Published:Updated:

கடவுள் சிரிப்பைக் கொள்ளையடித்தால்...

அஷ்வத் மாரிமுத்து, தேசிங் பெரியசாமி, ராணா
பிரீமியம் ஸ்டோரி
News
அஷ்வத் மாரிமுத்து, தேசிங் பெரியசாமி, ராணா

டிசம்பர் மாசம் வந்துட்டாலே ஒரு சேனல்ல ரஜினி படத்தைப் போட்டுருவாங்க.

2020, முதல் பட இயக்குநர்களுக்கான நல்லாண்டு. கடந்த மூன்று மாதங்களில் ஹிட் அடித்தவை சில படங்களே. அவற்றின் இயக்குநர்கள் முதல் பட இயக்குநர்கள்தாம்.

அசோக் செல்வன், ரித்திகா நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ‘ஹிப் ஹாப்’ ஆதி நடித்த ‘நான் சிரித்தால்’ படத்தின் இயக்குநர் ராணா, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி என இம்மூவரையும் ஒன்றுகூட்டினேன்.

முதலில் கடவுளில் இருந்து தொடங்குவதுதானே வழக்கம். அஷ்வத் தொடங்கினார். ‘`ஸ்கூல் காலத்துல இருந்தே நாடிநரம்பெல்லாம் சினிமா வெறி ஊறுனவன் நான். போர்டிங் ஸ்கூல்ல படிச்சதால வாரத்துல ஒருநாள் ஹாலிவுட் படங்கள் போடுவாங்க. எப்போ சொந்த ஊருக்குப் போய் தமிழ்ப்படங்கள் பார்ப்போம்னு ஒரு ஃபீல் வரும். ஒரே நாள்ல அஞ்சு படங்கள்கூடப் பார்த்திருக்கேன். அப்ப, ‘நியூ’ படத்தைப் பார்த்தே ஆகணும்னு ஊருக்கு வந்தேன். ஏன்னா, அந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ‘சிம்ரன்’ நம்ம க்ரஷ் வேற. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரும் நம்ம ஃபேவரைட். அதே மாதிரிதான் ‘சிவகாசி’ படமும். பெரிய திருவிழா மாதிரி கூட்டம் கூடிருச்சு. இதெல்லாம்தான் என்னை சினிமாவை நோக்கி ஓட வெச்சுது’’ என அஷ்வத் இன்ட்ரோ கொடுக்க, சிரிப்பும் சிறப்புமாக ராணா தொடர்ந்தார்.

‘`டிசம்பர் மாசம் வந்துட்டாலே ஒரு சேனல்ல ரஜினி படத்தைப் போட்டுருவாங்க. இந்த நேரத்துலதான் எக்ஸாமும் வரும். வீட்ல பெரிய போரே நடக்கும். ‘படிச்சுட்டு என்ன வேணும்னாலும் பண்ணு’ன்னு அம்மா சொல்லிருவாங்க. அப்பா, ‘படம் பார்த்துட்டுப் படிக்கட்டும்’னு சொல்லுவார். ‘ராஜாதி ராஜா’ படத்தை எத்தனை முறை பார்த்தேன்னுகூட கணக்கு இல்லை. பத்தாவது படிச்சிட்டிருந்தப்போ ‘சிவாஜி’ படத்தோட ட்ரெய்லர் வந்தது. ஸ்கூல் முழுக்க இதைப் பத்தின பேச்சுதான். அனிமேஷன், சிஜி வேலைகள் பத்தின அறிவெல்லாம் இந்தப் படம் பார்க்குறப்போதான் கொஞ்சம் வந்தது. வெப் கேமராவை வெச்சிக்கிட்டு சின்னப் பசங்களை ஷூட் பண்ணத் தெருவெல்லாம் திரிஞ்சிருக்கேன். உதவி இயக்குநரா ஷங்கர் சார்கிட்ட சேரணும்னு நினைச்சு அவர்கிட்ட ‘2.0’ படத்துல வேலையும் பார்த்தேன். சினிமான்னா என்னன்னு அங்கதான் கத்துக்கிட்டேன்’’ என ராணா மலரும் நினைவுகளுக்குள் மூழ்க, தேசிங் தொடர்ந்தார்.

கடவுள் சிரிப்பைக் கொள்ளையடித்தால்...
கடவுள் சிரிப்பைக் கொள்ளையடித்தால்...

‘`சின்ன வயசுல இருந்தே ரஜினி ரசிகன் நான். என்னோட ஸ்டைலும் ரஜினி மாதிரியே இருக்கும். ஆல் டைம் ஃபேவரைட் ‘பாட்ஷா’ படம்தான். எல்லா கமர்ஷியல் படங்களும் என்னை இன்ஸ்பையர் பண்ணியிருக்கு’’ என தேசிங் சொல்ல, ஒவ்வொருவரும் தங்கள் ஃபேன்பாய் மொமன்ட்டைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘`வெறித்தனமான அர்ஜுன் ரசிகன் நான். ‘ஜென்டில்மேன்’, ‘வானவில்’ பார்த்துட்டு மெய்சிலிர்த்த பையன்’’ என ஆக்‌ஷன் கிங்கின் பெருமைகளைப் பேசினார் அஷ்வத்.

‘`மூன்று படங்களின் பெயர்களும் பாட்டு வரிகளில் இருந்தே எடுத்திருக்கீங்களே, ஏன்?’’ என மூவரிடமும் கேட்டேன்.

முதலில் பதில் சொன்னவர் தேசிங். ‘` ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சவுடனேயே ‘பொக்கே’ன்னு பேர் வெச்சிருந்தேன். பொக்கேக்குள்ள எதை வெச்சுக் கட்டினாலும் ஒரே மாதிரியான வடிவுலதான் இருக்கும். அதே மாதிரி நாலு பேருடைய கேரக்டரும் ஒண்ணுதான். நாலு பேரும் சேர்ந்து வாழ்ந்தா வாழ்க்கை எப்படியிருக்கும்னு யோசிச்சிட்டு இந்தப் பேரை வெச்சிருந்தேன். அப்போ நண்பர்கள் தமிழ்ல பேர் வெச்சா நல்லாருக்கும்னு சொன்னாங்க. பாடல் வரிகள்ல இருந்து பேர் எடுக்கலாம்னு தோணுச்சு. இணை இயக்குநர் ஒருத்தர் நிறைய பேர் எழுதி வெச்சி ருந்தார். அதுல இருந்த பெயர்தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.’ இதைவிட நல்ல டைட்டில் கிடைக்காதுன்னு உடனே செலக்ட் பண்ணிட்டேன். கெளதம் சார்கிட்ட கதை சொல்லிட்டு, படத்தோட பேரைச் சொன்னப்போ ‘நல்லாருக்குடா’ன்னு பலமுறை சொல்லிட்டே இருந்தார்’’ என்றதும் லைனுக்கு வந்தார் ராணா.

‘`என்னோட ‘கெக்க பெக்க’ குறும்படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்ததனால அந்தப் பேரே இருக்கட்டும்னு முதல்ல தோணுச்சு. அப்புறம் வேற தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சோம். குறும்படத்துல ‘நான் சிரித்தால்’ பாட்டும் இருந்ததால, இந்த டைட்டிலே பாசிட்டிவா இருக்குன்னு ஆதி ஃபீல் பண்ணினார். உடனே லாக் பண்ணிட்டோம்’’ என்ற ராணாவைத் தொடர்ந்தார் அஷ்வத்.

‘`ஸ்க்ரிப்ட் எழுதும்போதே ‘ஓ மை கடவுளே’ மைண்ட்ல இருந்தது. வாழ்க்கையில ‘ஓ மை கடவுளே’ மொமன்ட் இருந்தா நல்லாருக்கும்னு தோணுனதால அதையே முடிவு பண்ணிட்டேன். ஆனா, மனுஷன் புத்தி மட்டமானது. சூப்பரான விஷயமே முதல்ல கிடைச்சாலும் இதைவிட பெஸ்ட் வேணும்னு இன்னொண்ணைத் தேடுவோம்ல... அப்படித்தான் வேற டைட்டில் தேட ஆரம்பிச்சேன். அசோக்கும் நானும் டைட்டி லுக்காக மட்டுமே நைட்டெல்லாம் யோசிச்சிருக் கோம். எதுவும் ‘ஓ மை கடவுளே’ வைவிட பெஸ்ட்டா இல்லை’’ ன்னு அஷ்வத் மூச்சு விட, ‘`படத்தில் சீனியர் இயக்குநர் களை நடிக்க வைத்த அனுபவம் எப்படியிருந்தது?” என அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

அஷ்வத் மாரிமுத்து, தேசிங் பெரியசாமி, ராணா
அஷ்வத் மாரிமுத்து, தேசிங் பெரியசாமி, ராணா

‘`சுந்தர்.சி சாரோட டைப்ல படம் இருக்கணும்னு நினைச்சு ஆரம்பிச்சதனாலதான் படத்துல நிறைய சீனியர் ஆர்ட்டிஸ்ட் இருந்திருப்பாங்க. ரொம்பக் கஷ்டமான விஷயத்தை ஏதோ தைரியத்துல செஞ்சு முடிச்சிட்டேன். குறிப்பா கே.எஸ்.ரவிக்குமார் சாரை டைரக்ட் பண்ணப்போறேன்னு வீட்டுல இருக்குறவங்களெல்லாம் செம ஹேப்பி. இருந்தும் ஸ்பாட்ல அவர்கிட்ட சீன்ஸ் சொல்றப்போ பக்பக்னு இருக்கும். எக்ஸாம் எழுதிட்டிருக்குறப்போ டீச்சர் பக்கத்துல வந்து நின்னு நம்ம பேப்பரைப் பார்த்துட்டிருக்குற ஃபீல் கொடுத்துட்டார் ரவிக்குமார் சார்’’ என ராணா சொல்ல ‘`இங்கேயும் அப்படித்தான்’’ என மூவரும் ஹைஃபை அடித்துக்கொண்டார்கள்.

‘`கெளதம் சார்கிட்ட கதையைச் சொன்னவுட னேயே ரொம்ப சந்தோஷப்பட்டு நடிச்சார். படம் பார்த்துட்டுக் கட்டிப்பிடிச்சி ‘இந்தப் படம் நிச்சயம் ஓடும்’னு சொன்னார்.

க்ளைமாக்ஸ் காட்சியில அவரை வெச்சு வர்ற ட்விஸ்டை அவர் தான் டைரக்‌ட் பண்ணினார். வெறும் ஸ்க்ரிப்ட் மட்டும்தான் சொன்னேன். அவர் அழகா பண்ணிட்டுப் போயிட்டார்’’ என தேசிங் சொல்ல, விஜய் சேதுபதி அனுபவத்தைப் பகிர்ந்தார் அஷ்வத்.

கடவுள் சிரிப்பைக் கொள்ளையடித்தால்...

``விஜய் சேதுபதி சார் நடிச்ச போர்ஷனை ரெண்டு நாள்ல எடுத்து முடிச்சிட்டோம். ஆனா, அவர் ரொம்ப பிஸியா இருந்ததால டப்பிங் பண்றதுக்கு நேரமே இல்ல. திரும்பவும் ‘ரெண்டு மணிநேரத்துல முடிச்சிடலாம்’னு அவரை டப்பிங் ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போனேன். ஆனா, நிறைய நேரம் ஆகிடுச்சு. ரொம்பப் பொறுமையா முடிச்சிக்கொடுத்தார். படம் பார்த்துட்டு, ‘என்னடா ரெண்டு நாள்தான் ஷூட் பண்ணினோம். ஆனா, ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க இருக்கேன்’னு விஜய் சேதுபதி சார் கேட்டார். படத்தை ரொம்பவே பாராட்டினார்’’ என அஷ்வத் சொல்ல, ‘`ரெண்டாவது படம்?’’ என்றேன்.

“முதல் படத்துல ஹிட் அடிச்சிட்டா ரெண்டா வது படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிடும். அதனால ரெண்டாவது படம் என்ன பண்ணலாம்னு தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டிருக் கோம். விரைவில் அறிவிப்புகள் வரும்’’ என மூவரும் சொல்ல, கரோனா பீதியால், கைகொடுக் காமல் மூவருக்கும் தமிழ்முறைப்படி வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். தமிழன்டா!