சினிமா
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: தொரட்டி.

 தொரட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
தொரட்டி

கூடாநட்பின் விளைவுகளை எளிய மனிதர்களின் வழியாகச் சொல்லும் நீதிக்கதைதான் இந்த ‘தொரட்டி.’

ர் ஊராகச் சென்று விளைநிலங்களில் ஆட்டுப்பட்டி அமைத்து அவற்றின் சாணத்தை மண்ணுக்கு உரமாக்கி, விளைநிலங்களின் உரிமையாளர்களிடம் அதற்கான கிடைக்கூலி வாங்கிக்கொள்ளும் அசல் மண்ணின் மைந்தர்கள் மாயன் குடும்பத்தினரும் செம்பொண்ணு குடும்பத்தினரும். பிழைக்கப் போன இடத்தில் சில திருடர்களின் சகவாசம் மாயனுக்குக் கிடைக்க, குடியும் கூத்துமாய்ப் பொழுதைக் கழிக்கிறான். ஒரு திருட்டு முயற்சியில் மாட்டி, கூட்டாளிகள் சிறைக்குச் செல்ல, அந்த இடைவெளியில் மாயனுக்குச் செம்பொண்ணோடு திருமணமாகிறது. சிறையிலிருந்து மீளும் கூட்டாளிகள் தாங்கள் சிறை செல்லக் காரணமான செம்பொண்ணைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். இறுதியில் வென்றது நட்பா, வன்மமா எனப் புழுதிவாசத்தோடு சொல்லி முடிகிறது படம்.

மாயனாக, படத்தின் தயாரிப்பாளர் ஷமன் மித்ரு. முதல் சில காட்சிகளில் தடுமாற்றம் தெரிந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் தேர்ச்சி காட்டுகிறார். படத்தின் ஆன்மா செம்பொண்ணாக நடித்திருக்கும் சத்யகலா. உடல்மொழியில், வசன உச்சரிப்பில், சின்னச் சின்ன உணர்ச்சிகளைக்கூடச் சரியான முறையில் வெளிக்காட்டுவதில் அசரடிக்கிறார். முறையான வாய்ப்புகள் வந்தால் தமிழ்சினிமாவில் முக்கிய நடிகையாவார்.

சினிமா விமர்சனம்: தொரட்டி.

வில்லனாகப் பல படங்களில் பார்த்த அழகுக்கு இதில் குணச்சித்திர வேடம். விரிசல்களுக்குள் ஈரம் வாங்கிய கரிசல் மண்போல நெகிழ்த்துகிறார். கதை முழுக்க கேமரா பரிச்சயம் இல்லாத அசல் கிராமத்து மனிதர்கள் வந்துபோவது படத்தின் பலம்!

நிலப்பரப்பின் வெக்கை கடத்தும் குமார் தரின் ஒளிப்பதிவும் ஜித்தன் ரோஷனின் பின்னணி இசையும் கதையோடு ஒன்றிப்போகச் செய்தாலும் பாடல்கள் அயர்ச்சியையே கொடுக்கின்றன.

கூலி தராத நில உரிமையாளருக்கு சாபமிடுவது, தொரட்டியை வைத்துத் திருமணம் முடிப்பது என, அறியப்படாத பல சம்பிரதாயங்களைத் தேர்ந்த கதைசொல்லியாக விவரித்திருக்கிறார் இயக்குநர் மாரிமுத்து.

சினிமா விமர்சனம்: தொரட்டி.

அதேசமயம் பார்த்துப் பழகிய பழிவாங்கல் கதை என்பதால் ‘அடுத்து இதுதான் நடக்கும்’ எனக் கணித்துவிட முடிகிறது. படம் நிகழும் காலகட்டம் எப்போதென்ற குழப்பமும் கடைசிவரை நீடிக்கிறது.

ஆட்டுப்பட்டி இளைஞன் தினமும் ஓர் ஆட்டைத் தன் நண்பர்களுக்குக் கறிவிருந்து ஆக்கிப் போடுவது நெருடுகிறது.சிற்சில குறைகளுக்கு மத்தியிலும் யதார்த்தத்தின் பலத்தில் நிமிர்ந்து நிற்கிறது இந்தத் தொரட்டி.