சுய நினைவிழந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் தன் தந்தையை `தலைக்கூத்தல்' முறையில் கருணைக்கொலை செய்வதற்கு எதிராகச் சொந்தங்களோடு மல்லுக்கு நிற்கும் மகனின் பாசப்போராட்டமே இந்த `தலைக்கூத்தல்'!
தெக்கத்திப் பக்கம் அதிலும் குறிப்பாக விருதுநகர் மாவட்ட கிராமங்களில் வயதானவர்களை கருணைக்கொலை செய்யும் 'தலைக்கூத்தல்' என்ற நடைமுறையை மையமாக வைத்து ஏற்கனவே 'பாரம்', 'கே.டி (எ) கருப்புதுரை' போன்ற படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து சற்றே மாறுபட்டு தந்தைக்கும் மகனுக்குமான பாசப்போராட்டமாக, யதார்த்தத்தோடு கொஞ்சம் மேஜிக்கல் ரியலிச பாணியைக் கலந்து கதை சொல்லியிருக்கிறார் 'லென்ஸ்' இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். படம் பேசவந்ததை உரக்கப் பேசியதா, இந்த 'தலைக்கூத்தல்' நம்மைச் சலனப்படுத்தியதா?

மேஸ்திரியான பெரியவர் முத்து, தவறி விழுந்து சுயநினைவிழுந்து படுத்த படுக்கையாகிவிடுகிறார். அவரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும் மகன் பழனி தன் தந்தை பார்த்த வேலையை விட்டுவிட்டு அவர் குணமாகும் வரை அருகிலிருந்து பார்த்துக் கொள்ளவேண்டி இரவு நேர ஏ.டி.எம் வாட்ச்மேன் வேலைக்குச் செல்கிறார். பகலெல்லாம் வீட்டில் தந்தைக்குப் பணிவிடை செய்வதும், இரவில் ஏ.டி.எம் வாட்ச்மேனாகத் தூக்கமிழந்து நிற்பதுமாய் தன் தந்தை, மனைவி, மகளுக்காகக் கஷ்டப்படுகிறார்.
தந்தையின் மருத்துவச் செலவுக்காகக் கடன்மேல் கடன் வாங்க மனைவியுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்களது தாம்பத்திய வாழ்க்கைவரை விரிசல்கள் எழ, மாமனார், மச்சான், ஊர்ப்பெருசுகள் என எல்லோரும் உயிருக்குப் போராடும் அவர் தந்தை முத்துவை 'தலைக்கூத்தல்' முறையில் கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். ஆனால், அந்தக் கொடூர நடைமுறைக்கு எதிராக நிற்கிறார் பழனி. மருத்துவர்களே கைவிரித்த நிலையில் பழனியின் தந்தை எழுந்து நடந்தாரா, தலைக்கூத்தல் முறையிலிருந்து தப்பித்தாரா, கடன்மேல் கடன்வாங்கிய பழனி தன் வைராக்கியத்தில் ஜெயித்தாரா... என அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மனதை உலுக்கும் அந்த க்ளைமாக்ஸ்!

மகன் பழனியாக சமுத்திரக்கனி தன் கரியரின் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் அந்த வறுமை பீடித்த குடும்பத்தின் தலைவனாக ஆஜானுபாகுவான தோற்றத்தில் அவரைப் பார்க்கும்போது துருத்திக்கொண்டு தெரிந்தாலும், தன் பாத்திரத்தின் கனமறிந்து நடிப்பால் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறார். ஒரு கட்டத்தில் நமக்கு சமுத்திரக்கனியே தெரியாமல் திரை முழுக்க பழனியே வியாபித்திருப்பது சிறப்பு. வெல்டன் சமுத்திரக்கனி!

மனைவியாக வரும் வசுந்தரா, கணவன் மீது வரும் கோபத்தைப் பார்வையாலேயே கடத்துகிறார். ஒரு டிபிக்கல் தெக்கத்திப்பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். மாமனார் மீது வருத்தமில்லை. ஆனால், குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கத் தீப்பெட்டி வேலைக்குப் போகும் வசுந்தராவுக்கு அங்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஒருபுறம், வறுமை தரும் அழுத்தம் மறுபுறம் என எல்லாம் சேர்ந்து கோபமாக வெளிப்படுகிறது என்பதை இயல்பான தன் நடிப்பால் நமக்கு உணர்த்திவிடுகிறார். அதேபோல ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி பாத்திரங்களும் இயல்பாக எழுதப்பட்டு கதைக்கு வலு சேர்க்கின்றன.
இளம் வயது முத்துவாக, நினைவுகளில் வந்து போகும் கதிர், குறும்பு கொப்பளிக்கும் வாலிபனாக ஈர்க்கிறார். அவருக்கும் வங்காள அழகி கத்தா நந்திக்கும் இடையிலான காதல் எபிசோடுகள் கவிதையாக இருக்கின்றன. ஆனால், சற்றே நீளமான காதல் காட்சிகளால் ஒருவித அயற்சி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காதல் எபிசோடுகளைத் தவிர கதிருக்கும் பெரிய பணியில்லை. அதேபோல ஆங்காங்கே வரும் குறியீடுகள், சர்ரியலிஸ - மேஜிக்கல் ரியலிஸ கதை சொல்லல் உள்ளிட்டவை அழகாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தமான ஒரு கதையில் அவற்றின் தேவை குறித்தும் ஒரு கேள்வி எழவே செய்கிறது.
படத்தில் வசனமே இல்லாமல் ஒரு உடலாய் மட்டும் ஃப்ரேம்களை நிறைத்து நம்மைக் கலங்க வைக்கிறார் முத்து என்ற பெரியவர் பாத்திரத்தில் நடித்த கலைச்செல்வன். கதிரின் முகச்சாயலில் பொருத்தமான சாய்ஸ். சமுத்திரக்கனியின் மாமனார், மச்சான், கந்துவட்டிக்காரர், சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் எனப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கிராமத்து மனிதர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

படத்தில் வரும் சமுத்திரக்கனியின் வீடும்கூட கதை சொல்லலில் ஒரு பங்கு வகித்திருப்பது நேர்த்தி. 'பக்கத்துல வராதே உன்மேல பீ நாத்தம் அடிக்குது!', 'உசிரு போகுறப்போ போகட்டும்... நாம எடுக்கக்கூடாது. அது கொலை!', 'இந்த உலகத்தில் எந்த உயிரும் யாராலும் எடுக்கப்படக்கூடாது. ஒவ்வொரு உயிரும் பூமிக்கு வந்த காரணம் இருக்கு. அதுவா வாழ்ந்து செத்துப்போகும்வரை யாரும் அதைத் தொந்தரவு பண்ணக்கூடாது. அப்படி எடுத்தா உலகத்துல பொத்தல் விழுந்து உலகமே அழிஞ்சிரும்!', 'தாத்தா எப்படிச் செத்தாருன்னு எனக்குத் தெரியும்ப்பா!' என யதார்த்தமான வசனங்கள் முகத்தில் அறைகின்றன.
கண்ணன் நாராயணின் இசை படத்துக்கு ஜீவனாய் இருக்கிறது. பின்னணியில் கதையோடு நம்மை ஒன்றச் செய்வதில் இசையின் பங்கும் சவுண்ட் டிஸைனிங்கின் பங்கும் அதிகம். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். 'யார் அறிந்ததோ' என்ற பிரதீப் குமாரின் பாடல் படம் முடிந்ததும் நம் மனதைக் கரைக்கிறது. கிராமத்தில் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைக் கொடுக்கிறது மார்டின் டான் ராஜின் சிறப்பான ஒளிப்பதிவு.
அதேபோல நிகழ்காலக்கதை, பெரியவரின் நினைவுகளில் வரும் காதல் எபிசோடு, சமுத்திரக்கனியின் நினைவுகள் என அனைத்தும் மாறிமாறி வரும் காட்சிகளும், மேஜிக்கல் ரியலிஸக் காட்சிகளும், மாற்று சினிமா பாணியிலான மெதுவான கதை சொல்லலும் சில இடங்களில் நம்மைச் சோதிக்கவே செய்கின்றன.

ஆனாலும், வயதானவர்களைக் கொலை செய்யும் இந்தக் கொடூரமான நடைமுறைக்கு எதிராகவும், தொலைந்து போன நம் பால்யத்தின் நினைவுகளுக்கு அழிவே இல்லை என்பதைக் காட்சிப்படுத்திய விதத்திலும், உறவுகளின் உன்னதத்தை மனதுக்கு நெருக்கமாகக் காட்டும் சினிமா அனுபவத்துக்காகவும் இந்த `தலைக்கூத்தலில்' நாமும் மூச்சடக்கி நனைந்துவிட்டு வரலாம்.