
ஆரம்பத்திலிருந்தே படத்தின் டெம்போ குறையாமல் வைத்திருக்கக் காரணம் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை.
நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே சொல்லும் ஒருவர் ‘தீர்க்கதரிசி'யா இல்லையா என்பதைச் சொல்லும் கதை.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ‘சென்னை அடையாறில் தனியாக வசிக்கும் ஒரு பெண் கொல்லப்பட விருக்கிறார்' என்று ஒரு போன் வருகிறது. வழக்கம்போல் காவல்துறை அலட்சியப்படுத்த, அந்தச் சம்பவம் நடந்தே விடுகிறது. தொடர்ந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அந்த நபர், நடக்கவிருக்கும் குற்றச் சம்பவங்களைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில் அவர் மக்களால் ‘தீர்க்கதரிசி' என்றே அழைக்கப்படுகிறார். அவர் யார், அவரைக் கண்டுபிடிக்கக் காவல்துறை எடுத்த முயற்சிகள் பலித்ததா, எல்லாமே தீர்க்க தரிசனம்தானா என்பதை எக்கச்சக்க லாஜிக் மீறல்களுடனும் அதேநேரம் விறுவிறுப்பான திரைக்கதையுடனும் சொல்கிறது படம்.

படத்தின் பெரும்பலம் சத்யராஜ். இத்தனைக்கும் அவருக்கு கௌரவத்தோற்றம்தான். ஆனால் படம் முழுக்க அவர் குரலில் இருக்கும் பதற்றமும் பரபரப்பும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நேரடியாகத் தோன்றும் காட்சியில் தன் வழக்கமான ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். விசாரணை அதிகாரியாக அஜ்மல். அங்குமிங்கும் துடிப்புடன் அலைகிறாரே தவிர எதையுமே உருப்படியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், மூணாறு ரமேஷ், மதுமிதா, தேவதர்ஷினி, மோகன்ராம் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். வழக்கமாகத் தமிழ் சினிமாவில் சைக்கியாட்ரிஸ்ட்கள் தாங்கள் படித்ததற்குத் தொடர்பில்லாமல் ஆவி, ஆரா, அமானுஷ்யம், தீர்க்கதரிசனம் என்று பேசுவார்கள். அப்படி இதில் ஒய்.ஜி.மகேந்திரன்.
ஆரம்பத்திலிருந்தே படத்தின் டெம்போ குறையாமல் வைத்திருக்கக் காரணம் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை. ஆனால் சில இடங்களில் காட்சிகளில் இல்லாத உணர்ச்சிவேகத்துக்கு மிகையாக ஈடுசெய்ய முயல்கிறது பின்னணி இசை. படத்திற்குத் தேவையான விறுவிறுப்பைத் தன் கேமராக் கோணங்களால் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெ.லெக்ஷ்மன். ரஞ்சித் சி.கே.வின் படத்தொகுப்பும் பரபரப்புக்கு பலம் சேர்க்கிறது.

பின்னால் வரும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவது என்ற கதைக்கரு தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. சில படங்களை இந்தப் படமும் நினைவுபடுத்தினாலும் காட்சிகள் மூலம் விறுவிறுப்பைக் கூட்டி யிருக்கிறார்கள்அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும். ஆனால் கால் ட்ராக்கிங், சி.சி.டி.வி ஃபுட்டேஜ், ஜி.பி.எஸ் சிக்னல், போலி சிம்கார்டு, குற்றவாளியின் போன் சிக்னல் மாறிக்கொண்டே இருப்பது என்று பல படங்களில் பார்த்த சலிப்பான விஷயங்களும், ‘மரணமடைந்த வர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்து ஏன் காவல்துறை தொடக்கத்திலேயே யோசிக்கவில்லை?' என்ற பிரமாண்ட கேள்வியும் பலவீனங்கள்.
இந்தக் குறைகளைச் சரிசெய்திருந்தால் தீர்க்கதரிசியை இன்னும் மெச்சியிருக்கலாம்.