
இரும்பொறை அரசன், புதையல் வேட்டை, ஆவிகள் அட்ரா சிட்டி எனக் காமெடியில் கதகளி ஆடியவர், ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன்.
“சொந்த ஊர் திருப்பூர். ஊர்ல நாங்க வெச்சிருந்த சோடாக் கடைக்கு எதிரேதான், சிவன் தியேட்டர். தினமும் தியேட்டரைப் பார்த்தபடியேதான் பொழுது விடியும். படிக்கிறதைவிட, படம் பார்த்தது அதிகம். தியேட்டர்ல படம் ஓட்டுற புரொஜெக்டரை வீட்டுல பொம்மையா செஞ்சு பார்க்கிறது, தியேட்டர் கட்டி விளையாடுறதுன்னு திரிஞ்ச வயசுல சினிமாமேல அப்படியென்ன ஆசைன்னு புரியல.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது, ‘பல்லுக்குச்சி’ங்கிற பெயரில் காமெடியா ஒரு நாடகம் இயக்கினேன். என் நாடகத்தைப் பார்த்த ஜார்ஜ் வில்லியம் வாத்தியார், ‘எதிர்காலத்துல இதுதான் உனக்குச் சரிவரும்’ன்னு சொன்னார். பிறகு, ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் என் நாடகம் இருக்கும்.
அப்பா காளிமுத்து. 40 வருடத்துக்குமேல சோடாக் கடை வெச்சிருந்து, பெப்சி - கோக் வரவால கடையை மூடிய நல்லவர். இப்போ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றார். ரொம்பக் கண்டிப்பான ஆள். அதனால, என் சினிமா முயற்சிகளெல்லாம் அவருக்குத் தெரியாமதான் நடக்கும். அவருக்கு மட்டுமல்ல, அம்மா பரமேஸ்வரி, அக்கா கலைவாணி, மனைவி யசோதாவுக்குக்கூட நான் இயக்குநர் ஆகப்போற விஷயம் தெரியாது. ஓப்பனா சொன்னா, எனக்கே நான் இயக்குநர் ஆவேன்னு தெரியாதுதான்!” எங்கோ விதைக்கப்பட்ட சினிமா ஆர்வம், தானாகவே முளைத்திருக்கிறது.

“எனக்கு ஷங்கர் சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவருடைய படங்களைப் பார்த்து, அவர் பாணியிலேயே கதைகள் எழுதுவேன். சொன்னா ஆச்சர்யமா இருக்கும்... ஸ்கூல் படிக்கும்போது ஒரே ஒருமுறை சென்னைக்கு வந்தேன். வந்த எனக்கு, சென்னையின் பிரபலமான இடங்களைப் பார்க்கணும்னு ஆசையில்லை. ஷங்கர் சாரைப் பார்க்கணும்னு ஆட்டோக்காரர்கிட்ட சொல்லி, நுங்கம்பாக்கம் போனேன். என்ன சொல்லிட்டு உள்ளே போறதுன்னு பயம். வித்தியாசமா முயற்சி பண்ணலாம்னு ‘திருப்பூர்ல ஷங்கர் சாருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கணும். சாரை சந்திக்கலாமா’ன்னு ஆபீஸ்ல கேட்டேன். உள்ளே போனவர், ‘அவருக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லையாம்’னு அனுப்பி வெச்சுட்டார். ஷங்கர் சார் ஆபீஸைப் பார்த்த சந்தோ ஷத்துல திரும்பிட்டேன். என் மானசிக குரு அவர்!
அவருக்குப் பிறகு எழுத்தாளர் சுஜாதாவை ரொம்பப் பிடிக்கும். அவரோட ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ புத்தகத்தைப் படிச்சேன். அதுல ‘ஒருவரோட பாணியைப் பின்பற்றக்கூடாது’ன்னு சொல்லியிருந்தார், சுஜாதா. எனக்கும் அது சரின்னு பட்டது. எனக்கு உலக சினிமா ஆர்வம் கிடையாது. என் ரூட்டு கமர்ஷியல்; என் ஜானர் ஃபேன்டஸின்னு முடிவு பண்ணி, கதைகளை எழுதுவேன். அசோக், ரமேஷ், சதீஷ், லிங்கமூர்த்தி, சக்கரவர்த்தி... இந்த ஐவர் குழுதான் என் கதைகளைக் கேட்டுக் கருத்துகள் சொல்லும். இப்போவும் என்னை இயக்குநரா பார்க்காம, ‘ஊருக்கு எப்போ வர்ற’ன்னு எதிர்பார்க்கிற நண்பர்கள் இவங்க. ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமாரைச் சந்திக்காத வரை எனக்கு சினிமா ஆர்வம், ஆர்வமா மட்டுமே இருந்தது.டைட்டில் கார்டில் தங்கள் பெயரைக் கண்ட இளம் தலைமுறை இயக்குநர்களின் அனுபவத் தொடர்
“ரவிக்குமார் 5-ஆம் வகுப்பு வரை என்கூட படிச்ச நண்பர். நான் ப்ளஸ் டூ முடிச்ச சமயம். ரவிக்கும் சினிமா ஆர்வம் இருக்குன்னு தெரியவரவே, எங்க நட்புக்கு ரீ-ஃபிரெஷ்!

அவர் மூலமாதான் குறும்படம்னா என்னன்னு எனக்குத் தெரியும். ரவிக்குமார்கூட ஆல்ரெடி ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் நண்பரா இருந்ததால, நாங்க மூவரும் இணைந்தோம். எனக்குப் படிப்பு தலைக்கு ஏறல! டெக்ஸ்டைல் டிசைனிங் கத்துக்கிட்டு, பனியனுக்கு டேக் டிசைன் பண்ணித் தர்ற வேலையைப் பார்த்தேன். ரவிக்குமார் வெச்சிருந்த நூல்கடைக்கு எதிரேதான் என் டெக்ஸ்டைல் டிசைனிங் ஷாப்பும்!” ரவிக்குமார், ராம்குமார், சரவணன்... மூன்று பின்னல் நகரப் படைப்பாளிகளின் படைப்புகள் பின்னப்பட்ட இடம் இந்த இரு கடைகள்தான்.
“மூணுபேரும் அடிக்கடி சந்திப்போம், படம் பார்ப்போம், சினிமா பற்றி விவாதிப்போம். ரவி, ராம் ரெண்டுபேரையும் பார்த்து நானும் ‘வினை’ங்கிற குறும்படம் இயக்கினேன். அதுவும் அப்பாவுக்குத் தெரியாம! ராமும், ரவியும் ‘நாளைய இயக்குநர்’ மூலமா அடுத்த அடியை எடுத்து வெச்சாங்க. நான், ரவி - ராமின் குறும்படங்களுக்கான கதை விவாதத்துல இருந்தேன். இறுதிப்போட்டியில நான் எழுதிய ‘சைனா டீ’ கதையைக் குறும்படமா எடுத்தார், ராம். அந்தக் குறும்படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நானும் சினிமாக் கனவுக்கு இன்னொரு அடியை எடுத்துவெச்ச சந்தோஷம். அப்போதான் வீட்டுல பொண்ணு பார்த்து, கல்யாணம் பண்ணி வெச்சாங்க. மனைவி பெயர் யசோதா. எனக்கு ஷன்மிகா, ஹரி யுவன்னு ரெண்டு குழந்தைகள்.
‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ரவிக்குமார் ‘சூதுகவ்வும்’ படத்துல உதவி இயக்குநரா சேர்ந்துகிட்டார். ராம்குமார் ‘முண்டாசுப்பட்டி’யைப் படமாக்குற முயற்சிகளில் இருந்தார். எனக்கான சினிமாக் கதவு மறுபடியும் திறந்தது. எத்தனை பேருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு தெரியல, படம் இயக்கக் கமிட் ஆன ராம் நேரா எங்க வீட்டுக்கு வந்து, ‘நண்பன்’ படத்துல ஸ்ரீகாந்துக்காக விஜய் பேசுவாரே... அந்தமாதிரி, ‘உங்க பையனை என்கூட அனுப்புங்க. உதவி இயக்குநரா வேலை பார்க்கட்டும். நிச்சயம் நாங்கெல்லாம் நல்ல நிலைக்கு வருவோம்’னு அப்பாகிட்ட சொன்னார். அப்பாவுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது, உதவி இயக்குநர் ஆனேன்!” பிறகு, இயக்குநர் என்ற இலக்கை உடனடியாக எட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்தி ருக்கிறார் சரவணன்.
“நல்ல குடும்பம், நல்லா சம்பாதிக்கிற பையன்னுதான் எனக்குப் பொண்ணு கொடுத்தாங்க. சினிமாவுக்குப் போகப்போறார்’னு தெரிஞ்சிருந்தா, கொடுத்திருப்பாங்களான்னு தெரியாது. அதனாலேயே உடனே ஜெயிச்சு என்னை நிரூபிச்சாகவேண்டிய அவசியம் இருந்தது. ‘மரகத நாணயம்’ கதையை எழுதி முடிச்சேன். நண்பர் மூலமா டில்லி பாபு சாரைச் சந்திச்சு, கதை சொன்னேன். ‘மரகத நாணயம்’ கதை அவருக்குப் பிடிச்சிருந்தது. உடனே படத்தை ஆரம்பிச்சோம். ஆரம்பிச்ச வேகத்திலேயே படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டோம்.” சென்னையில் உதவி இயக்குநராகக் கால் பதிக்கும் முன்பே ஒரு படத்தைத் தயாரித்து இயக்கும் முடிவில் இருந்தவர் சரவணன்.

“சென்னை வர்றதுக்கு முன்னாடி, சின்ன பட்ஜெட்ல ஒரு படத்தைத் தயாரிச்சு இயக்கிடலாம்னு இருந்தேன். அதுக்காக, ‘அழகு நாச்சியார்புரம்’ங்கிற கதையையும் எழுதி வெச்சிருந்தேன். ரவியும், ராமும் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்குப் போகலைன்னா, ஒருவேளை என் ரூட்டு இப்படிப் போயிருக்கும்” என்பவர், இப்போது ‘மின்னல் வீரன்’ என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார்.
“இந்தக் கதையை விஜய் சேதுபதி சார்கிட்ட சொல்லியிருக்கேன், அவருக்கும் பிடிச்சிருக்கு. முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்குமான இந்த இரண்டு வருட இடைவெளியில சினிமாவை நான் புரிஞ்சுக்கிட்டேன், என்னை என் வீட்டுல எல்லோரும் புரிஞ்சுக்கிட்டாங்க” என்றவர், ரவிக்குமார், ராம்குமாருடனான நட்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரித்தார்.
“மூணுபேருமே நிறைய பேசியிருக்கோம், சண்டை போட்டிருக்கோம்... ஆனா, எப்போவுமே சினிமா எங்களைத் திரும்பவும் சேர்த்திடும்.
எங்க கனவுகளெல்லாம் இப்போ சாத்தியமாகிடுச்சு. பல படங்களைப் பார்த்து ரசிச்ச சிவன் தியேட்டர்ல இன்னைக்கு எங்களோட படமும் போடுறாங்க. ராம், தனுஷ் சார் படத்துல பிஸியா இருக்கார். ரவி, சிவகார்த்திகேயன் சார் படத்துல பிஸியா இருக்கார்.
‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில ராம்குமார் தேர்வாகியிருந்த சமயம். ரவிக்குமாரும், நானும் துணைக்குப் போனோம். ராம் கோட் மாட்டிக்கிட்டு உள்ளே போக, கடைசிநேரப் பரிசீலனையில ரவிக்குமாருக்கும் என்ட்ரி கிடைச்சது. இத்தனை நாள் கூடவே இருந்த நண்பர்கள் கண் முன்னாடி அடுத்த கட்டத்துக்குப்போறதைப் பார்க்கிற சந்தோஷம் ஒருபக்கம், ‘நாம தேங்கி நிற்கிறோமோ’ என்ற கேள்வி மறுபக்கம்னு ரொம்ப எமோஷனலான தருணம் அது. திரும்பி வந்தவங்க, ‘விட்டுப்போறோம்னு வருத்தமா’ன்னு கேட்டாங்க. ‘நானும் வரத்தானே போறேன்’னு ஏதோ ஒரு நம்பிக்கையில சொன்னேன். அந்த நம்பிக்கை வீண் போகல... இதோ இப்போ நானும் இயக்குநர்!” என நெகிழ்கிறார், ஏ.ஆர்.கே.சரவணன்.
- கே.ஜி.மணிகண்டன்