
இது அம்மாவுக்கும் தெரியாது, அப்பாவுக்கும் தெரியாது. நீங்களும் அவங்ககிட்ட சொல்லிடாதீங்க!” எனச் சிரிக்கிறார் பிரம்மா...
‘குற்றம் கடிதல்’ மூலம் ஆசிரியர்களுக்கு ஒரு பாடம், ‘மகளிர் மட்டும்’ மூலம் ஆண்களுக்கு ஒரு பாடமென, தன் திரைப்படங்களைக் கருத்தாயுதங்களாக முன்னிறுத்தியவர், இயக்குநர் பிரம்மா. அவர் வாழ்க்கையும் சமூகம், சமூகம் சார்ந்த இடங்களாகவே இருக்கின்றன.
“பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில். அரசுப் பள்ளி தமிழாசிரியரான அப்பா 1971-லேயே சென்னையில் செட்டில் ஆகிட்டார். முதல் வகுப்பு தொடங்கி ப்ளஸ் டூ வரை எல்லா மாணவர்களுக்கும் அப்பா கோமதி நாயகம் அறிமுகமாகியிருப்பார். ஏன்னா, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தவர் அவர். அம்மா உமா பார்வதி, எதிர்பார்ப்பில்லா அன்புக்கு உதாரணம். இவங்களுக்கு நான் ஒரே பிள்ளை” எனத் தொடங்குகிறார் பிரம்மா.
“கலை இலக்கியத்துக்கு அதீதத் தீனி கிடைச்சது, லயோலா கல்லூரியில படிக்கும்போதுதான். படிச்ச இயற்பியல் பாடம் கொடுத்த அனுபவத்தைவிட, என்.எஸ்.எஸ் கேம்ப், கல்சுரல் புரொகிராம்ல போட்ட நாடகங்கள் கொடுத்த அனுபவம் அதிகம். சவுத் ஜோன், நேஷனல் காம்படீஷன்ல மைம், குறுநாடகங்கள் போட்டுப் பல பரிசுகள் வாங்கியிருக்கோம்.” கல்லூரியில் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் பிரம்மாவுக்கு நாடகங்களே வாழ்க்கை.

“எம்.பி.ஏ முடிச்சதும், ஒரு விளம்பர நிறுவனத்துல ஒன்றரை வருடம் வேலை பார்த்தேன். அந்த அனுபவத்துல நண்பர் உதய் பிரகாஷோடு சேர்ந்து ‘ப்ரொசினியம் தியேட்டர் & கிரியேட்டிவ் சொல்யூஷன்’ நிறுவனத்தைத் தொடங்கினோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான நாடகம், வீதி நாடகம், குறுநாடகங்கள் என நூற்றுக்கணக்கான நாடகங்கள் போட்டோம். பிறகு, நான் தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொஸைட்டியில வேலைக்குச் சேர்ந்தேன். ‘தமிழ்நாடு முழுக்க இருக்கிற 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியா போய் ‘ரெட் ரிப்பன் கிளப்’பைச் செயல்படுத்தினோம். பிறகு, ‘அப்போலோ ஹெல்த் ரிசோர்ஸ்’ல ஹெச்.ஆர் வேலைக்குச் சேர்ந்தேன்” என்பவருடைய சினிமாக் கனவிற்குச் சிறகு கொடுத்திருக்கிறது, ஒரு என்.ஜி.ஓ நிறுவனம்.
“குழந்தைகள் நலனுக்காக இயங்குகிற ‘நாளந்தா வே ஃபவுண்டேஷன்’ல புராஜெக்ட் ஹெட் வேலை. காஷ்மீர்ல ஆறு மாசம், பீகார்ல நாலைஞ்சு மாசம்... இப்படியேதான் போச்சு அங்கிருந்த மூணு வருடமும். பெற்றோரை இழந்த குழந்தைகள், குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகள், குற்றம் நிரூபிக்கப்பட்ட குழந்தைகள்... இப்படிப் பலவகையான குழந்தைகள் இருக்காங்க. இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில கலைகள் மூலமா மாற்றத்தைக் கொண்டுவர்றதுதான் எங்க வேலை. இங்கே வேலை பார்க்கும்போது, நூறு ‘ஸ்பெஷல்’ குழந்தைகளை வெச்சு நான் இயக்கிய ‘பாட்டி வடை காக்கா நரி’, ‘அலிபாபாவும் 40 போலீஸும்’ உள்ளிட்ட நாடகங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நடிகர் பாவெல் நவகீதனும் இங்கே வேலை பார்த்தவர், லயோலாவுல என் ஜூனியர். நிறைய குறும்படங்கள் எடுத்திருக்கார், என் நாடகங்களுக்கு உதவியா இருந்திருக்கார். அவரை நடிக்கவெச்சு ‘பழைய சித்திரம் புதிய சுவர்’ங்கிற குறும்படத்தை இயக்கினேன்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷனுக்கு ஒரு ஆவணப்படம் இயக்கிக் கொடுத்திருக்கேன். இவை தவிர, சில குறும்படங்கள், ஆவணப் படங்களையும் இயக்கினேன்” என்பவருக்கு, இயக்குநராகும் முடிவு நண்பருடனான ஒரு மாலைநேர உரையாடலில் கிடைத்திருக்கிறது. ஆனால், அதற்கு முன் ஒரு பெரிய கதை இருக்கிறது.
“ஒரு வேலையில இருந்து இன்னொரு வேலைக்குப் போறதுக்கு முன்னாடி கிடைக்கிற இடைவெளியிலும் நான் ஃப்ரீலான்ஸரா இயங்கிக்கிட்டுதான் இருந்தேன். ‘International Justice Mission’ என்.ஜி.ஓ-வுக்காக, கொத்தடிமை ஒழிப்புப் பிரசாரம் பண்ணியிருக்கேன். தமிழ்நாட்டுல இன்னும் பல லட்சம் கொத்தடிமைகள் இருக்காங்க.

இதுவரை அரிசி மில், செங்கல் சூளைகளில் இருந்த கொத்தடிமைகள் முறை, இப்போ டெக்ஸ்டைல் இன்டஸ்ட்ரிக்கு வந்திருக்கு. திருப்பூர்ப் பகுதிகள்ல இருக்கும் ‘சுமங்கலி திட்ட’மும் கொத்தடிமை முறைதான். இதை ஆய்வு பண்ற ஒரு என்.ஜி.ஓ-தான், IJM. தமிழ்நாடு முழுக்க இருக்கிற கொத்தடிமைகளை மீட்டு, அவங்களுக்கு ஒரு மாசம் பயிற்சி கொடுத்து, அவங்க நிலையை அவங்களுக்கு எடுத்துச் சொல்ற வேலை. மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமைகளை வெச்சு நான் வீதி நாடகங்கள் போட்டேன். கொத்தடிமைகளா இருக்கிற பெரும்பாலானோர் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அப்பழுக்கற்ற மனிதர்களான அவங்களுக்கு, ‘நாம கொத்தடிமைகளா இருக்கோம்’ங்கிற விஷயம் தெரியாதுதான். மேற்கூரை இல்லாத, கழிப்பிடம் இல்லாத அவங்க பகுதியில தங்கி, அவங்களோடு சேர்ந்து வீதி நாடகங்கள் நடத்திய அந்த அனுபவங்கள் என்னைக்கும் எனக்குப் பொக்கிஷம்!” என்றவர், ‘குற்றம் கடிதல்’ உருவான கதைக்குத் திரும்பினார்.
‘`நாளந்தா வே ஃபவுண்டேஷன் வேலையை விட்ட பிறகு, தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொஸைட்டியில் ‘இணை இயக்குநர்’ வேலைக்குத் தேர்வெழுதி, பாஸ் பண்ணி, மறுபடியும் அங்கே வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஆனா, அந்த வேலை எனக்கு செட் ஆகல. ஒருநாள் காலையில வேலையை ரிசைன் பண்ணணும்னு முடிவெடுத்து, அன்னைக்குச் சாயங்காலமே வேலையை விட்டுட்டேன். அந்த மாலையில் நண்பர் கிறிஸ்டி சிலுவப்பனைச் சந்திச்சேன். என் நாடகங்களின் ரசிகரா இருந்து நண்பரானவர் கிறிஸ்டி. நாடகம் பார்க்க வந்த கிறிஸ்டி சில நாடகங்களில் நடிச்சார், சில நாடகங்களைத் தயாரிச்சார், பிறகு சில நாடகங்களை இயக்கவும் செஞ்சார். கலைமீது தீராக்காதலோடு திரியற நபர். ‘நீங்க சினிமா எடுங்க’ன்னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் தயாரிக்க ‘ஜஸ்ட் வோட்’ என்ற குறும்படத்தை நான் இயக்கியிருக்கேன்.
அந்த மாலைநேரச் சந்திப்பில் ‘சில லட்சத்துல ஒரு படம் பண்ணுங்களேன்; நானே தயாரிக்கிறேன்’னு சொன்னார் கிறிஸ்டி. சரின்னு சொல்லி, 20 நாள்ல ‘குற்றம் கடிதல்’ கதையை எழுதிட்டேன், அவருக்கும் அந்தக் கதை பிடிச்சிருந்தது. பிறகு, படத்தை முடிச்சுட்டு என்ன பண்றதுன்னு தெரியல. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அந்தப் படம் கேட்பாரற்றுக் கிடந்தது.” பிறகென்ன, மீண்டும் வேலைக்குத் திரும்பியிருக்கிறார் பிரம்மா. இந்த முறை, ஊரக வளர்ச்சித்துறையில் ‘யுனிசெப் கன்சல்டன்ட்’ பணி.
“ ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு தேசிய விருது அறிவிச்சாங்க. கூட வேலைபார்த்த எல்லோரும் ஒரு கிளாப் போர்டைப் பரிசா கொடுத்து, ‘சினிமா எடுங்க’ன்னு அனுப்பி வெச்சுட்டாங்க. பிறகு, ‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கினேன். இந்த நீண்ட அனுபவத்துல கல்லூரி நண்பர்கள் சுரேந்திரன், சிவக்குமார், உதய பிரகாஷ், சவுண்ட் டிசைனர் ஆண்டனி பி ஜெயரூபன், ‘மைம்’ கோபி, ஆர்ஜே ‘அன்பான’ அருண், குறிஞ்சி, பரணீஸ்வரன், வாசுதேவன்... இப்படிப் பல நண்பர்கள் எனக்குப் பக்கபலமா இருந்திருக்காங்க” என்றவருக்குப் பத்திரிகைத்துறை அனுபவமும் இருக்கிறது.

“நானும் ரூபனும் லயோலாவுல ‘கரங்கள்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். தலையங்கம் அதுல ரொம்ப ஸ்பெஷல். ஒருநாள் ஈஸ்டருக்கு லாரி நிறைய ஆடுகள் காலேஜுக்கு வந்து இறங்குறதைப் பார்த்து, அடுத்த இதழில் ஒரு ஆட்டுக் குட்டியை சிலுவையில் அறைந்த மாதிரி படம் வரைஞ்சு, ‘இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்; ஆடுகள் சாகின்றன’ன்னு தலையங்கம் எழுதினோம்; பத்திரிகையை நிறுத்தவேண்டியதாப்போச்சு. தவிர, கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது, கார்ட்டூனிஸ்ட் மதன் ஆசிரியரா இருந்த ‘விகடன்’ மாலைநேரப் பத்திரிகைக்கு நிருபர்கள் தேவை விளம்பரத்தைப் பார்த்து அப்ளை பண்ணினேன், தேர்வாகி எட்டு மாசம் வேலையும் பார்த்தேன். மீடியாவுல நான் வாங்கிய முதல் சம்பளம், விகடன் கொடுத்தது” இத்தனை பரபரப்புக்கிடையில் 2008-ல் பிரம்மாவுக்குத் திருமணம் முடிந்திருக்கிறது.
“பொண்ணு பார்க்கும்போது ஒரு இடத்துல வேலை, நிச்சயதார்த்தம் நடக்கும்போது வேறொரு வேலை, கல்யாணம் ஆகும்போது இன்னொரு வேலை... இப்படித்தான் இருந்தது என் வாழ்க்கை. ‘இப்படித்தான் இருக்கும் நம்ம வாழ்க்கை’ன்னு மனைவி ஐஸ்வர்யாகிட்ட முன்கூட்டியே சொல்லியிருந்ததால, அவங்க எப்பவுமே என்னைப் புரிஞ்சுப்பாங்க. எங்களுக்கு, அகில் பார்த்திபன், ஆதவன்னு ரெண்டு பசங்க. கடந்துவந்த கதையெல்லாம் கேட்டா, ‘இவன் வேலை பார்த்தானா, படிச்சானா, ஊர் சுத்துனானா’ன்னு ஒரு கன்ஃபியூஷன் வருதுல்ல... நான் அப்படித்தான். எனக்கு மனிதர்களோடு பேசவும், பழகவும் ரொம்பப் பிடிக்கும். என்ன வேலை பார்த்தாலும், பரபரப்பா ஓடிக்கிட்டிருப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு, இங்கே நிதானம் தேவை, பொறுமை அவசியம்னு புரிஞ்சிருக்கு. அதுக்கு இப்போ பழகிட்டிருக்கேன். பெரிய ஹீரோவுக்கு ஒரு படம், ஒரு பாலிவுட் முயற்சி, தெலுங்குல ஒரு படம், இதுக்கெல்லாம் முன்னாடி ‘குற்றம் கடிதல்’ மாதிரி எனக்காக ஒரு சினிமா... இந்த வேலைகள்தான் இப்போ போய்க்கிட்டிருக்கு.
அப்பா சின்ன வயசுல கலை இலக்கியத்துல ஆர்வமா இருந்திருக்கார். ரஹ்மான் இசையில் உலகத் தமிழ் மாநாட்டுக்காக 2 பாடல்கள் எழுதியிருக்கார். ஓய்வுக்குப் பிறகு இப்பவும் உழைக்கிறார். ஆனா, வாழ்க்கைன்னா என்ன, உணர்வுகளை அணுகுவது எப்படி, ஒரு செயலை அதீத அர்ப்பணிப்போடு செய்வது எப்படின்னு நான் கத்துக்கிட்ட கிரியேட்டிவிட்டி அம்மாகிட்ட இருந்துதான். இது அம்மாவுக்கும் தெரியாது, அப்பாவுக்கும் தெரியாது. நீங்களும் அவங்ககிட்ட சொல்லிடாதீங்க!” எனச் சிரிக்கிறார் பிரம்மா.
- கே.ஜி.மணிகண்டன்