
விஜய் ரசிகர்களுக்கு வீசப்பட்ட கலர்ஃபுல் கமர்ஷியல் அரிவாள்...!
ஹீரோயிஸ பார்சலில் சென்டிமெண்ட், ஆக்ஷனை சரிவிகிதத்தில் கலந்த கலர்ஃபுல் மசாலா. க்ளோசப்பில் ஒரு வீச்சரிவாள் தயாராகிறது... ஓடும் வண்டியின் சக்கரத்தில் சாணை பிடிக்கப்படுகிறது. கடைசியில் அது திருவிழா அய்யனாரின் கையைச் சேர்கிறது. அய்யனாருக்கும் அரிவாளுக்கும் வணக்கம் சொல்கிற சிவகிரி... விஜய்! அடுத்த செகண்ட் நெற்றி நிறைய பட்டையோடு, ‘நீ எந்த ஊரு... நான் எந்த ஊரு...?’ என்று ரசிகர்களைப் பார்த்து தத்துவப் பாடலை ஆரம்பிக்கிறார். அங்கே கிளம்புகிறது ஹீரோயிஸ் வண்டி. திருப்பாச்சியில் அரிவாள் அடிக்கும் பட்டறை வைத்திருக்கும் அப்பாவி கிராமத்தான் விஜய், தங்கை மல்லிகாவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ஜாலி ரகம். தங்கைக்கு பட்டணத்து மாப்பிள்ளை கிடைத்தவுடன், சென்னை வந்து சில நாட்கள் தங்கியிருக்கும்போது, நகரத்தில் நடக்கும் அநியாயங்கள், விஜய்யை முறுக்கேற வைக்கின்றன.

சென்னைதான் வாழ்க்கை என்று மாப்பிள்ளை உறுதியாக இருக்க... ‘பாசமலர்’ தங்கை நிம்மதியாக அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக அய்யனாராகவே மாறி, சென்னை முழுக்க வியாபித்திருக்கும் தாதாக்களை வதம் செய்யப் புறப்படுகிறார் விஜய். தோட்டத்து வாழை மரங்களை வெட்டுவது போல, விஜய் தனியாளாக ரவுடிகளைக் கிட்டத்தட்ட ‘கொலை, கொலையா முந்திரிக்கா’ ரேஞ்சில் சீவித் தள்ளுகிறார்.250 பேரைத் தனியொருவராக அழிக்கும் விஜய்யின் உக்கிரம் அடங்கும்போது, பாவம்... சின்னதாக சிறைத் தண்டனை வேறு கிடைத்துவிடுகிறது! படமே ‘திருப்பாச்சி’ என்பதாலோ என்னவோ, லாஜிக்கை எல்லாம் ஒரே சீவாக சீவித்தள்ளிவிட்டு இஷ்டத்துக்கு விளையாடி இருக்கிறார் இயக்குநர். சகல வசதிகளும் நிறைந்த ஊரில்தான் தங்கையைத் திருமணம் செய்து தருவது என்ற கொள்கை உடையவர் விஜய். அது ஓகே, அதற்காக, அத்தனை பாசம் காட்டி வளர்த்த தங்கையை, தெருவில் போகிற ஒருத்தர், பெண் கேட்பாராம். அவர் நகரத்து ஆசாமி என்ற ஒரே காரணத்துக்காக அடுத்த ஸீனிலேயே கல்யாணம் செய்து தருவாராம். சென்னைக்கு அறிமுகமே இல்லாத விஜய், கமிஷனர் முதல் தாதாக்கள் வரை போன் போட்டு சவால் விடுவாராம். என்ன... என்ன... என்ன... எதுக்கும் ஒரு லிமிட் வேணாமா..? விஜய் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமோ!

ஹீரோ கிங்குதான். அதற்காகப் போலீஸ் காரர்களைப் பால்வாடி பிள்ளைகள் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ண வேண்டுமா? இருபது கொலைகள் நடந்த ஸ்பாட்டிற்கு வரும் இன்ஸ்பெக்டர், கொலைத் தடயமாக சிக்கும் எலுமிச்சம் பழத்தை ‘ஜூஸுக்கு...’ என்று பாக்கெட்டில் ஒளித்துக் கொண்டு அசடு வழியச் சிரிக்கிறார். விஜய் பண்ணும் ட்விஸ்ட்டுகளை அப்படியே நம்பி, அவர் காட்டிவிடுகிற பக்கமெல்லாம் போய் மொத்த ரவுடிகளையும் போலீஸ் சுட்டுத் தள்ளுவதுதான் க்ளைமாக்ஸ், அது காவல் துறை அல்ல... கம்ப்ளிட் காமெடித் துறை! கலகல சென்டிமெண்ட் ஜோர் மெள்ளக் குறைந்து இரண்டாம் பாதி முழுக்க சதா இறுகிப்போன முகத்தோடு வருகிறார் விஜய். பாடல் காட்சிகளில் மட்டும் குறைவில்லாத துள்ளல்! தங்கையாக வரும் மல்லிகா - விஜய் சம்பந்தப்பட்ட முதல் பாதிக் காட்சிகள் பாச மத்தாப்பூ..! அண்ணனின் சட்டையைப் போட்டுக்கொண்டு திரியும்போது சின்னக் குழந்தை, வயிற்றுப் பிள்ளையோடு இருக்கும் காட்சிகளில் பெரிய மனுஷி என்று இரண்டுக்கும் பொருந்தும் முகம் மல்லிகாவுக்கு.. வரம்தான்.

‘படம் ரொம்ப சீரியஸாப் போகுதோ..?' என்று யோசிக்கும் போதெல்லாம் த்ரிஷா வந்து ரெண்டு டயலாக் பேசிவிட்டு, விஜய்யை ஃபாரின் லொகேஷனுக்கு அழைத்துச் சென்று ஆட்டம் ஆடுகிறார். வில்லன் கோஷ்டிக்கு லாரி, லாரியாக ஆள் பிடித்திருக்கிறார்கள். இதில் 'சனியன்’ சகடை, ‘பான்பராக்’ ரவி, ‘பட்டாசு’ பாலு என்று விதவிதமான பட்டப் பெயர்களில் வரும் தாதாக்கள். இந்த வில்லன்களில் ‘பட்டாசு’ பாலுவாக வரும் பசுபதியின் ஸ்டைல் மிரட்டுகிறது. அதேபோல அவரைக் கொல்ல, விஜய் கையாளும் டெக்னிக்கும் சுவாரஸ்யம். இசை தினா. பாடல்களிலும், பின்னணி இசையிலும் இரைச்சல்! பாப் ஆல்பம் ஸ்டைலில் வரும் ‘கமான்... கமான்’ பாடலில் காஸ்ட் யூம், லொகேஷன், மேக்-அப் எல்லாமே ‘நச்சென்ற கற்பனை.

இயக்குநர் பேரரசுவுக்கு இது முதல் படம். புதுமைகள் எதுவும் இல்லையென்றாலும், விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கருத்தில் கொண்டு வீசப்பட்ட கலர்ஃபுல் கமர்ஷியல் அரிவாள்!
- விகடன் விமரிசனக்குழு