என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

டி.ஆர்.பி-க்கும் டெய்லி ட்விஸ்ட்டுக்கும் என்ன செய்வீங்க..?

 நடிகர் தீபக்குடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
நடிகர் தீபக்குடன்...

- ‘தமிழும் சரஸ்வதியும்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் மாணவப் பத்திரிகையாளர்கள்

சென்னை புறநகரான ஐயப்பன் தாங்கலில், கொட்டிய மழை யிலும் ஷூட்டிங் நடந்து கொண் டிருந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ஸ்பாட். 2021-22-ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடலேறு இரா.மா, ஆர்.பி.அர்ஜுன், ஜோ.வியானி விஷ்வா, ஆர்த்தி.செ, ரேகாஸ்ரீ.ஜே.பி, கா.கீர்த்தனா, சே.அறிவுச்செல்வன் ஆகிய ஏழு மாணவர்களை பரபரப்பான ஷூட்டிங்கின் நடுவிலும் சிரித்த முகத்துடன் வரவேற்றார் தொடரின் இயக்குநர் எஸ்.குமரன்.

வி.ஜே, போட்டோகிராபி முதலான மீடியா சார்ந்த பிரிவுகளில் அடுத்த ஓராண்டுக்கு விகடனால் பட்டை தீட்டப்பட இருக்கும் மாணவர்கள் இவர்கள்.

 இயக்குநர் எஸ்.குமரனுடன்...
இயக்குநர் எஸ்.குமரனுடன்...

``மாணவர்களைப் பார்த்து, நீங்க கேட்க விரும்புகிற கேள்விகளை இயக்குநர்கிட்ட கேட்கலாம்’’ என நம் தொகுப்பாளர் சொல்ல...

``பிரதர், அவங்களே கேட்பாங்க. ரிப்போர்ட்டராக முதல் தகுதியே தயக்கத்தை உடைக்கிறதுதானே... அதெல்லாம் பேசுவாங்க... வாங்க கேளுங்க’’ என எடுத்த எடுப்பிலேயே குமரன் அந்த இடத்தைக் கலகலப்பாக்க, சகஜமாக உரையாடத் தொடங்கினார்கள் மாணவர்கள்.

``சார், நான் ‘தென்றல்’ சீரியல் ரசிகை. தொடர்ந்து சீரியல் இயக்கிட்டிருக்கீங்க, எப்படி?’’

‘`தினமும் மாலை வரைக்கும் ஷூட்டிங் நடத்தி, எப்படி நைட் அது டிவி-யில வருது...’’

‘`ஒவ்வொரு வாரக் கடைசியிலயும் சீரியல்கள்ல ட்விஸ்ட் தேவைப்படுமே, அதுக்கு என்ன செய்வீங்க? சீரியலுக்கான கதை மக்களின் அன்றாட வாழ்க்கையில இருந்தே எடுக்கப்படுதா?’’

- கேள்விகளை அடுக்கினார்கள் மாணவர்கள்.

பொறுமையாகக் கேட்ட இயக்குநர் குமரன், ‘`சீரிய லுக்கு டி.ஆர்.பி ரொம்பவே முக்கியம். அதேநேரம் விகடன் தயாரிக்கிற சீரியல்கள்ல ட்விஸ்ட்டுகள் கதையுடன் பொருந்திப் போறதா மட்டுமே இருக்கும்’’ என்றார்.

`‘இப்போ சீரியல்கள்ல ‘டைட்டில் சாங்’ முழுசா காட்டறதில்லையே ஏன்?’’ என்று கேட்டார் இன்னொரு மாணவர்.

டி.ஆர்.பி-க்கும் டெய்லி ட்விஸ்ட்டுக்கும் என்ன செய்வீங்க..?

``ஒருநேரத்துல `டைட்டில் சாங்’ ரொம்ப பிரபலமா இருந்தது. இன்னிக்கு அந்த நிலை கொஞ்சம் மாறிடுச்சு. சீரியலுக்குக் கிடைக்கிற நேரத்துல விளம்பரத்துக்கு குறிப்பிட்ட நேரம் போயிடும். அதனால இப்பல்லாம் தினமும் டைட்டில் சாங் ஒளிபரப்புறதில்ல” என்றவர், “பத்திரிகையாளரா வரப்போற மாணவர்கள் ஃபீல்டுல நிகழ்கிற மாற்றங்களையெல்லாம் கவனிச்சிட்டே இருக்கணும்’’ என்ற அறிவுரையையும் சொன்னார்.

அடுத்த சில நிமிடங்களில் யூனிட், ஷாட்டுக்குத் தயாராக குமரனிடம் இருந்து விடைபெற்று, பிரேக்கில் இருந்த சீரியலின் ஹீரோ தீபக் மற்றும் நடிகர் யோகியைச் சந்தித்தது மாணவர் படை.

``நானுமே விகடன் மாணவன்னு சொல்லிக்கலாம்னு நினைக்கிறேன். விகடன் தயாரிப்பான ‘தென்றல்’ சீரியல்ல பட்டை தீட்டப்பட்டு சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்னிக்கு ‘தமிழும் சரஸ்வதியும்’ல திரும்பவும் ஹீரோவாகியிருக்கேன்’’ என்ற தீபக்கிடமும் மாணவர்கள் கலகலவென உரையாடினார்கள்.

‘`நிகழ்ச்சியைத் தொகுக்கும்போது ஸ்கிரிப்ட்படி வொர்க் பண்ண முடியாமப் போனா, அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பீங்க...’’ எனக் கேட்டார் மாணவி ஒருவர்.

‘`தொகுப்பாளர்கள் எல்லாருமே இந்த மாதிரியான சூழலைக் கடந்தே வந்திருப்பாங்க. எனக்கும் நடந்திருக்கு. அனுபவத்தால அதை ஹேண்டில் பண்ற திறமையைக் கொண்டு வந்திடலாம். ஆனா, அந்த அனுபவம் கிடைக்கிறவரை கொஞ்சம் பொறுமையா, எதையாச்சும் உளறாம அந்தச் சூழலைக் கடக்க முயற்சி செய்யணும். கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, உளறினா மாட்டிக்கு வோம். ஸ்கிரிப் கைவிட்ட ஒரு சந்தர்ப்பத்துல ‘நான் பாடுவேன்’னு சொல்லி, பாட ஆரம்பிக்க, அது ஓரளவு நல்லா போயிட்டிருந்த நிகழ்ச்சியையும் சொதப்பின தெல்லாம் நடந்திருக்கு’’ என தன் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்தார் தீபக்.

 நடிகர் யோகியுடன்...
நடிகர் யோகியுடன்...
 நடிகர் தீபக்குடன்...
நடிகர் தீபக்குடன்...

‘`வி.ஜே., ஆங்கர் ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கு. ஆனா, சிலர் ரெண்டையும் போட்டுக் குழப்பிக் கிறாங்க. இது ரெண்டும் வேற வேற வேலை. அதேநேரம் ஒருத்தரே திறமையை வளர்த்துக்கிட்டா, இந்த ரெண்டுலயுமே ஜொலிக்க முடியும்’’ - தீபக் பேசியவற்றில், ஹைலைட் பதில் இது.

‘கலக்கப்போவது யாரு’ புகழ் யோகி, ‘`உங்களை யெல்லாம் பார்க்கிறப்ப என்னுடைய ஸ்கூல் நாள்கள் ஞாபகத்துக்கு வருது’’ என மாணவர்களைப் பார்த்து நெகிழ, ‘`நீ ஸ்கூல்லாம் போனியா?’’ என அவரை தீபக் கலாய்க்க, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் நிறைவடைந்தது அந்தப் பயணம்.