சினிமா
Published:Updated:

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

விஜய், அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய், அஜித்

அஜித் படம் சிறப்பாக ஓட வேண்டும் என்று முதியோர் இல்லத்திற்கு ஆடைகள், உணவு போன்ற உதவிகள் செய்தோம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து இரண்டு தரப்பினரும் இணைந்து பேனர் வைத்தோம்.

இந்திய - சீன எல்லைப் பிரச்னையின்போதுகூட சமூக வலைதளங்கள் இப்படிப் பற்றி எரிந்ததில்லை. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குக்கூட இந்த அளவுக்கு பரபரப்பு இல்லை. விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஸ்டார்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக, இந்தப் பொங்கலின் வின்னர் யார் என்று ரசிக சண்டை பரபரக்கிறது. அதைத் தாண்டி, சில திரையரங்குகளிலும் பேனர் கிழிப்பு, மோதல் என்று இந்தச் சண்டை தொடர்ந்தது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் என்று இந்த இருதுருவ மோதல் தலைமுறைகளைத் தாண்டித் தொடர்கிறது. இனியும் தொடரும். தமிழ் மரபில் இந்த இரு துருவம் எல்லா இடங்களிலும் இருக்கும். அரசியலில் தி.மு.க Vs அ.தி.மு.க., கருத்தியலில் திராவிட அரசியல் Vs இந்துத்வ அரசியல்.

‘இரண்டு நடிகர்களுக்காக நம் இளைஞர்கள் அடித்துக்கொள்கிறார்கள். எப்போதுதான் திருந்துவார்கள் என்று தெரியவில்லை. வேதனையாக இருக்கிறது’ என்கிறார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். தமிழர்கள் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது பற்றிய கிண்டல் எல்லா மட்டங்களிலும் எழுகிறது. வாட்ஸ்அப் சாட்களில் பொங்கல் வாழ்த்துகளை அடுத்து அதிகம் பரிமாறிக்கொள்ளப்பட்டது இதுவாகத்தான் இருக்கும்.

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

தமிழ் ரசிகர்கள் மட்டும்தான் இப்படியா? இல்லை! ஆந்திராவில் என்.டி.ராமராவைக் கடவுளாகக் கருதி ஆட்சியைக் கொடுத்தார்கள். பவன் கல்யாண் பட ரிலீஸின்போது கட் அவுட் வைத்து மூன்று ரசிகர்கள் இறந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கர்நாடகாவில் ராஜ்குமாரையும், சமீபத்தில் இறந்த அவர் மகன் புனித் ராஜ்குமாரையும் கடவுளாகவே வழிபடுகிறார்கள் ரசிகர்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பிரபல பாப் பாடகர்களுக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. தொழில்நுட்பத்தில் முன்னேறிய கொரியர்கள்கூட பி.டி.எஸ் குழுவுக்காக எதையும் செய்யும் கண்மூடித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள். கலைக்கான ரசிக மனோபாவம் எல்லா இடங்களிலும் பொதுவானதுதான்.

இன்னொரு பக்கம், `தமிழர்கள் இப்படி ரசிக சண்டை போட்டுக்கொண்டே இருக்க, அந்த இடைவெளியில் வட இந்தியர்கள் இங்கு வந்து எல்லா வேலைகளையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்’ என்று மீம்கள், வீடியோக்கள் ஷேர் செய்யப்படுகின்றன. சில நாள்களுக்கு முன்பு சல்மான் கான் பிறந்த நாள் வந்தது. அப்போது அவர் வீட்டு முன்பு கூடிய நூற்றுக்கணக்கான ரசிகர்களை போலீஸ் தடியடி நடத்திக் கலைக்க வேண்டியிருந்தது. அவர்கள் எல்லோரும் வட இந்தியர்கள்தான்! எல்லா ஊர்களிலும் முழுநேர ரசிகர்களும் இருக்கிறார்கள், பட ரிலீஸில் கொண்டாடிவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

சிலர் எப்போதும் ரசிகர்களாகவே இருப்பார்கள். அவர்கள் சண்டை போடாமல் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழகம் முழுக்க சில ரசிகர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்:

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

‘‘துணிவோட வாரிசைக் கொண்டாடுங்க நண்பா!’’

தங்கள் அபிமான தல, தளபதிகளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் தேரை இழுத்துத் தெருவில் விடுகிற மாதிரி அரசியல் கட்சிகளை வம்பிழுத்து போஸ்டர் போட்டு விஜய், அஜித்தைத் தூங்கவிடாமல் செய்வார்கள் மதுரை பாய்ஸ். ஆனால், மதுரை பைபாஸ் ரோடு பக்கம் ‘ஒற்றுமையே வெற்றி’ என்ற தலைப்புடன் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் ஆச்சரியப்படுத்தின. ‘வாரிசு, துணிவுன்னு அடிச்சுக்காம, துணிவோட வாரிச கொண்டாடுங்க நண்பா...’ என்ற வாசகங்களுடன் அடிக்கப்பட்டிருந்த அந்த போஸ்டரின் கீழ் மதுரை மனித கடவுள் அஜித் பக்தர்கள் மற்றும் மதுரை தளபதி போர்ப்படை என்று குறிப்பிட்டு ரசிகர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் இவர்களைத் தேடிப் பிடித்தோம். அஜித் ரசிகர் ‘தல’ காளி, ‘‘அஜித் மற்றும் விஜய் ரசிகர்களான நாங்கள் பள்ளி, காலேஜ், வேலை செய்கிற இடங்களில் நண்பர்களாக இருந்துவருகிறோம். எங்களுக்குள் பிடித்த நடிகர்களின் படங்களைப் பற்றி ஜாலியாகப் பேசிக்கொள்வோமே தவிர வன்மமாக விமர்சிப்பது கிடையாது. சோஷியல் மீடியாவில் இரண்டு ரசிகர்களும் கடுமையாக அடித்துக்கொள்வதும், போஸ்டரில் வார்த்தைகளால் வம்பிழுப்பதையும் பார்த்து இந்தக் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தப் போஸ்டரை ஒட்டினோம்” என்றார்.

விஜய் ரசிகரான ‘போக்கிரி’ கலை, “ரசிகர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்படுகிறோம். இதுபோல ரசிகர்களுக்குள் ஒற்றுமை வளர வேண்டும்” என்றார். மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கச் செயலாளர் கல்லானை, “அவரவர்க்கு அவரவர் நடிகர்கள் பிடிக்கும். அதற்காக மற்றவர்களை எதிரியாகப் பார்க்கத் தேவையில்லை” என்றார்.

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!
வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

தல, தளபதி நண்பர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து தல, தளபதி நண்பர்கள் என பேனர் வைத்துள்ளனர். அதில் ‘துணிவுடன் வா நண்பா, நாம்தான் தமிழ் சினிமாவின் வாரிசுகள்’ என்று குறிப்பிட்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தொண்டரணித் தலைவர் தினேஷ், “விஜய் படம் சிறப்பாக ஓட வேண்டும் என்று மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்திற்கு சமையல் பாத்திரங்கள், வாட்டர் டேங்க் வாங்கிக் கொடுத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினோம்’’ என்றார். அஜித் ரசிகரான பில்லா விக்கி, “அஜித் படம் சிறப்பாக ஓட வேண்டும் என்று முதியோர் இல்லத்திற்கு ஆடைகள், உணவு போன்ற உதவிகள் செய்தோம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து இரண்டு தரப்பினரும் இணைந்து பேனர் வைத்தோம். இதில் மகிழ்ச்சிதான்” என்றார்.

ஒற்றுமை பேனர்!

திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டரைக் கடந்து சென்ற யாரும் அந்த 30 அடி உயர பேனரைப் பார்க்காமல் நகர முடியவில்லை. காரணம் அதன் உயரமல்ல, அஜித் பைக் ஓட்ட, விஜய் பில்லியனில் உட்கார்ந்து பயணிப்பது போன்ற படம்தான். அந்த பேனரை வைத்தவர்களில் ஒருவரான அஜித் ரசிகர் இனியவனிடம் பேசினோம். ‘‘என்னுடன் மீன் கடையில் வேலை பார்க்கிறவர்கள் விஜய், அஜித்துக்கு ரசிகர்களாக இருக்கிறோம். எல்லோரும் சேர்ந்து பேனர் அடித்தோம். துணிவுக்கும், வாரிசுக்கும் சேர்ந்தே சென்றோம். பேனர் அடித்து மாலை போட்டு பாலபிஷேகம் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் யாருக்கும் எவ்வித இடையூறும் கொடுக்காமல் ஒற்றுமையைக் காட்டும் நோக்கில் பேனர் அடித்தோம். அது இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என நினைக்கவில்லை’’ என்றார்.

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!
வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

விலையில்லா விருந்தகம்!

கோவை, கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் விஜய் ரசிகர்கள், அவரது பெயரில் ‘விலையில்லா விருந்தகம்’ நடத்தி வருகின்றனர். தினசரி காலை 100 பேருக்கு அங்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அங்கு அதிக அளவு அன்னதானம் வழங்குவது அஜித் ரசிகர்கள்தான்.

விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட பொறுப்பாளர் சம்பத்குமார், “எல்லாருடைய நட்பு வட்டாரங்களிலும் எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். துணிவு படத்துக்கு அவர்களிடம் டிக்கெட் வாங்கி பலருக்குக் கொடுத்திருக்கிறோம். எங்களிடம் அவர்கள் வாரிசு டிக்கெட் வாங்கினர். முகம் தெரியாத ரசிகர்கள்தான் சமூகவலைதளங்களிலும், தியேட்டரில் நேரில் பார்க்கும்போதும் மோதிக்கொள்கின்றனர். முகம் தெரிந்த ரசிகர்கள் யாரும் சண்டை போடுவதில்லை.

2019 டிசம்பர் மாதம் விஜய் விலையில்லா விருந்தகம் தொடங்கினோம். வாரத்தில் 6 நாள்கள் (ஞாயிறு தவிர) காலை 100 பேருக்கு உணவு வழங்கிவருகிறோம். விருந்தகம் தொடங்கிய சிறிது காலத்திலேயே ஒருநாள் அஜித் ரசிகர்கள் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் உணவு வழங்குகிறோம்’ என்றனர். 2022 மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளுக்கும் உணவு வழங்கினர். தற்போது மாதம் ஒரு நாள் உணவு வழங்கி வருகின்றனர்’’ என்றார்.

அடங்காத அஜித் குரூப் கோவை ரெட் கே பிரித்தன், “விஜய் விருந்தகத்தில் கடந்த ஓராண்டாக மாதத்தின் முதல் நாள் நாங்கள் உணவு கொடுப்போம். இதுதவிர அஜித், ஷாலினி பிறந்தநாள், திருமண நாள், அவர்கள் குழந்தைகளின் பிறந்தநாள், படம் ரிலீஸ், பண்டிகை நாள்கள் என்று பல நாள்களில் அங்கு அன்னதானம் செய்துவருகிறோம். எங்களைப் பார்த்து தனுஷ், சூர்யா ரசிகர்களும் விஜய் விலையில்லா விருந்தகத்தில் உணவு வழங்கியுள்ளனர். துணிவு படத்துக்காக சமீபத்தில் நாங்கள் நடத்திய அன்னதானம் நிகழ்ச்சிக்கு அனைத்து நடிகர்களின் ரசிகர்களையும் அழைத்திருந்தோம். நாங்கள் படம் ரிலீஸ் அன்று மட்டும் மோதிக்கொள்ளும் ரசிகர்கள் இல்லை. மக்கள் சேவைக்காகத் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்” என்றார் உறுதியான குரலில்.

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!
வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

‘தல’ ரசிகரைக் காப்பாற்றிய ‘தளபதி’ ரசிகர்கள்!

சேலத்திலுள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் இரவு ஒரு மணி அளவில் ‘துணிவு’ படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்குக்குள் செல்லும்போது கூட்ட நெரிசலில் படியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். அவரை யாரும் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த ரசிகரை, ‘வாரிசு’ படம் பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்த விஜய் ரசிகர்களான நவீன், கவின், நற்குண ராஜ் ஆகியோர் ஓடிச்சென்று காப்பாற்றினர்.

நவீனிடம் பேசினோம். “அவர் விழுந்து கிடக்கிறார் என்பதைக்கூட கவனிக்காமல் அவர்மீதே ஏறிச்சென்று கொண்டிருந்தனர். அவர் மயக்க நிலையில் இருந்தார். நாங்கள் அவரைத் தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினோம். தண்ணீர் கொடுத்தோம். மயக்கம் தெளிந்ததும், ‘தல... தல...’ என்று கத்தினார். சுற்றி இருந்த எல்லோரும், ‘வலிச்சா எல்லாரும் அம்மா, அப்பான்னுதானே கத்துவாங்க... இவர் என்னடான்னா தல தலன்னு கத்துறாரே’ என்று பேசினார்கள். நாங்கள் அதைக்கூட கண்டுகொள்ளாமல் மருத்துவமனைக்கு அழைத்துப் போனோம். அவர் பெயர் பிரதீப் என்றார். அவர் அம்மா போன் நம்பர் வாங்கி அவர்களுக்குத் தகவல் கொடுத்தோம்.

ஆம்புலன்ஸில் போகும்போதே அவர், ‘எனக்கு ட்ரீட்மென்ட் எல்லாம் வேண்டாம். நான் தல படம் பார்க்கணும், என்ன விடுங்க. எனக்கு அம்மா, அப்பாவைவிட தலதான் முக்கியம்’ எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். கஷ்டப்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்தோம். ஆனால், அவர் எங்களுக்கு முன்பாக தியேட்டருக்குத் திரும்பிவந்து, வலியையும் பொருட்படுத்தாமல் அஜித் ரசிகர்களோடு சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்’’ என்றார் நவீன்.

தலயும் தளபதியும் இவர்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

****

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

‘‘எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல!’’

‘அந்தப் பையன் என்ன நாட்டுக்காக போராடியா உயிரவிட்டான்?’ என்பதுதான் அஜித் ரசிகரான பரத் குமாரின் இறப்பு பற்றிப் பலரது கருத்தாக இருக்கிறது. 19 வயது பரத், கல்லூரியில் படித்துக்கொண்டே ஆன்லைன் உணவு டெலிவரி வேலையும் செய்து, வீட்டுக்குப் பணம் கொடுத்துவந்துள்ளார். ஜனவரி 11 நள்ளிரவு சென்னை ரோகிணி திரையரங்கில் ‘துணிவு’ படம் பார்க்கச் சென்று, உற்சாகத்தில் லாரி மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் சிலர் தவறிக் கீழே விழுந்தனர். அந்தச் சம்பவத்தில் பரத் உயிரிழந்தார்.

பரத்தின் அப்பா ஜானி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்க, அம்மா லலிதா வீட்டு வேலைகள் செய்து தன் இரண்டு மகன்களையும் படிக்க வைத்துள்ளார். மூத்தவன் பரத். அந்த சிறிய வீட்டில் நான்கு பேர் சேர்ந்து உட்காரக்கூட முடியாது. பரத்தின் அம்மா லலிதா, “என் புள்ள அவனோட சேர்த்து என் பசி, தூக்கம், சந்தோஷம் எல்லாத்தையும் கொண்டு போயிட்டான். இன்னும் மூணு மாசத்துல டிகிரி முடிச்சு, ஏதாவது அரசு வேலைக்குப் போய் இந்தக் குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். இப்படி ஆகிடுச்சு.

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

பரத் பொறுப்பானவன். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சிரிச்சிட்டே இருப்பான். அவனதான் என் குடும்பம் மலை மாதிரி நம்பிட்டு இருந்துச்சு. என்னால ஸ்கூலுக்கு டைம்க்குள்ள ஃபீஸ் கட்ட முடியாது. பெரியவன் பரத், டீச்சர் என்ன கேட்டாலும், யார் என்ன சொன்னாலும், ஸ்கூலுக்கு போயிருவான். கூச்சப்பட மாட்டான். ஆனா சின்னவன் அப்படி இல்ல, ஃபீஸ் கட்ட முடியாம லேட் ஆச்சுனா எல்லார் முன்னாடியும் டீச்சர் கேப்பாங்கன்னு ஸ்கூலுக்குக்கூடப் போக மாட்டான். சின்னவன் இப்போ 12வது படிக்கிறான். ‘அவன காலேஜ் சேக்குறதுக்குள்ள, ஏதாவது வேலைக்குப் போய்டுவேன். அவன் ஃபீஸை நான் கட்டுறேன்மா’ன்னு பரத் சொன்னான். ஆனா, இப்போ சின்னவன் படிக்காட்டிக்கூட பரவால்ல, என் கண் முன்னாடியே இருக்கட்டும்னு தோணுது” என்றார் விரக்தியுடன்.

வாரிசு... துணிவுக்கு WAR எதுக்கு? - வேண்டாம் இந்த ரசிக சண்டை!

‘‘எனக்கு யார் மேலயும் எந்தக் கோபமும் இல்ல, வருத்தமும் இல்ல. வயசுப் புள்ளைங்க ஏதோ தெரியாம இப்படிப் பண்ணுறாங்க. ஆனா இந்தப் புள்ளைங்க கொஞ்சம் அவங்க அம்மா அப்பாவை நினைச்சுப் பார்க்கணும். எங்க உசுரையும் ரத்தத்தையும் கொடுத்து உங்களப் படிக்க வைக்கறோம். உங்களுக்கு ஏதாவதுன்னா, நீங்க கடவுளா நினைக்குற, உங்க ஹீரோ யாரும் வர மாட்டாங்க. உங்க அம்மா அப்பாதான் வருவாங்க. நீங்க அவங்களுக்குத் திரும்ப சம்பாதிச்சு சொத்து சேக்காட்டிக்கூட பரவால்ல, கடைசி வரைக்கும் அன்பா நாலு வார்த்த பேசி பக்கத்துலயே இருங்க” என்கிறார் லலிதா ஆற்றாமையுடன்.

- ஸ்வேதா கண்ணன், படங்கள்: பா.காளிமுத்து