
இந்தப் படம் பார்த்து, கண்கலங்கிய 90's கிட்ஸ்லாம் கை தூக்குங்க! ;-)
பூனாவில் ஏழு வருட சிறை தண்டனை முடிந்து ரயிலில் சென்னைக்குத் திரும்பும் விஜய், சக பயணிகளிடம் தன் பழங்கதையை விவரிக்க ஆரம்பிப்பதில் இருந்து சீராக ஒரே மார்க்கத்தில் பயணிக்கிறது திரைக்கதை. மேடைப் பாடகனாகும் கனவுகளோடு சென்னைக்கு வந்து, கிடைத்த வேலையைச் செய்துகொண்டு, வாய்ப்புக்காகக் காத்திருப்பவர் விஜய். முகம் பார்க்காமல் அவரது குரலால் சிம்ரன் ஈர்க்கப்படுவதையும், சூழ்நிலை காரணமாக கிட்டத்தட்ட ஒரு பேட்டை ரெளடி மாதிரியாக கண்ணில் தட்டுப்படும் விஜய் தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் என்பது அறியாமல் அவர் மீது வெறுப்பை வளர்த்துக்கொள்வதையும் ஆரம்பக் கட்டங்களில் இயல்பாக சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்குநர் எழில். அதே மாதிரி, சிம்ரனின் பார்வை பறிபோக விஜய் காரணமாகிவிடுவதையும், பின்னர் அவரை தன் வீட்டிலேயே தங்கவைத்து விஜய் சேவகம் புரிவதையும் செயற்கைத்தனம் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

தன் கிட்னி கொடுத்து கிடைக்கும் பணத்தில் சிம்ரனின் கண் ஆபரேஷனுக்கு விஜய் ஏற்பாடு செய்வது... பார்வை கிடைக்கும் சமயத்தில் சந்தர்ப்பவசத்தால் பூனா ஜெயிலில் விஜய் அடைபடுவது... தண்டனை முடிந்து திரும்பி வரும்போது அவரை சிம்ரன் விரட்டியடிப்பது. கடைசியில் தன் அபிமான பாடகர்தான் விஜய் என்பது தெரிந்ததும் கட்டிப்பிடிப்பது... என்று பின்பாதியில் எல்லாமே ரெண்டும் ரெண்டும் நாலு என்கிற சிம்பிள் கணக்கு! இடுப்பு வளைத்து டான்ஸ் ஆடி, காதல் வசனம் பேசி காலம் தள்ளிவிட்டு போக முடியாத படிக்கு முழு நடிப்புத் திறனை வெளிப்படுத்த வேண்டிய சவாலான பாத்திரம் விஜய்க்கு. சவாலை வெற்றிகரமாக சமாளிக்கிறார்! குறிப்பாக, அம்மா இறந்த தகவல் வந்ததும் டாய்லெட்டுக்குள் சென்று தனிமையில் கதறி அழுகிறாரே...

ஒரு சோறு பதம்! கண் பார்வை இல்லாதவர் என்பதற்காக ஓவராகத் தட்டுத்தடுமாறி தடுக்கி விழாமல் இயல்பாக செய்திருக்கிறார் சிம்ரன். ரவிக்கைக்கு வெளியே தலை நீட்டிக்கொண்டிருக்கும் பிரா பட்டையைச் சரிசெய்ய சொல்லும் வழி தெரியாமல் விஜய் தவிப்பது புரிந்து ஒரு சின்ன சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள்... அசல் சிம்ரன் பிராண்ட்! விஜய்யின் அம்மா காரெக்டர் வெறும் கடிதங்களிலேயே உருவாக்கப்பட்டு முடிந்துபோனாலும் கதைக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ‘பார்க்காமலே காத’லுக்கு மாறுபட்ட ஒரு வடிவம்!
- விகடன் விமரிசனக் குழு