
கூட்டத்தை கவுன்ட் செய்தபடி முத்துப்பாண்டியாக நடித்த மதுசூதனையும், ஈஸ்வரமூர்த்தியாக நடித்த லாலையும் தேடிக் கொண்டிருந்தார் போஸ்வெங்கட்.
தமிழ்சினிமாவின் போலீஸ் கதைகளில் நிஜம் பேசும் படங்கள் வெகு குறைவு. அதிலும் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் படங்கள் அரிதிலும் அரிது. இந்த வகையில் விக்ரம்பிரபுவின் `டாணாக்காரன்' கவனம் ஈர்த்திருக்கிறது. ``ஒரு டீம் மீட் பண்ணலாமா?'' என ஹீரோ விக்ரம்பிரபுவிடமும், இயக்குநராக முதல் படத்திலேயே அசத்திய தமிழுக்கும் ஒரு மெசேஜ் அனுப்பின வேகத்திலேயே வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன வெல்கம் பொக்கேக்கள்.
இயக்குநர் தமிழ், வெற்றிமாறனின் பட்டறையிலிருந்து வந்தவர். சூர்யாவின் `ஜெய்பீம்' படத்தில் முரட்டுத்தனமான சப் இன்ஸ்பெக்டராக மிரட்டியவர். இயக்குநராக முதல்படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார்.
ஒரு ஜாலி சண்டேயில்... நுங்கம்பாக்கத்தில் உள்ள மார்க் ஸ்டூடியோவில் நடந்தது இந்தச் சந்திப்பு. படத்தின் இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், நடிகர்களில் ஹீரோ விக்ரம் பிரபு (அறிவு), எம்.எஸ்.பாஸ்கர் (செல்லக்கண்ணு), போஸ்வெங்கட் (இன்ஸ்பெக்டர் மதி), பிரகதீஸ்வரன் (சித்தப்பா), பாவல் நவகீதன் (காதர் பாட்சா), கார்த்தி (முருகன்), அன்பு (கமாண்டன்ட்), லிங்கேஷ் (மணிமாறன்), சுந்தர் (சிவகுமார்), கலை இயக்குநர் திருமகன் எஸ்.ராகவன், பாடலாசிரியர் சந்துரு என அத்தனை பேரும் ஆஜர்.

வெளியே வெயில் டிகிரி டிகிரியாக எகிறியதை யாரும் பொருட்படுத்தாமல் அரட்டைக் கச்சேரியைத் தொடங்கியதில்... சட்டென கணீர் குரலெடுத்து எம்.எஸ்.பாஸ்கர் பாட ஆரம்பித்தார்.
``கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ...'' என்று பாஸ்கர் பாட, படத்தில் முருகன் ரோலில் நடித்த கார்த்தியும், கமாண்டன்ட் ஆக மிரட்டிய அன்பும் செம ஷாக். ``செல்லமுத்து சார் திருக்குறள் சொல்றார். அமைதியா இருங்க'' என போஸ்வெங்கட் இன்னொரு பக்கம் கலாய்க்க... பிரேக் போட்டது போல் அமைதி நிலவியது. ``இது இறையனார் எழுதிய பாடல்... எல்லாரும் எப்படி சைலண்ட் ஆனாங்க பாத்தீங்களா?’’ என பாஸ்கர் காமெடியாய் புன்னகைக்க... ஒளிப்பதிவாளர் மாதேஷும், சித்தப்பாவாக கண்கலங்க வைத்த பிரகதீஷ்வரனும் அதிர சிரித்தார்கள்.
கூட்டத்தை கவுன்ட் செய்தபடி முத்துப்பாண்டியாக நடித்த மதுசூதனையும், ஈஸ்வரமூர்த்தியாக நடித்த லாலையும் தேடிக் கொண்டிருந்தார் போஸ்வெங்கட். ``ஈஸ்வரமூர்த்தி அமெரிக்காவில் இருக்கார். முத்துப்பாண்டி வேற படத்து ஷூட்டிங்ல இருக்கார்'' என்றார் தமிழ்.
கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்த சந்தோஷத்தில் வந்திருந்தார் எம்.எஸ்.பாஸ்கர். அன்று காலையில் அவர் நேராக நடிகர்திலகம் சிவாஜியின் வீட்டிற்குச் சென்று, தன் பதக்கத்தையும் டாக்டர் பட்டத்தையும் அவரது புகைப்படத்திற்கு முன் வைத்து, ``பாருங்கப்பா...'' எனக் காட்டி ஆசி வாங்கி வந்தவருக்கு இயக்குநர் தமிழ் உட்பட படக்குழுவே வாழ்த்து சொல்ல, மகிழ்ந்தபடி பேச ஆரம்பித்தார்.

``இன்னிக்கு நான் உங்க முன்னாடி பேசிக்கிட்டு இருக்கறது, வாழறது, நடிக்கறது எல்லாமே எங்க சிவாஜியப்பா போட்ட பிச்சைதான். அவர் படத்துக்கு முன் இந்தப் பட்டத்தை வைக்கும்போது எனக்குக் கண்ணுல இருந்து தண்ணி தண்ணியா ஊத்துச்சு. இந்தப் பட்டம் பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் படத்தில் எங்க அண்ணன் மகன் விக்ரம் பிரபுவுடன் நடித்தது பெரிய சந்தோஷம்'' என்ற எம்.எஸ்.பாஸ்கரின் கரத்தை இயக்குநர் தமிழ் பற்றிக் கொண்டபடி, ``எங்க அண்ணனுக்கு நாங்க எல்லாருமே கை தட்டுறோம்'' என நெகிழ்ந்து கைகள் தட்டவும், ஸ்பாட்டே கைத்தட்டலில் அதிர்ந்தது.
``காவல்துறையில இருந்து சினிமாவுக்கு இவர் எப்படி வந்தார்னு எல்லாரும் ஆச்சரியப்படுறாங்க. போலீஸா வர்றதுக்கு முன்னாடியே சினிமா ஆசை வந்திடுச்சு. வெற்றிமாறன் கிட்ட சேர்ந்ததும், சினிமாக் கதவுகளை எளிதா திறக்கமுடிஞ்சது. வெற்றிமாறன் அசிஸ்டென்ட் னாலே தமிழ் சினிமாவுல தனிமரியாதை இருக்கு. `விசாரணை'யில் நான் ஒர்க் பண்றதுக்கு நண்பர் ஜானகிராமனும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அண்ணனும்தான் காரணம்'' என்ற தமிழ், விக்ரம் பிரபுவைப் பார்த்தார்.
``தமிழ் சார்கிட்ட இந்தக் கதையைக் கேட்கும்போதே, ரொம்பவே டஃப் ஆன ஸ்கிரிப்ட்னு புரிஞ்சது. வீட்ல தாத்தா, அப்பான்னு சினிமா ஃபேமிலியா இருந்தால்கூட சினிமா பத்திப் பேச மாட்டோம். எனக்கா ஒரு ஆர்வம் வந்த பிறகுதான் சினிமாவுக்குள் வந்தேன். கத்துக்கிட்டேன். அப்பா படம் பார்த்துட்டு, `ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சிருக்கே'ன்னு சந்தோஷமா சொன்னார்'' என்றபோது உரையாடலில் இணைந்தார் ஒளிப்பதிவாளர் மாதேஷ். விகடனில் புகைப் படக்காரராக இருந்து ஒளிப்பதிவாளர் ஆனவர்.
``எல்லா கேமராமேன்களுக்குமே கலர்ஃபுல்லா பண்ணணும்னு ஒரு ஆசை இருக்கும். நானுமே கலர்ஃபுல்லா பண்ணணும்தான் விரும்பினேன். ஆனா, டைரக்டர் என்கிட்ட கதை சொல்லும் போதுதான் தெரிஞ்சது. இதுல கலரே இல்ல வெறும் காக்கிதான்னு. லொக்கேஷனாவது கலரா இருக்கும்னு போனால், சரியான பொட்டல் காட்டுலதான் ஷூட்டிங். சரி, ஹீரோயினையாவது ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணின பிறகு நடிக்கச் சொல்வாங்கன்னு பார்த்தா, நேரடியா ஸ்பாட்டுக்கு வரச் சொல்லிட்டாங்க...'' என மாதேஷ் சொல்லவும், கார்த்தியும் பிரகதீஸ்வரனும் அதிர்ந்து சிரித்தார்கள்.

பாவெல் நவகீதனும், லிங்கேஷும் இதற்கு முன் நடித்த படங்களில் எல்லாம் பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களில் நடித்தவர்கள். ``இந்தப் படத்துல எங்களுக்கு பாசிட்டிவ் ரோல் அமைஞ்சது சந்தோஷமா இருக்கு... இந்தப் படத்துல எங்களுக்கு சித்தப்பாவும் கிடைச்சிருக்கார்'' என பாவலும் லிங்கேஷும் பிரகதீஸ்வரனைப் பார்க்க, நிதானமாகப் பேச ஆரம்பித்தார் பிரகதீஸ்வரன்.
``முப்பது வருஷமா கிடைக்காத ஒரு அங்கீகாரத்தை எனக்கு இந்தப் படம் கொடுத்திருக்கு. பத்து வருஷத்துக்கு முன்னாடியே தமிழ் எனக்கு இந்தக் கதையைச் சொல்லிட்டார். எல்லாருமே நான் மயக்கம் போட்டு விழுகிற சீனை சிலாகிச்சுச் சொன்னாங்க. ரெண்டு மூணு நாள் விழுந்தேன். ஆனா எல்லாருமே இஷ்டப்பட்டுதான் கஷ்டப்பட்டோம். டைரக்டர் பார்க்கறதுக்கு முரட்டு ஆளாக இருந்தாலும் ஸ்பாட்டுல அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டார். நான் இறந்த சீனை வீட்ல என் பையனாலும், மகளாலும் தாங்கிக்க முடியல. அதுவும் என் மகளின் மனசை ரொம்பவே பாதிச்சிடுச்சு...'' என நெகிழவும், டாபிக்கை மாத்தினார் முருகனாக நெகிழ வைத்த கார்த்தி.
``நான் கிரிக்கெட் விளையாடப்போன இடத்துலதான் தமிழ் சாரோட உதவியாளர் கிஷோரின் நட்பு கிடைச்சது. கிஷோரைப் பார்க்கப் போன இடத்துலதான் தமிழ் சாரையும் பார்த்தேன். தமிழ் சார் போலீஸ் டிரெயினிங்ல இருந்தபோது அவர் நண்பரும் என்னை மாதிரி உடல் பருமனா இருந்திருக்கார். அதனாலேயே அவர் மனசில முருகன் கேரக்டர் ஓடிட்டு இருந்திருக்கு. தமிழ் சார் என்னைப் பார்த்த நொடியிலேயே `நடிக்கிறியா?'ன்னு கேட்டார். அவரால நடிகனாகிட்டேன்'' என கார்த்தி நெகிழவும், இடைமறித்தார் இயக்குநர் தமிழ். ``ஒரு குழந்தை மாதிரி அவன். தமிழ் சினிமாவுக்கு நல்ல ஒரு அற்புதமான நடிகனை நாங்க எல்லோரும் சேர்ந்து அடையாளம் காண்பிச்சிருக்கோம்'' என கார்த்தியின் தோளை அணைத்துச் சொன்னார் தமிழ்.
``நானும் ஒரு சினிமா ரசிகன்தான். நல்ல படங்களைப் பார்க்கணும்னு நினைக்கற மாதிரி, நல்ல படங்கள் கொடுக்கணும்னு நினைப்பேன். ஒரு நல்ல கதை. அதை சரியா எடுத்து ஆடியன்ஸ்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கறதுக்கு என்னால முடியும்னா அதை எப்பவும் செய்ய ரெடியா இருக்கேன். கதை நல்லா இருந்து அதுல ஒரு கேரக்டர் மட்டும் பண்ணணும்னாகூட பண்ணுவேன். கரெக்டான டீம். அதுக்கான உழைப்பு சேர்ந்தாலே வெற்றி நிச்சயம். அப்படி ஒரு வெற்றியை இந்த `டாணாக்காரன்' டீம் கொடுத்திருக்கு'' எனப் பூரிப்பாகச் சொன்ன விக்ரம் பிரபுவைப் பார்த்துத் தமிழ் புன்னகைத்தார்.
அப்போது போஸ்வெங்கட், “என்னப்பா எல்லாரும் சீரியஸாவே பேசுறீங்க? இதை நல்லா எழுதிக்கங்க. படத்தில் நடிச்ச அத்தனைபேரையும் பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கின ‘ஈஸ்வரமூர்த்தி’ இயக்குநர் தமிழ்தான். எங்க டீம் இப்பக்கூட நேரா போய் காக்கி டிரஸ் மாட்டிக்கலாம். அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம். என்னா டிரெய்னிங்!” என்று கலாய்க்க, ஒட்டுமொத்தச் சூழலும் கலகலப்பானது.