Published:Updated:

ஊரடங்கு மட்டும் முடியட்டும்...

சாரு நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
News
சாரு நிவேதிதா

எழுத்துப்பணிக்கு அதிக நேரம்...

சுறுசுறு துறுதுறுவென்று ஓடிக்கொண்டிருந்த நம்மையெல்லாம், ‘ஊருவிட்டு ஊரு வந்தே அம்புட்டுதான்’ என்று அதட்டி வைத்திருக்கிறது கொரோனாவும் லாக்டெளனும்... எல்லாம் நார்மல் மோடுக்குத் திரும்பிய பிறகு நீங்க செய்ய விரும்புற முதல் விஷயம் என்ன என்றோம் சில செலிபிரிட்டிகளிடம்.
நித்யஸ்ரீ மகாதேவன்
நித்யஸ்ரீ மகாதேவன்

நித்யஸ்ரீ மகாதேவன் (பாடகி)

``கச்சேரி செய்யாமல் நான் இத்தனை நாள்கள் இருந்ததே இல்லை. நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும், மகள்கள் பிறந்த ஒரு மாதத்திலேயே கச்சேரி செய்திருக்கிறேன். தற்போது ஃபேஸ்புக் லைவ், இன்ஸ்டா லைவ் என்று டிஜிட்டலில் கச்சேரிகள் செய்தாலும், முழுப் பக்கவாத்தியங்களோடு, ரசிகர்கள் முன்னால், மேடையில் பாடுவதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதையெல்லாம் இந்த லாக்டௌன் நாள்களில் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். லாக் டௌன் நாள்கள் முடிந்தாலும் கச்சேரி செய்ய வேண்டும் என்று நினைப்ப தெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமில்லை. கோயிலுக்குச் சென்று ஒரு பிரார்த்தனை, வீட்டிலேயே அடைந்து கிடப்பதிலிருந்து வெளியே சென்று காலார ஒரு நடைப்பயிற்சி...இவற்றை யெல்லாம் செய்ய மனது விரும்புகிறது.’’

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா (எழுத்தாளர்)

“நான் எழுத்தாளன் என்பதால், வீடுதான் ஆபீஸ். அதனால் லாக்டெளனால் என் இயல்பான வாழ்வில் பெரிய மாற்றமில்லை. காலையில் நான்கு மணிநேரமும் மதியத்திற்குப் பிறகு நான்கு மணிநேரமும் எழுதுவது என் வழக்கம். வாரம் ஒருமுறை வெளியில் சென்று நண்பர்களைச் சந்திப்பேன். அது இப்போது முடியவில்லை. மேலும், வீட்டுக்கு வேலை செய்பவர்கள் வர முடியாத சூழலால், வீட்டு வேலைகளை நானும் மனைவியும் பகிர்ந்துகொண்டோம். அதனால், நான் எழுதுகிற நேரம் கொஞ்சம் குறைந்துவிட்டது. லாக்டெளன் முழுமையாக இப்போதைக்கு முடியாது, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சூழல் மாறும் என்றாலும், வீட்டு வேலை செய்பவர்கள் வந்துவிட்டால் ஏற்கெனவே திட்டமிட்டிருக்கும் எழுத்துப்பணிக்கு அதிக நேரம் செலவளிப்பேன்.”

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா (பட்டிமன்றப் பேச்சாளர்)

“லாக்டெளன் முடிந்ததுமே என் மாணவிகளைத்தான் உடனே சந்திக்க வேண்டும். அதிலும் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவிகளை... உயர்படிப்பு, வெளிநாட்டுக்குச் செல்வது, வேலை, திருமணம் என்று எல்லோருக்குமே ஏராளமான கனவுகள் இருந்தன. லாக் டெளன் காரணமாக இப்போது எல்லாமே தள்ளிப்போய்விட்டதால் அந்தக் குழந்தைகள் எல்லாருமே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து ஆறுதலும் தன்னம்பிக்கையும் தர வேண்டும். அடுத்து, எங்கள் குடும்பத்தின் முதிய உயிர் எங்கள் அம்மம்மாவின் தங்கை படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரைப் பார்த்துப் பணிவிடைகள் செய்ய வேண்டும்.”

பவா செல்லத்துரை
பவா செல்லத்துரை

பவா செல்லத்துரை (எழுத்தாளர்)

“லாக்டெளன் முடிந்ததும் ஐந்து மனிதர்களைச் சந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன். ஒருவர், அன்புராஜ். வீரப்பனோடு இருந்தவர். இவர் வாழ்க்கையை மையமாக வைத்து நாவல் ஒன்றை எழுதிவருகிறேன். மீதமுள்ள நால்வரும் என் வாசகர்கள். என் கதையைக் கேட்டபின்பே தினமும் உறங்கச் செல்வதாகச் சொன்ன சென்னை சில்க்ஸ் சந்திரன், கோத்தகிரியில் மூடவிருந்த அரசுப் பள்ளியை மீண்டும் இயங்க வைத்த ஆசிரியர் தருமராஜ், தன் கணவருக்கு உடல்நலமில்லாதிருந்த காலத்தில் என் கதைகளே தங்களை இயங்க வைத்ததாகச் சொன்ன திருச்சியைச் சேர்ந்த குணசீலி, தம் வாழ்வில் பல மாற்றங்களை என் கதைகள் கொண்டுவந்தது என்று மனநெருக்கத்துடன் பேசும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த வாசகி ஒருவர். இந்த ஐந்து பேரையும்தான் லாக்டெளன் முடிந்து சந்திக்கவிருக்கிறேன்.”

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி

சி.ஆர்.சரஸ்வதி (அ.ம.மு.க கொள்கைபரப்புச் செயலாளர்)

“கொரோனா நம்மை 40 நாள்களுக்கு மேல் வீட்டில் முடக்கிவிட்டதே என்ற கவலை இருந்தாலும், லாக்டௌன் முடிந்துவிட்டால், இவ்வளவு அமைதியான, அழகான, சுத்தமான சென்னையை மிஸ் பண்ணுவோம் என்ற ஏக்கமும் இருக்கிறது. இயக்குநர்கள் ரமேஷ் கண்ணா, இயக்குநர் எழில், ஒளிப்பதிவாளர் நட்டி, இயக்குநரும் நடிகருமான ரவிமரியா, இயக்குநர் கௌரவ் உள்ளிட்ட நண்பர்கள் அடிக்கடி சந்திப்போம். சர்வதேச சென்னைத் திரைப்பட விழா குழுவில் நாங்கள் உறுப்பினர்களாக இருப்பதால், உலகப் படங்கள் நிறைய பார்ப்போம். யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து, உலகப் படங்கள் குறித்து விவாதிப்போம். லாக்டௌன் முடிந்துவிட்டால் அவர்களையெல்லாம் சந்திக்க வேண்டுமென்று ஆசை.”

கீர்த்தி சாந்தனு
கீர்த்தி சாந்தனு

கீர்த்தி சாந்தனு (நிகழ்ச்சித் தொகுப்பாளர்)

‘`லாக்டௌன் முடிஞ்சதும், முதல் வேலையா தி. நகர் நார்த் போக் ரோட்டிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவேன். என் சின்ன வயசுல, ஒவ்வொரு ஸ்கூல் எக்ஸாமுக்கும் அங்க போயி சாமி கும்பிட்டுப் போறது என் வழக்கம். அதேபோல, என் பிறந்த நாள் மற்றும் நியூ இயர்க்கு முதல் நாள் இரவு நான் வழக்கமா போற கோயிலும் அதுதான். இப்போ உங்ககிட்ட சொல்லும்போதே, ‘பாத்து எவ்ளோ நாளாச்சு’ன்னு பிள்ளையாரை மனசு தேடுது. அடுத்ததா, எங்க அம்மா வீட்டுக்குப் போவேன். போன்ல, வீடியோ கால்னு தினமும் பேசிக்கிட்டாலும், நேர்ல பார்க்காத ஏக்கம் இருக்கத்தான் செய்யுது. அதனால, லாக்டௌன் கதவு திறந்ததும் கீர்த்தி ஜூட்!”

விஷ்ணு பிரசாத்
விஷ்ணு பிரசாத்

விஷ்ணு பிரசாத், (காங்கிரஸ் எம்.பி., ஆரணித் தொகுதி)

“ஊரடங்கு முடிந்தவுடன் என் தந்தையை (காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி) சந்திக்க வேண்டும். அப்பா 75 வயதுக்காரர் என்பதால், அவர் அருகே போவதைத் தவிர்க்கிறேன். வீட்டின் கேட் அருகே அரை மணி நேரம் நாற்காலியில் அமர்ந்துவிட்டு, தூரத்திலிருந்தே அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன். கொரோனா அச்சுறுத்தல் நீங்கிய பிறகு, அப்பாவைச் சந்தித்து வழக்கம்போலப் பேச வேண்டும் என்று ஆசை. அதேபோல, தினமும் மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இப்போது வீட்டுக்குள் ட்ரெட்மில்லில்தான் நடைப்பயிற்சி செய்கிறேன். லாக்டௌன் முடிந்த பிறகு மீண்டும் நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி செல்ல வேண்டும்.”