தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பெண் இனி புதிய சக்தி!

 கேர்ள்ஸ் இன் த சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கேர்ள்ஸ் இன் த சிட்டி

இணைய திரை

பெண்களுக்கும் பொழுது போக்குக்கும் தொடர்பே இல்லாத காலம் தொடங்கி, பெண்களைக் கொண்டு பொழுதுபோக்குகளை உருவாக்க ஆரம்பித்த காலம் வரை பெண்களின் உணர்வுகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளனவா என்றால், `இல்லை' என்பதே பதில். பெண்களின் வலிகளை, உளவியலைப் பேசிய படங்கள் வர்த்தகரீதியாகப் பெரிய அளவில் கைகொடுக்காது என்கிற பார்வையும் பரவலாக உண்டு.

இது இருக்கட்டும்... இணைய உலகில் கொட்டிக்கிடக்கிறது புதுமை விரும்பிகளுக்கான இன்னோர் உலகம். அங்கே பெண்கள் வேறொரு பிம்பமாக காட்டப்படுகிறார்கள். `பெண்களுக்கான இந்த இணையத் தொடர்களில் பெண்களுக்கு அபாரமான சக்தி இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமல்ல; தான் அடைய வேண்டிய இலக்கை அடைய இன்றைய பெண்களிடம் சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியின் மூலமே உலகைப் பார்க்கிறார்கள்' என்கிற புதிய மதிப்பீட்டைத் தருகின்றன இணையத் தொடர்களின் புதிய கதாபாத்திரங்கள்.

டெல்லி க்ரைம்

டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் கொடுமையை மையமாகவைத்து எடுக்கப்பட்ட தொடர் டெல்லி க்ரைம். நிர்பயா வழக்கை தெற்கு டெல்லியின் டி.எஸ்.பி-யாக இருந்த சாயா ஷர்மா என்ற பெண்மணி விசாரித்தார். அவர் பெயர் அப்போது பெரிய அளவில் பேசப்படவே இல்லை. ஆனால், சாயா ஷர்மாவின் பணி, அவருக்கு இருந்த அரசு ரீதியான, அரசியல் ரீதியான அழுத்தங்கள், பொதுமக்களின் கடுங்கோபம்... இவை அனைத்தையும் சமாளித்து குற்றவாளிகளை அவரின் குழு கண்டுபிடித்த விதம் என அனைத்தையும் தெளிவாக விவரிக்கிறது இந்த சீரிஸ். கூடவே ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை ஒரு பெண்ணாக, ஒரு பெண்குழந்தையின் தாயாக அந்தக் கதாபாத்திரம் அணுகுகிறது. உண்மைக் சம்பவத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட தொடர், நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்ட வழக்கு என்பதால் கூடுதல் கவனத்தோடு கையாண்டு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

 டெல்லி க்ரைம்
டெல்லி க்ரைம்

தொடரின் நாயகி ஷெபாலி ஷா, இதில் நடிக்க ஒப்புக்கொண்டவுடன் சாயா ஷர்மாவைச் சந்தித்திருக்கிறார். அவரிடம் பல்வேறு விவரங்களைக் கேட்டுப் பெற்ற பின்பே முன் தயாரிப்புகளுடன் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். அந்த உழைப்பு படமாக்கப்பட்டபோது அருமையாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல இளம் ஐ.பி.எஸ் அதிகாரியாக வரும் பெண், மருத்துவமனையில் நிர்பயாவின் பெற்றோரை கவனித்துக்கொள்ளும்விதம் பார்ப்பவர்களை நெகிழச்செய்கிறது. காவல்துறை அந்தக் குற்றவாளிகளைப் பிடிப்பதிலிருந்த சவால்கள் மிகத் தெளிவாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு காவல்துறை பிடித்த 18 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுவனைக் கைது செய்யும்போது, அவனை சிறார் சட்டத்தின் அடிப்படையில் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பவே முற்படுகிறார் சட்டத்தின் பக்கம் நின்ற அந்தப் பெண் காவல்துறை அதிகாரி... இப்படி, அந்தத் தொடரில் நடித்துள்ள பெண்கள் அனைவரின் கதாபாத்திரங்களும் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் சகல துறையிலும் ெபண்கள் தினமும் எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகளை மிக நேர்த்தியாக `டெல்லி க்ரைம்' விவரிக்கிறது.

ஃபோர் மோர் ஷாட்ஸ், ப்ளீஸ்

து வடஇந்திய கலாசாரத்தில் வளர்ந்த நான்கு பெண்களின் கதை. வழக்கறிஞர், பார் டான்சர், சாஃப்ட்வேர் இன்ஜினீயர், வேலையின்றி திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண் என நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள். இவர்கள் சொந்த வாழ்விலும் பணியிலும் சந்திக்கும் சவால்கள், கொண்டாட்டங்கள், விவாகரத்து பெற்று தனியொரு பெண்மணியாக குழந்தை வளர்க்கும் நிலை என அனைத்தையும் விவரிக்கிறது இந்த சீரிஸ்.

 ஃபோர் மோர் ஷாட்ஸ், ப்ளீஸ்
ஃபோர் மோர் ஷாட்ஸ், ப்ளீஸ்

இந்த நான்கு பெண்களுக்கும் இடையே எந்தவித மதிப்பீடுகளும் இல்லை; எதிர்பார்ப்புகளும் இல்லை. நட்பு மட்டுமே ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவுகிறது.

இந்தத் தொடரை லண்டன் ஃபிலிம் ஸ்கூலில் பட்டம் பெற்று, ஏற்கெனவே மூன்று திரைப்படங்களை இயக்கிய அனு மேனன் உருவாக்கியிருக்கிறார். பெண்களுக்குரிய வழக்கமான எல்லைக்கோடுகளைக் கடந்து அவர்கள் யாராக இருக்க விரும்புகிறார்கள் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

லெய்லா

த்திரிகையாளரான பிரயாக் அக்பர் எழுதி, 2017-ல் வெளியான லெய்லா நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர்தான் லெய்லா. மூன்று இயக்குநர்களில் ஒருவராக தீபா மேத்தா பங்காற்றியிருக்கிறார். இந்தியா என்ற நாடு இல்லாமல்போய் `ஆர்யவர்த்தா' என்ற புதிய தேசம் 2047-ல் உருவாகிற பின்னணியில் ஒரு கதை. நடப்பு அரசியலை இவ்வளவு வெளிப் படையாக விமர்சிக்க முடியுமா என்னும் அளவுக்குத் தொடர் முழுவதும் அதிர்ச்சி அம்சங்கள் அனைத்தையும் பேசுகிறது. கார்ப்பரேட் சாமியார்கள் பெண்களை எப்படி மடைமாற்றுகிறார்கள் என்பதை ஆழமாக விவரிக்கிறது.

 லெய்லா
லெய்லா

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு நடைபெறும் குழந்தைக் கடத்தல், அது சார்ந்த சர்வதேச வர்த்தகம் குறித்தும் இந்தத் தொடர் பேசுகிறது. இங்கிருக்கும் தீண்டாமைகள் மற்றும் கலப்பு மணம் செய்பவர்களைத் தேடித்தேடி கொல்லும் காட்சிகள் சமகால ஆணவக்கொலைகளை நினைவுப்படுத்துகின்றன. இப்படி சமகால அரசியலை எதிர்காலத்தோடு ஒப்பிட்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், மகளை இழந்த தாய், அவளைத் தேடிக் கண்டுபிடிக்கும் புள்ளியில் கதையைப் பிணைத்திருக்கிறார்கள்.

தொடர் முழுவதும் ஹூமா குரேஷியின் கதாபாத்திரம் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள் என அனைத்தும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சேக்ரட் கேம்ஸ்

ந்த இணைய தொடரில் மும்பை தாதாக்கள் பற்றிய கதையில் `குக்கு' என்கிற கதாபாத்திரம் வழியே திருநங்கைகளின் வலிகள் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 சேக்ரட் கேம்ஸ்
சேக்ரட் கேம்ஸ்

இப்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இணைய தொடர்கள் இந்திய இணைய வாசிகளை வேறொரு பரிமாணத்துக்கு அழைத்துச் செல்வது மகிழ்ச்சிக்குரியது.

மணி ஹெய்ஸ்ட்

ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள இணையத் தொடர் இது. இதுவரை மூன்று சீசன்கள் வெளிவந்துள்ளன. நான்காவது சீசனுக்காக தினமும் நெட்ஃப்ளிக்ஸ் ஸ்கிரீனைப் பார்த்தபடி பூத்திருக்கிறார்கள் இந்தத் தொடரின் ரசிகர்கள்.

 சேக்ரட் கேம்ஸ்
சேக்ரட் கேம்ஸ்

டோக்யோ, நைரோபி என இரண்டு பெண்களே முழுக் கதையையும் வழிநடத்துகிறார்கள். சூப்பர்மேன், ஹாலிவுட் கதைகளைப் பார்த்து வளர்ந்தவர்களுக்குக்கூட சூப்பர் வுமனாக டோக்யோ செய்யும் சாகசங்கள் விழிகளை விரியவைக்கின்றன.

செய்வது திருட்டாக இருந்தாலும்கூட, அவர்களுக்கு எனச் சில கட்டுப்பாடுகள், விதிகள், மனிதநேயம் என அனைத்தையும் ஒருங்கேகொண்டுள்ள மானுடத்தைப் பேசுகிறது கதை. முதலாளித்துவத்தையும், பெரும் பணக்காரர்களின் நவீன கொள்ளைகளையும் அதற்கு வங்கிகளும் அரசின் கொள்கைகளும் துணைபோவதையும் தோலுரிக்கிறது. கிட்டத்தட்ட ராபின்குட் கதைதான். ஆனால், அதை எதிர்பாராத திருப்பங்களோடு கூடிய திரைக்கதையில் தொழில்நுட்பங்களின் உதவியோடு நேர்த்தியாகச் சொல்லுகிறார்கள். காவல்துறை முன்னால் புல்லட்டில் தப்பிப்பது, மெஷின் கன்கள் மூலம் எதிராளியைத் தாக்குவது என சாகசமான கதாபாத்திரத்தில் இரண்டு பெண்களுமே மின்னுகிறார்கள். இந்தத் தொடரைப் பார்த்து முடிக்கும்போது இந்த இருவர் மீதும் காதல் ஏற்படுவது உறுதி. அறிவியல் பூர்வமாகவும் உளவியல்பூர்வமாகவும் மிக நேர்த்தியாக ஒட்டுமொத்த கதையையும் தாங்கி நிற்கும் புரஃபசர் கதாபாத்திரத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.

 லேடீஸ் ரூம்
லேடீஸ் ரூம்

இவை தவிர, `லேடீஸ் ரூம்', `கேர்ள்ஸ் இன் த சிட்டி' உட்பட பெண்களை மையமாகக்கொண்டு, பெண்களின் அரசியலை, உணர்வுகளை, உரிமைகளை ஆழமாகக் கையாளக்கூடிய பல இணையத் தொடர்கள் வந்துள்ளன.

பொதுவாக, ஆண்கள் கண்ணோட்டத்தி லேயே பெண்களின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்போதுவரும் இணையத் தொடர்கள் பெண்களை வேறொரு பார்வையில் பார்க்கிறது, மதிப்பிடுகிறது.

 கேர்ள்ஸ் இன் த சிட்டி
கேர்ள்ஸ் இன் த சிட்டி

இந்தத் தொடர்களில் திரைக்கு முன்னாலும் பின்னாலும் ஏராளமான பெண்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தானோ என்னவோ, பெண்களின் உளவியல் தாக்கங்கள் இந்தத் தொடர்களின் உருவாக்கத்தில் அபாரமாக மிளிர்கின்றன.