சினிமா
பேட்டிகள்
Published:Updated:

இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தோம்!

திருச்சி நடிகர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சி நடிகர்கள்

இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையான்னு நிறைய பேரு கமெண்ட்ல திட்டுவாங்க. நான் வீடியோ போட ஆரம்பிச்சதே கஷ்டத்தை மறக்கத்தான்...

அந்தக்காலத்திலெல்லாம் சினிமாவில் நடிக்கவேண்டுமென்றால் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு ஓடிவரவேண்டும். பகுதிநேரமாக ஹோட்டலிலோ ஜவுளிக்கடையிலோ சோற்றுக்கு வழிசெய்துகொண்டு இயக்குநர் வீட்டு கேட்டுக்கு வெளியில் நின்று தரிசனத்துக்குக் காத்துக்கிடக்கவேண்டும். இன்று அதற்கெல்லாம் அவசியமில்லை. இருக்கவே இருக்கின்றன, இன்ஸ்டா, ஷேர்சாட், டக டாக் ஷார்ட் வீடியோ ஆப்கள். இந்த ஆப்களில் வீடியோ போட்டே பிரபலமாகி சினிமா வரைக்கும் வந்து நிற்பவர்கள் நிறைய பேர். திருச்சி ரமேஷ், ஸ்கெட்ச் கார்த்தி, மார்க்கெட் பாபு, வேல்முருகன், எலும்பு செல்வம், சிந்தியா ஜாஸ்மின், பிரீத்தா, சங்கீதா, உமா மகேஸ்வரி... இவர்களெல்லாம் அப்படி வந்தவர்கள்தாம். சினிமா, ஷார்ட் பிலிம், வெப்சீரிஸ், விளம்பரங்கள், சீரியல், மேடை நாடகங்கள் எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இவர்களை, திருச்சி எடமலைப்பட்டி புதூர் அம்மா பூங்காவில் ஒருங்கிணைத்தேன்.

சங்கீதா
சங்கீதா
ஸ்கெட்ச் கார்த்தி
ஸ்கெட்ச் கார்த்தி
 உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

அஞ்சு நிமிஷ இடைவெளி கிடைத்தாலே அஞ்சு வீடியோ போட்டு விடுகிறவர் திருச்சி ரமேஷ். மூடப்பட்ட டிக்டாக் தொடங்கி சமீபத்தில் தொடங்கப்பட்ட குயிலி வரை எல்லா ஆப்களிலும் அண்ணனுக்கு ஏகப்பட்ட லைக்ஸ். ரஜினி முருகன், விஸ்வாசம், இறைவி, றெக்கை, சென்னை-28, பலே வெள்ளையத்தேவா, மெர்சல், அன்பறிவு, ராஜபீமா, அண்ணாத்த என ரமேஷின் கிராப் உயர்ந்துகொண்டிருக்கிறது.

“இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையான்னு நிறைய பேரு கமெண்ட்ல திட்டுவாங்க. நான் வீடியோ போட ஆரம்பிச்சதே கஷ்டத்தை மறக்கத்தான். மண்ணச்சநல்லூர் பக்கத்துல கரியமாணிக்கம்னு ஒரு ஊரு. ரெண்டுமுறை ஊராட்சி மன்றத் தலைவரா இருந்திருக்கேன். மூணு பொம்பளைப் புள்ளைங்க. லாரி ஓட்டுறதுதான் நம்ம பிழைப்பு. இந்தியா முழுக்கச் சுத்தியிருக்கேன். ஊர்ப்பக்கம் ஒரு ஷூட்டிங் நடந்துச்சு. வேடிக்கை பாக்கப் போனவனை, ‘பெரிய மீசை வச்சிருக்கே... நடிக்கிறியா’ன்னு கேட்டாங்க. நடிச்சேன். அந்தப்படம் ரிலீஸாகலே... ஆனா எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைஞ்சுச்சு. ரஜினி முருகன் படத்துல பஞ்சாயத்தை மாட்டை விட்டுக் கலைச்சுவிடுற மூணு அண்ணன் தம்பிகள்ல ஒருத்தனா வந்தேன். முகம் தெரியிற அளவுக்கு அடையாளம் கொடுத்துச்சு அந்தப்படம். அடுத்தடுத்து படங்கள் வருது. ராஜபீமா, அன்பறிவு படத்துலயெல்லாம் படம் முழுக்க வர்ற கேரக்டர். நம்ம உடல்மொழியில இயல்பா கொஞ்சம் காமெடி இருக்கு. அதுதான் நம்மளக் காப்பாத்துது” - மீசையை முறுக்குகிறார் ரமேஷ்.

மார்க்கெட் பாபு, திருச்சி மார்க்கெட்டில் காய்கறி கமிஷன் மண்டி நடத்துகிறார். வணிகர் சங்கங்களின் பேரவைச் செயலாளரும்கூட. எப்போதும் வென்றான், காதல் அகதி, நேசம் நெசப்படுதே, ஜில்லா, மதராஸி என 14 படங்களில் நடித்திருக்கிறார். தனுஷோடு விளம்பரத்திலும் நடித்திருக்கிறார். விரைவில் வரவிருக்கிற ‘சாமான்யன் எனும் நான்’ படத்தில் வில்லன் இவர்தான்.

எலும்பு செல்வம்
எலும்பு செல்வம்
 பிரீத்தாஸ்ரீ
பிரீத்தாஸ்ரீ
வேல்முருகன்
வேல்முருகன்

“சித்தப்பா புரொட்யூசர், பெரியப்பா எம்.ஜி.ஆருக்கு டிரைவர். மாமா பாக்யராஜ் சார்கிட்ட மேக்கப்மேனா இருந்தார்... ஆனா நமக்கு சினிமா ஆசையெல்லாம் இல்லை. கமிஷன் மண்டிதான் பிரதானம். கொஞ்சம் வருஷத்துக்கு முன்னால நகுலோட தம்பியை வச்சு ஒரு படம் பூஜை போட்டாங்க. அந்த புரொட்யூசர் திருச்சியில ஒரு வீடு வேணும்னார். அவரைக் கூட்டிக்கிட்டுப் போனேன். டைரக்டர் என்னைப் பாத்துட்டு ‘நீங்க ஒரு கேரக்டர் பண்ணுங்கண்ணே’ன்னு சொன்னார். பண்ணினேன். ஆனா அந்தப்படம் வரலே. அதுக்கப்புறம் நடிப்பு ஆசை தொத்திக்கிச்சு. டி.வி சீரியல்கள்ல நடிச்சேன். நெகட்டிவ் கேரக்டர், போலீஸ் கேரக்டர்களுக்கு மார்க்கெட் பாபுவைக் கூப்பிடுங்கப்பான்னு சொல்ற அளவுக்கு இப்போ பேரு வந்திருச்சு...” என்று சிரிக்கிற பாபு, சினிமாவில் இழந்தது நிறைய.

“ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கும். டைரக்டர் கூப்பிட்டு, ‘அண்ணா புரொட்யூசரால உடனடியா பணம் புரட்ட முடியலே... அஞ்சு லட்ச ரூபா மட்டும் கொடுங்க... அடுத்த ஷெட்யூல்ல உங்க சம்பளத்தையும் சேர்த்துக் கொடுத்திடுறேன்’னு சொல்லுவார். தவிர்க்க முடியாமக் கொடுத்தோம்னா அதுக்கப்புறம் பேச்சே இருக்காது. ஒரு மலையாளப்படம்... ‘7 லட்சம் அவசரமாத் தேவைப்படுது... ஒரு வாரத்துல தர்றேன்’னு புரொட்யூசர் கேட்டார். வாங்கிட்டுப் போனவர் ஒரு வாரத்துல தற்கொலை பண்ணிக்கிட்டார். இதுமாதிரி 40 லட்சத்துக்கும் மேல இழந்திருக்கேன். இப்போதான் பக்குவம் வந்திருக்கு” சிரித்தபடி சொல்கிறார் பாபு.

சிந்தியா ஜாஸ்மின்
சிந்தியா ஜாஸ்மின்
திருச்சி ரமேஷ்
திருச்சி ரமேஷ்
மார்க்கெட் பாபு
மார்க்கெட் பாபு

ஸ்கெட்ச் கார்த்தி, அகரப்பட்டியைச் சேர்ந்தவர். இவர்போடுகிற விதவிதமான கெட்டப்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஸ்கெட்ச், சங்கத்தமிழன், அதே கண்கள், அடங்காதே, தூயவன், ஆரா, 108 என இவர் நடித்த படங்களின் வரிசை நீளமானது. “அப்பா தீவிர விஜய் ரசிகர். விஜய்யைப் பார்க்கணும்னு சொல்லிட்டு பத்து வருஷம் முன்னாடி சென்னை போனார். அவரைப் பாக்க முடியலே. அங்கேயே அயர்ன் பண்ற கடை போட்டிருந்தார். மூணு வருஷம் முன்னாடி வீட்டுக்கு வந்தவருக்கு மனநிலை பாதிச்சிருச்சு. ‘விஜய்’ ‘விஜய்’ன்னே சொல்லிக்கிட்டுத் திரிஞ்சார். அவர் மூலமாதான் சினிமா ஆசை எனக்குள்ள துளிர் விட்டுச்சு. ‘அதே கண்கள்’ படத்துல நிறைய தலைமுடியுள்ள ஒரு பையன் வேணும்னு கேட்டப்போ அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சுச்சு. அதுக்கப்புறம் நிறைய படங்கள் நடிச்சேன். ‘ஸ்கெட்ச்’ படத்துல வில்லன் கேரக்டர் செய்ற நாலு பசங்கள்ல ஒருத்தனா நடிச்சேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தாலும் நிரந்தரமா இதுதான் வேலைன்னு சொல்லிக்கிற அளவுக்கு இல்லை. ஒரே ஒரு லட்சியம்தான்... எப்படியாவது விஜய் அண்ணாவைப் பாத்துப் பேசி அப்பாவைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு போட்டோ எடுத்துடணும்...” கண் கலங்குகிறது ஸ்கெட்ச் கார்த்திக்கு.

பிரீத்தா தோகைமலை அருகிலிருக்கும் தெலுங்குப்பட்டியைச் சேர்ந்தவர். புரூஸ்லீ, செம, அடங்காதே, திருப்பதிசாமி குடும்பம் என அவர் நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இந்தியில் தனுஷ் நடித்த ‘அட்ராங்கி ரே’ படத்திலும் நடித்திருக்கிறாராம்.

“14 வயசுல கல்யாணம் ஆயிடுச்சு. 2 குழந்தைகள்... பையனுக்கு உடல்நிலை சரியில்லாமப்போக பெரிய மன அழுத்தம் ஆயிடுச்சு. அந்த நேரத்துல விஜய் டி.வியோட மகளிர் மட்டும் நிகழ்ச்சியில கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. அதில் பழக்கமான நண்பர்கள் மூலமா சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. அக்கா, அண்ணி, தோழின்னு வாய்ப்புகள் அமையுது. வெப்சீரீஸ்லயும் நடிச்சுட்டிருக்கேன்” என்கிறார் பிரீத்தா.

வேல்முருகன் பூசாரிகோட்டையைச் சேர்ந்தவர். ஹோட்டல் மேனேஜ்மென்ட், கிரிமினாலஜி படித்தவர். ‘‘ரமேஷ் அண்ணாவோட சேர்ந்து நாடகம், தியேட்டர்னு சுத்தின ஆளு நான். அவர்மூலமா கிடைச்சதுதான் சினிமா வாய்ப்பு. ‘பூஜை’ படத்துலதான் முதல் வாய்ப்பு அமைஞ்சது. ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘ஆம்பளை’, ‘கருப்பன்’, ‘மிருதன்’னு பெயர் சொல்ற அளவுக்கு நடிச்சிருக்கேன். திருச்சியில இருக்கிற கலைஞர்களையெல்லாம் சேர்த்து ‘வெட்டிவேர்’ன்னு ஒரு சீரியல் பண்ணிக்கிட்டிருக்கோம். பெரிய சேனல்ல வரப்போகுது. வெப்சீரீஸ் ஒண்ணும் வருது...” என்கிறார் வேல்முருகன்.

சிந்தியா ஜாஸ்மின் ஆட்டோ ஓட்டுகிறார். ஒரு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சவாரி சென்றவரை நடிக்க வைத்து விட்டார்கள். அப்படியே சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க, மெய்ப்பட செய், எம கிராதகி, செம என வரிசை நீள்கிறது.

யாரையும் எதிர்பார்க்காமப் பிழைக்கணுங்கிறதுக்காக ஆட்டோ கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல அதுவே சீரியல், சினிமா வாய்ப்புகள் கிடைக்கக் காரணமாச்சு. இடையில ‘திருமகள்’னு ஒரு குறும்படம் நடிச்சேன். நிறைய விருதுகள் கிடைச்சுச்சு. ஹீரோயின்களுக்கு அம்மாவா நடிக்கணும். அந்த மாதிரி வாய்ப்புகளை எதிர்பார்த்துட்டிருக்கேன்” என்கிறார் சிந்தியா.

இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தோம்!

எலும்பு செல்வம் பரட்டைத் தலையோடு பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார். பைக் மெக்கானிக். சின்ன வயதில் பற்றிக்கொண்ட சினிமாக் கனவு. தட்டுத்தடுமாறி எட்டிப்பிடித்துவிட்டார். ‘ஆதித்ய வர்மா’வில் துருவின் நண்பர்களில் ஒருவராக நடித்தார். சிபிராஜ் நடிக்கும் ‘மாயோன்’ படத்தில் முக்கிய கேரக்டர் செய்கிறாராம். புதியவர்கள் எடுக்கும் ஆலமரம், பெயரிடப்படாத பேய்ப்படம் ஒன்று என இவருக்கும் வரிசையாகப் படங்கள் இருக்கின்றன.

“எலும்பும் தோலுமா இருக்கிறதால தாழ்வு மனப்பான்மை உண்டு. அதை உடைச்சு ஜெயிக்கனும்னா சினிமாவுல நடிக்கணும்னு சின்ன வயசுலயே மனசுக்குள்ள உருப்போட்டாச்சு. ஒரு நண்பர், ‘விக்ரம் பையன் நடிக்கிற படத்துல ஆடிஷன் நடக்குது, போய்ப்பாரு’ன்னு சொன்னார். ஒரு வீடியோவை ஓடவிட்டு டயலாக் பேசுன்னு சொன்னாங்க. பேசிக்காமிச்சேன், நெடுங்காலமா மனசுக்குள்ள அடைகாத்த கனவு... டயலாக்கோடு முதல் படத்துலயே வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம்.. நம்பிக்கையோடு நகர்ந்துக்கிட்டிருக்கேன்” என்கிறார் செல்வம்.

கிராப்பட்டியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, டான்ஸர். ராஜ் டி.வி-யில் கலா மாஸ்டர் நடத்திய ஈனா மீனா டீக்காவில் ஆடியவர். சங்கீதா சமயபுரத்தைச் சேர்ந்தவர். உமா இன்ஸ்டாவிலும் சங்கீதா எம்.எஸ் டக டாக்கிலும் செலிபிரிட்டிகள்.

“நிறைய ஸ்டேஜ் டிராமா பண்ணியிருக்கோம். டிக் டாக்ல டான்ஸ் பண்ணி வீடியோ போடுவோம். அதைப் பார்த்துட்டு ‘கை விலங்கு’ படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. இப்போ ரெண்டு பேரும் வெப்சீரிஸ் பண்றோம். சீரியல் வாய்ப்புகளும் வந்திருக்கு...” என்கிறார்கள் உமாவும் சங்கீதாவும்.

“இந்த சந்திப்போட நினைவா எல்லோரும் சேர்ந்து ஒரு வீடியோ பண்ணுவோம்” என்று கார்த்தி சொல்ல, கணப்பொழுதில் ‘முதல் மரியாதை’ படத்தை ஸ்பூப் செய்து ஸ்கிரிப்ட் தயாரித்தார் ரமேஷ்.

கலகலத்தது அம்மா பூங்கா!