
நான் பகத் பாசிலுடைய மிகப்பெரிய ரசிகன். அவருடைய கண்கள், ஒவ்வொரு படத்துக்கும் தன்னை மாத்தி வெவ்வேறு கேரக்டருக்குள்ளேயும் அவர் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
டோலிவுட் ரசிகர்கள் அவரவர் ஆதர்ச நாயகர்களைத் திரையில் பார்க்கும்போது அவர்கள் கால் தரையில் இருக்காது. ஹீரோக்களுக்குக் கிடைக்கும் அதே ஆரவாரமும் கொண்டாட்டமும் ஒரு சில இயக்குநர்களின் பெயர்கள் திரையில் வரும்போது நடக்கும். அப்படிக் கொண்டாடப்படும் டோலிவுட் இயக்குநர்களில் முக்கியமானவர், சுகுமார். ‘ஆர்யா’, ‘ஆர்யா 2’, ‘நேனொக்கடினே’, ‘நானாக்கு பிரேமதோ’, ‘ரங்கஸ்தலம்’ என இவர் கொடுத்த சூப்பர் ஹிட் படங்களின் பட்டியல் பெரிது. அந்த வகையில் இப்போது ‘புஷ்பா’ படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார். லவ் படமோ, ஆக்ஷன் படமோ, ‘சுகுமாரின் டச் இதுதான்’ என்று ரசிகர்கள் கொண்டாடும் பக்கா மாஸ் கமர்ஷியல் இயக்குநர். சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசினேன்.
கணிதப் பேராசிரியராக வேலை பார்த்துக்கிட்டிருந்த நீங்க, இயக்குநராகி முதன்மையான இடத்துக்கு வந்திருக்கீங்க. இந்தப் பயணம் பற்றி?
``சின்ன வயசுல இருந்தே எனக்கு எழுத்து மேல பெரிய ஆர்வம் இருந்தது. நாவலாசிரியர் ஆகணுங்கிறதுதான் என் ஆசை. அதுக்கு காரணம், பிரபல எழுத்தாளர் எண்டமுரி வீரேந்திரநாத். அவர் எழுத்துகளைப் படிச்சு நானும் அவரை மாதிரியாகணும்னு நினைச்சேன். அவரை தீவிரமா ஃபாலோ பண்ணிக்கிட்டே வந்தேன். அவர் இயக்குநரானதும் ‘ஓ அடுத்த படி இதுதான் போல’ன்னு எனக்கும் ஆசை வந்தது.’’
‘ஆர்யா’, ‘ஆர்யா 2’ படங்களுக்குப் பிறகு, 12 வருஷம் கழிச்சு நீங்களும் அல்லு அர்ஜுனும் ‘புஷ்பா’ படத்துக்காக இணையும்போது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை எப்படி சமாளிச்சீங்க?’’
‘`என்னுடைய முதல் படமான ‘ஆர்யா’வுடைய கதையைப் பல ஹீரோக்கள்கிட்ட சொன்னேன். யாரும் ஓகே சொல்லலை. அப்போ அல்லு அர்ஜுன் ஒரு படம் மட்டும் நடிச்சிருந்தார். அவர்கிட்டயும் அவர் அப்பா அல்லு அரவிந்த் சார்கிட்டேயும் சொன்னேன். அவங்களுக்குப் பிடிச்சுப்போய் ஓகே சொன்னாங்க. அந்தப் படம் அமையலைன்னா, என் கரியர் என்னாகியிருக்கும்னே தெரியலை. ‘ஆர்யா’தான் எனக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எதிர்காலத்துக்கான ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போ உங்க கேள்விக்கு வர்றேன். நான் ஒரு கதைக்குள்ள போயிட்டேன்னா, வேறெந்தச் சிந்தனையும் எனக்குள்ள இருக்காது. அதைச் செஞ்சு முடிக்கவே நேரம் போதாது. இதுல எனக்கு என் படத்துக்கான எதிர்பார்ப்பு இதெல்லாம் யோசனையே வராது.’’

இந்தக் கதைக்களம் கொண்ட படத்தை பேன் இந்தியா படமா வெளியிடலாம் என்ற எண்ணம் எப்போ தோணுச்சு?’
‘‘நான் ஒரு தெலுங்குப் படத்தை எடுத்திருக்கேன். அது வெவ்வேறு மொழியில மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கு. இதுதான் உண்மை. நான் ‘புஷ்பா’ படத்தை பேன் இந்தியா படமா பார்க்கலை. என்னைப் பொறுத்தவரை, பேன் இந்தியா படம்னா `பாகுபலி’, `கே.ஜி.எஃப்’ மாதிரி பெரிய களம், பெரிய விஷுவல் இருக்கணும். அல்லு அர்ஜுனுக்கு சாட்டிலைட் சேனல்கள் மூலமா வட இந்தியாவுல நல்ல மார்க்கெட் இருக்கிறதால, என் தயாரிப்பாளர் இந்தப் படத்தை மத்த மொழிகள்ல வெளியிடலாம்னு சொன்னாங்க. ‘இல்லை. இது ஒரு தெலுங்குப் படம். மத்த மொழிகள்ல வெளியிட வேண்டாம்’னுதான் நான் சொன்னேன். ராஜமெளலி காருதான் போன் பண்ணி, ‘சுகு... இந்தி மார்க்கெட் பத்தி உனக்குத் தெரியலை. ஒரு படத்தை எல்லா மொழியிலயும் வெளியிட்டால், அதை பேன் இந்தியா படமாதான் எடுத்துக்குவாங்க. அதனால, படத்தை முடிச்சு எல்லா மொழியிலயும் ரிலீஸ் பண்ணுங்க’ன்னு சொன்னார். அப்புறம் ஆலோசிச்சு எல்லா ஊர்லயும் ரிலீஸ் பண்ணினோம். ஆனா, என்னைப் பொறுத்தவரை நான் ஒரு தெலுங்குப் படத்தைத்தான் எடுத்திருக்கேன்.’’

பகத் பாசிலை இயக்கியது எப்படி இருந்தது?
``நான் பகத் பாசிலுடைய மிகப்பெரிய ரசிகன். அவருடைய கண்கள், ஒவ்வொரு படத்துக்கும் தன்னை மாத்தி வெவ்வேறு கேரக்டருக்குள்ளேயும் அவர் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். `மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துல அவர் நடிப்பைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். ‘புஷ்பா’வுல பன்வர்சிங் ஷெகாவத் கேரக்டருக்கு முதல் சாய்ஸ் பகத் பாசில்தான். அவரை அணுகலாம்னு முடிவு பண்ணினப்போ, அவர் நிறைய படங்கள்ல பிஸியா இருக்கார்னு தகவல் கிடைச்சது. அப்புறம், விஜய் சேதுபதிதான் என் மைண்டுக்கு வந்தார். அவரைச் சந்திச்சுக் கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடிச்சுப்போய் ஓகே சொல்லிட்டார். அப்புறம், என் ஷூட்டிங் தள்ளிப்போயிடுச்சு, லாக்டெளன் வந்திடுச்சு. இடையில அவர் வெவ்வேற படங்கள்ல பிஸியாகிட்டார். சரி, நாம ஏற்கெனவே யோசிச்சு வெச்சிருக்கிற பகத் பாசில்கிட்ட கேட்டுப்பார்ப்போம்னு நினைச்சு கேட்டேன். இந்தக் கதைக்கு ஓகே சொல்லிட்டு, என்னுடைய `ரங்கஸ்தலம்’அவருக்கு எவ்வளவு பிடிக்கும்னு பகிர்ந்துக்கிட்டார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவரை இயக்கினது செம அனுபவம். ஒரு தெலுங்கு வார்த்தைகூட அவருக்குத் தெரியாது. ஆனா, சீன் பேப்பரைக் கொடுத்தா, பத்தாவது நிமிஷத்துல அதை ஸ்கேன் பண்ணிட்டு ரெடியா வந்து நிப்பார். தெலுங்குல அவர் பேசி நடிக்கிறதைப் பார்த்து அசந்துட்டேன்.’’
நீங்க இயக்குநர் மணிரத்னத்துடைய தீவிர ரசிகர்னு கேள்விப்பட்டோம். அவரைச் சந்திச்ச அனுபவம்?’’
``நான் ஸ்கூல் படிக்கும்போது அவருடைய ‘கீதாஞ்சலி’ பார்த்தேன். எனக்குள்ள செம ஜில்லுனு இருந்தது. ஆனா, அப்போ வெயில் காலம். படம் முடிஞ்சு வெளியே வரும்போது புதுப்புது அனுபவம் கிடைச்சது. முதல்முறை காதல் வரும்போது என்னென்ன உணர்வுகள் இருக்குமோ அந்த மாதிரி இருந்தது. இயக்குநரானா இவர் மாதிரியாகணும்னு நினைச்சேன். அவர் எப்படி சாப்பிடுவார், எப்படி எழுதுவார், அவருடைய அறை எப்படி இருக்கும், என்ன பேனா பயன்படுத்துவார்னு நிறைய யோசிச்சிருக்கேன். அவர் பென்சில்லதான் எழுதுவார்னு கேள்விப்பட்டிருக்கேன். அவரைப் பத்தி நியூஸ் எது வந்தாலும் அதை கட் பண்ணி வெச்சுக்குவேன். அந்த அளவுக்கு அவர் மேல பைத்தியமா இருந்தேன். ‘குரு’ வெளியான சமயம். மும்பையில ஒரு ஹோட்டல் லாபியில உட்கார்ந்திருந்தேன். எதிர்ல பார்த்தா, மணி சார் உட்கார்ந்திருக்கார். எனக்கு ஒரே பதற்றமாகிடுச்சு. எழுந்து நிக்கிறேன், நடக்குறேன், எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு தெரியலை. அவர் என் முதல் காதல் இல்லையா? அப்போ ‘ஆர்யா’ படம் வெளியாகி நான் இயக்குநராகிட்டேன். எனக்கு நானே தைரியம் சொல்லி அவர்கிட்ட பேசலாம்னு பக்கத்துல போய் ‘சார்...’னு கூப்பிட்டேன். ‘ப்ச்...’னு கையைக் காட்டிட்டார். ரொம்ப கஷ்டமாப் போயிடுச்சு. அவரை நேர்ல சந்திக்கமாட்டோமான்னு எத்தனையோ நாள்கள் இருந்திருக்கு. ஆனா, முதல்முறை நேர்ல சந்திக்கும்போது இப்படியாகிடுச்சேன்னு வருத்தமா இருந்தது. ஆனா, அப்போ அவர் எதையோ முக்கியமா பேசிக்கிட்டிருந்தார். அந்த சமயத்துல நான் கூப்பிட்டதும் அவர் அப்படி சொல்லிருக்கார்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. எனக்கும் கதை பத்திப் பேசிக்கிட்டிருக்கும்போது யாரும் தொந்தரவு பண்ணினா கோபம் வந்திடும். அதுக்குப் பிறகு, அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, ஒரு நாள் நிச்சயமா அவரைச் சந்திப்பேன்.’’

தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த இயக்குநர்கள்..?
``தமிழ் சினிமாவும் மலையாள சினிமாவும்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். சென்னையில மூணு வருஷம் எடிட்டர் மோகன் சார் ஆபீஸ்ல வேலை செஞ்சிருக்கேன். முதல் ரெண்டு வருஷம் அவர் ஆபீஸ்லேயே தங்கி வேலை பார்த்தேன். மூணாவது வருஷம் கோடம்பாக்கத்துல பிரதாப் லாட்ஜ்ல தங்கியிருந்தேன். அந்தச் சமயத்துல மோகன் சார்கிட்ட கத்துக்கிட்டது எனக்கு இப்போவும் உறுதுணையா இருக்கு. நான், மோகன் ராஜா, பொம்மரில்லு பாஸ்கர் மூணு பேரும்தான் ஒண்ணா இருப்போம். நாங்க மூணு பேரும் இந்த இடத்துக்கு வந்திருக்கோம்னா, அதுக்கு மோகன் சார்தான் காரணம். தர் சார், பாலசந்தர் சார், பாலு மகேந்திரா சார், மகேந்திரன் சார்னு நிறைய ஜாம்பவான்கள் என்னைக் கவர்ந்திருக்காங்க. பிரபு சாலமனுடைய `மைனா’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஷாட் டிவிஷனும் கதை சொல்லலும் சூப்பரா இருக்கும். `ரன்’ல இருந்து லிங்குசாமியுடைய வொர்க் பிடிக்கும். வெற்றிமாறன், பா.ரஞ்சித்னு நிறைய பேர் இருக்காங்க. தமிழ் சினிமாதான் என் க்ரியேட்டிவிட்டிக்கு அடிப்படையா இருக்கு.’’
`பருத்திவீரன்’தான் இன்ஸ்பிரேஷன்னு அல்லு அர்ஜுன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாரே!’’
‘‘ஆமா. எனக்குப் பிடிச்ச இயக்குநர் லிஸ்ட்ல அமீர் பெயரை எப்படி விட்டேன்? `பருத்திவீரன்’ மிகப்பெரிய டிரெண்ட் செட்டர். அமீர் பெயரைச் சொல்லாமல் இந்தப் பேட்டி முழுமையடைஞ்சிருக்காது. பாலா, அமீர் ரெண்டு பேருடைய படங்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். `வடசென்னை’ படத்துல ராஜன் கேரக்டர்ல அமீர் சூப்பரா நடிச்சிருந்தார். எனக்கு அமீருடைய முகம் பரிச்சயம் இல்லை. இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே பார்த்திருக்கோமேன்னு தோணிக்கிட்டே இருந்தது. அப்புறம் பார்த்தா, நம்ம அமீர். கலக்கிட்டார். அவர் இயக்கும் அடுத்த படத்துக்காக வெயிட்டிங்!’’
கோலிவுட்டில் உங்களுக்குப் பிடித்த, உங்களைக் கவர்ந்த நடிகர் யார்?
``சூப்பர் ஸ்டார்தான். ரஜினி சாரை எல்லோரும் மாஸ் கமர்ஷியல் ஹீரோவாதான் பார்ப்பாங்க. ஆனா, அவர் சிறந்த பர்ஃபாமர். அதே மாதிரிதான் சிரஞ்சீவி சாரும். ரஜினி சார் படங்கள் ஆந்திராவுல ரிலீஸாகும்போது, உடனே பார்த்திடுவேன். அவர் மாதிரி ஹேர் ஸ்டைல் வெச்சுக்கிட்டு, ஸ்டைல் பண்ணிக்கிட்டு இருப்பேன். ‘ரோபோ’ ஷூட்டிங்குக்கு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போ அவர் ‘ஆர்யா’ படத்தைப் பார்த்திருந்தார். ரொம்ப ஸ்டைலா இருக்கு படம்னு சொல்லிப் பாராட்டினார். அவரைப் பார்த்ததும் நான் கைகட்டி நின்னுக்கிட்டிருந்தேன். அவர் ரெண்டு மூணு முறை உட்காரச் சொல்லியும் நான் உட்காரலை. ‘அட உட்காருங்க சார்’னு அவரே பக்கத்துல இருந்த சேரை எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னார். ரஜினி சார் எனக்கு சேர் எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னது என் வாழ்க்கையில் கோல்டன் மொமன்ட்.’’