தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுதா கொங்கரா. 'துரோகி' படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். சூர்யாவின் நடிப்பில் உருவான 'சூரரைப் போற்று' பலராலும் பாராட்டப்பட்ட படம். பிரபல விமான நிறுவனம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நடத்திய கேப்டன் கோபிநாத்தின் கதையின் தழுவல்தான் இந்தப் படம். இப்படம் 68வது தேசிய விருது விழாவில் 5 தேசிய விருதுகளைக் குவித்தது.
தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதனிடையே 'சூரரைப் போற்று' வெற்றிக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா 'பயோபிக்’ படமாக எடுக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்தத் தகவல் தொடர்பாக சுதா கொங்கரா ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், “நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை. ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்கும் எண்ணம் எனக்குத் தற்போதைக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த படத்திற்காக ஆர்வம் காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.