
மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு வாக்கிங்.
- தோட்டம் ஒன்றில் பெரியவரையும், அவருடன் இருந்த ஒரு நாயையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே உடன் நடந்துகொண்டிருந்த பிரசாத் முருகேசனுக்கு, ‘பெரியவர், நாய்... யார் யாருக்கு மாஸ்டர்’ என்பது சிந்தனை. அந்தச் சிந்தனையின் வடிவம்தான், ‘கிடாரி’யாக உருப்பெற்றிருக்கிறது. இயக்குநராக பிரசாத் முருகேசன் எப்படி உருப்பெற்றார்?!
“படித்த இலக்கியமும், பார்த்த சினிமாக்களும், பழகிய மனிதர்களும்தான் என்னை இயக்குநர் ஆக்கியிருக்கு. எழுத்து ஆர்வத்துக்கு ஒரு வகையில அப்பா முருகேசன் முக்கியமான காரணம். பிரைவேட் கம்பெனியில கணக்காளரா வேலை பார்த்துக்கிட்டிருந்த அவர், கணக்கு பார்க்காம இதழ்களை வாங்கிப் படிப்பார். அம்மா முத்துலட்சுமி, தங்கச்சி சிவசங்கரி, நான்... இதுதான் எங்க குடும்பம். அடிப்படை அரசியல், இலக்கியம், சினிமா எல்லாத்தையும் இதழ்கள் மூலமாதான் கத்துக்கிட்டேன். அது என்னை எழுத வெச்சது, எதிர்காலத்துல கிரியேட்டிவ் ஃபீல்டுக்குப் போகணும்னு ஆசைப்பட வெச்சது. கோவில்பட்டி எங்களுக்குச் சொந்த ஊர். அங்கிருந்த செயின்ட் பால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, சிறுகதைகள் எழுதிப் பரிசுகள் வாங்கியிருக்கேன்.” ப்ளஸ் டூ-வில் கம்யூட்டர் சயின்ஸ் படித்தாலும், கல்லூரியில் இயற்பியல் படித்தாலும், பிரசாத் முருகேசன் தேடிப் படித்ததெல்லாம் இலக்கியம்தான்!

“ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் வர்ற சிறுகதையைப் படிச்சா, சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பிற படைப்புகளையும் தேடிப் படிப்பேன். ஸ்கூல் படிப்பை முடிக்கிறவரை சினிமா இயக்குநர் கனவு இல்லை. காலேஜ்ல சேர்ந்த பிறகு, கட்டுப்பாடுகள் தளர்ந்தது. அங்கே அறிமுகமான ஆசிரியர்கள், நண்பர்கள் என் இலக்கிய ஆர்வத்துக்குப் பேருதவியா இருந்தாங்க. வழக்கத்தைவிட அதிகமா வாசிச்சேன், படம் பார்த்தேன், நூலகத்தைப் பயன்படுத்திக்கிட்டேன். கல்சுரல் புரொகிராம்ல கலந்துக்கிட்டுப் பரிசுகள் வாங்கினேன். உலக சினிமாக்கள், குறும்படங்களெல்லாம் அப்போதான் எனக்கு அறிமுகமானது. ‘ஏதோ ஒரு கலை வடிவத்துல இயங்கணும். சினிமாவும் சிறந்த வழிதான்’னு தீர்மானிச்சு, இயக்குநர் கனவை எனக்குள்ளே விதைச்சுக்கிட்டேன்” எனச் சொன்ன பிரசாத் முருகேசனுக்கு, பக்கா கமர்ஷியல் சினிமா மீதுதான் ஆர்வம் இருந்திருக்கிறது.
“2002-ல டிகிரி முடிச்சேன். ஷங்கர் சார்கிட்ட உதவியாளரா சேரணும்னு, அவர் நடத்திய நேர்காணலுக்குப் போயிருக்கேன். ஆனா, சென்னைக்கு வந்த பிறகு, எனக்குக் கிடைச்ச நண்பர்கள், வாசித்த தீவிர சினிமா இலக்கியங்கள் கமர்ஷியல் ரூட்ல இருந்து என்னை மாற்றியது. ஆனாலும் நான் சொல்லிக்காம, சென்னையில் இருந்த ஒரு நண்பருடைய கம்பெனியில சேர்ந்து வீடு வீடா ‘கிச்சன் வேர்ஸ்’ விற்கிற வேலையைப் பார்த்துக்கிட்டிருந்தேன், ஒரு பப்ளிகேஷன்ல புத்தகங்களுக்குப் பிழை திருத்துற வேலை பண்ணிக்கிட்டிருந்தேன், கூடவே சினிமாவுக்கான பல மனிதர்களை சந்திச்சுப் பேசிக்கிட்டிருந்தேன். ஸ்பென்ஸர் பிளாஸாவுல இருந்த ‘லேண்ட் மார்க்’ புத்தகக் கடையில சினிமாப் புத்தகங்களை வாங்கப் பணமில்லாம, நின்னுக்கிட்டே படிச்சுட்டு வெச்சுட்டு வந்துடுவேன். இப்படியே போய்க்கிட்டிருந்தது சில வருடம். பிறகு ஒருநாள் வீட்டுல சினிமாக் கனவைச் சொன்னேன். வறுமையைக் காரணம் சொல்லித் தயங்கி நின்னாலும், பிறகு சம்மதிச்சாங்க.

பிறகு, முழுக்கவே சென்னைதான் வாழ்க்கை. மேன்ஷன்ல மாகப ஆனந்த், ஆர்ஜே தீனா, சின்னையா... இவங்க மூணுபேரும் எனக்குப் பழக்கம். தீனா மூலமா இயக்குநர்
ஆர்.புவனாவிடம் உதவி இயக்குநரா வாய்ப்பு கிடைச்சது. பெரிய படமோ, சின்ன படமோ... சினிமாவுல இயங்கிக்கிட்டே இருக்கணும்ங்கிற உண்மையும் எனக்கு அப்போதான் புரிஞ்சது. புவனா இயக்கிய ‘ரைட்டா தப்பா’ படத்துல உதவி இயக்குநரா வொர்க் பண்ணினேன். அங்கே ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி அறிமுகமானார். அவர் மூலமா சினிமா நண்பர்கள் நட்பு கிடைச்சது.
சூளைமேட்டுப் பகுதியில இருந்த நண்பர் வீட்டுல நான், செழியன், எஸ்.ஆர்.கதிர், மாமல்லன் கார்த்தி, யுவராஜ் அழகப்பன், விஸ்வாமித்திரன்... இப்படிப் பலரும் சந்திச்சு சினிமா பேசினோம், குறும்படங்கள் எடுத்தோம். விஸ்வாமித்திரன் நடத்திக்கிட்டிருந்த ‘செவ்வகம்’ங்கிற சினிமா சிற்றிதழ்ல நிறைய எழுதினோம். எல்லோரும் சினிமாவுல என்ட்ரி கொடுக்கக் காத்திருந்த காலம் அது. பிறகு, செழியன், பாலாஜி சக்திவேல்கிட்ட என்னை ரெஃபர் பண்ணியிருந்தார். எஸ்.ஆர்.கதிர் ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்காகப் பேசி வெச்சிருந்தார். ஆனா, நண்பர் வாசு மூலமா வசந்தபாலன் சாரிடம் சேர வாய்ப்பு வந்தது.
என் எழுத்துகளைப் படிச்சவர், ஃபிக்ஷன் ஜானர்ல ஒரு கதை எழுதித் தரச் சொன்னார். கோவில்பட்டியில் நான் பார்த்த தீப்பெட்டித் தொழிலுக்கு ஆள் பிடிக்கிற பிராஸஸைக் கதையாக்கிக் கொடுத்தேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ‘அங்காடித் தெரு’வுக்கு என்னை உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்டார். அந்தப் படம் தந்தது நான்கைந்து வருட அனுபவம் மட்டுமல்ல; நல்ல பாடம்” என்கிறார் பிரசாத் முருகேசன்.
“ஆமா, அந்தப் படத்துக்காக ரங்கநாதன் தெருவுலேயே மேன்ஷன் பிடிச்சுத் தங்கி, அங்கிருக்கிற மக்களைக் கண்காணிக்கிற பொறுப்பு எங்களுக்குக் கிடைச்சது. மனிதர்கள்கிட்ட பேசுற அனுபவம், படிக்கிற புத்தகங்கள், பார்க்கிற படங்களுக்கு நிகரானது. அது எனக்குக் கிடைச்சது.” உதவி இயக்குநர் வேலையை மட்டுமல்ல, கல்லூரித் தோழியையும் காதலித்துக் கரம் பிடித்தவர் இவர்.
“ ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ படங்களுக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்துகிட்டிருக்கும்போதுதான், கல்லூரித் தோழி கவிதா மஞ்சுவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பார்க்கிற வேலை, சாதி... ரெண்டும் எங்க கல்யாணத்துக்குப் பெரிய தடையா இருந்தது. வசந்த பாலன் சார், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன் இவங்கெல்லாம்தான் உதவியா இருந்து 2010-ல் எங்க கல்யாணத்தை நடத்தி வெச்சாங்க. நாங்க படிச்ச ஜி.வி.என் காலேஜ்லேயே மனைவி இப்போ பேராசிரியையா இருக்காங்க. பையனுக்குத் ‘தமிழ்ச்செல்வன்’னு பெயர் வெச்சிருக்கோம்!” என்பவர், இயக்குநரான கதையைச் சொன்னார்.
“வசந்தபாலன் சார்கிட்ட இருந்து வந்தபிறகு, படம் பண்றதுக்காக கதையோடு பல தயாரிப்பாளரைத் தேடினேன். நண்பர் யுவராஜ் இயக்கிய ‘கலியுகம்’ படத்தின் தயாரிப்பாளர்தான் என் படத்தையும் தயாரிக்கிறதா இருந்தது. சில பிரச்னைகளால அந்தப் படம் ரிலீஸ் ஆகலை. வேற தயாரிப்பாளரைத் தேடும்போது, ‘கம்பெனி புரொடக்ஷன்’ல படம் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அப்போதும் சில தடைகள். மேலும் சில தயாரிப்பாளர்கிட்ட கதை சொன்னேன். இதுக்கிடையில புரொடக்ஷன்ல வேலை பார்த்து, தயாரிப்பைக் கத்துக்கணும்னு ஆசை இருந்தது. அது, ‘ராஜதந்திரம்’ படத்தின் தயாரிப்பாளர் செந்தில் மூலமா நிறைவேறியது. அந்தப் படத்துக்கு நான் நிர்வாகத் தயாரிப்பாளரா இருந்தேன். சசிகுமார் சார் தயாரிப்புல படம் பண்ற வேலைகள் தாமதமானாலும், அவர் அடிக்கடி பேசுவார், என்ன பண்றேன்னு தெரிஞ்சுக்குவார். பிறகு, நான் ஏற்கெனவே அவர்கிட்ட சொல்லியிருந்த கதையை விட்டுட்டு, அவருக்காகவே உருவாக்கிய ‘கிடாரி’யைச் சொன்னேன். ‘தாரை தப்பட்டை’க்குப் பிறகு பண்ணலாம்னு காத்திருக்கச் சொன்னார்.

பிப்ரவரி 29, 2016. ‘கிடாரி’ ஷூட்டிங்கிற்கு ரெடியாகிட்டிருந்த சமயம். எங்க அம்மா தவறிட்டாங்க. அம்மாவுக்கு நான் இயக்குநரா கமிட் ஆனது மட்டும்தான் தெரியும். ‘சென்டிமென்ட்’ பார்க்கிற சினிமாவுல ‘வேலையை ஆரம்பிங்க பிரசாத், வேலை செஞ்சுதான் அம்மா இழப்பைக் கடக்க முடியும்’னு சொன்னார் சசிகுமார். ஷூட்டிங் ஆரம்பிச்ச அதே வேகத்துல படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணினோம். ஆனந்த விகடன் இதழ்ல வர்ற சிறுகதைகளைப் படிச்சு சினிமா கத்துக்கிட்ட எனக்கு, ‘கிடாரி’க்காக ‘சிறந்த புதுமுக இயக்குநர்’ விருது கிடைச்சது சந்தோஷமான தருணம்.’’
இப்போது இரண்டு வெப்சீரிஸ்களை இயக்கிக்கொண்டிருக்கிறார் பிரசாத் முருகேசன்.
“ ‘ராஜதந்திரம்’ சமயத்துல அறிமுகமான கெளதம் மேனன் சார், ‘குயின்’ வெப் சீரிஸை சேர்ந்து இயக்கலாம்னு சொன்னார். அவரும் நானும் பகுதி பகுதியா பிரிச்சுக்கிட்டு இந்த வெப் சீரிஸை முடிச்சிருக்கோம். அடுத்த மாதம் ஆன்லைன்ல ரிலீஸாகும். தவிர, ‘எம்.எக்ஸ் பிளேயரு’க்காக ‘மத்தகம்’ங்கிற வெப் சீரிஸை இயக்கிக்கிட்டிருக்கேன். தவிர, ‘கிடாரி’க்குப் பிறகு ஆதித்யா பாஸ்கர் நடிக்க ஒரு காதல் கதையைப் படமாக்கப்போறேன். கிராமத்திலிருந்து ஐடி கம்பெனியில வேலைக்கு வர்ற ஒரு பையனோட பயணம்தான் களம்.” இயங்கிக்கொண்டே இருக்கிறார், பிரசாத் முருகேசன்.
- கே.ஜி.மணிகண்டன்