
‘படைவீரன்’ படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னால், படத்தைவிட எமோஷனலான கதை ஒன்று இருக்கிறது.
‘சாதி முக்கியமா, மனிதம் முக்கியமா’ என்ற கேள்வியைப் ‘படைவீர’னாக முன்வைத்தவர், இயக்குநர் தனா. கரிசல்காட்டிலிருந்து கிளம்பிய இவரது பயணத்தில் மனிதர்கள் குறைவு; அனுபவங்கள் அதிகம்!
“தேனிக்குப் பக்கத்துல இருக்கிற சின்னமனூர்ல பிறந்தேன். வீட்டுல நான் கடைக்குட்டி. ஸ்கூல் படிக்கும்போதே நடிப்பு எனக்குப் பிடிக்கும். பள்ளியில ஒருமுறை நாடகம் நடத்தும்போது, ஹீரோயின் கேரக்டர்ல நடிச்சதுதான் என் முதல் நடிப்பு அனுபவம். அதுக்குப் பிறகு பல நாடகங்கள்ல நடிச்சேன்.
கடைக்குட்டிங்கிறதால எனக்கு அத்தனை வாய்ப்புகளும் கிடைச்சது. எங்க வீட்டுல எல்லோருக்குமே புத்தகங்கள் படிக்கிற பழக்கம் இருந்தது. ஆனந்த விகடன்ல வர்ற சிறுகதைகளைத் தொடர்ந்து படிச்சதால, நானும் கதை எழுதிப் பழகினேன்.

எங்க ஊர்ல இருக்கிற வெங்கடேஷ்வரா தியேட்டர்ல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்தான் டிக்கெட் கிழிச்சுக்கிட்டிருந்தார். அந்தத் தியேட்டர்ல டிக்கெட் எடுக்காம, படுத்துக்கிட்டே நூற்றுக்கணக்கான படத்தைப் பார்த்திருக்கேன். அப்போதான், மணிரத்னம் படங்கள்மீது ஈர்ப்பு வந்தது. ‘உயிரே’ படத்தை ஒரே நாள்ல நான்கு காட்சியையும் பார்த்திருக்கேன். எதிர்காலத்துல மணிரத்னம் சாருக்குப் பக்கத்துல இருந்து, அவரோட மேக்கிங் மேஜிக் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டிருக்கேன்” என்பவருக்கு, சூழல் அதற்கான பாதையை அமைத்துக்கொடுத்தி ருக்கிறது.

“சென்னைக்கு வந்த பிறகு மணிரத்னம் சார் வீட்டைத் தேடிப் போனேன். ஆனா, இன்டர்நெட் எல்லாம் இல்லாத அந்தக் காலத்துல அவர் அட்ரஸைக் கண்டுபிடிக்க முடியல. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எழுத்தாளர் ஞாநி அறிமுகமானார். அவரோட ‘பரீக்ஷா’ நாடக்குழுவில் சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சேன். நல்ல வேலை... நல்ல சம்பளம்... ‘போதும் இந்த வாழ்க்கை’ங்கிற மனநிலையில இருந்தப்போதான், எழுத்தாளர் ஜெயமோகனைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. நிறைய உரையாடல்களுக்குப் பின்னே அவரோட நட்புவட்டத்துல நானும் ஒருத்தன் ஆனேன்’ என்பவருக்கு, ஞாநி, ஜெயமோகன் வரிசையில் மணிரத்னமும் ஒருநாள் அறிமுகமாகிறார்.

“சென்னைக்கு ஒருமுறை ஜெயமோகன் வந்திருந்தப்போ, ‘மணிரத்னம் ஆபீஸுக்குப் போகணும், கார் புக் பண்ணித் தர்றியா’ன்னு கேட்டார். நான் அட்ரஸ் தேடித் திரிஞ்ச ஆதர்ச நபராச்சே! ‘நானே கூட்டிக்கிட்டுப் போறேன் சார்’னு சொல்லிட்டு, அவரை மணிரத்னம் சார் ஆபீஸ்ல விட்டுட்டு வந்தேன். அதுக்குப் பிறகு அடிக்கடி அதையே வேலையா வெச்சுக்கிட்டேன். பிறகு ஒருநாள், ‘உங்க நண்பர்களைக் கூட்டிக்கிட்டு வாங்க, பேசலாம்’னு மணி சார் ஜெயமோகன் சார்கிட்ட சொல்ல, நானும் போனேன். ‘உதவி இயக்குநரா சேரணும்’னு நினைச்ச நான், அன்னைக்கு ஒரு ரசிகனா அவர் படங்களைப் பற்றிப் பேசிட்டுக் கிளம்பிட்டேன். சில காலத்துக்குப் பிறகு, எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டு விழாவைத் தொகுத்துவழங்கினேன். ‘நல்லாப் பண்ணீங்க’ன்னு மணி சார் பாராட்டினார்.
ஒருமுறை புத்தகக் கண்காட்சியில நானும் மணி சாரும் பேசுற வாய்ப்பு நிறையவே கிடைச்சது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவர்கூடவே இருந்தேன். திடீர்னு ஒருநாள் ஆபீஸ்ல இருக்கும்போது, எனக்கொரு மெசேஜ். ‘நாளைக்கு அலுவலகத்துக்கு வரமுடியுமா... பை மணி’ன்னு இருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படமா பண்றதுக்காக, தமிழ் இலக்கியங்கள் படிக்கிற என்னைக் கூப்பிட்டிருந்தார். ஏழு வருடம் வேலை பார்த்த சாஃப்ட்வேர் துறையை விட்டுட்டு, மணிசார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்துட்டேன்.

‘பொன்னியின் செல்வன்’ கதை உருவாக்கத்துல தொடங்கி, ‘ஓ காதல் கண்மணி’ வரை ‘உதவி இயக்குநர் டு இணை இயக்குநர்’ ஆகுறவரை கூடவே இருப்பேன்னு சொல்லி, அவர்கிட்ட வேலை பார்த்தேன். ‘ஒழுங்கு மரியாதையா வெளியே போய் படம் பண்ணு’ன்னு அவர் சொன்ன பிறகுதான், என் முதல்பட வேலையைத் தொடங்கினேன்” என்பவரது முதல் படம்தான், ‘படைவீரன்.’ இந்தப் படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னால், படத்தைவிட எமோஷனலான கதை ஒன்று இருக்கிறது.
“எங்களைக் கஷ்டம் தெரியாம பார்த்துக்கிட்டவர், மணிரத்னம். கிட்டத்தட்ட, ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ல நாங்க ஒரு தீவு மாதிரிதான் வாழ்ந்தோம். வெளியே வந்த பிறகுதான் எனக்கு சினிமாவோட இன்னொரு முகம் தெரிஞ்சது. கிட்டத்தட்ட ஒரு வருடம். எந்த நடிகரையோ, தயாரிப்பாளரையோ சந்திச்சுப் பேசுற சூழல்கூட எனக்குக் கைகூடி வரல. ‘உன்னை இயக்குநரா முதல்ல நினை. தினமும் காலையில எழுந்ததும் யாரையெல்லாம் சந்திக்கணும்னு பட்டியல் போட்டு, பார்த்துட்டு வா’ன்னு சொல்வார், மணி சார். பட்டியல்தான் நீண்டதே தவிர, அப்பாயின்ட்மென்ட் கிடைக்கல!” என்பவருக்கு, குடும்பமே முன்னின்று உதவிகளைச் செய்திருக்கிறது.
“பள்ளிக்காலத்துல என்னை பாதிச்ச கலவரத்தை அடிப்படையா வெச்சு ‘படைவீரன்’ கதை எழுதியிருந்தேன். எங்க அண்ணனுக்கு அந்தக் கதை பிடிச்சிருந்தது. ‘இந்தப் படம் நிச்சயம் ஹிட்டாகும். ஆனா, பெரிய ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் கிடைக்கிறது கஷ்டம். அதனால, நம்ம வீட்டுல 30 கல்யாணம் பண்றமாதிரி நினைச்சுக்கிட்டு, படத்தை நாமளே தயாரிக்கலாம்’னு சொன்னான். அண்ணனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள். அப்பாவுக்குப் பிறகு அவரோட பிசினஸை நல்லபடியா கொண்டுவந்து, நல்லா சம்பாதிச்சான். அது மொத்தத்தையும் என்னை இயக்குநர் ஆக்குறதுக்காக, ரிஸ்க்ல வெச்சான். அடுத்த மாசமே ஷூட்டிங் போனோம். படத்தையும் நல்லபடியா எடுத்து முடிச்சு ரிலீஸ் பண்ணினோம்.
100-க்கு 99 பேர் படம் நல்லா இருக்குன்னுதான் சொன்னாங்க. ஆனா, லட்சம் பேருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய படத்தை 100 பேருக்கு மட்டுமே கொண்டுபோய்ச் சேர்த்தது, எங்க தப்புதான். எனக்கு அப்போ சினிமா பிசினஸ் தெரியல.
ஒரே மகிழ்ச்சி என்னன்னா, நான் வளர்ந்த சின்னமனூர்ல இந்தப் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ்! விமர்சன ரீதியான வெற்றி, வசூல்ல இல்லைன்னாலும், எனக்கு இது ஒரு ஆறுதல். பிறகு, மணிரத்னம் சார் கூப்பிட்டு, ‘எப்பவுமே ஒரு படத்துக்குக் கதை எழுதும்போது, இந்தப் படம் ரிலீஸாக என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு யோசி. அப்போதான் அந்தப் படம் ஜெயிக்கும்’ன்னு தயாரிப்பு நுணுக்கங்களைச் சொன்னார்” என்பவர், இப்போது மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

“ ‘படைவீரன்’ படத்துக்குப் பிறகு கன்னடத்துல ‘தேஹி’ங்கிற படத்தை இயக்கினேன். இப்போ, போஸ்ட் புரொடக்ஷன்ல இருக்கிற ‘வானம் கொட்டட்டும்’ படக் கதையை நானும், மணி சாரும் சேர்ந்துதான் எழுதினோம். கதைமேல மட்டுமில்ல, என்மேலேயும் அவருக்கு நம்பிக்கை இருக்கிறதால, இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார். இந்தப் படத்துல அவர் கத்துக்கொடுத்த கிரியேட்டிவிட்டியோடு பிசினஸையும் கத்துக்கிறேன்” எனச் சிரிப்பவருக்கு, இரண்டு பெருமிதங்கள்.
“‘கிழக்குச்சீமையிலே’ பட சமயத்துல பாரதிராஜா ஒருமுறை சின்னமனூருக்கு வந்திருந்தார். அவரைப் பார்க்கப்போய் முடியாம திரும்பிட்டேன். ‘படைவீரன்’ல பாரதிராஜாவை நடிக்கவைக்க மிக முக்கியமான காரணம், ‘எங்கே அவரைப் பார்க்கமுடியாமத் திரும்பினேனோ, அதே ஊர்ல அவரை இயக்கணும்’ங்கிற என் ஆசைதான்.
இன்னொன்னு, ஒரு படம் இயக்கி, அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றா ல் என்ன கிடைக்குமோ, அது என் படம் வசூல்ரீதியான வெற்றியைப் பெறலைன்னாலும் கிடைச்சது. அந்த நம்பிக்கையைக் காப்பாத்தணும்னுதான் ஓடிக்கிட்டிருக்கேன். நிச்சயம் காப்பாத்துவேன்!” என்கிறார் தனா.
- கே.ஜி.மணிகண்டன்