சுஷாந்த் சிங்கின் மரணம் இன்றளவும் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது. மிகச்சிறந்த மோட்டிவேஷனல் கதைக்களத்தோடு அமைந்த தோனியின் வாழ்க்கைத் திரைப்படம் மூலமாக பலருக்கும் ஊக்கமளித்தவரா தன்னை மாய்த்துக் கொண்டார் என, இன்னும் அவரின் இறப்பு குறித்து பல ரசிகர்கள் கவலை கொள்வதுண்டு.

ஜூன் 14-ம் தேதி 2020-ல் தான் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டில் தூக்கிட்ட நிலையில், சுஷாந்த் சிங் இறந்து கிடந்தார். கால ஓட்டத்தில் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.
சுஷாந்தின் இறப்புக்குப் பிறகு, அவர்களின் வீட்டில் மீண்டும் ஓர் இறப்பு நிகழ்ந்துள்ளது. சுஷாந்தின் சகோதரி பிரியங்கா சிங், தங்களுடைய செல்ல நாய்க்குட்டி ஃபட்ஜ் இறந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங் மற்றும் ஃபட்ஜ் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, ``சோ லாங் ஃபட்ஜ்! உன் நண்பர்களின் சொர்க்க பிரதேசத்தில் நீயும் சேர்ந்தாய்… விரைவில் பின்பற்றி வருவோம். அது வரையில் கனத்த இதயத்தோடு...'' என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இவரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ஃபட்ஜின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.