Published:Updated:

'தண்ணீர் தண்ணீர்' முதல் 'அறம்' வரை! - தண்ணீர்ப் பிரச்னை குறித்துப் பேசிய படங்கள்

தமிழகத்தில் தண்ணீருக்காக பல மைல் தூரம் கடந்து சென்று அவதிப்படும் ஏராளமான கிராமங்கள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், தண்ணீரின் மகத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தமிழ் சினிமாவில் வந்த சில படங்களின் தொகுப்புதான் இந்த கட்டுரை.

1
தண்ணீர் தண்ணீர்:

தண்ணீர் தண்ணீர்:

தமிழ் சினிமாவில் எத்தனைப் படங்கள் வந்தாலும் தண்ணீரை மையப்படுத்தி வந்த படங்களில் பாலச்சந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீரு'க்குதான்' எப்போதும் முதலிடம். அப்போது (1981) தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை-வசனம் எழுதி, ஒரு நாடகம் நடத்தினார். அதே நாடகத்திற்குத் திரைக்கதை எழுதி, இந்த படத்தை இயக்கினார், பாலச்சந்தர்.

நீர் இல்லாமல் வறண்டு போன கிராம மக்கள் பல மைல் சென்று தண்ணீரை எடுத்து வாழ்கின்றனர். அரசாங்கத்தின் உதவி கிடைக்காததால் அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாகச் சொன்ன இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது.

இன்று வரைக்கும் தண்ணீரின் தேவையை, தண்ணீரின் அவலத்தை ‘தண்ணீர்... தண்ணீர்...’ அளவுக்கு எந்தப் படமும் சொல்லவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

2
Dhool

தூள்:

எப்போதும் வித்தியாசமான படங்களில் நடிக்கும் விக்ரமுக்கு, கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் 'தூள்'. தொழிற்சாலை கழிவால் ஆறுகள் மாசுபட்டு அதனால் மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபத்தத்தை கமர்ஷியல் வடிவில் சொன்னது 'தூள்' திரைப்படம்.

3
Kaththi

கத்தி:

திருநெல்வேலி 'தன்னூத்து' கிராமத்தில் பன்னாட்டு நிறுவனமொன்று ஏழைகள் நிலத்தைக் கையகப்படுத்தி குளிர்பான நிறுவனம் ஒன்றை நிறுவ முயல்கிறது. அதைத் தடுத்து நிறுத்தி ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்க இரண்டு விஜய்யும் போராடுவதுதான் "கத்தி படத்தின் கதை, திரைக்கதை எல்லாம். மிக மிக பழைய ஆள் மாறாட்டக் கதைதான் என்றாலும், கார்ப்ரேட் நிறுவனங்கள் தண்ணீரை காசாக்குவதையும், நகர மக்கள் ஒரு நாள் தண்ணீர் இல்லையென்றால் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதையும் ஜனரஞ்சகமாகக் காட்டியது 'கத்தி' திரைப்படம்.

4
சண்டிவீரன்

சண்டிவீரன்

தண்ணீர் பிரச்னை என்று வந்தால் பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வார்கள் என்பதை விறுவிறுப்பான கதையாக சொன்ன படம் 'சண்டிவீரன்'. இரண்டு கிராம மக்களின் குடிநீர் ஆதாரமான குளத்தை அதர்வா எவ்வாறு மீட்டெடுக்கிறார் என்பதை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில், தண்ணீர் பிரச்னைகளுக்கும், அதையொட்டிய தகராறுகளுக்கும், இனம், மொழி, மதம், மாநிலம் கடந்து சரியான தீர்வு சொல்ல முயன்றிருக்கும் ஒரு காரணத்திற்காகவே இந்த படத்தை பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

5
அறம்

அறம்:

தமிழ்த் திரைப்பட உலகத்துக்கே உரிய எந்த ஒரு வணிக சமரசமும் செய்துகொள்ளாமல் கச்சிதமான திரைக்கதையுடன் வெளிவந்த படம் 'அறம்'. மக்களுக்கு அடிப்படைத் தேவையான தண்ணீரைக்கூட வழங்காமல் பல கோடி ரூபாய் செலவு செய்து மண்ணிலிருந்து விண்ணில் பாயும் ராக்கெட் வசதிகள் இருக்கும் இதே தேசத்தில், அதற்கு நேரெதிராக மண்ணுக்குள் அமிழ்ந்திருக்கும் ஓர் ஏழைச்சிறுமியின் பிரச்னை தொடர்பான அடிப்படை வசதிகள் கூட இல்லாதிருக்கும் அரசு நிர்வாகத்தின் முரணை, அதன் முகத்திரையை பட்டவர்த்தனமாகக் கிழித்தெறிந்தது 'அறம்' படம். சமூகப் பிரச்னைகளைப் பற்றி அடிப்படையான அக்கறையுடன் உரையாடும் திரைப்படம் என்பதைத் தாண்டி ‘அறம்’ ஒரு பெண்மையைத் திரைப்படம் என்பதும் கூடுதல் சிறப்பு

அடுத்த கட்டுரைக்கு