மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டைட்டில் கார்டு: நெல்சன் வெங்கடேசன் - 4

Title Card: Director Nelson Venkatesan
News
Title Card: Director Nelson Venkatesan

“ஒருநாள் கூத்து.’ எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம்”

“பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை புதுப்பேட்டை ஏரியாதான். நட்டுக்கும் போல்ட்டுக்கும் நடுவுலதான் வாழ்க்கை. காயலான் கடைக்குப் பெயர்போன இந்த ஏரியாவுல ஞாயிற்றுக்கிழமை மட்டும் அத்தனை கடைகளும் அடைக்கப்பட்டு அமைதியா இருக்கும். அந்த அமைதியில் நாங்க சந்தோஷமா கிரிக்கெட் விளையாடுவோம்!” - வின்டேஜ் புதுப்பேட்டையை நினைவில் நிறுத்தித் தன் சினிமாப் பயணத்தை விவரிக்கிறார், ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

“சித்ரா, காஸினோ, அண்ணா, சாந்தி, தேவி, பிளாஸா, ஆல்பர்ட், அலங்கார்... ஏரியாவைச் சுற்றி எக்கச்சக்கமான தியேட்டர்கள் இருந்ததால, படம் பார்க்கிற பழக்கம் இயல்பாகவே இருந்தது. தவிர, நான்காம் வகுப்பு வரை நான் படிச்ச கிரைஸ்ட் சர்ச் பள்ளியின் காம்பவுண்டு சுவரும், தேவி தியேட்டரின் காம்பவுண்டு சுவரும் ஒட்டியே இருக்கும். ஒவ்வொரு வாரமும் புதுப்படங்கள் வெளியாகுறதுக்கு முதல்நாள் அந்தப் படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டும்போது வேடிக்கை பார்ப்பேன்.

Title Card: Director Nelson Venkatesan
Title Card: Director Nelson Venkatesan

அப்பா, வெங்கடேசன். பாக்கெட் நாவல்களின் பப்ளிஷரா இருந்தார். கிரைஸ்ட் ஸ்கூல்ல நான் படிச்சுக்கிட்டு இருக்கும்போதே அப்பா இறந்துட்டார். ராயப்பேட்டையில அவரோட ஆபீஸ் இருந்தது; இறந்தப்போ ராயப்பேட்டை மருத்துவமனையில் அப்பா முகத்தைப் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கு. அதனால, எனக்கும் ராயப்பேட்டைக்கும் பிணைப்பு அதிகம். அம்மா பெயர் செலின். தங்கச்சி நான்சி, சென்னை பப்ளிக் ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்கிறாங்க” என்றவர், பள்ளி அனுபவங்களைத் தொடர்ந்தார்.

படிப்புக்கு நடுவே தமிழகத்தின் அத்தனை ஊர்களிலும் சுற்றித் திரிந்த நெல்சனின் வாழ்க்கையில் வறுமை மட்டுமல்ல; வண்ணமும் இருக்கிறது.

“பள்ளியில் நல்லாப் படிச்சேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் ஜெயிச்சேன். வறுமையில் இருந்தாலும் படிப்பிலும், கலைகளிலும் ரொம்ப ஆர்வமா இருக்கானேன்னு என் ஆசிரியர்களே எனக்கு ஃபீஸ் கட்டினாங்க. லலிதா டீச்சர் எனக்குப் பல வகையில் உதவியா இருந்தாங்க. எனக்குத் தெரிஞ்சு 8 - 12 வகுப்பு வரை ஒரு பிரைவேட் ஸ்கூல்ல ஃபீஸ் தொந்தரவு இல்லாம படிச்ச ஒரே மாணவன் நான்தான்னு நினைக்கிறேன். 92% மதிப்பெண்களோடு, ப்ளஸ் டூ முடிச்சேன். எனக்குப் பிறகு என் தங்கச்சி, என் சொந்தக்காரங்க எல்லோரும் அங்கேதான் படிச்சாங்க. இப்போ என் படங்களுக்கு என்கூட சேர்ந்து கதை, வசனத்துல பங்கெடுத்துக்கிற சங்கர் தாஸ் சார், இந்த ஸ்கூல்ல தமிழாசிரியர். நான் கலந்துகிட்ட பேச்சுப் போட்டிகள், நாடகங்கள்ல எனக்கு உதவியா இருந்தார். இங்கே, லெனின் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லணும். பள்ளியிலிருந்து எந்தப் போட்டிக்குப் போனாலும், நானும் அவனும் சேர்ந்துதான் போவோம்; சேர்ந்தே பரிசுகளை வாங்கிட்டு வருவோம். போட்டிகள்னு வந்துட்டாலே, ‘நெல்சன் - லெனின்’னுதான் ஸ்கூல்ல பேசிக்குவாங்க.”

Title Card
Title Card

“அம்மா ஊர் ஊரா போய், கண்காட்சிகளில் ஃபேன்ஸி ஸ்டோர் வைப்பாங்க. அவங்களுக்கு உதவியா நானும் போவேன். ஒவ்வொரு ஊரிலும் பல நாள்கள் தங்கவேண்டிய கட்டாயம் வரும். சும்மா இருக்கிற நேரங்கள்ல அம்மா அந்தந்த ஊர்களில் இருக்கிற முக்கியமான இடங்களுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாங்க, எல்லா ஊர்களிலும் படம் பார்ப்போம். ஃபேன்ஸி பொருள்களை அந்தச் சின்ன வயசுல நான் கூவி விற்கும்போது, சுத்தி இருந்தவங்க என்னை ஆச்சர்யமா பார்ப்பாங்க. கணவரை இழந்த அம்மா இப்படி ஊர் ஊரா சுற்றித் திரிஞ்சு எங்களுக்குச் சோறு போடுறது கஷ்டமா இருக்கும். அதுக்காகவே, சீக்கிரம் பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சேன்.

ப்ளஸ் ஒன் படிக்கும்போதே, குழந்தைங்களுக்கு டியூசன் எடுத்தேன். நண்பன்கிட்ட சைக்கிளைக் கடன் வாங்கிட்டு, ‘ஃபாஸ்ட் டெலிவரி கூரியர்’ கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். இந்த வேலைதான், சென்னையின் சந்து பொந்துகளையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சது. ஒரு கூரியருக்கு 2 ரூபாய் கிடைக்கும். இப்படி நான் ஓரளவுக்குச் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, அம்மா வேலைக்குப் போறதை நிறுத்திக்கிட்டாங்க” என்பவர், கல்லூரிக்குக் காலடி எடுத்துவைத்த பிறகும், ‘பார்ட் டைம் ஜாப்’ முடிவில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்.

“காலேஜ் படிக்கும்போது, அண்ணா யுனிவர்சிட்டியில ஒரு குறும்படப் போட்டி. முதல் பரிசு 10,000 ரூபாய்னு அறிவிச்சிருந்தாங்க. நானும், சங்கர் தாஸ் சாரும் மெரினாவில் சுண்டல் விற்கிற ஒரு பையனோட கதையைத் திரைக்கதையாக்கி, ‘மெரினா’ங்கிற குறும்படம் எடுத்தோம். அந்தப் போட்டியில சிறந்த ஏழு குறும்படங்களை சத்யம் தியேட்டர்ல ஸ்கிரீனிங் பண்ணுவாங்க, சென்சார் சர்ட்டிபிகேட்டும் தருவாங்கன்னு சொன்னாங்க. பரிசுத் தொகை எனக்குக் கிடைக்கலைன்னாலும், சத்யம் தியேட்டர்ல சென்சார் சான்றிதழோடு என் குறும்படத்தைப் பார்த்தது, ‘சினிமா இயக்குநர் ஆகணும்’ங்கிற ஆசையை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் பக்கம், காலேஜ்ல வருகைப் பதிவேட்டில் பிரச்னை. அதனால, இன்னொரு முறை செமஸ்டர் எழுதணும்னு சொல்லிட்டாங்க. ‘டிசி-யைக் கொடுங்க’ன்னு சொல்லிட்டு, ‘இதே காலேஜ்ல ஒருநாள் நான் சிறப்பு அழைப்பாளரா வருவேன்’னு லயோலா காலேஜ் கேட்டைப் பார்த்து பன்ச் பேசிட்டு வந்துட்டேன்.

“எல்லோரும் இன்ஜினீயரிங் மீது மோகமா சுத்திக்கிட்டிருந்த காலம் அது. பகுதிநேரமா வேலை பார்க்கவேண்டிய கட்டாயம் இருந்ததனால, லயோலா கல்லூரியில கெமிஸ்ட்ரி படிச்சேன். சேர்த்து வெச்ச காசுல பைக் வாங்கி, முதல்நாள் வகுப்புக்கே பைக்ல போனேன். 8 - 2 மணி வரைக்கும் காலேஜ். பிறகு, டியூசன், வேலை. இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கணும்னு நினைச்சு, அம்மாவுக்கு வேளச்சேரியில ஒரு மளிகைக் கடை வெச்சுக் கொடுத்தேன். அந்தக் கடையை சரியா கவனிச்சுக்க முடியல. ரெண்டு வருடத்துல மூடிட்டோம்” என்றவர், ‘எஃப்.எம்’ துறைக்குள் நுழைந்த கதையைச் சொன்னார்.

“லயோலாவுல படிக்கும்போது, ‘ஆல் இந்தியா ரேடியோ’வுல பகுதிநேர வேலைக்கு ஆடிஷன் வந்திருந்தாங்க. என் பர்ஃபாமென்ஸ் நல்லா இருந்ததுன்னு என்னைத் தேர்ந்தெடுத்தாங்க. ‘சூப்பர். இனி ரேடியோதான் நம்ம வாழ்க்கை’ன்னு முடிவெடுத்தேன். ‘ஆல் இந்தியா ரேடியோ’ ரமேஷ் சார் என்னுடைய குரு. வாரத்துக்கு ரெண்டுநாள் நிகழ்ச்சி. கிளாஸைக் கட் அடிக்க வேண்டிய கட்டாயம். கூடவே, நண்பன் லெனின்கூட சேர்ந்து ஒரு கால் சென்டரிலும் வேலை பார்த்தேன். அந்த சமயத்துல காலேஜ், டியூசன், கால் சென்டர் வேலை, ரேடியோ வேலை... இப்படி இன்னும் பரபரப்பா சுத்தவேண்டி இருந்தது” என்பவர், குறும்பட இயக்குநர் ஆனதும் பணத்திற்காக ஓடிய ஒரு பயணத்தில்தான்!

Title Card: Director Nelson Venkatesan
Title Card: Director Nelson Venkatesan

‘டைரக்டர் ஆகணும்னு ஆசைப்படுற. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்துடு. டைரக்‌ஷன் படிக்கத்தான் டிகிரி தேவை. சினிமாட்டோ கிராபிக்குத் தேவையில்லை’னு சொன்னது, சங்கர் தாஸ் சார்தான். அடையாறு பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சீட்டு கிடைச்சது. ‘பத்து எண்றதுக்குள்ள’ கேமராமேன் பாஸ்கர், ‘மான்ஸ்டர்’ல உதவி இயக்குநரா வேலை பார்த்த மர்ஃபி, கிருஷ்ணா இவங்கெல்லாம் பிலிம் இன்ஸ்டிட்யூட் நண்பர்கள். ஆனா, எனக்கு அங்கே படிக்க ஆர்வமே இல்லை. ‘இயக்குநர் ஆகுறதுக்கு எதுக்கு இந்த வழி’ன்னு ஒரு யோசனை” என்றவர், ரேடியோ துறையில் முன்னேறி வந்த அனுபவத்தை இன்னும் விவரித்தார்.

“அப்போதான், ‘ரேடியோ சிட்டி எஃப்.எம்’ சென்னைக்கு வருது. ஆடிஷன்ல கலந்துகிட்டேன். நண்டு ஜெகன், சுரேஷ், சுலபா, அர்ச்சனா... இவங்களோட நட்பு கிடைச்சது. அதே சமயத்துல நண்டு ஜெகன் மூலம் அறிமுகமான உஷா மூலமா ‘பிக் எஃப்.எம்’ ஆடிஷனிலும் கலந்துகிட்டேன். முதல்கட்டமா தேர்வாகிற எல்லோரையும் அகமதாபாத் ‘முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன்’ல ஒரு மாதம் பயிற்சி, பயிற்சி முடிந்து தேர்வாகிற வங்களுக்கு வேலைன்னு சொன்னாங்க.

எனக்கு ‘ரேடியோ சிட்டி’யில வேலை கிடைச்சிடுச்சு. ஆனா, ‘முத்ரா இன்ஸ்டிட்யூட்’ல கிடைக்கப்போற பயிற்சியும், முதல்முறையா விமானத்துல பறக்கப்போற சந்தோஷமும் எனக்குத் தேவையா இருந்ததால, அந்த வேலையை வேண்டாம்னு சொல்லிட்டேன். அந்த ஒரு மாதப் பயிற்சி எனக்கு வேற ஒரு உலகத்துல வாழ்ந்த மாதிரி இருந்தது. எப்படியாவது, ரேடியோத் துறையில் ஒரு நல்ல நிலைக்கு வரணும்னு இரவு பகலா பயிற்சி எடுத்துக்கிட்டேன், ‘பிக் எஃப்.எம்’ல வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒஃபிலியா, தீனா, நான் எல்லோரும் சென்னை ‘பிக் எஃப்.எம்’ல வேலை பார்த்தோம். பிறகு, ‘சூரியன் எஃப்.எம்’ல புரொகிராமிங் ஹெட் ஆனேன். சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச பெரிய பொறுப்பு அது. மதுரை, திருச்சி, பாண்டிச்சேரின்னு பல பகுதிகளில் எஃப்.எம்-மை லான்ச் பண்ணினோம். கிட்டத்தட்ட ஏழு ஸ்டேஷனுக்கு நான் புரொகிராமிங் ஹெட்டா இருந்தேன். இடையில காதல், 22 வயசுலேயே கல்யாணம் நடந்தது. பிறகு, பத்து வருடங்கள் அவ்வளவு அந்நியோன்யமா வாழ்ந்த நானும் என் மனைவியும் சில கருத்து வேறுபாடுகளால பிரியவேண்டியதா போச்சு” இப்படிக் கிறுக்கலான கோலத்தை நீட்டி மடக்கி அழகாக்க, நெல்சனுக்கு ‘இயக்குநர்’ என்ற கனவை எட்டவேண்டிய கட்டாயம்.

“2010-ல ரேடியோத் துறை போதும்னு முடிவெடுத்தேன். பணப் பிரச்னை வந்துடக் கூடாதுன்னு தினேஷ், தீனாகூட சேர்ந்து ‘ஈட் மை வே’ என்ற இணையதளத்தைத் தொடங்கலாம்னு நினைச்சோம். இன்னைக்கு ‘ஸ்விக்கி’ பண்ற ஃபுட் டெலிவரி கான்செப்ட்தான். ஆனா, அப்போதைக்கு அது எங்களுக்கு செட் ஆகல. ‘முத்ரா’வுல கத்துக்கிட்ட அடிப்படை விஷயங்களை நான், தினேஷ், தீனா மூணுபேரும் சேர்ந்து ஆர்.ஜே-க்களுக்குச் சொல்லிக்கொடுப்போம்னு ஒரு அகாடமி ஆரம்பிச்சோம். கூடவே ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு ‘வேல்யூ ஆடட் சர்வீஸுக்குக் கன்டென்ட் ரெடிபண்ணிக் கொடுத்தோம். ஆரெம்கேவி, திண்டுக்கல் தலப்பாகட்டி போன்ற நிறுவனங்களுக்கு ‘இன்டோர் ரேடியோ ஸ்டேஷன்’ அமைச்சுக் கொடுத்தோம். எங்க அகாடமியோடு சேர்ந்து, இந்த வேலை களெல்லாம் இப்போவரைக்கும் தொடருது.”

சரி, அதுக்குப் பிறகும் இயக்குநர் ஆகலைன்னா நல்லாவா இருக்கும்?!

“காலேஜைப் பாதியில விட்டாச்சு, பிலிம் இன்ஸ்டிட்யூட்ல இருந்து பாதியில வெளியேறியாச்சு, வேலையை விட்டாச்சு, பிசினஸையும் விட்டுட்டு வெளியே வந்தாதான் சினிமான்னு முடிவெடுத்து, அகாடமியை நண்பர்கிட்ட ஒப்படைச்சேன். வேல்யூ ஆடட் சர்வீஸுக்குக் கன்டென்ட் கொடுத்துக்கிட்டிருந்தப்போ பழக்கமான தயாரிப்பாளர் செல்வக்குமார் சாரை சந்திச்சுக் கதை சொன்னேன். அப்போ, நான் சொன்ன ஒரு கதை அவருக்குப் பிடிக்கல. பிறகு ஒருநாள் வேறொரு படத்தைப் பார்த்து, ‘நீங்க சொன்ன கதையில ஒரு போர்ஷன் இந்தப் படத்திலும் இருக்கு’ன்னு சொன்னார். ‘நான்தான் அப்போவே பண்ணலாம்னு சொன்னேனே சார்’னேன். ‘சரி, நாம படம் பண்ணலாம்; கதை சொல்லுங்க’ன்னு கூப்பிட்டார். நான் சொன்ன மூணு கதைகளில், அவர் தேர்ந்தெடுத்த கதைதான், ‘ஒருநாள் கூத்து.’ எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது” என்றவர், தொடர்ந்தார்.

“என்னைப் பொறுப்பான பையனா மாத்துனது வறுமையும், அம்மாவும்தான். நண்பர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் என்னை வழிநடத்தினாங்க. சங்கர் தாஸ் சார் எனக்கு இலக்கிய உலகத்தையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தினார். முதல் படத்துக்குப் பிறகு இரண்டாவது வாய்ப்பு அத்தனை எளிதில் கிடைக்க லைன்னாலும், ‘மான்ஸ்டர்’ மூலமா வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஜெயிச்சது இன்னும் சந்தோஷம். அனுபவங்களை யெல்லாம் அப்படியே வெச்சிருக்கேன். சின்ன வயசுல ஃபேன்ஸி ஸ்டோர் நடத்திய நெகிழ்வும் மகிழ்வுமான அந்த அனுபவத்தைப் படமா எடுக்கணும்னு ஆசை இருக்கு.”

- கே.ஜி.மணிகண்டன்