
செய்ற வேலையை ஒழுங்கா செஞ்சா, நம்மளோட கனவு நனவாகும்...
தயாரிப்பாளர் நண்பர், இசையமைப்பாளர் நண்பர், நடித்தவர்கள் சிலர் நண்பர்கள்... பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ‘கனா’வில் அருண்ராஜா காமராஜின் இயக்குநர் கனா மட்டுமல்ல; நண்பர்களின் கனாவும் ஈடேறியிருக்கிறது.
“குளித்தலைக்குப் பக்கத்துல இருக்கிற பேரூர், நான் பிறந்த ஊர். எனக்கு எட்டு வயசு இருக்கும்போது, குடும்பத்தோடு குளித்தலையில செட்டில் ஆகிட்டோம். அப்பா, காமராஜ். அம்மா, ஈஸ்வரி. ரெண்டுபேரும் யூனியன் டிஸ்பென்ஸரியில நர்ஸிங் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தாங்க” - ‘இயக்குநர்’ என்ற அடையாளத்தைப் பெற... குறும்பட இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், நடிகர் எனப் பல படிகளைக் கடந்தவர், அருண்ராஜா காமராஜ்.

“கடைக்குட்டியா இருந்ததனால, எனக்கு வீட்டுல பெருசா கண்டிப்பு இருக்காது. செல்லம் அதிகம். காசு அதிகம் இல்லைன்னு தெரியும்; ஆனா, நான் கேட்கிற பணம் வீட்டுல கிடைக்கும். அதனால, படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, ரொம்ப ஆக்டிவா இருந்தேன். முதல் மூணு ரேங்க்ல நான் வந்திடுவேன்; கிரிக்கெட்டே கதின்னு கெடப்பேன்.
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டியெல்லாம் அறிவிக்கும்போது, அப்பாகிட்ட சொல்வேன். அவர்தான் எனக்குக் குறிப்புகள் எடுத்துக் கொடுத்துப் போட்டிகள்ல கலந்துக்க வைப்பார். முதல் ரேங்க் எடுக்கும்போது கிடைக்கிற சந்தோஷத்தைவிட, பேச்சுப் போட்டியில ஜெயிச்சு டம்ளர், சோப்பு டப்பாவைப் பரிசா வாங்குற சந்தோஷம் அதிகம். ஜெயிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு, பிடிக்க ஆரம்பிக்கும்ல!
கல்சுரல் ஆக்டிவிட்டீஸ் அதிகமாச்சு. படிப்புல கொஞ்சம் ஆர்வம் குறைஞ்சது. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கிறதுக்காக அப்பா திருச்சிக்கு அனுப்பி வெச்சார்” என்பவருக்குப் பள்ளி வாழ்க்கையின் தாக்கம் தாறுமாறாக இருக்கிறது.
“ஸ்கூல் லைஃப்ல நடந்த சின்னச் சின்ன விஷயங்கள்கூட இன்னும் ஞாபகம் இருக்கு. இவங்கதான் நண்பர்கள்னு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு அத்தனை நண்பர்கள் கிடைச்சாங்க. ஒவ்வொரு பாடத்துக்கும் எனக்குக் கிடைச்ச ஆசிரியர்கள் தனித்துவத்துடன் இருந்தாங்க. ரொம்ப பாசிட்டிவான மனநிலையில இருந்த காலம் அது.
பெரும்பாலும் படம் பார்க்கிறதும், அந்தப் படத்தைப் பற்றி அக்குவேறு ஆணிவேறா விவாதிக்கிறதுமாவே அந்தப் பொழுதுகள் போச்சு. சினிமா பற்றிய உரையாடல்கள்தான் இன்னும் ஆர்வத்தை வளர்த்தது. ஆனா, அப்பாவுக்கு என்னை டாக்டர் ஆக்கிப் பார்க்கணும்னுதான் ஆசை. பயாலஜி படிச்சேன். நல்ல மார்க் எடுத்தா, அப்பா ஆசைப்பட்ட மாதிரி, மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்திடலாம்னுதான் இருந்தேன். மார்க் கம்மி.” என்பவர், பிறகு இன்ஜினீயர் ஆகியிருக்கிறார்.

“ஆக்சுவலா, எனக்கு என்ன சப்ஜெக்ட் எடுக்கிறதுன்னுகூடத் தெரியல. திருச்சி செயின்ட் ஜோசப் காலேஜ்ல ஒரு மாசம் கெமிஸ் ட்ரி படிச்சேன். இன்ஜினீயரிங் சீட்டு கிடைச்சதால, ‘டாக்டர் ஆகலைன்னா என்ன, இன்ஜினீயர் ஆகிடலாம்’னு அப்பாகிட்ட சொல்லி, ஜேஜே காலேஜ்ல சேர்ந்துட்டேன். இன்னைக்கு நான் இருக்கிற இந்த நிலைக்குக் காரணமான அடிப்படையை எனக்குக் கொடுத்தது, ஜேஜே காலேஜ் வாழ்க்கைதான். சிவகார்த்திகேயன், திபு நிணன் தாமஸ், ‘சிக்ஸர்’ படத்தோட தயாரிப்பாளர் தர், நான்... இப்படி கல்லூரித் தோழர்கள், இப்போ நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்னு பரவிக் கிடக்கோம்” என்றதோடு, கல்லூரியில் கற்றதையும் பெற்றதையும் சொன்னார்.
“ப்ளஸ் டூ வரைக்கும் பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சதனால, முதல் முறையா கோ-எஜுகேஷன்ல படிக்கப்போறப்போ குழப்பமான மனநிலை இருந்தது. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்ல பொண்ணுங்க சேரமாட்டாங்கன்னு நினைச்சு, என்னன்னே தெரியாத கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேர்ந்தேன். கூட படிக்கிற பொண்ணுங்கெல்லாம் ‘அண்ணா’ன்னு கூப்பிட்டு வெறுப்பேத்திக்கிட்டிருந்தாங்க. நானும் ‘இதயம்’ முரளி மாதிரி பல பொண்ணுங்களுக்குப் புரபோஸ் பண்ணினேன்; ஒண்ணுமே செட் ஆகல. இதை ஏன் சொல்றேன்னா... சின்ன வயசுல இருந்து நிறைய படம் பார்த்து, ‘வாழ்க்கையில நமக்கும் ஒரு காதல் கதை வந்துடாதா’ன்னு சுத்திக்கிட்டிருந்தேன். ரைட்டு... அது கிடைக்கல; கலையைக் காதலிக்க ஆரம்பிச்சேன்.
கிரிக்கெட் விளையாடினோம், பலரோடு நண்பர்கள் ஆனோம். ‘டிராமாடிக் கிளப்’ல சேர்ந்து காலேஜ் காலேஜா கல்ச்சுரஸ்ல கலந்துக்கிட்டோம், பலரோடு நண்பர்கள் ஆனோம். நான், சிவகார்த்திகேயன்னு எல்லோரும் காலேஜ்ல ஒரு கரகாட்ட கோஷ்டி மாதிரிதான் சுத்திக்கிட்டிருப்போம். போற இடங்கள்ல எல்லாம் ஜெயிச்சுப் பரிசும் வாங்குவோம்.
காலேஜ் முடிஞ்சு என்ன பண்றதுனு எந்த ஐடியாவும் இல்லை. ஆனா, சினிமாவைத் தொழிலா எடுத்துக்கிட்டா வாய்ப்பு இருக்குமான்னு ஒரு தயக்கம். சென்னைக்குப் போனோம். சிவா, நான், தர்னு சில நண்பர்கள் ஒரே ரூம்ல தங்கினோம், சத்யம் தியேட்டர்ல ஒரேநாள் ரெண்டு, மூணு படங்களைப் பார்த்து, தியேட்டருக்கு எதிரே இருக்கிற காபி ஷாப்ல அரட்டை அடிச்சோம். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில கலந்துகிட்டு ‘டைட்டில் வின்னர்’ ஆகி, எங்களுக்கெல்லாம் கலைக்கதவைத் திறந்துவிட்டது, சிவகார்த்திகேயன்தான். காலேஜ்ல கோ-பர்ஃபாமராச்சே... என்னையும் அந்த நிகழ்ச்சியில சேர்த்துக்கிட்டார். ‘கலக்கப்போவது யாரு 3’ல் கலந்துகிட்டேன். பிறகு, ‘சீஸன் 4’லேயும் இருந்தேன். கூடவே, ‘காமெடி லீக்’ நிகழ்ச்சியிலும் கலந்துகிட்டேன். அந்தச் சமயத்துல இயக்குநர் பி.வாசு சாரோட இணை இயக்குநர் பரத் சிம்மன் அறிமுகமானார். அவர் இயக்கிய விளம்பரப் படங்களுக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டு, சினிமாக் கதையையும் விவாதிச்சுக்கிட்டிருந்தோம்.” எனச் சொல்லும் அருண்ராஜா, ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற குறும்பட இயக்குநர்.
“குறும்படப் போட்டிக்காக ஏற்கெனவே ஒரு குறும்படம் எடுத்த அனுபவம் இருந்ததனால, ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு ‘ஈசல்’ங்கிற என் குறும்படத்தை அனுப்பிவெச்சேன், அந்தக் குறும்படத்துக்கும், அதுக்குப் பிறகு இயக்கிய ‘என் இனிய பொன் நிலாவே’ குறும்படத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். எனக்கு மட்டுமல்ல, என் குறும்படங்களுக்கும் பண உதவிகள் பண்ணுனவங்க நண்பர்கள்தான். பிறகு அந்தக் குறும்படங்கள் மூலமா இயக்குநர் நெல்சன்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். அப்போ அவர், சிம்பு நடிக்க ‘வேட்டை மன்னன்’ படத்தை எடுத்துக்கிட்டிருந்தார். கிட்டத்தட்ட நான்கு வருடம் அவர்கூட டிராவல் பண்ணினேன். ‘உனக்கும் கமிட்மென்ட்ஸ் இருக்கும்; அதைப் பாரு’ன்னு அவர் சொன்ன பிறகுதான், காலேஜ் சீனியர் சந்தோஷ் நாராயணனைச் சந்திச்சேன். படத்துக்குப் பாட்டு எழுதவெச்சு, டைட்டில் கார்டில் ‘பாடலாசிரியர் அருண்ராஜா’ன்னு இடம்பெறக் காரணமா இருந்தார். ‘ஜிகர்தண்டா’வுல வந்த ‘டிங் டாங்’ல என் வாய்ஸ் நல்லா இருக்குன்னு சொல்ல, ‘பாடகர் அருண்ராஜா’ ஆனேன். பிறகு, ‘ராஜா ராணி’ படத்துல ‘நடிகர் அருண்ராஜா’ ஆகிட்டேன். எல்லாமே எதுக்குன்னா, ‘இயக்குநர் அருண்ராஜா காமராஜ்’னு டைட்டில்ல வர்றதுக்கான ஆயத்தங்கள்தான்.
இதுக்கிடையில நான் பல தயாரிப்பாளர்களுக்குக் கதை சொன்னேன். சில கதைகள் ஓகே ஆகி, டேக் ஆஃப் ஆகல; சிலது பேச்சுவார்த்தையோடு நின்னுபோச்சு. சிலபேர், ‘சிவகார்த்திகேயன் உங்க ஃபிரெண்டுதானே. அவருக்கே படம் பண்ணலாமே’ன்னு அசால்டா சொல்லிடுவாங்க. ஆனா, சிவகார்த்திகேயனுக்கு இருக்கிற கமிட்மென்ட்ஸ், அவரோட மனநிலை... இதெல்லாம் பக்கத்துல இருந்து பார்க்கிற எங்களுக்குத் தெரியும். ஆனா, எனக்கு எங்கு முட்டி மோதியும் ஒண்ணும் நடக்கலைன்னா, அவர்தான் பண்ணுவார்னு நம்பிக்கை இருந்தது. ஒருநாள், ‘பாட்டு எழுதுறது, பாடுறதுன்னே சுத்தாத... எதுக்கு வந்தோமோ அதுல ஃபோக்கஸ் பண்ணு’ன்னு சொன்னார், ரெடி பண்ணி வெச்சிருந்த கதையைச் சொன்னேன். வேற ஏதாவது ஒரு தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி வைப்பார்னு நினைச்சேன். ‘எஸ்.கே புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் முதல் படமா வரப்போகுதுன்னு தெரிஞ்சு, ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

செய்ற வேலையை ஒழுங்கா செஞ்சா, நம்மளோட கனவு நனவாகும். பாட்டு எழுதும்போதும் சரி, பாடும்போதும் சரி, நடிக்கும்போதும் சரி... பெயர் வெளியில தெரியிற மாதிரி உழைக்கணும்னு இருந்தேன். ‘நெருப்புடா’ பாட்டு, ‘தெறி’ பாடல்கள் எனக்கு அடையாளத்தைக் கொடுத்தன. பாடல், நடிப்பு எல்லாம் சேர்ந்த வேலைதானே இயக்கம்... அதனால, நிச்சயம் நல்ல இயக்குநரா வரலாம்னு நம்பிக்கையோடு, ‘கனா’வைத் தொடங்கினோம். ‘கனா’வை, செலவைப் பத்திக் கவலைப்படாம தயாரிச்சார் சிவகார்த்திகேயன்” என்பவருக்கு, ‘கனா’வுக்கு முன் காதல் எபிசோடு ஒன்று இருக்கிறது.
“சிந்துஜா என் மனைவி. சென்னையில அழகுக்கலைப் பயிற்சி வகுப்புகள் எடுத்துக்கிட்டிருந்தாங்க. ரெண்டுபேரும் காதலிச்சு, 2013-ல வீட்டுல கன்வின்ஸ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு என்னைப் பார்த்துக்கிற முக்கியமான பொறுப்பு இருக்குன்னு, அவங்க வேலையை விட்டுட்டாங்க. சினிமாவை நோக்கி ஓடிக்கிட்டிருக்கும்போது, இடையில கிடைச்ச எனர்ஜி டிரிங்க், என் மனைவிதான்.
தெரிஞ்சோ தெரியாமலோ அப்பா காமராஜ்தான் எனக்குள்ளே கலை ஆர்வத்தைப் புகுத்தினார். அதை நான் பிடிச்சுக்கிட்டு ஓட எல்லாவகையிலும் உதவியா இருந்தது, நண்பர்கள் மட்டும்தான். சிவகார்த்திகேயன் சின்னத்திரையில சம்பாதிக்க ஆரம்பிச்சதுல இருந்து, உரிமையோடு அவரோட காசை நாங்க பங்கு போட்டுப்போம். நண்பர்கள் என் குறும்படங்களுக்கு உதவிகள் பண்ணுனாங்க. சிவா மட்டுமல்ல, இன்னும் பலபேர் இருக்காங்க. என் ஒட்டுமொத்த பலமே அவங்கதான். ‘அவன் ஜெயிக்கணும்; இவனும் ஜெயிக்கணும்’ங்கிற மேஜிக் மைண்ட் நட்புக்கு மட்டும்தான் வரும். நாங்கெல்லாம் கஷ்டப்பட்டோம்; சந்தோஷமா கஷ்டப்பட்டோம்!” என முடிக்கும் அருண்ராஜா, ஏன் சினிமாவில் ‘டைரக்டர்’ என்ற இலக்கைக் குறிவைத்தார் தெரியுமா?
“அப்பா டாக்டர் ஆக்கணும்னு ஆசைப்பட்டார், நான் சினிமாவுல சாதிக்கணும்னு ஆசைப்பட்டேன். ‘டாக்டர்’, ‘டைரக்டர்’ ரெண்டுமே D-ல ஆரம்பிச்சு, R-ல முடியுதுல்ல... அதனாலதான்!” சீரியஸாகத்தான் சொல்கிறார், அருண்ராஜா.
- கே.ஜி.மணிகண்டன்