’நூல்வேலி’ என்றொரு தமிழ்த் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளிவந்தது. பக்கத்து வீட்டு பதினாறு வயது சிறுமியிடம் கதாநாயகனும், நாயகியும் தங்கள் மகளைப் போல நினைத்து பழகுவார்கள். ஒருநாள் ஆடை மாற்றும்பொழுது அச்சிறுமியை கதாநாயகன் எதேச்சையாக பார்த்து அவளோடு உறவுகொள்ள அணுகுவான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல் அதை ஏற்றுக்கொள்வாள். இந்த சம்பவத்தை கதாநாயகியும், அவர்களது 10 வயது குழந்தையும் பார்த்து விடுவார்கள்.
மகளைப் போல வளர்க்கும் சிறுமியை எப்படி பாலியல் ரீதியாக அணுக முடியும் என்கிற கேள்வி சமூகத்தில் இன்றும் இருக்கின்றது. அவ்விடத்தில் தன்மீது அன்பு செலுத்தியவராக அல்லாமல் வேறு யாராக இருந்திருந்தாலும் அந்தச் சிறுமி அவரை எதிர்த்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதை #Grooming என்பார்கள்.
நாயகி அந்த சிறு பெண்ணிற்கு நடந்தது தற்செயலான விபத்து என்று சொல்லி அவளுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வாள். ‘’அது விபத்தாகவே இருந்தாலும் இனி நான் ’அவரை’ நினைத்துக்கொண்டே வாழ்வேன்’’ என்று அப்பெண் பிடிவாதமாக இருப்பாள். கதாநாயகியின் சகோதரன் இந்த உண்மைகள் தெரிந்து அந்த சிறுமியை திருமணம் செய்துகொண்டு அவளது குழந்தையை ஏற்றுக்கொள்வதாக சொல்வான். 'ஆஹா... புரட்சி!' என்று மகிழ்ந்து பார்க்க ஆரம்பித்த மறுகணம் அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது கதாநாயகனுக்கு செய்யும் துரோகம் என்று அவள் அதை மறுத்துவிடுவாள். அதாவது அவளின் கற்பை அவனிடம் இழந்துவிட்டதால் இனி அவன்தான் மனதளவில் கணவன் என்று பொருளாம்.

மகளைப்போல நினைத்து பழகிய சிறுமியை பாதிப்புக்குள்ளாக்கிய ஆண் எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துகொள்வான். ஆனால் 18 வயது நிரம்பாத சிறுமி அந்த ஆணை நினைத்துக்கொண்டே தனியாக குழந்தையுடன் வாழ்வதாக படம் முடியும்.
தமிழ் சினிமாவும், இலக்கியமும் சிறுமிகள் மீது காதல் கொள்வது சரி என்று நியாயப்படுத்தும் விதத்தில் பல கதைகளை உருவாக்கியுள்ளது. மட்டுமல்ல, சாதி ரீதியாகவும் பெண்களை உடைமையாக பார்ப்பது சரியென்று #MalePatriarchyஐ ஆதரிக்கும், துணைபோகும் படங்களை இன்றுவரை தமிழ் திரைஉலகம் எவ்வித கூச்சமும் இல்லாமல் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளிடத்தில் இணக்கமாக இருந்து சிறிது சிறிதாக அன்பின் பெயரால் அவர்களை பாலியல் செயல்களுக்கு உள்ளாக்குவது Child Grooming / Sexual Grooming எனப்படும். தன்னிடம் பிரியமாக இருக்கும் ஒருவர் திடீரென்று தவறாக தொடும்போது குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டாலும் அது தவறு என்று உடனடியாகப் புரியாது. பக்கத்து வீட்டினர், உறவினர், பள்ளி மற்றும் டியூஷன் ஆசிரியர்களால் பெரும்பாலான குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுவது இப்படித்தான்.
ஒரு 14-15 வயது சிறுமிக்கு 40-45 வயது ஆணின்மீது காதல் ஏற்படுகிறது. “எனக்கு தந்தை இல்லை.. தந்தையை போல கணவன் வேண்டும்”, “வாய் முத்தம் வயது அறியுமா” என்று அவரை பார்த்து பாடுகிறாள். இது ’நாட்படு தேறல்’ எனும் தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதி கடந்த வாரம் வெளியாகி இருக்கும் ”என் காதலா” எனும் பாடல் வரிகள்.

‘’இது ஒரு வித்தியாசமான பாட்டு. ஆமாம்! வயது வித்தியாசமான பாட்டு. வயதில் மூத்தவரை இளம்பெண் காதலிக்கும் காமம் கடந்த பாட்டு. காதலுக்குக் கண்ணில்லை; சிலநேரங்களில் வயது வேறுபாடும் இல்லை’’ என்று இந்தபாடலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் வைரமுத்து.
பதின் வயது சிறுமிக்கு ஒருவரின் மேல் ஏற்படும் சாதாரண அன்பு அல்லது இரக்கத்தை காதல் என்று வரையறுப்பது #Pedophile ஆண்களின் கீழ்த்தரமான பாலியல் எண்ணத்தை புனிதமாக Validate செய்வது. இந்த தலைமுறையை சேர்ந்தவர்களான பாடலின் இயக்குநர் விஜய் மற்றும் இதை ட்விட்டரில் பெருமையாக பகிர்ந்திருந்த மதன் கார்க்கி இருவருக்கும்கூட இது புரியவில்லை என்பது உண்மையில் அயர்ச்சியாக இருக்கிறது.
ஆண் - பெண் பாலின பாகுபாடு இல்லாமல் பழகுவது, பெண்களை சமமாக பாவிக்கும் பழக்கம் முதலியவை சிறுவயதில் இருந்து பள்ளியில் போதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசுகிறோம். ஆனால், நமது கல்வி நிறுவனங்களில் இப்போது ஆசிரியர்களாலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அப்பள்ளியில் பாலியல் குற்றங்கள் பற்றிய புகார்களை விசாரிக்கும் குழுவின் தலைவராக இருந்தார் என்கிற விஷயம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் ராஜகோபாலனைத் தொடர்ந்து அப்பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ், சென்னையை சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொள்பவர்களை Pedophile என்று அழைப்பார்கள். வீட்டில், பொதுவெளியில், பள்ளி, கல்லூரி என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் பாலியல் குற்றத்திற்கு ஆளானவர்கள் தைரியமாக வெளியே சொல்லி சட்டரீதியாக நீதி கேட்கும் காலத்தை நோக்கி மீச்சிறு அடியை எடுத்து வைத்திருக்கிறோம்.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக 2017-ல் உலகம் முழுவதும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் சமுக வலைதள எழுச்சியான #MeToo இயக்கத்தை சொல்லலாம். #MeToo எனும் சொற்றொடர் 2006-ம் ஆண்டு Tarana Burke எனும் அமெரிக்க கருப்பின பெண்ணால் சமூக வலைதளத்தில் பாலியல் குற்றத்திற்கு எதிராக முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. 2017-ல் அமெரிக்க நடிகை Alyssa Milanov #MeToo Hashtag-ஐ பயன்படுத்திய பிறகு அது உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு இயக்கமாக உருவானது.
இன்னொரு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய போக்சோ சட்டம்-2012 வந்த பிறகு புகார் அளிக்க பலரும் முன்வருகின்றனர்.
ஒவ்வொரு முறை பாலியல் குற்றங்கள் பற்றிய வழக்குகள் பதியப்படும் போதும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு தொடர்பான விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், இன்னும் கூட தைரியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றி பொது வெளியில் சொல்லவும், புகாரளிக்கவும் இரண்டு முக்கிய காரணங்களால் அச்சம் கொள்கின்றனர

கற்பு, ஒழுக்கம் என சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலி பெண்ணடிமை கோட்பாடுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்தும் சமூகம் ஒருபக்கம். இரண்டு வயது பெண் குழந்தைக்கு கூட கற்பு உண்டு என்று நம்பிக் கொண்டிருப்பதும், அதனால் பாதிப்பை வெளியில் சொல்லத் தயங்குவதாலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை அதிகரிக்கின்றன. மற்றொன்று குற்றவாளிகள் சமூகத்தில் பணபலம் மற்றும் ஆள்பலம் பொருந்தியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை எதிர்க்க துணிவின்றி பாதிக்கப்பட்டவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான குற்றம்கூட ஒரு மாணவி இன்னொரு முன்னாள் மாணவியிடம் தனிப்பட்ட செய்தியில் சொல்லி இன்ஸ்டாகிராம் மூலமாக வெளிவந்ததுதான். அது சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகுதான் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் சித்தப்பா, மாமா அல்லது அக்கம்பக்கத்து வீட்டினருடன் பழகும்போது அப்பாவைப் போல அவர்கள் நடந்து கொள்வார்கள் என்று நினைத்துக் கொள்கிறோம். அவ்வாறே பிள்ளைகளிடத்திலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறோம். பெரியவர்களை மதிக்க வேண்டும், அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறோம். புதியவர்கள் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சும் போது அவர்களிடம் செல்ல மறுக்கும் குழந்தைகளை நம் வீட்டு பெரியவர்கள், ”நம்ம மாமா, சித்தப்பாதான் கூப்பிடறாங்க... போ” என சொல்வதைப் பார்க்கலாம். அது மிகவும் தவறான அணுகுமுறை. மற்றவர்களிடம் செல்ல விரும்பாத குழந்தைகளை வலுக்கட்டாயமாக யாரிடமும் போகச் சொல்லி பழக்கக் கூடாது. உறவினர்களின் மனம் வருத்தப்படும் என்பதைவிட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு குறித்து சரியான புரிதலை ஏற்படுத்துவது அவசியம்.
எல்லோரையும் சந்தேகப்பட முடியுமா என்கிற கேள்வி எழலாம். ஆனால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டபின் அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலாய், பயமாய் பின் தொடர்ந்து அவர்கள் எதிர்காலத்தை சீரழிக்கும்.
சொந்த தந்தையே மகளிடத்தில் பாலியல் வன்புணர்வு செய்யும் கொடுமைகள் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் ‘தந்தையைபோல, சகோதரனை போல’ என்கிற பதங்களை குழந்தைகளிடத்தில் பயன்படுத்தி யாருடனும் பழக அனுமதிப்பது ஆபத்தை உண்டு செய்யலாம். எல்லோரிடத்திலும் அன்பாக இருக்க குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல தன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தற்காப்பு கலைகளை கற்றுத் தருவதும் அவசியம்.
இன்று பாதுக்காப்பாக குழந்தைகள் வளர்ப்பதிலும், பாலியல் ஆபத்துகள் குறித்து குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக புரிய வைப்பதிலும் பல சிக்கல்கள் நிறைந்து இருக்கின்றன. பெற்றோர்கள் உண்மையில் அச்சத்தில் இருக்கின்றனர். தற்போது வந்திருக்கும் ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பிள்ளைகளின் பள்ளிக் கல்வியையும் அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி டீன் ஏஜ் பெண்களுக்கு தங்கள் கல்வி பாதிக்கப்படும் என்கிற பயமும், தங்கள்மீதே குற்றம் சுமத்தப்படும் என்கிற அச்சமும் இருக்கின்றன. மாணவிகள் செய்யும் சிறு தவறுகளை பெரிதுபடுத்தி பெற்றோர்களிடத்தில் புகார் சொல்வதாக மிரட்டி ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்கள் செய்ததாக மாணவிகள் கூறியிருக்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநலத்தைவிட அவர்களின் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அது மதிப்பெண்களை வைத்து மிரட்டி மாணவர்களிடத்தில் பாலியல் அத்துமீறல்கள் செய்யும் ஆசிரியர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதையும் மீறி சொல்லும்போது பெற்றோர்கள் மானம், கௌரவம் என்று காரணம் காட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகாரளிப்பதில்லை. இதையெல்லாம் கடந்துதான் இப்போது பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பாலியல் குற்றங்கள் நிகழும்போது குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவரின் சாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில்தான் இங்கு Social Media Campaign முதல் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கை வரை வெளிவருகின்றன. அதையும் மீறி எழும் ஒட்டுமொத்த சமூகத்தின் கோபம், எழுச்சி ஆளும் அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குகிறது. ஆனால், இதை மடைமாற்றும் விதமாக குற்றவாளிகளுக்கும், அவர்கள் சார்ந்திருக்கும் சாதி மற்றும் நிறுவனங்களுக்கும் ஆதரவாக சிலர், குறிப்பாக பெண்கள் செயல்படுகிறார்கள். ஓரிரு நாட்களில் சம்பந்தபட்ட முக்கிய பிரச்னையை Expiry ஆகச் செய்கின்றனர். Pied Piper-ன் பின்னால் செல்லும் எலிகள் போல பலரும் அவர்களை ‘Follow’ செய்கிறார்கள்.
#PSBB பள்ளி விஷயத்தில் மதுவந்தியும் அவரது தந்தை YG மகேந்திராவும் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவியரின் நலனைவிட பள்ளிக்கும், அதன் நிறுவனரின் பெயருக்கும் களங்கம் வரக்கூடாது என்பதிலேயே குறியாக இருப்பது வியப்பளிக்கிறது. பல மாணவிகளால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருக்கும் ஒருவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி போன்ற பிரபலங்கள் பேசுவதால், மேற்கொண்டு புகார் அளிக்க வரும் மக்களுக்கு அச்சமும், தயக்கமும் ஏற்படும். இவை ஒருபுறம் என்றால், மறுபக்கம் Social Media Intellectuals(!) பள்ளி கட்டடம் கட்ட நிலம் கொடுத்த அரசியல் கட்சி எது என்கிற ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். இறுதியாக மொத்த பிரச்னைகளுக்கும் அடிப்படையான குழந்தைகள் நலன், கல்வி மற்றும் எதிர்காலம் மீதான அக்கறை காணாமல் போய்விட்டது.
சிறுவயதில் பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்தபோது, புகார் அளிக்க தயங்கியதற்கு அழகு சார்ந்த தாழ்வுணர்வும் ஒரு காரணமாக இருந்ததாக #MeToo – 2017-ன் போது நிறையப்பேர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் பாலியல் குற்றங்கள் குறித்து பொதுவெளியில் வைக்கும் புகார்களின் நம்பகத்தன்மை முதலில் அப்பெண்களின் அழகை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
இதை குறிப்பிட்டு எழுத்தாளர் தமயந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார். ‘’தங்களுக்கு எதிராக பாலியியல் வன்மம் நிகழும் போது துணிந்து போரிடும் பெண்களைப் பார்க்க மனதில் நிம்மதி வருகிறது. ‘சாதாரணமா தொட்டிருப்பார் - இவளுக்கு எப்பவுமே தான் பெரிய அழகுன்னு நெனப்பு ... அதான்’ என்று அலட்சிய புறந்தள்ளல்களுக்கு ஆளான எங்கள் தலைமுறை மாய்ந்து விட்டதில் பெருமகிழ்ச்சி.’’
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகும்போது அவர்கள் தைரியமாக முன்வந்து காவல்துறையில் புகார் அளிக்க உதவும் வகையில் புகார் கொடுப்பவரின் தகவல்களை வெளியில் சொல்லப்பட மாட்டாது என தற்போது தமிழ்நாடு அரசு உறுதி அளித்திருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புகார் அளிக்க முன்வர வேண்டும்.
இதுபோன்ற குற்றம் நிகழும்போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை நோக்கி நகர்வதை பற்றி மட்டுமே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கமும் போக்சோ சட்டம் -2012ஐ ஏற்படுத்தி உள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் தண்டனை சட்டங்களை தவிர ஒரு சமூகமாக நாமும், அரசாங்கமும் பாலின சமத்துவம் பற்றிய புரிதல் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்த என்னென்ன வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம்?
குழந்தைகள் மீதான இச்சை, குழந்தை திருமணம், பெண்களை உடைமையாக நடத்துவது, பெண்களை மையப்படுத்திய தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது வரை எல்லாவற்றையும் இங்கே ’சகஜம்’ ஆக்கி வைத்திருக்கிறார்கள். அது தவறு என்று ஆண்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பெண்களுக்கும் புரியவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்குறிப்பு : இங்கே குழந்தைகள் எனும் சொல் ஆண்-பெண்-திருநர் என அனைத்து பாலினரையும் உள்ளடக்கியது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே இந்தியாவில் அதிகம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பு அறிக்கை சொல்கிறது.