
‘பன்னி குட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக ஆவது இரண்டாவது இன்னிங்ஸ்“
‘திருப்பி அடிப்பது மட்டு மல்ல; விலகிச் செல்வதும் வெற்றி தான்!’ - ‘கிருமி’யில் இயக்குநர் அனுசரண் நடத்திய பாடம் இது. தஞ்சாவூர், சென்னை, கொல்கத்தா, ஆஸ்திரேலியா எனப் பரந்து விரிந்த பயணம் இவருடையது.

“கோயம்புத்தூர்ல இன்ஜினீயரிங் படிச்சேன். படிக்கிற காலத்துல நாடகம், ஸ்போர்ட்ஸ்னு எதையும் விட்டுவச்சதில்ல. கூடவே, நல்லாப் படிக்கிற பையனா இருந்தேன். அதனால, வீட்டுல என் முயற்சி களுக்கு எப்போவுமே பச்சைக்கொடிதான். இப்படி எதையும் முடிவெடுத்துப் பண்ணாம, இயல்பாவே சினிமா, நாடகம்னு சுத்திக்கிட்டிருந்த எனக்கு, டி.சி.எஸ் கம்பெனியில வேலை கிடைச்சது, கொல்கத்தா போயிட்டேன்!” வேலைக்குச் சேர்ந்த ஒன்றரை வருடத்திற்குப் பிறகு முக்கியமான ஒரு முடிவை எடுக்கிறார் அனுசரண்.
“வேலையில எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, இன்ஜினீயரிங் - சினிமா... எதுல ஆர்வம் அதிகம்னு கேட்டா, சினிமாதான் என் பதிலா இருந்தது. அதையே கரியரா மாத்திக்கலாம்னு முடிவெடுத்து, ‘சினிமா தொடர்பா படிக்க நினைக்கிறேன். நிச்சயம் நல்ல லெவலுக்கு வருவேன்’னு வீட்டுல டெக்னிக்கலா சொல்லிப் புரியவெச்சேன். நான் எடுத்த முடிவுல அவங்களுக்கு நம்பிக்கை அதிகமா இருந்தது’’ என்பவருக்கு, படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் பேட்டி பேருதவியாக இருந்திருக்கிறது.
“ ‘இயக்குநர் ஆகணும்னு நினைக்கிறவங்க, அனிமேஷன் கத்துக்கணும். அதன்மூலமா லைட்டிங், ஆர்ட் டைரக்ஷன், கேமரா, டைரக்ஷன்னு இயக்குநருக்குத் தேவையான எல்லாத்தையும் புரிஞ்சுக்கலாம்’னு சொல்லியிருந்தார் ஸ்பீல்பெர்க். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கிற ‘யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி’யில மாஸ்டர் ஆஃப் அனிமேஷன் படிச்சேன். கூடவே அமெரிக்காவுல இருக்கிற அனிமேஷன் துறை பிரபலங்கள்கிட்ட இருந்து கத்துக்கிற ‘ஆன்லைன் கோர்ஸு’க்கும் அப்ளை பண்ணிட்டு, ஆஸ்திரேலியா பறந்தேன்.

ஆஸ்திரேலியாவுல எனக்கு அறிமுகமானாங்க சரத்தும், சுரேஷும். சரத் என்கூட அனிமேஷன் படிச்சார். அவரும் நானும் சேர்ந்து ‘போதை’, ‘இதழ்’ங்கிற ரெண்டு குறும்படத்தை எடுத்தோம். ஆஸ்திரேலியாவில் நடக்கிற உலகிலேயே மிகப்பெரிய குறும்படப் போட்டியான ட்ராப்ஃபெஸ்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவெலுக்காக ‘இன்ஃபினிட்டி’ங்கிற குறும்படத்தை இயக்கினேன். அது அரையிறுதிக்குத் தேர்வானது. அதுவே எனக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் கொடுத்தது.
‘காக்கா முட்டை’ மணிகண்டனுடன் ஆன்லைன்ல பேசிப் பழகினேன். சில மியூசிக் வீடியோக்களும், ‘வாட்ச் டாக்’னு ஒரு குறும்படமும் இயக்கினேன். இவையெல்லாம் என் அறிவை வளர்த்துக்க உதவியா இருந்தது. 2009-ல் கல்விக் கடன் வாங்கி, ஆஸ்திரேலியா வந்தேன். ஐந்து வருடம் அங்கே இருந்தேன். மிடில்கிளாஸ் வாழ்க்கையை வாழந்துக்கிட்டிருந்த எங்க வீட்டுல நான் பணம் கேட்டுக் கஷ்டப்படுத்த முடியாதில்லையா... ஆன்லைன் கோர்ஸுக்கு ஃபீஸ் கட்டவும், சாப்பாடு - தங்குற செலவுக்கும் பணம் திரட்ட பகுதிநேரமா பல வேலைகள் பார்த்தேன்.
நம்மூர் சந்தை மாதிரி, சிட்னியிலும் வார இறுதியில் சந்தை போடுவாங்க. அந்தச் சந்தையில ஒரு ஷூ கடையில வேலை பார்த்தேன். காலையில 4 மணிக்கு வந்து, ‘டிரக்’ல சுருட்டிக் கொண்டுவர்ற கடையைப் பரப்பி விரிச்சு, ‘வொர்க்கிங் பூட்’ஸ்களைக் கூவிக் கூவி வித்தா, 100-150 டாலர் பணம் கொடுப்பாங்க. அந்த வாரத்துக்கு அந்தப் பணம் போதுமானதா இருக்கும்.

அடுத்து, பீட்சா டெலிவரி வேலை. டெலி வரிக்காகப் போகும்போது சிலசமயம், இனவெறிக்கு உள்ளாகியிருக்கேன். நான் இந்தியன்னு தெரிஞ்சா இடிக்கிற மாதிரி வருவாங்க, முறைச்சுப் பார்ப்பாங்க, சத்தம் போட்டுப் பேசுவாங்க... இப்படிச் சின்னச் சின்னதா இனவெறியை வெளிப்படுத்துவாங்க. இதுமாதிரி பிரச்னையில இருந்தெல்லாம் விலகித்தான் போகணும், ‘கிருமி’ ஹீரோ மாதிரி.
அங்கிருந்த சில எழுத்தாளர்கள் அவங்க கதையை சினிமாவா எடுக்க என்னை அணுகினாங்க. அங்கேயே இருந்திருந்தா, ஒருவேளை ஆஸ்திரேலிய சினிமாவுல இயக்குநரா அறிமுகமாகியிருப்பேன்!” என்பவருக்கு, முதல் பட ஐடியா தற்செயலாகத் தோன்றியிருக்கிறது.
“2013-ல் இந்தியா வந்தேன். ஒருநாள் பைக்ல சுத்திக்கிட்டிருந்தப்போ, ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என் வண்டியை நிறுத்தி லைசென்ஸ், ஆர்.சி புக் கேட்டு செக் பண்ணுனாங்க. ‘அட... இவங்களைப் பற்றி இதுவரை யாரும் படம் பண்ணலையே’ன்னு தோணுச்சு. ‘காக்கா முட்டை’ மணிகண்டனைச் சந்திச்சு, ‘இப்படி ஒரு கதை எழுதலாம்’ன்னு சொன்னேன். அவரும், நானும் சேர்ந்து ‘கிருமி’யை எழுதி முடிச்சோம். ஹீரோ கதிரும் ஓகே சொல்ல படம் டேக் ஆஃப் ஆச்சு.

என்மேல எனக்கு இருந்த நம்பிக்கையைவிட அதிகமா நம்பினார், தயாரிப்பாளர். நல்லபடியா எடுத்து ரிலீஸ் பண்ணினோம். ‘கிருமி’யைப் பார்த்தவங்க படத்தையும், கதையையும் பாராட்டிப் பேசினாங்க.” ‘கிருமி’க்குப் பிறகு, இயக்குநராக அல்ல படத்தொகுப்பாளராக பிஸியாக இருந்தார், அனுசரண்.
“ ‘கிருமி’க்கு நானே எடிட் பண்ணினேன். பிறகு, நண்பர்கள் பலரும் அவங்க படத்துக்கு எடிட்டிங் பண்ணிக்கொடுக்கச் சொன்னாங்க. மணிகண்டன் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’, ‘குற்றமே தண்டனை’, கதிர் நடிச்ச ‘சிகை’ மற்றும் ‘ஜூலை காற்றில்’ படங்களுக்கு எடிட்டிங் பண்ணினேன். நம்மளை நம்பினாலே நமக்கு ஒரு எனர்ஜி வரும்ல... அதோட வெளிப்பாடுதான் இந்த வேலைகளெல்லாம்!” எனச் சொல்லும் அனுசரணுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்திருக்கிறது. ‘பன்னி குட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார்.

“விதார்த்தை வெச்சு ‘ஆயிரம் பொற்காசுகள்’ படம் பண்ணிட்டிருக்கிற இயக்குநர் ரவி முருகையா எழுதிய கதையைத்தான், ‘பன்னி குட்டி’ங்கிற பெயர்ல படமா எடுக்கிறோம். இதுக்கு நான், மணிகண்டன், ரவி முருகையா மூணுபேரும் சேர்ந்துதான் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கோம். கருணாகரனுக்கும், யோகி பாபுவுக்கும் ஒரே நேரத்துல ஒரு பன்னிக்குட்டி தேவைப்படும். அதைத் தேடி ஓடுவாங்க. ஏன், எதுக்குங்கிறதுதான் படத்தோட கதை. ரொம்ப ஜாலியான ஒரு படமா இது இருக்கும்” என்பவருக்கு, அனிமேஷன் படம் ஒன்றைத் தமிழில் இயக்கவேண்டும் என்பது ஆசை.
“இப்போதைக்கு இல்லைன்னாலும், நிச்சயம் அப்படி ஒரு படத்தை எடுக்கணும். அது மட்டுமல்லாமல், என்ன படம் எடுத்தாலும் சரி, அப்பா பாராட்டும்படி எடுக்கணும். ஏன்னா அவர்தானே எனக்கு சினிமாவைப் பழக்கிவிட்டது!” என்கிறார் அனுசரண்.
- கே.ஜி.மணிகண்டன்