
The difference between technology and slavery is that slaves are fully aware that they are not free.
~ Nassim Nicholas Taleb வெவ்வேறு கதைகள், ஒரு மையப்புள்ளி. இப்படி வெளியாகும் குறும்படங்களை ஆந்தாலஜி எனலாம். அந்த வரிசையில் தமிழில் டெக்னாலஜி குற்றங்களை வைத்து வெளியாகியிருக்கிறது `ஃபிங்கர்டிப்’ Fingertip.
ஆசை, ஆத்திரம் , துரோகம், காமம், பழிவாங்குதல் என கிளைக்கதைகள். காயத்ரி, அக்ஷரா ஹாசன், சுனைனா, மதுசூதனன், அஷ்வின் காக்காமனு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு டெக்னோ குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் அதில் ஆதாயம் அடைகிறார்கள். சிலர் இருப்பதை இழக்கிறார்கள். சிலர் சிலவற்றை இழந்து சிலவற்றைப் பெறுகிறார்கள். ஒரு கதையும் இன்னொரு கதையும் சிலந்தி வலைபோல் இணைந்து பின்னப்படுகின்றன. இறுதியில் யார் எந்தக் காயத்தோடு வாழப்பழகுகிறார்கள் எனச் சொல்கிறது ‘ஃபிங்கர்டிப்’. சின்னச் சின்ன தவறுகளின் விலை எப்போதும் பெரியது என்னும் நீதியினை மீண்டும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

உறுதிப்படுத்தாமல் நாம் வாட்ஸப்பில் பகிரும் ஒரு செய்திக்கு எப்போதும் உயிர் இருக்கும் என்பதைச் சொல்லி முகத்தில் அறைகிறது மதுசூதனனின் கதை. சோஷியல் மீடியாவில் தங்களை இன்ஃப்ளூயன்சர்களாக காட்டிக்கொள்பவர்களின் மறுபக்கத்தை பேசுகிறது சுனைனாவின் கதை. மொபைலை லாக் செய்யாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லி சிறையில் தள்ளுகிறது அக்ஷரா ஹாசனின் துரோகக் கதை. முன்னரே சற்று யூகிக்க முடிந்தாலும், காயத்ரியின் கள்ளச்சிரிப்புக்குப் பின் வரும் அந்த ட்விஸ்ட் ஷாக்! பெரும்பாலும் நாம் பெரிய திரையில் பார்த்த முகங்களே தொடர் முழுக்க வருவதால், வெப் சீரிஸ் என்பதைக் கடந்து ஒரு திரைப்பட உணர்வைக் கொடுக்கிறது.
மொபைலை அன்லாக் மோடில் வைத்துவிட்டுச் செல்வது, பொய்யாகச் செய்தி பரப்புவது, ஹேக்கிங், அதீத சமூகவலைதள மோகம் என நாம் தினமும் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதைகளின் களம்.

அரசுக்கு எதிராகப் பேசும் சினிமா பிரபலம், #MeToo, வாட்ஸ்-அப் ஃபார்வர்டு, சோஷியல் மீடியா பதிவுக்குக் கைது செய்வது எனச் சமகாலப் பிரச்னைகளில் டெக்னோவை இணைத்துத் திரைக்கதை அமைத்த நீலன் K சேகரும், ஷிவாகரும் கவனம் ஈர்க்கிறார்கள். புதுவிதமான ஆப் டிசைன்கள், அதற்கேற்றவாறு கதாபாத்திரங்களின் ஆடைகள், கலர் டோன் எனப் பலவற்றை செட் செய்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் என இருவரின் ஒளிப்பதிவும் கச்சிதம்.
ஆங்கிலத்தில் வெளியான பிளாக் மிரர் போல் நம்பமுடியாத டெக்னோ குற்றங்களாக இல்லாமல், நடைமுறையில் சாத்தியமான குற்றங்களைப் பேசுகிறது ஃபிங்கர்டிப். ஆனால், முன்னரே யூகிக்கக்கூடிய சில காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு கட்டத்துக்கு மேல் நம் ஃபிங்கர்டிப்பைப் பயன்படுத்த வைக்கிறது. அதேபோல், சில லாஜிக் மீறல்கள் எல்லாம் ‘டெக்னால ஜின்னாலும் அளவு வேண்டாமா’ ரீதியில் இருக்கிறது.

சமூக வலைதளங்களின் மிகப்பெரிய பிரச்னை, அவை நமக்கு எண்ணற்ற வாய்ப்பு களையும் வசதிகளையும் வழங்குகின்றன என்பதுதான். ஒரு கட்டத்தில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைவிட, எதைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்னும் குழப்பம் நம்மிடையே அதிகரித்துவிடுகிறது. இந்த டிஜிட்டல் உலகில் எவ்வளவு பாதுகாப்பாய் இருந்தாலும், ஒரு ‘க்ளிக்’ நம் வாழ்வைத் தலைகீழாக்கிவிடும் என்பதுதான் கதைகளின் ஒன்லைன். அதற்காக, ஒரு இடத்தில்கூடவா நம்பிக்கை அளிக்கும் பாசிட்டிவ் விஷயங்களைப் பேசக்கூடாது? வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்கிற அளவிற்கு இன்னும் டெக்னாலஜி வளரவில்லை என்பதே நிதர்சனம்.
நல்ல டெக்னிக்கல் டீம், பரிச்சயமான முகங்கள் , நடப்பு விஷயங்கள் போன்றவற்றால் டோன்ட் மிஸ் லிஸ்ட்டில் இடம்பெறுகிறது இந்த ஃபிங்கர்டிப்.