
‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’னு மூணு படங்கள், என் வாழ்க்கையில மிக முக்கியமான காலகட்ட படங்கள்”
அறம், நீதிக்கான போராட்டத்தை வறுமையின் வழியே சொன்னவர், ‘பாம்புசட்டை’ ஆடம்தாசன். வறுமை இவர் வாழ்வையும் இஷ்டம்போல் அடித்துத் துவைத்து இயக்குநர் ஆக்கியிருக்கிறது.
“முதல் தலைமுறையா படிக்கிற பசங்களுக்கு சரியில்லாத குடும்பச் சூழலோடு வறுமையும் வாழ்க்கையில சேர்ந்துட்டா என்னென்ன இடர்ப்பாடுகள் வருமோ, அதெல்லாம் எனக்கு வந்தன. ஆறேழு வயசு வரைக்கும் மும்பை, பொய்சர் ஏரியாவுல வளர்ந்தேன். எங்க அப்பா தாசன், ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி மனிதர்களோடு ஒட்டாம சுத்துற ஆள். அம்மா அன்னபூரணி பூ வியாபாரம் பார்த்து எங்களை வளர்த்தாங்க. எனக்கு யோவான், ஜேசுராஜன், ஆசீர்வாதம்னு மூணு அண்ணன்கள். அம்மாவுக்கு உடல்நிலை பிரச்னையால் பூர்வீகமான திருநெல்வேலிக்குத் திரும்பினோம். மருத்துவம் பார்த்துக்கிட்டே, பக்கத்துல இருந்த தியேட்டரில் ஓடுற எல்லா எம்.ஜி.ஆர் படங்களுக்கும் அம்மா என்னைக் கூட்டிக்கிட்டுப் போவாங்க. என் 11 வயசுல அம்மா இறந்துபோயிட்டாங்க!” எனக் கலங்கும் ஆடம்தாசனுக்கு அதன்பின் பசியும் பட்டினியும்தான் வாழ்க்கை.
“அண்ணன்கள் கிடைச்ச வேலையைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. அரவணைப்புக்கு ஆளில்லை. திருநெல்வேலியில இருந்த தூரத்துச் சொந்தங்களான நடராஜன் - மீனா தம்பதிதான் என்னைக் கொஞ்சநாள் வளர்த்தாங்க. அவங்களுக்கு ராஜா - ஆம்ஸ்ட்ராங்னு ரெண்டு குழந்தைகள்.

திருவிழாவுக்கு அவங்க நாடகம் போடுவாங்க. நானும் கூட சேர்ந்து, சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிப்பேன். ஸ்கூல்ல கிடைக்கிற சத்துணவு, செங்கல் சுமந்த காசுல அரை வயிறுக்கு பரோட்டா இதான் அப்போ உணவு. அப்போ, ஊர்ல இருந்த ‘இரட்சணிய சேனை’ தேவாலயத்துல இருந்த குருவையா தர்மராஜ் நல்ல மனசு பண்ணி, வள்ளியூர்ல இருந்த ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டார்.
அரைகுறைப் பசியோடு சுத்திக்கிட்டிருந்த எனக்கு, தங்க இடமும் மூணுவேளை சாப்பாடும் கிடைச்சது. பத்தாம் வகுப்புல ஸ்கூல் ஃபர்ஸ்ட்டா வந்தேன். 12-ஆம் வகுப்புவரை அங்கே தங்கிப் படிச்சேன். சொல்லிக்கிற அளவுக்குச் சொந்தங்கள் இல்லாததால, விடுமுறைக்கும் ஹாஸ்டல்லதான் இருப்பேன்” என்பவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது உலகநாதன் என்கிற நண்பரின் வரவு!
“என் கண்ணைப் பார்த்தே பசியைக் கண்டுபிடிக்கிற நண்பன் அவன். அவங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் பசியாத்துவான். வள்ளியூர் மலையில ஒரு சர்ச் இருக்கு. அங்கே வர்றவங்களோட மளிகைப் பொருள்களை யெல்லாம் மலைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தா, பணம் தருவாங்க. நானும் உலகநாதனும் வாடகை வண்டி எடுத்து, பொருள்களை ஏத்துவோம். கிடைக்கிற பணத்தைப் பங்கு போட்டுக்குவோம். ப்ளஸ் டூவுக்குப் பிறகு, உலகநாதன்கிட்ட பணம் வாங்கிட்டு, சென்னைக்குப் போய் ஏதாவது சாதிக்கணும்னு வண்டியேறினேன்.” ஆனால், சென்னை என நினைத்து இவர் இறங்கிய இடம் விழுப்புரம்.

“விழுப்புரத்துல ஒரு ஹோட்டல் வேலை. அங்கே அறிமுகமான ராஜேந்திரன்ங்கிற நண்பர் நிஜமாவே என்னை சென்னைக்குக் கூட்டிக்கிட்டுப்போய், வசதியான ஒரு வீட்டுல நாய்களைக் குளிப்பாட்டுற வேலை வாங்கிக் கொடுத்தார். எனக்குப் படிக்கணும்னு ஆசை. மெட்ராஸ் யுனிவர்சிட்டி அஞ்சல்வழிக் கல்வியில பி.ஏ எக்கனாமிக்ஸ் சேர்ந்தேன். நல்லவேளை நான் படிச்சேன். இல்லைனா, எனக்குக் கல்யாணத்துக்கு அது பெரும் தடையா இருந்திருக்கும்” என்பவர், கல்யாணக் கதைக்கு முன் சினிமாவுக்கு வந்த கதையை விவரித்தார்.
“நாய் குளிப்பாட்டுற வேலையை விட்டுட்டு, மறுபடியும் ஹோட்டல் சர்வர் வேலை. கூடவே பல்வேறு சினிமாக்களையும் பார்த்தேன். ‘நாயகன்’ பார்க்கிறப்போ, ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடலை இளையராஜா எனக்காகப் பாடியது மாதிரியே இருக்கவே, தொடர்ந்து அவர் இசையை என் சொந்தமாக்கிக்கிட்டேன்.
அந்தச் சமயத்துல ‘சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்’ ஒருத்தருடைய அறிமுகம் கிடைச்சது. அவர் பெரிய பெரிய பில்டிங்ல ஏத்திவிட்டு, சுண்ணாம்பு அடிக்கவும் எழுதவும் கத்துக்கொடுத்தார். அப்படி ஒருநாள் பெயின்ட் அடிச்சுட்டுத் திரும்பும்போது, சேரனின் ‘போராடினால் உண்டு பொற்காலம்’ தொடரைப் பழைய பேப்பர் கடையில் வாசிச்சேன். உடனே ஓடிப்போய் நான் நின்ன இடம், சேரன் சார் அலுவலகம். அவர் அப்போ ‘தேசியகீதம்’ பட வேலைகளில் இருந்தார். அவர்கிட்ட அப்போ சேர முடியலை” என்பவர், பிறகு சீரியலில் பிஸியாயிருக்கிறார்.
படம் ரிலீஸானது, விமர்சன ரீதியா நல்ல படம்னு பெயர் வாங்கினாலும், படத்துக்கான ரெஸ்பான்ஸ் ஆடியன்ஸ்கிட்ட இருந்து சரியா வரலை.
“சேரன் சார்கிட்ட உதவி இயக்குநரா சேரப்போன சமயத்துல, வைரமணி என்பவர் அறிமுகம். அவர் என்னை சீரியல் இயக்குநர் விஷ்ணுபிரியன்கிட்ட சேர்த்துவிட்டார். நாகேஷும், ஆனந்த் பாபுவும் இணைந்து நடிச்ச ‘எங்கள் வீடு கோகுலம்’ டெலிஃபிலிம்ல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். பிறகு, ‘ஆலயம்’ சீரியல்ல உதவி இயக்குநர். நான் வேலை பார்த்த ஒரு சீரியல்ல மெளனிகா நடிச்சாங்க. அவங்க மூலமா பாலுமகேந்திரா சாரை சந்திச்சேன்.

என் பின்புலத்தை விசாரிச்சவர், ‘நிறைய இலக்கியம் படிக்கணும்’னு அனுப்பிவெச்சார். நான் சின்ன வயசுல இருந்தே ஆனந்த விகடன் வாசகன். பாலுமகேந்திராவை சந்திச்சுட்டு வந்தபிறகு, விகடனில் வந்த சிறுகதைகளின் ஆசிரியர்களைத் தேடித் தேடி அவங்க படைப்புகளைப் படிக்க ஆரம்பிச்சேன். கி.ரா, சுஜாதா, வண்ண நிலவன், தஞ்சை பிரகாஷ், பிரபஞ்சன்... பலரையும் வாசிச்சேன்.” சேரன், பாலுமகேந்திரா எனச் சுற்றிக்கொண்டிருந்த ஆடம்தாசனுக்கு இயக்குநர் ஷங்கரிடம் கிடைத்திருக்கிறது வாய்ப்பு.
“என் அத்தனை கதைகளையும் பகிர்ந்துக்கிற ஒரு நபர், பி.சி.ஸ்ரீராம் சாரோட உதவியாளர் முத்துக்குமார். அவர் ஒருநாள், ‘ஷங்கர் சாரைப் போய்ப் பாரு’ன்னு அனுப்பிவெச்சார், போனேன். என் மொத்த ஃபிளாஷ்பேக்கையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட ஷங்கர் சார், ‘இந்தியா ஏன் முன்னேறாம இருக்கு’ன்னு கேட்டார். அவர் படங்களைப் பார்த்திருந்ததால, ‘லஞ்சம்தான் காரணம்’னு அவர் பட டயலாக்கையே சொன்னேன். ‘அதைச் சரிபண்ண என்ன ஐடியா தோணுதோ, அதைக் கதையா எழுது’ன்னு சொன்னார். மக்கள் எல்லோரும் ஒருமுறை தேர்தலைப் புறக்கணிக்கிற மாதிரி ஒரு கதையை எழுதிக் கொடுத்தேன். உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்டார். ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’னு மூணு படங்கள் அவர்கூட வேலை பார்த்தது, என் வாழ்க்கையில மிக முக்கியமான காலகட்டம்” என்பவர், தனது காதல் கதைக்கு யூ-டர்ன் அடித்தார்.
“டெல்லியில ‘எந்திரன்’ பட ஷூட்டிங் நடக்கும்போதுதான், என் மனைவி மீனாட்சியைப் பார்த்தேன். பேசிப் பழகி, கல்யாணம் வரைக்கும் கொண்டுவந்தேன். மனைவியின் அப்பா சின்ன வயசிலேயே இறந்துட்டார். என் மாமியார் சுபலட்சுமி கல்லூரியில் லைப்ரரியனா வேலை பார்க்கிறாங்க. என் கல்யாணத்துக்கு அவங்க கேட்ட ஒரே கேள்வி, ‘என்ன படிச்சி ருக்கீங்க’ங்கிறதுதான். நல்லவேளை, நான் படிச்சிருந்தேன். இல்லைன்னா, எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்காது.
எங்க கல்யாணத்துக்கு ஷங்கர் சார் குடும்பத்தோடு வந்தார். நேர்ல வரமுடிய லைன்னாலும், 40 நிமிடம் போன் பண்ணிப் பேசினார், ரஜினி சார்.”
‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரியிடம் 60-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்த ஆடம்தாசன், ‘பாம்புசட்டை’ அனுபவத்தைச் சொன்னார்.
“படம் பண்ணணும்னு முடிவெடுத்த பிறகு, நிறைய இடங்களில் கதை சொன்னேன். அத்தனை தயாரிப்பாளர்களைத் தாண்டி என் கதையைக் காதுகொடுத்துக் கேட்டது, மனோபாலா சார்தான். பிறகு, ராஜுமுருகன், ஹெச்.வினோத், ஜி.எம்.குமார் சார்கிட்ட கதை சொல்ல அனுப்பிவெச்சார். இந்த மூவர்ல ஒருத்தர் என் கதை நல்லா இல்லைன்னு சொல்லியிருந்தாலும், ‘பாம்புசட்டை’ தொடங்கப்படாமலே போயிருக்கும். படம் ரிலீஸானது, விமர்சன ரீதியா நல்ல படம்னு பெயர் வாங்கினாலும், படத்துக்கான ரெஸ்பான்ஸ் ஆடியன்ஸ்கிட்ட இருந்து சரியா வரலை.

இப்போ, பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷ’னுக்கு ஒரு படம் இயக்குற பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்கு. இன்னொரு தயாரிப்பாளருக்கு ஒரு ஹாரர் படத்தை இயக்கிக் கொடுக்கிற வேலைகளில் தீவிரமா இருக்கேன்.” ஆடம்தாசன் இயக்குநராக தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்த வேலையிலும், விதி கன்னாபின்னாவென விளையாடித் தீர்த்திருக்கிறது.
“எனக்கு மூணு அண்ணன்கள்னு சொன்னேன்ல... ரெண்டாவது அண்ணன் ஜேசுராஜன் மும்பையில இருக்கான். அவனுக்கு ரெண்டு குழந்தைகள். மூணாவது அண்ணன் யோவான், அம்மா இறந்ததுக்குப் பிறகு தொலைஞ்சுட்டான். இன்னைக்குவரை அவனைத் தேடிக்கிட்டிருக்கேன். ஒருவேளை, ‘டைட்டில் கார்டு’ இந்தத் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் இல்லையா... அதனால சொல்றேன். மூத்த அண்ணன் ஆசீர்வாதமும், அவருடைய மனைவியும் இறந்துட்டாங்க. அவங்களுக்கு முகேஷ், ராஜா, தெரசா, ஆனந்த்ராஜ்னு நான்கு குழந்தைகள். அவங்களை நானும் என் மனைவியும் படிக்க வச்சோம். இப்போ நல்ல நிலைமைல இருக்காங்க” என்பவர்,
“நான் மட்டுமில்ல, இன்னைக்கு என்னைச் சார்ந்தவங்களும் நல்லா இருக்க மிக முக்கியமான காரணம் என் அனுபவங்கள் மட்டுமல்ல, என் மனைவியும், மாமியாரும்தான். ‘நீ நல்லபடம்தான் எடுத்திருக்க. பொறுமையா இன்னும் பல நல்ல படங்களைப் பண்ணு’ன்னு சொல்ற மனைவி, ஏன் எதுக்குன்னு கேட்காமப் பணம் கொடுக்கிற மாமியார், ‘கிராமர் மிஸ்டேக்கோட இங்கிலீஷ் பேசாதப்பா’ன்னு எனக்கு இங்கிலீஷ் சொல்லித்தர்ற என் மகன், ரிதம். இதைவிட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை ஒருத்தனுக்குக் கிடைக்குமான்னு தெரியல!” என்பவருக்கு, ஒரு ஆசை மிச்சம் இருக்கிறது.
“மும்பையில எங்களுக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. அது இப்போ மண்ணோடு மண்ணா கெடக்கு. அதை மறுபடியும் கட்டி எழுப்பணும். அது சீக்கிரமே நடக்கத்தான் போகுது, அதுவரை படம் எடுக்கிற வேலைகளைப் பார்த்துக்கிட்டி ருப்போம்!” அவ்வளவு பாசிட்டிவாகப் பேசுகிறார், ஆடம்தாசன்.
- கே.ஜி.மணிகண்டன்