சினிமா
தொடர்கள்
Published:Updated:

இப்போ ஸ்டன்ட் மாஸ்டர்... அடுத்து ஆக்‌ஷன் டைரக்டர்!

ஸ்டன்ட் சில்வா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டன்ட் சில்வா

மலையாளத்துல வந்த ‘லூசிபர்’ படத்துல நான் ஒர்க் பண்ணியிருந்தேன். அந்தப் படம்தான் ‘காட்ஃபாதர்’ ஆக உருவாகிட்டிருக்கு.

இந்தியில் ஆயுஷ்மான் குரானாவின் படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கும் படம், தமிழில் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்று ஸ்டன்ட் சில்வா செம பிஸி. சினிமாவில் ஸ்டன்ட் துறையில் இருபது வருடங்களாகப் பயணித்துவரும் சில்வா, ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.

‘`டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசை. முடியல. தூத்துக்குடியில் ஐ.டி.ஐ முடிச்ச கையோடு பொழைப்புத்தேடி சென்னை வந்தேன். விஜயா ஹாஸ்பிட்டல்ல வார்டு பாயாக இருந்திருக்கேன். சினிமாவுக்குப் போனா, காசு அதிகமா கிடைக்கும்னு டான்ஸரா முயற்சி பண்ணினேன். கிடைக்கல. அப்புறம், ஃபைட்டரானேன். பீட்டர் ஹெயின் மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்ட் ஆனேன். செல்வராகவனோட ‘7ஜி.ரெயின்போ காலனி’யில இருந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். ராஜமௌலி சார் என்னைக் கூப்பிட்டு, ஜூனியர் என்.டி.ஆரோட ‘யமதொங்கா’ல மாஸ்டர் ஆக்கினார். அங்கிருந்து ஆரம்பிச்ச பயணம், இப்ப வரை சிறப்பாப் போயிட்டிருக்கு...’’ நெகிழ்ந்து சிலிர்க்கிறார் சில்வா.

இப்போ ஸ்டன்ட் மாஸ்டர்... அடுத்து ஆக்‌ஷன் டைரக்டர்!

``தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடிப்பில் ‘காட்ஃபாதர்’ ஒர்க் பண்றீங்க. என்ன சொல்றார் சிரஞ்சீவி?’’

‘`மலையாளத்துல வந்த ‘லூசிபர்’ படத்துல நான் ஒர்க் பண்ணியிருந்தேன். அந்தப் படம்தான் ‘காட்ஃபாதர்’ ஆக உருவாகிட்டிருக்கு. சிரஞ்சீவி சாரோடு ஒர்க் பண்றது சந்தோஷமா இருக்கு. மோகன்ராஜா சாரோடு ஏற்கெனவே ‘தனி ஒருவன்’ பண்ணியிருக்கறதால இப்ப மறுபடியும் அவரோடு வேலை செய்யறேன். இந்தப் படத்துல ஒரு ஃபைட் சீக்குவென்ஸ் எடுத்துட்டிருந்தேன். அப்ப சிரஞ்சீவி சார் என்னைக் கூப்பிட்டு, ‘இந்த சீக்குவென்ஸுக்கு ஐடியா ஒண்ணு தோணுது. நான் சொல்லலாமா? தலையீடா நினைக்க வேணாம். இன்வால்மென்ட்டா கேட்குறேன்’னு சொன்னார். அவர் உயரத்துக்கு அப்படிச் சொல்ல வேண்டியதில்ல. ஆனா, அந்தப் பண்பு என்னை ரொம்பக் கவர்ந்திடுச்சு.”

``பாலா-சூர்யா இணையும் படத்திலும் ஒர்க் பண்ணிட்டிருக்கீங்க... முதன்முறையா பாலா படம் பண்றீங்க?’’

‘`ஆமாங்க. முதல் ஷெட்யூல் கன்னியாகுமரியில் நடந்தது. பாலா சார் டெரரா இருப்பார்னு சொல்வாங்க. ஆனா, அவரோடு ஒர்க் பண்ணும் போதுதான் தெரிஞ்சது, அவர் குழந்தை மனசுக்காரர். ரொம்ப சாஃப்ட். அவர் கன்வே பண்றதை சரியா புரிஞ்சு சரியா பண்ணினாலே அவருக்குப் பிடிச்சிடும். என் ஒர்க்கும் அவருக்குப் பிடிச்சிடுச்சு. ‘அஞ்சான்’ படத்துக்குப் பிறகு சூர்யா சாரோடு ஒர்க் பண்றேன். அவரோட கண்ணே நடிக்கும். எல்லார்கிட்டேயும் இயல்பாப் பழகுவார். அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியாகிட்டோம்.’’

இப்போ ஸ்டன்ட் மாஸ்டர்... அடுத்து ஆக்‌ஷன் டைரக்டர்!

``ஆயுஷ்மான் குரானாவுடனான பாலிவுட் அனுபவம்..?’’

‘`ஸ்டண்டைப் பொறுத்தவரை அங்கேயும் இங்கேயும் ஒர்க்கிங் ஸ்டைல் வேறுபடும். இங்கே எல்லாத்துக்குமே நாம ஒருத்தரா இருந்து பண்ண வேண்டியிருக்கும். அங்கே அப்படியில்ல. தனித்தனி ஆட்கள், விஷயங்கள்னு இருக்கும். ஆயுஷ்மான் சாரை பார்த்தாலே எனர்ஜி அள்ளும். ரொம்பவே சாதாரணமா இருப்பார். தமிழ் வார்த்தைகள் நிறைய பேசினார். அவர் ஆர்.ஜே-வாக இருந்து நடிகரானவர் என்பதால், நம்ம ஊர் பாப்புலர் ஆர்.ஜே-க்கள் பத்தித் தெரிஞ்சு வச்சிருக்கார். அவர் படங்கள்ல ஆக்‌ஷன் குறைவு. இப்ப ஒர்க் பண்ற படமும் அப்படித்தான். எந்த இடத்துல ஆக்‌ஷன் தேவையோ அங்கே மட்டும் இருக்கும்.’’

``ஒரு படம் இயக்கிட்டீங்க. டைரக்டரா அடுத்த படம் எப்போ?’’

‘`இயக்குநர் ஆகணும்னு எந்தத் திட்டமும் இருந்ததில்ல. ஆரம்பத்துல ஒரு காமெடிக் கதைதான் எழுதியிருந்தேன். அதுல 32 பேருக்கு மேல நடிகர்கள் தேவைப்பட்டாங்க. அப்ப, கொரோனா லாக்டௌன் டைம்ங்கறதால அவ்ளோ பேர் நடிக்கறது சாத்தியமில்லாம இருந்துச்சு. அதனால வேற கதை எழுதினேன். அதான் ‘சித்திரைச் செவ்வானம்.’ அதைப் பார்த்துட்டுத் திரையுலகிலிருந்து நிறைய பேர் பாராட்டினாங்க. ‘உங்ககிட்ட இப்படி ஒரு எமோஷனல் சப்ஜெக்ட் எதிர்பார்க்கவே இல்ல. எமோஷன் சரியா வந்தால், ஆக்‌ஷனும் சரியா ஒர்க் ஆகும். ஸோ, நீங்க ஆக்‌ஷன் படம் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. அடுத்து ஆக்‌ஷன் படம்தான் இயக்குறேன். அதை சின்ன பட்ஜெட்ல பண்ண முடியாது. பெரிய ஹீரோ தேவைப்படுவார். அதுக்கான முயற்சிகளும் தேடல்களும் போயிட்டிருக்கு.’’