
The Lord of the Rings: The Rings of Power
பிரமாண்டங்களின் முன்கதைகளைச் சொல்லும் காலமிது. ஒரு பக்கம் ஹாட்ஸ்டாரில் மெகா ஹிட் அடித்த ‘கேம் ஆஃப் த்ரோன்’ஸின் முன்கதையான ‘ஹவுஸ் ஆஃப் டிராகன்’ வெளியாகிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அமேசான் ப்ரைமில் வரும் 2ம் தேதியிலிருந்து வெளியாகவிருக்கிறது டோல்கீனின் ‘The Lord of the Rings: The Rings of Power’. கேம் ஆஃப் த்ரோன்ஸ் இக்கால பிரமாண்டம் என்றால், ‘லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்’ இந்த நூற்றாண்டின் பிரமாண்டம். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் பாகமே அதன் பட்ஜெட்டைவிட பத்து மடங்கு வசூலை அள்ளியது. அடுத்தடுத்த பாகங்களும், ஹாபிட் பற்றிய தனிக்கதையும் மேலும் மேலும் டோல்கீனின் எஸ்டேட்டை செல்வத்தால் நிரப்பின. இப்படியான சூழலில் தான் தொலைக்காட்சித் தொடருக்கான வியாபார பேச்சுவார்த்தைகள் 2017-ல் ஆரம்பித்தன.

‘உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக’ என அமேசான் ப்ரைம் நிச்சயம் மார்தட்டிச் சொல்ல முடியும். அப்படியானதொரு விலையை இந்தத் தொடருக்காகக் கொடுத்திருக்கிறது அமேசான். எல்லாவிதமான ஓ.டி.டி பேரத்துக்கும், தன் அணியை அனுப்புவார் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ். அவரே மிகப்பெரிய லார்டு ஆஃப் தி ரிங்ஸ் விசிறி என்பதால், பல விஷயங்களை நேரடியாகக் கவனித்தார். ஓ.டி.டி தளத்தில் தற்போது கொடிகட்டிப் பறக்கும் எல்லா நிறுவனங்களும் தொடரைத் தயாரிக்க முன்வந்தன. எப்படியும் வாங்கிவிடும் முனைப்பில் இருந்தார் பெசோஸ். அதனாலேயே யார் எழுதுவார்கள், யார் நடிக்கப் போகிறார்கள் என எதையும் முடிவு செய்யும் முன்பே 2,000 கோடி ரூபாய்க்கு டீல் பேசி தலையைத் தடவிக்கொண்டார். அதன் பின்னர்தான் கதைக்கான ஆட்களை எடுத்துப் போட்டார்கள். தொடருக்கென அமேசான் ப்ரைம் தோராயமாக ஒதுக்கி வைத்திருப்பது மட்டும் 8,000 கோடி ரூபாய். பொதுவாக ஒரு சீசனின் வரவேற்பைப் பொருத்தே அடுத்தடுத்த சீசன்களுக்கென ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால், பல்வேறு சீசன்கள், ஸ்பின் ஆஃப்கள் என பலவற்றுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது அமேசான்.

இந்த வாரம் முதல் வெளியாகவிருக்கும் தொடர், லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ் காலத்துக்கு 1,000 ஆண்டுகள் முன்னர் நடக்கும் கதை. அதாவது எல்ராண்டு, இசில்டூர் என சில கதாபாத்திரங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பல கதாபாத்திரங்களுக்கு எழுத்து வடிவமே இந்தத் தொடரின் மூலம் கிடைக்கவிருக்கிறது. ஹாபிட் கதாபாத்திரங்களைப் போலவே, இந்தத் தொடரின் மூலம் வைரல் ஆகப்போகும் புதிய கதாபாத்திரங்கள் ஹர்ஃபூட்கள். இவர்களும் ஹாபிட்களைப் போலவே குள்ள மனிதர்கள், கிட்டத்தட்ட ஹாபிட்களின் முன்னோடிகள்.
இந்தத் தொடருக்கான கதையை எழுதிய ஜே டி பெய்னிடம் பேசினேன். ‘‘பீட்டர் ஜாக்சனின் படங்கள் மூலம்தான் எனக்கு டோல்கீனின் உலகம் அறிமுகமானது. அதன் பின்னர்தான் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். அதே சமயம், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்பதால், நிறைய விஷயங்களை புதிதாக எழுத வேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் டோல்கீன் குடும்பத்திடம் அனுமதி பெற்றோம். நாவல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்ததா என எனக்குத் தெரியாது. ஆனால், நாவல், படம் என டோல்கீன் உலகை இதற்கு முன்னர் அறியாதவர்கள் கூட இந்தத் தொடரை ரசிக்க முடியும். டோல்கீனின் புத்தகம் எங்களுக்கு பைபிள். எங்கெல்லாம் எங்களுக்குப் பிரச்னை வந்ததோ, அங்கெல்லாம் உதவியது டோல்கீனின் எழுத்துகள்தான். உதாரணமாக, second age குறித்து டோல்கீன் பெரிதாக எழுதவில்லை. ஆனால், நிறைய பாத்திரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் அந்தப் பாத்திரங்களுக்குத் தேவையான நடிகர்களைத் தேடினோம். 22 வைக்கோல் போர்களிலிருந்து 22 ஊசிகளைத் தேடியிருக்கிறோம்’’ என்றார்.

திரையரங்குகளில் பெரிய பட்ஜெட் படங்கள் இருக்கைகளை நிரப்ப போராடிக்கொண்டிருக்க, இரண்டு பிரமாண்டங்கள் ஓ.டி.டி-க்குள் ஹிட் அடிக்கப்போகின்றன. அதில் இருக்கப் போகிற இன்னொரு சுவாரஸ்யம், எல்ராண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராபர்ட் அரமயோ தான். இவர் தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் சிறு வயது நெட் ஸ்டார்க்.
மும்பையில் நடந்த ப்ரீமியருக்காக இந்தத் தொடரின் நாயகர்கள் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்திருந்தனர். அந்த மிகப்பெரிய கூட்டத்தில் நமக்கு பரிச்சயமான இன்னுமொரு நபர் லாய்டு ஓவன்ஸ். அமீர்கானின் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தா’னில் நடித்த லாய்டு தான் தொடரில் எலெண்டிலாக அசத்தயிருக்கிறார்.


ஐமாக்ஸ் போன்றதொரு பெரிய திரையில் பார்த்து லயிக்க வேண்டிய தொடரை தொலைக்காட்சி அல்லது மொபைலில் பார்க்க இருக்கிறோம் என்பது மட்டுமே கொஞ்சம் வருத்தமான விஷயம். என்ன செய்ய, நிகழ்காலம் ஓ.டி.டி என்பதைத்தான் இந்த பெரிய பட்ஜெட் தொடர்கள் உணர்த்த விரும்புகின்றனவோ!