
மனிதர்களுக்குள் இருக்கும் சபலம், ஏதோ ஒரு குடும்பத்திற்குப் பெரிய பாதிப்பைக் கொடுக்கலாம் என்ற உண்மையை ஜூம் போட்டுக் காட்டியவர் ‘லென்ஸ்’ பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
“பாலக்காடுதான் சொந்த ஊர். அப்பா ராதாகிருஷ்ணன். சென்னை ஆவடியில் டிஃபென்ஸ்ல வேலை பார்த்தார். அம்மா, சரோஜினி. வீட்டுக்கு நான் ஒரே பையன். நாங்களும் இங்கேதான் வாழ்ந்தோம். ஆவடி சி.வி.ஆர்.டி ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். வில்லிவாக்கம் செயின்ட் ஜோன்ஸ் ஸ்கூல்ல ப்ளஸ் டூ முடிச்சேன்.

ஸ்கூல் படிக்கும்போதே எனக்கு நாடகங்கள்மீது காதல். காரணம், பாண்டியன் வாத்தியார். அவர் எழுதுற நாடகங்களுக்கு என்னைத்தான் முக்கியமான கதாபாத்திரத்துல நடிக்க வைப்பார். முதல்முறையா மேடையில ‘டிரெயின்ல காலையும், மாலையும் டீ விற்கிறவங்களோட மேனரிசம் எப்படி இருக்கும்’னு நான் பண்ணுன மோனோ ஆக்டிங்கிற்கு செம ரெஸ்பான்ஸ். அந்தக் கைத்தட்டல்ல கிடைச்ச ஆர்வம், கலைகள்ல ஃபோக்கஸ் பண்ண வெச்சது. ஓவியம் வரையுறதுல ஆர்வம் வந்தது. நிறைய வரைஞ்சேன். அப்பாகூட வேலை பார்த்த ராஜூ, நல்லா மிமிக்ரி பண்ணுவார். அவர்கிட்ட மிமிக்ரி கத்துக்கிட்டு ஸ்கூல் நிகழ்ச்சிகளில் கலைஞர், நம்பியார், ரஜினி, ஜனகராஜ்னு பலருடைய குரல்களை மிமிக்ரி பண்ணியிருக்கேன்!” என்றவருக்கு, இயற்பியல்மீது தீராக் காதல்.
“தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பாடம். அதனால, இயற்பியல் ரொம்பப் பிடிக்கும். கேரளாவுல இருக்கிற என்.எஸ்.எஸ் காலேஜ்ல படிச்சேன். அங்கேயும் நாடகங்கள், மைம்ஸ், பெயின்டிங்னு போச்சு வாழ்க்கை. என் மனைவி சிந்துவைச் சந்திச்சது, காலேஜ் படிக்கும்போதுதான். அவங்க காமர்ஸ், நான் பிசிக்ஸ், எங்களுக்குள்ளே வொர்க் அவுட் ஆனது கெமிஸ்ட்ரி!” காதலைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, எம்.எஸ்ஸி இயற்பியல் படிக்க சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

“இயற்பியல் படிக்கலாம்னு நினைச்சுதான் வந்தேன். ஆனா, எல்லாக் காலேஜிலேயும் ஃபீஸ் அதிகமா இருந்ததால என்.ஐ.ஐ.டி-யில் ‘GNNIT’ புரொகிராம்ல சேர்ந்துட்டேன். இரண்டு வருடப் படிப்பு. ஆனா, ஆறு மாசம்தான் நான் படிச்சேன். அரக்கோணத்துல ஒரு டயர் கம்பெனியில குவாலிட்டி சூப்ரவைசரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். மார்னிங், ஈவினிங், நைட்... இப்படி இருந்தது ஷிஃப்ட். அந்தச் சூழலும் பிடிக்கல; வாழ்க்கையும் டயர் மாதிரி ஆகிடுமோன்னு பயந்து, வேலையை விட்டுட்டேன். அதுக்குப் பிறகு ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஸ்கூல்ல என்னோட ஜூனியரா இருந்த பிரதீப்பும் நானும் நெருங்கிய நண்பர்கள். ரெண்டுபேரும் ஒண்ணாவே வேலைக்குச் சேர்ந்தோம், ஒண்ணாவே ‘எம்.சி.ஏ’ படிச்சோம். ஒண்ணாவே சுத்துனோம், குடிச்சோம். இதுக்கிடையில 1998-ல எனக்கும், சிந்துவுக்கும் கல்யாணமும் நடந்து முடிஞ்சிருந்தது.” சென்னையைச் சுற்றிக்கொண்டிருந்தவரை, அமெரிக்கா அழைத்திருக்கிறது.
“சியாட்டில்ல இருக்கிற ஒரு கம்பெனியில வாய்ப்பு வந்தப்போ உடனே கிளம்பிட்டேன். சாஃப்ட்வேர் துறை வீழ்ச்சியால ஒரு வருடத்துல என் வேலை போச்சு. பிறகு, அங்கேயே அலைஞ்சு திரிஞ்சு வேறொரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல பாஸ் கிடைச்சார். கார் வாங்கினேன், வீடு வாங்கினேன். 2003-ல பையன் ‘சித்தாந்த்’ பிறந்தான். அதேசமயம் நடிப்பு ஆர்வத்தால ‘சியாட்டில் ஆக்டிங் ஸ்கூல்’ல சேர்ந்தேன். அங்கே ‘வாட் இஸ் ஆர்ட்’னு புரொபசர் ஜே.டி.கோபர்ன் எனக்குப் புரியவெச்சார். பல ஹாலிவுட் நடிகர்கள் இவர்கிட்ட ஆக்டிங் கத்துக்கிட்டவங்கதான். இரண்டு வருடம் நடிப்பே கதியா இருந்து கத்துக்கிட்டு, வீடு காரெல்லாம் வித்துட்டு இந்தியாவுக்கு வந்துட்டேன். எங்க பாஸ் என்னை ‘இந்தியாவுல இருந்து வேலை பாரு’ன்னு சொன்னார், ‘வந்தா நடிகராதான் திரும்பி வருவேன்’னு பன்ச் பேசிட்டு வந்துட்டேன்.” - ஆம், ‘நடிகர் ஜெயப்பிரகாஷ்’ என்பதுதான் இவருடைய ஆசையும் கனவும்.

“சென்னைக்கு வந்தோம். குறும்படங்கள்ல நடிக்கிறது, சென்னையில இருக்கிற சினிமா கம்பெனிகளுக்கெல்லாம் போய் போட்டோஸ் கொடுத்துட்டு வர்றது... இப்படியே இருந்தேன். ‘லென்ஸ்’ல என் நண்பரா நடிச்ச ராஜ்கிருஷ்ணாவும், நானும் வாய்ப்பு தேடியே நண்பர்கள் ஆனவங்க.
ஷாம் நடிச்ச ‘இன்பா’ படம் மூலமா நானும் நடிகன் ஆனேன். அந்தப் படத்துல சினேகாவுக்கு மாப்பிள்ளையா ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சிருப்பேன். ‘முரண்’ல சேரனுக்கு நண்பனா நடிச்சேன். ‘உருமி’ படத்துல சின்ன வில்லன் ரோல். ‘ஓட்டத் தூதுவன்’ படத்துல மெயின் வில்லன். ‘என்னை அறிந்தால்’ படம்தான், என் முகத்தை ஓரளவுக்கு ஆடியன்ஸுக்குப் பதியவெச்ச படம். ஏன் சொல்றேன்னா, நான் நினைச்சு வந்த சினிமா வேற; இங்கே இருக்கிற சினிமா வேற. நடிக்கணும்னு கனவோடு வந்த என்னை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி நடத்துறது, பெரிய கேரக்டர்னு பொய் சொல்லி, கூட்டத்தோடு கூட்டமா நிற்க வைக்கிறதுன்னு பல சம்பவங்கள் நடந்தது. அதனால, சினிமாவை இன்னும் முழுமையா கத்துக்கிறதுக்கான விஷயங்களைத் தேடி ஓட ஆரம்பிச்சேன்.
‘சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவெல்’ எனக்கு வேறொரு உலகத்தைக் காட்டியது. ‘யாழ்’ இயக்குநர் ஆனந்த் எனக்கு சினிமா புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். அதேசமயம், நடிகர் பாவெல் நவகீதன் இயக்கத்தில், நான் ஹீரோவா நடிக்கிறதா இருந்த பட வேலைகள், தயாரிப்புத் தரப்புல இருந்து ரெஸ்பான்ஸ் இல்லாததால, நின்னுபோச்சு. இந்தப் படத்துக்காக ஒரு வருடம் வேறெந்த வாய்ப்பும் தேடாம, ஏத்துக்காம இருந்தேன்.” - உச்சக்கட்ட மன உளைச்சலில் இருந்த ஜெயப்பிரகாஷுக்கு, ஒரு ‘ஸ்கைப்’ அழைப்பு வேறொரு கதவைத் திறந்து விட்டிருக்கிறது.

‘சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவெல்’ எனக்கு வேறொரு உலகத்தைக் காட்டியது. ‘யாழ்’ இயக்குநர் ஆனந்த் எனக்கு சினிமா புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். அதேசமயம், நடிகர் பாவெல் நவகீதன் இயக்கத்தில், நான் ஹீரோவா நடிக்கிறதா இருந்த பட வேலைகள், தயாரிப்புத் தரப்புல இருந்து ரெஸ்பான்ஸ் இல்லாததால, நின்னுபோச்சு. இந்தப் படத்துக்காக ஒரு வருடம் வேறெந்த வாய்ப்பும் தேடாம, ஏத்துக்காம இருந்தேன்.” - உச்சக்கட்ட மன உளைச்சலில் இருந்த ஜெயப்பிரகாஷுக்கு, ஒரு ‘ஸ்கைப்’ அழைப்பு வேறொரு கதவைத் திறந்து விட்டிருக்கிறது.“சினிமாவே வேண்டாம்ங்கிற அளவுக்கு டிப்ரஷன்ல இருந்த சமயம். அமெரிக்க புரொபசர்கிட்ட ‘ஸ்கைப்’ல பேசிக்கிட்டிருந்தேன். ‘இப்போ நான் தற்கொலை பண்ணிக்கிட்டா, நீங்க என்ன பண்ணுவீங்க... ஆன்லைன்ல பார்க்கிற உங்களால எப்படித் தடுக்க முடியும்’னு ஜாலியா பேசிக்கிட்டிருந்தப்போ, அந்த ஒன்லைன் என்னை ஏதோ பண்ணிக்கிட்டே இருந்தது. ஏற்கெனவே நானொரு கதை எழுதிய அனுபவம் இருந்ததால, இதையும் கதையா எழுதலாம்னு முடிவெடுத்தேன். ‘லென்ஸ்’ படத்தின் தொடக்கப்புள்ளி, இந்த ஸ்கைப் கால்தான்!
இசையமைப்பாளர் சித்தார்த் விபின் என் நண்பர். இந்தப் படத்துகாக அவரும் என்கூட நிறைய மெனக்கெட்டார். சில தயாரிப்பாளர்களை அப்ரோச் பண்ணினோம், எதுவும் நடக்கல. நானும், என் நண்பன் பிரதீப்பும் பல முக்கிய முடிவுகளை, குடிக்கும்போதுதான் எடுத்திருக்கோம். அப்படி ஒருநாள் நான் அவர்கூட குடிக்கும்போது, ‘இந்தப் படத்தை நானே தயாரிச்சு இயக்கப்போறேன்’னு சொல்லிட்டேன். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்குக் கதை பிடிச்சிருந்தது. மியூசிக் மட்டுமல்லாம, இணைத் தயாரிப்பாளராகவும் கூடவே இருந்தார், சித்தார்த் விபின். அப்பாகிட்ட சொல்லி, கேரளாவுல இருந்த நிலத்தை வித்து ‘லென்ஸ்’ படத்தைத் தயாரிச்சோம். பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் குவிச்சது. இயக்குநர் வெற்றி மாறன் சாரை விடாமல் துரத்தி, அவர் பேனர்ல படத்தை ரிலீஸ் பண்ணினோம். ‘லென்’ஸுக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான ‘கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது 2015’ கிடைச்சது, எனக்குப் பெரிய சந்தோஷம்.
பிறகு, கதை ஏதும் பிளான் பண்ணாம கேன்டிட்டா எடுத்த ‘மஸ்கிடோ பிளாஸபி’ படத்தை இயக்கினேன். 70 நிமிடம் ஓடுற இந்தப் படம், கொசு - மனிதன் - கல்யாணம் இந்த மூணு விஷயத்துக்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப்பைப் பற்றிய பிளாஸபியைப் பேசப்போகுது. இதை சீக்கிரமே ஆன்லைன்ல ரிலீஸ் பண்ணுவோம். தவிர, ஒரு கிராமத்துக் கதையை அடுத்த படமா இயக்கப்போறேன்” என்பவர், இனி இயக்குநர் - நடிகர் அடையாளத்துடன் பயணிக்க விரும்புகிறார்.
“நடிக்கிற ஆசையிலதான் சினிமாவுக்கு வந்தேன். ‘லென்ஸ்’ படத்துக்குப் பிறகும், ‘வஞ்சகர் உலகம்’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, நடிப்புக்காக நான் பிலிம் மேக்கிங் கத்துக்கப்போய், இப்போ அதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. ஒரு கதை எழுதி, அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து, அந்தப் படைப்போட நோக்கம் சிதையாம பல படங்களைக்கொ டுக்கணும்ங்கறது தான் என் ஆசை!” எனப் புன்னகைக்கிறார் ஜெயப்பிரகாஷ்.
- கே.ஜி.மணிகண்டன்