ஷன் மீம்கள் ரொம்பவே பாப்புலர். ஒசிடா இஹெமே என்ற அந்த நடிகரை குழந்தை நட்சத்திரம்னு நாம நினைச்சிருப்போம். ஆனால், அவருக்கு இப்போ 39 வயதாகிவிட்டது. 2003-ல் அவரும் இன்னொரு பொடி நடிகர் சின்னெடுவும் சேர்ந்து, ‘பேபி போலீஸ்’, ‘அகி நா உக்வா’, ‘2 ரேட்ஸ்’ போன்ற பல படங்களில் நடித்தனர்.
பிசினெஸ் எப்படி? பட்ஜெட் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட, சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் வீட்டிலேயே பார்க்கப்படுவதால் எல்லோரும் பிழைக்கின்றனர். ‘என்னென்ன படங்கள் டிடீஹெச்சில் உள்ளன, அந்தப்படங்கள் பற்றி வந்த விமர்சனங்கள்’ எல்லாம் தொகுத்து புத்தகமாகவே போட்டு விட்டார்கள். கடைகளில் அதை வாங்கிப் படித்துவிட்டு படங்களை வீட்டுக்கு வாங்கிச் செல்கிறார்கள்.
இவர்களின் சினிமா தாகத்தைப் பார்த்து ஓடிடி தளங்கள் கடையை விரிக்க ஆரம்பித்துள்ளன. நிறைய நல்லிவுட் படங்களை நெட்ஃபிளிக்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. நெட்ஃபிளிக்ஸின் N என்ற எழுத்து நைஜீரியாவைத்தான் குறிக்கிறது என அங்கிருக்கும் இயக்குநர்கள் கில்ட் அமைப்பும் களத்தில் குதித்து டைரக்டாக நெட்ஃபிளிக்ஸில் தோசைகள் போல படங்களைச் சுட்டுப்போட ஆரம்பித்துவிட்டார்கள். நைஜீரியாவின் தலைநகர் அபூஜா மற்றும் பெருநகரமான லோகோஸில் இருக்கும் இந்தியர்களுக்காக நைஜீரிய - இந்திய இணைப்பில் படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்திய ‘நமஸ்தே வகாலா’ என்ற படத்தின் கதையே நைஜீரியப் பெண்ணைக் காதலிக்கும் இந்திய இளைஞனின் கதைதான். அந்தப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து இரண்டு நாடுகளையும் மையமாக வைத்துப் பல கதைகளை இயக்க ஆரம்பித்துள்ளனர். நம் மலையாள இயக்குநர்கள் ஷக்கரியாவும் ஜோஜியும்கூட ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’, ‘ஒரு கரீபியன் உடையிப்பு!’ என இரண்டு படங்களை நைஜீரிய நடிகர் சாமுவெல் ராபின்ஸனை வைத்து எடுத்திருந்தார்கள்.

டோலோபோ, ஜாடிசோலா ஒசிபேரு, பியி பண்டெலே, இஷாயா பாகோ, டோப் ஒஷின், குன்லே அபோலயன் மற்றும் நியூட்டன் அடுவாகா போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற இயக்குநர்களின் படங்கள் இப்போது ஓடிடி எங்கும் நிரம்பி வழிகின்றன.
நேரம் கிடைக்கும் போது நல்லிவுட் பக்கம் எட்டிபாருங்கள். நம்மைப் பார்த்து காப்பியடித்தவர்கள் இப்போது லோ பட்ஜெட்டில் எப்படியெல்லாம் படங்கள் எடுக்கலாம் என நமக்கு சத்தமில்லாமல் பாடம் எடுக்கிறார்கள்.