
பிரித்வி ஆரம்பத்திலேயே ஆகச்சிறந்த நடிகராகவெல்லாம் தன்னை நிரூபிக்கவில்லை. ஆனால், அவரிடம் ஒரு தேடல் இருந்தது
“ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை மட்டுமே கேட்டு நான் படம் நடிக்க முடியாது. பலருக்கும் பலதரப்பட்ட விருப்புவெறுப்புகள் இருக்கும். நான் என்னைத் திருப்திப்படுத்தும் படங்களை மட்டுமே செய்ய விரும்புகிறேன். எப்போதும் ஒரு படம் நடிப்பது என்னுடைய முடிவாகத்தான் இருக்கவேண்டும்.’’
பிரித்விராஜ் சுகுமாரனின் படங்களை இங்கே வரிசைப்படுத்தத் தொடங்கினால் கூடுதல் தாள்கள் எல்லாம் வாங்கி நூல் கட்டவேண்டியிருக்கும். 38 வயதேயான நடிகர், திரையுலகில் தடம் பதித்து முழுதாக 20 வருடங்கள்கூட முடியவில்லை. ஆனால், மொத்தம் 110 படங்களை நெருங்கி வந்துவிட்டார். அதாவது, சராசரியாக ஒரு வருடத்துக்கு 5 அல்லது 6 படங்கள் செய்திருக்கிறார். 2011-12 காலகட்டத்தில் மட்டும் 14 படங்களில் நாயகனாக நடித்துள்ளார், 4 படங்களில் கௌரவ வேடத்திலும் தலைகாட்டியுள்ளார். இத்தனை வருடத்தில் ஒரு நடிகனாக மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், ஓர் இயக்குநராக, பாடகராக, தயாரிப்பாளராகப் பல பரிமாணங்களில் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளார்.


19 வயதில் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் தன் பட்டப்படிப்பைப் படித்துக்கொண்டிருந்த பிரித்விக்கு மலையாள இயக்குநர் ரஞ்சித்திடமிருந்து ஓர் ஆடிஷனுக்கு வருமாறு போன்கால் வருகிறது. பிரித்வியின் அப்பா சுகுமாரனும் அம்மா மல்லிகாவும் பிரபல நடிகர்கள் என்பதால் இந்த வாய்ப்பு தேடி வருகிறதா, இல்லை, பிரித்வி இயக்குநரின் தேடுதலுக்குப் பொருந்திப்போனாரா என்பதெல்லாம் விவாதத்துக்கு உட்பட்டதே! ஆனால், ரஞ்சித்தின் `நந்தனம்' படத்தில் பிரித்வி ஹீரோவாகிறார். ஆனால், அது ரிலீஸாகும் முன்னரே அவரின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இவருக்குச் சமமாக அப்போதுதான் இவரின் அண்ணன் இந்திரஜித் சுகுமாரனும் தன் கரியரைத் தொடங்கி நடிகனாக வளரத் தொடங்கினார்.



அதேபோல், பிரித்வி ஆரம்பத்திலேயே ஆகச்சிறந்த நடிகராகவெல்லாம் தன்னை நிரூபிக்கவில்லை. ஆனால், அவரிடம் ஒரு தேடல் இருந்தது. ``முதலில் ஒன்றிரண்டு படங்கள் செய்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்கே திரும்பிவிட நினைத்தேன். பிறகுதான் எனக்குப் புரிந்தது, அப்படி நினைத்துக்கொண்டு என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்று! இதுதான், இந்த சினிமாதான் நான் என் வாழ்க்கை முழுவதும் செய்ய விரும்பியது’’ என்று சொல்லும் பிரித்விராஜ் இந்த முடிவைத் தன் நான்காவது படமான `வெள்ளித்திரா'வின் போதே எடுத்துவிட்டார்.
லோகிததாஸின் `சக்ரம்', `சத்யம்', `காக்கி' எனப் பெரும்பாலும் அவர் செய்தவை அனைத்துமே சமுதாயத்தின் மீது கோபம் கொண்டிருக்கும் ஒரு துடிப்பான இளைஞனின் கதாபாத்திரம்தான். 2003-ல் ஜெயசூர்யா மற்றும் குஞ்சாகோ போபனுடன் இணைந்து நடித்த `ஸ்வப்னக்கூடு' படம்தான் இவரின் முதல் முழுநீள நகைச்சுவைப் படம். 2006-ல் `கிளாஸ்மேட்ஸ்' (தமிழில் `நினைத்தாலே இனிக்கும்'), `வாஸ்தவம்' போன்ற படங்களைச் செய்ய `வாஸ்தவம்' படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான முதல் மாநில விருதை வென்றார். இதே காலகட்டத்தில் 2005-ல் `கனா கண்டேன்' படம் மூலம் டெரர் வில்லனாகத் தமிழில் அறிமுகமானார். `பாரிஜாதம்' படத்தில் வெகுளி என்றால், `மொழி' படத்தில் அவரின் பாத்திரத்தில் அவ்வளவு முதிர்ச்சி! அதே வருடம், `சத்தம் போடாதே!', `கண்ணாமூச்சி ஏனடா!' என அடுத்தடுத்து தமிழ்ப் படங்களும் செய்தார்.



2008-ல்தான் ஒரு முழுமையான நடிகராகத் தன்னை உருமாற்றிக்கொண்டு பேரலல் சினிமா எனும் வித்தியாசமான முயற்சிகளில் துணிந்து காலை வைக்கத் தொடங்கினார் பிரித்வி. நக்சலைட்களின் வாழ்வைப் பேசிய `தலப்பாவு', வித்யாவின் வாழ்வைப் பேசிய `திரைக்கதா' போன்ற படங்களில் நடித்தார். 2010-ல் மணிரத்னத்தின் `ராவணன்' படத்தில் ராமனாக நடித்தவர், அதன்பின் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். ராணி முகர்ஜியுடன் `அய்யா' படமும், பின்னர் `ஔரங்கசீப்' படமும் செய்தார்.
பிரித்விராஜின் கரியரில் முக்கியமானதொரு படம் சந்தோஷ் சிவன் இயக்கிய `உருமி.' பிரபுதேவா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யாமேனன், ஆர்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, அதிலும் பலர் இரட்டை வேடங்களில் நடிக்க, பிரித்விதான் அதில் ஹீரோ! `புதிய முகம்' படத்தின் மூலம் மாபெரும் கமர்ஷியல் வெற்றியைப் பதிவு செய்தவர், `உருமி' மூலம் சூப்பர்ஸ்டார் நாற்காலியை நெருங்கிவந்தார். இந்த இரண்டு படங்களின் மூலம்தான் பிரித்விராஜ் தனக்கென ஓர் அடையாளத்தை நிறுவ முயன்றார் எனலாம். `உருமி' மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த பிரித்வி இன்றுவரை 35-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கிய `இந்தியன் ருப்பி' படம் தேசிய விருதை வென்றது. 2013-ல் மலையாள உலகின் முதல் திரைப்பட இயக்குநரான ஜே.சி.டேனியலின் பயோபிக்கான `செல்லுலாய்ட்' படத்திலும், `அயலும் ஞியானும் தம்மில்' படத்திலும் நடித்து தன் இரண்டாவது மாநில விருதை வென்றார். இதன் பின்னர்தான், எந்த இந்திய ஸ்டாரும் செய்யத் தயங்கும் படமான `மும்பை போலீஸ்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்தார். அதே வருடம் குடித்தே தன்னைச் சீரழித்துக்கொள்ளும் போலீஸாக `மெமரீஸ்' எனும் த்ரில்லர் படத்திலும் நடித்தார்.



பார்வதியுடன் இவர் நடித்த அமரக் காதல் காவியமான `என்னு நிண்டே மொய்தீன்' நெஞ்சங்களைக் கலங்கடிக்க, கேப்பே விடாமல் ஒரு வருடத்துக்கு 4, 5 படங்கள் தொடர்ந்து நடித்தார். அஞ்சலி மேனன் இயக்கிய `கூடே' படம் சொல்லும், பிரித்வி ஒரு நடிகனாகத் தன்னை எப்படி மெருகேற்றியுள்ளார் என்பதை! மோகன்லாலின் வெறித்தன ரசிகரான பிரித்வி, அவரை வைத்து `லூசிபர்' எனும் மல்ட்டி ஸ்டாரர் மாஸ் படத்தை இயக்கினார். அதன் இரண்டாம் பாகம் தயாராகும் அதேவேளையில், தற்போது அதே மோகன்லாலை வைத்து `ப்ரோ டேடி' எனும் கலகலப்பான படத்தையும் இயக்க இருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட இவரின் படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. 2023 வரை தன் கால்ஷீட்டை நிரப்பிவிட்டார் மனிதர்.
நிறைய பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தன் கருத்தையும் கண்டனத்தையும் தயங்காமல் பதிவு செய்பவர் பிரித்விராஜ். 2004-ல் இயக்குநர் வினயனின் படத்தில் நடிப்பவர்களை மலையாள சினிமா ஒதுக்கிவைக்க, துணிந்து அவரின் `சத்யம்' படத்தில் அப்போதே நடித்தவர் பிரித்வி. 2018-ல் பிரபல நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக, இனி பெண் வெறுப்பைக் கொண்டாடும் படங்களைச் செய்யப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தார். தற்போதைய லட்சத்தீவு பிரச்னைக்கும் முதலில் ஒலித்த நட்சத்திரக் கண்டனக் குரல் இவருடையதுதான்.

மலையாள சினிமாவின் புதிய அலையை ஏற்படுத்தியதில் முதன்மையானவர் பகத் பாசில் என்றால், அந்த நவீன மாற்றத்துக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்ட முதல் நடிகர் பிரித்விராஜ் என சொல்லலாம். தன் கரியரின் ஒவ்வொரு அசைவையும் அவரே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தன் பாதை எதுவென அவரே தீர்மானித்தார். அதிலும் தேமேவென ஓடாமல் நின்று நிதானமாகப் பல அசாதாரணமான முயற்சிகளைத் தயங்காமல் இறங்கிச் செய்தார். சூப்பர்ஸ்டார் மோகன்லாலே தனக்குப் பிடித்த இயக்குநர், நடிகர் என்று சான்றிதழ் தருமளவிற்கு உயர்ந்துவிட்ட பிரித்விராஜ், பலரின் மனங்களை வென்ற மக்கள் சூப்பர்ஸ்டாராகிவிட்டார் எனத் தயங்காமல் சொல்லலாம்.