சினிமா
Published:Updated:

சூர்யா In... விஜய், தனுஷ், விஜய் சேதுபதி... OTT ஸ்டேட்ஸ் அப்டேட் என்ன?

சூர்யா, விஜய், தனுஷ், விஜய் சேதுபதி...
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா, விஜய், தனுஷ், விஜய் சேதுபதி...

சமூக இடைவெளியுடன் ஷூட்டிங்குகளை நடத்தலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

சினிமா உலகை மூடியிருந்த கொரோனாத் திரை மெல்ல மெல்ல விலகத் தொடங்குகிறது. செப்டம்பர் முதல் சினிமாப் படப்பிடிப்புகள் ஆரம்பம், தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பு என்று சினிமா உலகம் நியூ நார்மலுக்குள் அடியெடுத்துவைக்கவிருக்கிறது. இனி எப்படியிருக்கப்போகிறது நியூ நார்மல் சினிமா?!

ஆட்டத்தை மாற்றிய ஓ.டி.டி !

கொரோனா சூழலில் நேரடி ஓ.டி.டி ரிலீஸ் எனும் புதிய அத்தியாயத்தை ‘பொன்மகள் வந்தாள்’ மூலம் தொடங்கிவைத்தவர் சூர்யா. ஆனால், மாஸ் ரசிகர்கள் கொண்ட பெரிய ஹீரோக்களின் படங்களெல்லாம் ஓ.டி.டி-க்கு வராது எனப் பேசப்பட்டு வந்தநிலையில், இப்போது அதையும் உடைத்திருக்கிறார் அவரே. 100 கோடி ரூபாய் அளவுக்கு பிசினஸ் கொண்ட ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் நேரடி ரிலீஸாக, வரும் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

சூர்யா In... விஜய், தனுஷ், விஜய் சேதுபதி... OTT ஸ்டேட்ஸ் அப்டேட் என்ன?


‘சூரரைப் போற்று’ என்ன டீல்?!

லாக்டெளன் நேரத்தில் தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படங்கள் கைகொடுக்கும் எனக் கணித்து இரண்டு படத் தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது அமேசான். எஸ்.ஆர்.பிரபு மூலம் ‘சூரரைப் போற்று’ படத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை அமேசான் தொடங்கியபோது, ‘`முதலில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளியிடுங்கள். அடுத்து பார்க்கலாம்’’ எனச் சொல்லியிருக்கிறார் சூர்யா. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை 5 கோடி ரூபாய்க்கு அமேசானுக்கு விற்ற சூர்யா, ‘சூரரைப் போற்று’ படத்தை 50 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார் என்கிறார்கள்.

ஏன் இந்த ஓ.டி.டி முடிவு?!

செப்டம்பரில் தியேட்டர்கள் திறந்தாலும் கூட்டம் வரும் என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர் களுக்கு இல்லை. மேலும், வங்கிகளில் நேரடியாகக் கடன் வாங்கிப் படங்கள் தயாரிக்கும் நிலையில், இரண்டு வருடங்களுக்கும் மேல், வட்டி கட்டுவதை யாரும் விரும்பமாட்டார்கள். அதோடு, தியேட்டர் திறந்ததும் முன்னைப்போல ரசிகர்கள் கூட்டம் அணிவகுக்கும் என்பதற்கும் நிச்சயமில்லை. சென்னையில் டாஸ்மாக்குகளுக்கே பெரிய அளவில் கூட்டம் வரவில்லை. இதே போல தியேட்டருக்குக் குடும்பத்தினருடன் படம் பார்க்க வருவதும் நிச்சயம் உடனடியாக நிகழாது என்பதே சினிமாத் துறையினரின் கணிப்பு. அதனாலேயே அடுத்த சில மாதங்களுக்குப் பெரிய படங்களும்கூட ஓ.டி.டி மூலம் வெளியிடப்பட்டு நஷ்டத்தைத் தவிர்க்கலாம் என்பதே இப்போதைய மனநிலை.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் ‘சூரரைப் போற்று’ பட்ஜெட் என்பது சூர்யாவின் சம்பளம் சேர்க்காமல் சுமார் 35-40 கோடி ரூபாய் என்கிறார்கள். சூர்யாவின் நேரடி சம்பளம் என்பது 10-15 கோடி ரூபாய். தெலுங்கு உரிமம் சேர்த்தால் 25-30 கோடி ரூபாய் அளவுக்கு வரும். இந்தக் கணக்கையே அமேசானிடம் சொல்லி 60 கோடி ரூபாய் டீல் 50 கோடியில் முடிந்திருக்கிறதாம். இதுபோக தமிழ் மற்றும் தெலுங்கு சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் சில கோடிகள் வரும். ஆனால், படம் இப்போது நேரடி ஓ.டி.டி-க்கு வந்துவிட்டதால், அதில் கணிசமான கோடிகள் குறையலாமாம். இதுதவிர இந்தி டப்பிங் ரைட்ஸும், ரீமேக் ரைட்ஸும் இருக்கின்றன. இந்தியில் ஷாகித் கபூர் இந்தப்படத்தை வாங்கி நடிக்க ஆர்வமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், ‘சூரரைப் போற்று’ படத்தைப் பொறுத்தவரை சூர்யாவுக்கு லாபமாகத்தான் இருக்கும்.

‘மாஸ்டர்’ ஓ.டி.டி-க்கு வருமா?!

“மாஸ்டர் படத்தை நாங்கள் எந்த ஓ.டி.டி நிறுவனத்துக்கும் கொடுக்கத் தயாராக இல்லை. எங்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் அவர்களால் படத்தை வாங்கமுடியுமா என்பதும் தெரியவில்லை’’ என்கிறது ‘மாஸ்டர்’ தயாரிப்பு டீம். ‘` ‘மாஸ்டர்’ படத்தின் பிசினஸ் மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல். அதோடு விஜய் படங்களுக்கு சர்வதேச மார்க்கெட் இருக்கிறது. எனவே, தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் உலகநாடுகளிலெல்லாம் தியேட்டர்கள் திறந்தால்தான் படத்தை வெளியிட முடியும். இடையில், ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ படங்களை வாங்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது அமேசானிலிருந்து எங்களையும் அணுகினார்கள். அப்போதே எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டோம். அதன்பிறகு அவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை’’ என்றார்கள்.இப்போதைக்கு 2021 பொங்கல் ரிலீஸ் என நாள் குறித்திருக்கிறார்கள் மாஸ்டருக்கு!

சூர்யா In... விஜய், தனுஷ், விஜய் சேதுபதி... OTT ஸ்டேட்ஸ் அப்டேட் என்ன?

‘மாஸ்டர்’, ‘சூரரைப் போற்று’ படங்களுக்கு அடுத்தபடியாக ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களில் முக்கியமானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்.’ முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டிருக்கும் இதன் பட்ஜெட், கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை ஓ.டி.டி-க்கு விற்க தயாரிப்பாளர் சஷிகாந்தும், ரிலையன்ஸும் ரெடி. ஆனால், படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸில் சில விஷயங்கள் எதிர்பார்த்தமாதிரியில்லை என்பதால் ரீ-வொர்க் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், இந்த வேலைகள் செப்டம்பரில் முடிந்துவிட்டால் படம் தீபாவளிக்கு நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதுதவிர நயன்தாரா நடித்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படம் ரிலீஸுக்கு ரெடி. ஆனால், அம்மன் படங்களை தியேட்டரில் பார்த்தால்தான் பிரமாண்டமாக இருக்கும் என்பதால் படத்தை ஓ.டி.டி-க்கு விற்பதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி என இருவருக்குமே உடன்பாடில்லை. விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’, ஜெயம் ரவியின் ‘பூமி’, ஆர்யாவின் ‘டெடி’, ராணா- விஷ்ணு விஷாலின் ‘காடன்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயார். ஆனால், ஓ.டி.டி தளங்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளர்களுக்கு ஒப்புதல் இல்லாததால், இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

தியேட்டர்கள் திறந்தால் என்ன நடக்கும்?

தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்க, பல்வேறு நிபந்தனைகளுடன்கூடிய அனுமதி செப்டம்பரில் கிடைத்துவிடும் என்றே தெரிகிறது. அதில் முக்கியமானது 30 - 40 சதவிகிதம்தான் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, மூன்று காட்சிகளுக்கு மட்டுமே இப்போதைக்கு அனுமதி தரப்படும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சில மாதங்களுக்கு இரவுக் காட்சி இருக்காது. பார்வையாளர்கள் உள்ளே மாஸ்க்குடன்தான் வரவேண்டும் என்பதோடு, அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படவேண்டும். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஒதுக்கப்படவேண்டும், ஒரு காட்சியின்போது பார்வையாளர்கள் உட்கார்ந்த இருக்கைகள் அடுத்த காட்சிக்கு காலியாக விடப்படவேண்டும் எனப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படவிருக்கின்றன. இவையெல்லாம் மீறி மக்கள் தியேட்டருக்கு வருவார்களா, அப்படியே வந்தாலும் தியேட்டர்களுக்கு லாபம் கிடைக்குமா என்பது யாருக்குமே விடை தெரியாத கேள்வி.

சூர்யா In... விஜய், தனுஷ், விஜய் சேதுபதி... OTT ஸ்டேட்ஸ் அப்டேட் என்ன?

படப்பிடிப்புகள் நடக்குமா?!

சமூக இடைவெளியுடன் ஷூட்டிங்குகளை நடத்தலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழக அரசும் சினிமா ஷூட்டிங்குகளை நடத்த அனுமதி கொடுக்கும் எனத் தெரிகிறது. ஆனால், ஷூட்டிங் நடத்தவும் பல்வேறு விதிமுறைகள் இருப்பதால் பெரிய பட்ஜெட் படங்களின் ஷூட்டிங்குகளைத் தொடங்குவதில் தயாரிப்பாளர்களுக்குப் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. கமலின் ‘பிக்பாஸ்’ ஷூட்டிங் தவிர, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என யாருமே கொரோனாச் சூழல் சரியாகும் வரை ஷூட்டிங் வரத்தயாராக இல்லை என்பதை மிகவும் தெளிவாகத் தங்களின் தயாரிப்பாளர்களிடம் சொல்லிவிட்டார்கள். அதனால், அரசாங்கம் அனுமதி கொடுத்தாலும் சிறு பட்ஜெட் படங்களின் ஷூட்டிங் மட்டும் தொடங்குமே தவிர ‘இந்தியன் -2’, ‘அண்ணாத்த’, ‘வலிமை’, ‘வாடிவாசல்’ போன்ற படங்களின் ஷூட்டிங் தொடங்குவது இந்தாண்டு இறுதிவரை சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.

இயக்குநர்கள் என்ன செய்கிறார்கள்?!

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஒ.டி.டி தளங்களுக்காக ஆந்தாலஜி படங்கள் இயக்குவதில் இயங்குநர்கள் செம பிஸி. வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் பாலிவுட் தயாரிப்பாளர் ரோனி ஸ்குருவாலாவுக்காக ஆணவக்கொலை தொடர்பான ஆந்தலாஜி படம் இயக்கிமுடித்திருக்கிறார்கள். இது அக்டோபரில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் 9 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கும் ‘நவரஸா’ ஆந்தாலஜி படவேலைகளைத் தொடங்கியிருக்கிறார். இதை மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், ஜெயேந்திரா, ஹலிதா ஷமீம், நடிகர்கள் அரவிந்த் சுவாமி, சித்தார்த் ஆகியோர் இயக்கவிருக்கிறார்கள். இது இல்லாமல் வெங்கட்பிரபு, கெளதம் மேனன், பா.இரஞ்சித், ஏ.எல் விஜய் ஆகியோர் இணைந்து இன்னொரு ஆந்தாலஜி படம் எடுக்கிறார்கள். இன்னும் சில மாதங்களுக்கு ஓ.டி.டி-யே தமிழ் சினிமா உலகை ஆளும். ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்கள் நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கு வரும். மிகப்பெரிய இயக்குநர்கள் இயக்கும் ஆந்தலாஜி படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும்!