சினிமா
Published:Updated:

துணிவு - சினிமா விமர்சனம்

துணிவு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
துணிவு - சினிமா விமர்சனம்

வேகம் குறைந்திடாத திரைக்கதையும், அதனூடாகவே எல்லாக் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து கதைக்குள் கொண்டு வரும் பாணியும் படத்தைச் சுவாரஸ்யப்படுத்துகின்றன.

தனியார் வங்கியில் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் நாயகன், அதற்காக வைத்திருக்கும் ‘நியாயமான' காரணங்கள்தான் இந்தத் ‘துணிவு.'

ஒரு தனியார் வங்கியில் 500 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க ஒரு டீம் களமிறங்குகிறது. உள்ளே சென்ற கும்பலைத் தாக்கி, தானும் இங்கே கொள்ளையடிக்கவே வந்திருப்பதாக அறிமுகமாகிறார் நாயகன் அஜித். எதற்காக இந்தக் கொள்ளை, இன்னும் எத்தனை கொள்ளைக் கும்பல்கள் உள்ளே இருக்கின்றன, அவர்களின் நோக்கம் என்ன என்பதற்கெல்லாம் விடைகளை ஒரு பரபர திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அ.வினோத்.

தோரணையாக வீற்றிருக்கும் முதல் ஷாட்டிலேயே நம் மனதுக்குள்ளும் வந்து அமர்ந்துகொள்கிறார் அஜித். எள்ளல் கலந்த பார்வை, திமிரான உடல்மொழி, உற்சாக மைக்கேல் ஜாக்சன் நடனம் என ஏ.கே ரசிகர்களுக்கான ஃபுல் மீல்ஸ் இது. அவரின் பார்ட்னராக வரும் மஞ்சு வாரியருக்கும் மாஸ் காட்சிகள் உண்டு என்றாலும், கதாபாத்திரத்தில் கூடுதல் கனம் இருந்திருக்கலாம்.

கொள்ளையைத் தடுக்க முயலும் நேர்மையான அதிகாரி வேடத்தில் சிறப்பாகப் பொருந்திப் போகிறார் சமுத்திரக்கனி. பாலசரவணன் - மோகன சுந்தரம் கூட்டணி காமெடிக்கு கேரன்ட்டி. நாயகனுக்கு இணையான வில்லனாக மிரட்ட வேண்டிய வில்லன் ஜான் கொக்கேன், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட அடியாள் பாணியில் மட்டுமே வந்து போகிறார். மகாநதி சங்கர், பக்ஸ், ஜி.எம்.சுந்தர், பிரேம் குமார் என அனைவருமே தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சியில் கேமராவைச் சுற்றிச் சுழலவைத்து ஒரு பக்காவான தியேட்டர் விருந்து படைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும், ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரும். விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு திரைக்கதையைக் கூடுதல் பரபரப்பாக்கி யிருக்கிறது. இடைவெளியே இல்லாமல் பின்னணி இசையை நிரப்பி டயர்டாக்கியிருக்கிறார் ஜிப்ரான்.  

துணிவு - சினிமா விமர்சனம்

வேகம் குறைந்திடாத திரைக்கதையும், அதனூடாகவே எல்லாக் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து கதைக்குள் கொண்டு வரும் பாணியும் படத்தைச் சுவாரஸ்யப்படுத்துகின்றன. இரண்டாம் பாதியில் அந்த லைவ் பேட்டி ஐடியா ரகளை ரகம். கொள்ளைக்கான காரணத்தை இரண்டு பிளாஷ்பேக்குகளாகச் சொல்ல முயன்றது சிறப்பான யுக்தி என்றாலும் கண் சிமிட்டும் நேரத்தில் வந்துபோகும் சில புதிய கதாபாத்திரங்களால் பெரிய அளவு தாக்கத்தைக் கடத்த முடியவில்லை. பங்குச் சந்தை மோசடி, இ.எம்.ஐ, கிரெடிட் கார்டு, மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்தையும் பொதுமைப்படுத்தி அனைத்தையுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருப்பது பொருளாதாரம் குறித்த புரிதலற்ற வாதமாகவே வெளிப்படுகிறது.

நாயகனைத் துளைக்காத குண்டுகள், சி.சி.டி.வி மட்டுமே பார்க்கும் போலீஸ் போன்ற லாஜிக் மீறல்களைத் துணிச்சலுடன் பொறுத்துக் கொண்டால், ‘துணிவு' ஒரு சிறப்பான பொங்கல் ட்ரீட்தான்!