சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தமிழரசன் - சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன்

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும் இளையராஜா இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

மருத்துவத்தை வியாபாரமாக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு எதிராகத் தனியொரு மனிதனாகத் தந்தை நடத்தும் யுத்தமே ‘தமிழரசன்.'

கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நேர்மையான காவல்துறை அதிகாரி தமிழரசன் (விஜய் ஆண்டனி). அவரைப் பிடிக்காத மேலதிகாரியால் (சோனிசூட்) பழிவாங்கப்பட்டு தற்காலிகப் பணிநீக்கத்தில் இருப்பவருக்கு, மேலும் ஒரு சோதனை. ஒரே மகன் இதய நோயால் பாதிக்கப்பட, அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையோ பணம் கறப்பதிலேயே குறியாக இருக்கிறது. அதை எதிர்த்த போராட்டத்தில் தமிழரசன் வென்றாரா இல்லையா என்பதை அலுக்கச்சலிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன்
விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன்

மகனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் பாசமிகு தந்தை, கறைபடிந்த காவல்துறையில் நேர்மை தவறாத அதிகாரி, மருத்துவமனை செய்யும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொதித்தெழும் சாமான்யன் எனப் பல்வேறு பரிமாணங்களில் இறங்கி அடிக்க வாய்ப்பிருந்தும் நாம் பார்த்துப் பழகிய அதே நடிப்பையே கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. (அதையும் ஒரு காட்சியில் யோகிபாபுவே கிண்டலடித்துவிடுகிறார்). மரணப்படுக்கையில் போராடும் மகனுக்காக உருகும் தாயாக நிறைவாக நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன். தனி காமெடி டிராக்குகள் ஒழிந்துபோன தமிழ் சினிமாவில் என்னென்னவோ செய்து சிரிப்பூட்டப் பார்க்கும் யோகிபாபுவின் அத்தனை முயற்சிகளும் வீண். தன் பங்குக்கு காமெடி என்ற பெயரில் படுத்தியெடுக்கிறார் ரோபோ சங்கர். சுரேஷ்கோபி, சங்கீதா, சாயா சிங், கஸ்தூரி, முனீஸ்காந்த், ஒய்.ஜி.மகேந்திரன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இருக்கிறது. யாரும் நடிப்பில் பெரிதாகக் குறை வைக்கவில்லை.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும் இளையராஜா இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. சித் ஸ்ரீராம் குரலில் படத்தின் தொடக்கத்தில் வரும் ‘தமிழனோட வீரம்', எஸ்.பி.பி குரலில் வரும் ‘நீதான் என் கனவு' பாடல்கள் மனதில் நிற்கின்றன. ஆனால் முதல் பாதியில் பத்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து காதல் பாடல்கள் வருவது அலுப்பு.

தமிழரசன் - சினிமா விமர்சனம்
தமிழரசன் - சினிமா விமர்சனம்

காவல்துறைக்குள் நடக்கும் ஈகோ மோதல், சூழலைக் கெடுக்கும் கெமிக்கல் நிறுவனத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், துப்பாக்கிச்சூடு, அமைச்சரின் ஊழல் என்று படம் எங்கெங்கோ அலைபாய்ந்து மருத்துவமனைக்குள் வருவதற்குள் நம் நிலைமை சீரியஸாகிவிடுகிறது. தன் மகனைக் காப்பாற்ற மருத்துவமனையையே விஜய் ஆண்டனி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகளில் ஏராளமான லாஜிக் குறைபாடுகள் என்றால் இறுதியில் வில்லன்கள் அனைவரும் வரிசைகட்டி ஒவ்வொருவராகத் திருந்துவதெல்லாம் செம போங்கு பாஸ்.

எதை முதன்மைப்படுத்திச் சொல்வது, அதை எப்படிச் சொல்வது என்பதில் தடுமாறி நிற்கிறான் தமிழரசன்.