
‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்துச்சி...
பணத்தை நேசிக்கும் மனிதர்கள்; பணத்தையும் தாண்டி உறவுகளை நேசிக்கும் மனிதர்கள்... ‘குரங்கு பொம்மை’யின் களம் இது. படத்தின் இயக்குநர் நித்திலனின் வாழ்விலும் பணமும், உறவும் பிரதானமாக இருக்கின்றன. ஆனால், வேறு வடிவத்தில்!

“வேலூர், குடியாத்தம் பக்கத்துல ‘நல்லாகவனியூர்’னு ஒரு குக்கிராமத்துல பிறந்தேன். வாக்கிங் போனாலே ஆந்திரா வந்திடுற அளவுக்கு பார்டர்ல வாழ்ந்தோம். 5-ஆம் வகுப்பு வரைக்கும் அங்கேதான் படிப்பு. அம்மா, மாணிக்கம். எனக்கு 6 வயது இருக்கும்போது அவங்க இறந்துட்டாங்க. எனக்குக் குப்பம்மாள், கனகான்னு ரெண்டு அக்கா. அவங்க ஊர்லேயே செட்டில் ஆகிட்டாங்க. ஆட்டு வியாபாரம், விவசாயம் பார்த்துக்கிட்டிருந்த அப்பா சுவாமிநாதன்தான் எங்களுக்கு எல்லாமே. இப்போ அவரும் உயிரோடு இல்லை!” - பசுந்தாள் வாசனைபோல நித்திலனிடம் அத்தனை நினைவுகளும் இருக்கின்றன.
“படிப்புல பெருசா ஆர்வம் இல்லை... பத்தாம் வகுப்பு படிக்கிறப்போதான், ஒரு நூலகம் அறிமுகம் ஆச்சு. பெரும்பாலும் வார இதழ்கள், நாளிதழ்களைத்தான் புரட்டுவேன்னு வெச்சுக்கோங்களேன். ஆனா, கவிதை எழுதவும் கத்துக்கிட்டேன். பெரும்பாலும் நான் எழுதுற கவிதைகள் ‘சென்னை 28’ சிவா கவிதைகள் மாதிரி இருந்தாலும், அந்த ஊருக்கு அது காவியம். அதனால, எல்லோரும் என்னைப் பெரிய கவிஞர்னே நினைச்சுக்குவாங்க.

பிறகு, சில கவிதைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். பின் அட்டையில கவிஞரோட இயற்பெயர், புனைபெயர்னு ரெண்டு இருக்கும். நாமளும் அப்படி ஒண்ணு வெச்சுக்கணுமேன்னு யோசிச்சப்போ, வைரமுத்துவின் ஒரு பேட்டி ஞாபகத்துக்கு வந்தது.
‘ராஜபார்வை’ படத்துக்காகப் பாடல் எழுதும்போது கமல் சாருக்கும், வைரமுத்து சாருக்கும் ஒரு விவாதம் நடந்ததாம். ‘அந்திமழை பொழிகிறது’ பாடல்ல, ‘சிப்பியில் தப்பிய நித்திலமே; ரகசிய ராத்திரி புத்தகமே’ன்னு வைரமுத்து எழுத, ‘நித்திலம்’ங்கிற வார்த்தை வேணாம்னு கமல் சொன்னாராம். பிறகு, பல விவாதங்களுக்குப் பிறகுதான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதா வைரமுத்து சொல்லியிருந்தார். எனக்கு அந்த ‘நித்திலமே’ங்கிற வார்த்தைமேல ஆர்வம் அதிகமாகிடுச்சு. ‘நித்திலன்’னு புனைபெயர் வெச்சுக்கிட்டேன். அப்பா எனக்கு வெச்ச பெயர் சாந்த மூர்த்தி” எனச் சொல்லும் நித்திலன், விஜயகாந்த்தின் வெறிபிடித்த ரசிகர்.

“சினிமா பார்க்க காசு வேணுமே?! எங்க ஊர்ல பீடி சுத்துற தொழில் ரொம்ப ஃபேமஸ். எனக்கு பீடியோட வாயை மடிக்கிற வேலை. ஆயிரம் பீடிக்கு வாயை மடிச்சா, 3 ரூபாய். ப்ளஸ் டூ படிக்கிறவரை எனக்குப் படம் பார்க்க உதவியா இருந்தது, பீடித் தொழில்தான்.” ஆனால், நித்திலனுக்கு அப்போது மிலிட்டரியில் சேர்வதுதான் கனவே தவிர, சினிமா கிடையாது.
“ப்ளஸ் டூ முடிச்சதும் மிலிட்டரியில சேர முயற்சி எடுக்கிறதுதான் என் நோக்கமா இருந்தது. ஆனா, அந்நேரம் பார்த்து ஊருக்குள்ள ஒருத்தன் ‘சிங்கப்பூர் ரிட்டர்’னா திரும்பி வந்தான். டிப்ளோமா படிச்சுட்டு வெளிநாடு போயிட்டு வந்த அவனை ஊரே தூக்கி வெச்சுக் கொண்டாடவும், எங்க அப்பாவும் ‘நீயும் அவன் படிச்சதையே படி’ன்னு அடுக்கும்பாறையில இருந்த ஒரு பாலிடெக்னிக்ல சேர்த்துவிட்டார்.
எனக்கு இங்கிலீஷும் வராது, கணக்கும் வராது. ஒரே மாசம்தான். காலேஜ் வேணாம்னு ஓடிவந்துட்டேன். ஆட்டு வியாபாரத்துக்குப் போயிருந்த அப்பா ஊருக்கு வரும்போது, ‘பள்ளிக்கூடத்துக்குப் போகலையா’ன்னு விசாரிச்சார். காலேஜ் சரியில்லை, டீச்சர் சரியில்ல, பஸ் ஓட்டுற டிரைவர்கூட தாறுமாறா போறார்னு என்னைத் தவிர எல்லோர்மேலேயும் பழியைப் போட்டு, அப்பாகிட்ட கதை அளந்தேன். ஒருநாள் நம்பினார். ஊர்க்காரங்க என் சேட்டையை எடுத்துச் சொல்ல, ‘தாயில்லாப் பிள்ளைன்னு செல்லம் கொடுத்தா தலைக்குமேல ஆடுறியா’ன்னு விரட்டினார். அவரைச் சமாளிக்க ஏதாச்சும் பண்ணணுமே... வீட்டை விட்டு ஓடிட்டேன்!” - நல்லது. ஏனெனில், இந்த ஓட்டம்தான் நித்திலனுக்கு சினிமாக் கதவைத் திறந்துவிட்ட சாவி.
“ஃபிரெண்டுகூட திருப்பூர், கோயம்புத்தூர்ல இருக்கிற பனியன் கம்பெனி, டையிங் கம்பெனிகள்ல சில காலம் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். திருப்பூர்ல சுத்திக்கிட்டிருந்த சமயத்துலதான், ஏதோ ஒரு வார இதழ்ல ‘சினிமாவுக்குப் போகணும்னா, டி.எஃப்.டெக் படிக்கலாம்’னு ஒரு தகவல் இருந்தது. ஆனா, அதுக்கு டிகிரி முடிச்சிருக்கணும். வேறென்ன ஆப்ஷன் இருக்குன்னு பார்த்தப்போதான், விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கலாம்னு தெரிஞ்சது.” - ஊருக்குத் திரும்பியிருக்கிறார் நித்திலன்.

“அப்பா கையில செருப்பை வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தார். அடிக்கமாட்டார். ஆனா, சரமாரியான வார்த்தைகள் வரும். நான் படிக்க வைங்கன்னு சொல்ல, ‘நீ ஒண்ணும் கழட்டவேணாம்’னு சொல்லிட்டுப் போயிட்டார். விடுவேனா... வீட்டுக்கு வர்றவங்ககிட்ட ‘எங்கப்பா என்னைப் படிக்க வைக்க மாட்டேங்கிறார்’னு புலம்ப ஆரம்பிச்சேன். ‘என்னப்பா, பையனை இப்படிப் பண்றியாமே’ன்னு சொந்தங்கள் அதட்டிட்டுப் போனாங்க.
இருந்த நிலத்துல பாதியை வித்து, சென்னைக்குக் கூட்டிக்கிட்டு வந்தார். ஆவடியில இருக்கிற ‘சென்னை நேஷனல் காலேஜ்’ல சேர்ந்தேன். எங்க ஹெச்.ஓ.டி சரவணன் சார், கிராமத்துப் பையனாச்சேன்னு என்மேல பாசமா இருப்பார். ஹாஸ்டல்ல என்னை ‘யோவ் டைரக்டரே’ன்னு பசங்க கூப்பிடுறப்போ, போதை ஏறும். நான் ஆர்வக் கோளாறுன்னா, எங்க ஆசிரியர் லக்ஷ்மி நாராயணன் டபுள் ஆர்வக் கோளாறு. இயக்குநர் என்பவர் யார், ஷாட்ஸ் எப்படி இருக்கும், உலக சினிமா... எல்லாத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சது லக்ஷ்மி சார்தான். பாலு மகேந்திரா தொடங்கி அகிரா குரசோவா வரை... அத்தனை பேருடைய படைப்புகளையும் தெரிஞ்சுகிட்டேன்” என்ற நித்திலனுக்கு, ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி மிகப்பெரிய அடையாளம்.
“நான் காலேஜ் படிச்சுக்கிட்டிருக்கும்போது அப்பா இறந்துட்டார். பிறகு நண்பர்கள்தான் நம்பிக்கை கொடுத்தாங்க. ரிலீஸாகாதுன்னு தெரிஞ்சாலும் சின்னச் சின்னப் படங்கள்ல பணத்துக்காக வேலை பார்த்தேன். சசிகுமார்னு ஒரு நண்பன். எப்போவும் என்மேல அக்கறையா இருப்பான். அவன்தான், டிவியில ‘நாளைய இயக்குநர் 3’க்கான விளம்பரத்தைப் பார்த்துட்டுச் சொன்னான். டக்குனு கையில பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து, ‘வெட்டிச் செலவு பண்ணி அழிச்சாலும் சரி; குறும்படம் எடுத்துஅனுப்பி வெச்சாலும் சரி!’ன்னு போயிட்டான். அவன் கொடுத்த பணத்துலதான், ‘புதிர்’ குறும்படத்தை எடுத்து, `நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்குத் தேர்வானேன்.
சுந்தர்.சி சார் அந்தக் குறும்படத்தைப் பார்த்து, ‘குரசோவா படம் மாதிரி இருந்தது’ன்னு சொன்னப்போ, எனக்குத் தலைகால் புரியல. சந்தோஷத்துல, அடுத்து என்ன பண்ணலாம்னு தேனாம்பேட்டையில இருந்து பெரம்பூர் வரைக்கும் நடந்தே போனேன்.

நண்பர்கள்தான் என் உலகம். அவங்கதான் என்னை வளர்த்தெடுத்தாங்க. தியாகராஜன், தரணி, முருகேசன், லோகேஷ் கிருஷ்ணன், ஃபைசல் கான், ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படத்தைத் தயாரிச்ச சையத் அகமது, ‘குரங்கு பொம்மை’யில் நடிகராகவும் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்த கல்கி ராஜா, அசோக், ‘நாளைய இயக்குநர்’ல பழக்கமான ஸ்ரீகணேஷ், பாக்யராஜ் கண்ணன், நலன் குமாரசாமி அண்ணன், ‘குரங்கு பொம்மை’க்கு வசனம் எழுதுன அஸ்வின்... இவங்கெல்லாம்தான் எனக்குப் பெரிய சப்போர்ட்.
‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படத்தைப் பார்த்துட்டு, விதார்த் போன் பண்ணிப் பாராட்டினார். ‘கதை வெச்சிருக்கீங்களா’ன்னு கேட்டார், சொன்னேன். பிறகு, அவரே தயாரிப்பாளர்கிட்ட அனுப்பிவெச்சு, ‘குரங்கு பொம்மை’ உருவாகக் காரணமா இருந்தார். படத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். இப்போ ஒரு கதை எழுதியிருக்கேன். மக்கள்கிட்ட ஒரு பெரிய பாதிப்பை இந்தப் படம் கொடுக்கும்னு நம்பிக்கை இருக்கு. நடிகர், நடிகைகள் பேசிக்கிட்டிருக்கோம்.

சீக்கிரமே ஷூட்டிங் போகணும். இந்த ஓட்டத்துக்கு நடுவுல சுபாஷினியை 2018-ல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குரசோவா நினைவாக, சமீபத்துல பொறந்த என் பொண்ணுக்கு, ‘அகிரா’ன்னு பெயர் வெச்சிருக்கேன். அப்பா இல்லாததுதான் வருத்தம். இருந்திருந்தா ஆட்டு வியாபாரம், விவசாயம்னு ஓடாம நின்னு நிதானமா என் வெற்றியைப் பாருங்கன்னு சொல்லியிருப்பேன்!” என நெகிழ்கிறார் நித்திலன்.
- கே.ஜி.மணிகண்டன்